படம் | SriLanka Brief

ஒரு திரைப்படத்தின் முக்கியமான திருப்பம் போல், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜ.நா. மனித உரிமைகள் பேரவை விவாதங்கள் முடிவுற்றிருக்கின்றன. இலங்கை தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட விடயம் வெளியாகிவிட்டது. ஆனால், இவ்வாறானதொரு விடயம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக  இருந்ததால், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அரசாங்கம் தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு வருடங்களை கோரியிருந்தது. இந்த நிலையில், அரசாங்கம் கோரிய கால அவகாசத்தை மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன. அதாவது, 2015இல் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, இலங்கை அரசாங்கத்தால் இணையனுசரனை வழங்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருடங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்தின் மேற்படி கோரிக்கையே தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இவ்வாறானதொரு கால அவகாசத்தை வழங்கலாம் – இல்லை வழங்கப்படக் கூடாது என்பதை அடியொற்றியே சில நாட்களாக எம் மத்தியில் விவாதங்கள் இடம்பெற்றுவந்தன. இதில் வழங்கப்படுவதில் பிரச்சினையில்லை, ஆனால், அது கடும் நிபந்தனைகளோடு வழங்கப்பட வேண்டும், விடயங்கள் அமுல்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்கென மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்தது. ஆரம்பத்தில் இது தொடர்பில் கூட்டமைப்புக்குள் குழப்பமான நிலை காணப்பட்டபோதிலும் கூட, பின்னர் அனைவரும் ஏகமனதாக ஒரு முடிவுக்கு வந்திருந்தனர். அதாவது, கடும் நிபந்தனைகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், தற்போது அவ்வாறான எந்தவொரு நிபந்தனையும் இன்றியே கால நீடிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அரசாங்கம் வழமைபோல் விடயங்களை நிறைவேற்றுவதில் ஜ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றுவதாக தெரிவித்திருக்கிறது. இதுதான் அந்த கடும் நிபந்தனையா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் கால நீடிப்பு வழங்கும் விடயத்தில் கருத்தொருமித்த நிலைப்பாடே இருந்தது. இதில் முரண்படுவதாக தெரிவித்தவர்கள் கூட கூட்டமைப்பிற்குள்தான் இருக்கின்றனர். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விடவும் ஒரு படி மேல் சென்று வடக்கு மாகாண சபை கால அவகாசம் வழங்கப்படுவதற்கு ஆதரவாக பிரேரணை ஒன்றையும் நிறைவேற்றியிருந்தது. தற்போது அனைத்து விவாதங்களும் ஒரு இனிமையான முடிவை எட்டிவிட்டன. ஆனால், இது யாருக்கு இனிமையானது என்பதுதான் கேள்விக்குரியது? வழமைபோல் கால அவகாசம் வழங்க வேண்டாம் – அது அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் என்றெல்லாம் கூறியவர்களின் வாதங்கள் எவையும் சபையேறவில்லை. அதுவும் கூட எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில், கால அவகாசம் வழங்கும் விவகாரம் ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டிருந்த நிலையில்தான், தற்போது அது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் மைத்திரிபால – ரணில் – சம்பந்தன் முக்கூட்டு தெளிவாகவே இருந்தது. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி, மேற்படி மூவரது செயற்பாடுகளையும் பாராட்டத் தவறவில்லை. இதிலிருந்து எதிர்வரும் 2020 வரையான காலப்பகுதியில் எந்தவொரு பதற்றமான சூழலையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்னும் தீர்மானத்திலிருந்தே, அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. இந்தத் தீர்மானத்தை கேள்விக்குள்ளாக்கும் ஆற்றல் தமிழர்களுக்கு இருந்தால் மட்டும்தான், அந்தத் தீர்மானத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படவுள்ள முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும் முடியும். அது தமிழர்களால் முடியுமா?

கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அது தடுமாற்றங்கள் நிறைந்த ஒரு கூட்டாகவே இருந்து வருகிறது. தடுமாற்றமுள்ள ஒரு அரசியல் முன்னணியால் எந்தவொரு தீர்க்கமான முடிவுகளையும் எடுக்க முடியாது. எப்படி அரசாங்கம் இரண்டு கட்சிகளின் கலவையாக இருந்து கொண்டு, ஒருவரை ஒருவரை காண்பித்தே காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றனரோ, அப்படியானதொரு நிலைமையே கூட்டமைப்புக்குள்ளும் நிலவுகிறது. தமிழரசு கட்சியைக் காண்பித்து ஏனையவர்களும் கடும்போக்குவாதிகளை திருப்திப்படுத்த முற்படுகின்றனர் என்று தமிழரசு கட்சியும் குற்றச்சாட்டுக்களை அடுக்கிச் செல்வதிலேயே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறனர். கூட்டமைப்பு தொடர்பில் ‘தி டிப்ளொமெட்’ சஞ்சிகையில் கருத்துத் தெரிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாங்கள் மிகவும் தளர்வானதொரு கூட்டமைப்பாக (We are a very loose alliance) இருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அதேவேளை, புதிய தகவலொன்றையும் வெளியிட்டிருக்கின்றார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து 2010இல் வெளியேறியது. தமிழர் விடுதலைக் கூட்டணியோ, (TULF) 2003இல் வெளிச் சென்று, பின்னர் 2011இல் மீளவும் இணைந்து அதன் பின்னர் 2013இல் மீண்டும் வெளியேறியது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு சற்று பிந்தியே ([The Eelam People’s Revolutionary Liberation Front] EPRLF came in a little after TNA was formed) இணைந்து கொண்டது. புளொட் 2011இல் இணைந்து கொண்டது. அந்த வகையில் நோக்கினால் கூட்டமைப்பிற்கான அசலான உடன்பாடு என்பது இன்றைய நிலையில் டெலோவை தவிர வேறு எவருக்கும் செல்லுபடியற்றதாகவே இருக்கலாம். (The original MOU may not be valid since none of these except TELO is a signatory to it) இது தொடர்பான தகவல்களை பின்வரும் தளத்தில் பார்க்கலாம். இதன் மூலம் சுமந்திரன் வலியுறுத்த விரும்புவது என்ன? தற்போது கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் கட்சிகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு காலத்தில் இணைந்து கொண்டன. எனவே, அந்த வகையில் கூட்டமைப்பிற்கான ஏகபோக உரிமை கோரக் கூடிய நிலைமையும் கூட பலீவனமான ஒன்றே. இதுவே அதன் தளர்வான நிலைக்கும் காரணமாக இருக்கிறது.

இது முற்றிலும் புதிய தகவலாக இருக்கின்ற அதேவேளை மிகவும் சுவாரஷ்யமான ஒன்றாகவும் இருக்கிறது. கூட்டமைப்பின் உருவாக்கத்தின் போது சுமந்திரன் அரசியல் அரங்கில் இருந்திருக்கவில்லை. இந்த நிலையில், சுமந்திரன் கூறும் உடன்பாடு தொடர்பில் ஏனைய கட்சியினரின் கருத்து என்ன என்பதை அவர்களாக வெளியிட்டால்தான், மக்கள் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறானதொரு கூட்டமைப்பிலிருந்து எவ்வாறு உறுதியான முடிவுகளை எடுக்க முடியும்? எனவே, ஜ.நா. மனித உரிமைகள் பேரவையில் கூட்டமைப்பின் தடுமாற்றத்தை அதன் கட்டமைப்போடு இணைத்துத்தான் ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால் கால அவகாசம் வழங்கும் விடயத்தில் முரண்பட்டு நின்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கூட, தற்போதும் கூட்டமைப்பில்தான் இருந்து கொண்டிருக்கிறது. சம்பந்தனது முடிவுகளோடு முரண்படுவதான தோற்றத்தைக் காண்பித்துவரும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கூட்டமைப்பில்தான் இருக்கிறார். கிழக்கின் எழுக தமிழின் போது தமிழ் மக்களுக்கு புதிய தலைமையொன்று தேவை என்று கோரிக்கை விடுத்த சுரேஸ் பிரேமச்சந்திரன், தற்போதும் சம்பந்தன் தலைமையில் இருக்கின்ற கூட்டமைப்பில்தான் இருக்கிறார். இந்த முரண்பட்ட நிலைமையை எவ்வாறு விபரிப்பது? இது தொடர்பில் சம்பந்தனிடம் தெளிவான பதிலுண்டு. ஒரு ஜனநாயக அமைப்பென்றால் இப்படியான கருத்து முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அதனை நாம் பெரிதுபடுத்த முடியாது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கிடையிலான உடன்பாடு தொடர்பில் சுமந்திரன் முற்றிலும் புதியதொரு தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

ஒரு உள்விவகாரத்தையே சீர்செய்துகொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்ற தலைமையால் சர்வதேச அரங்கை எவ்வாறு கையாள முடியும்? அவர்களால் கையாள முடியுமென்று எவ்வாறு மற்றவர்களும் எதிர்பார்க்க முடியும்? இவ்வாறானதொரு சூழலில், தற்போது வழங்கப்பட்டிருக்கும் கால அவகாசத்தை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகின்றது என்பதை மேற்பார்வை செய்து, அதனை உடனுக்குடன் சர்வதேச அரங்கிற்கு கொண்டுசெல்லக் கூடியதொரு பொறிமுறையை நிச்சயம் கூட்டமைப்பால் ஏற்படுத்த முடியாது. ஏனெனில், கூட்டமைப்பு ஒரு பலவீனமான அரசியல் கூட்டு. சம்பந்தனைப் பொறுத்தவரையில் என்ன நினைக்கின்றார் என்பதை ஊகிக்க முடியாவிட்டாலும், அவர் எண்ணிய பெரும்பாலான விடயங்கள் நடைபெறப் போவதில்லை. அனுபவம் வாய்ந்த சம்பந்தன் இதனை அறியாமல் இருக்கவும் வாய்ப்பில்லை. ஆனாலும், தனது தலைமைத்துவத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தவல்ல ஒரு அரசியல் சக்தி தமிழ்ச் சூழலில் உருவாகப் போவதில்லை என்பதிலும் அவர் தெளிவாக இருக்கக்கூடும். ஒருவேளை அப்படியானதொரு நெருக்கடி வருவதை அவர் ஒருவேளை உணர்வாராக இருந்தால், அதனை சமாளிக்கும் வகையில் அவர் சில முடிவுகளை எடுக்கக் கூடும்.

அன்மைக் காலமாக கூட்டமைப்பிற்கு எதிரான கோபம் தமிழ் பரப்பில் அதிகரித்துச் சென்றாலும் கூட, அது ஒரு அரசியல் சக்தியாக திரட்சிபெறக் கூடிய சூழல் இதுவரை வெளித்தெரியவில்லை. இவ்வாறானதொரு நிலையில்தான் தற்போது ஒரு மாத காலமாக இடம்பெற்றுவந்த ஜெனிவா அமர்க்களம் முடிவுக்கு வந்திருக்கிறது. இரண்டு வருடங்கள் கழித்து மீளவும் இவ் விவாதங்கள் உயிர்பெறலாம். அப்போதும் வழமைபோல், பழக்கப்பட்டுப் போன சொற்களும், பழக்கப்பட்டுப் போன கூட்டமைப்புச் சண்டைகளும் நடைபெறலாம். இதனை அடியொன்றி எங்களைப் போன்ற பத்தியாளர்களும் எழுதிக் குவிக்கலாம். மொத்தத்தில் தமிழ் அரசியல் பலவீனமடைந்து செல்கின்றது என்பது மட்டுமே உண்மை. இதில் வெற்றிபெற்றுக் கொண்டிருப்பது யார் என்று ஒரு கேள்வியை எழுப்பினால் – அரசியல்வாதிகள் வென்று கொண்டுதான் இருக்கின்றனர், அவர்களை நம்பிய மக்களோ தோற்றுக் கொண்டிருக்கின்றனர்.

யதீந்திரா