படம் | AP Photo/Eranga Jayawardena, Canada

“சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அறையினுள் வந்தார். ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது. இறைச்சி சந்தையில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி போல் நாங்கள் இருந்தோம். சுற்றிப்பார்த்த அவர் என்னைத் தெரிவு செய்தார். என்னை இன்னுமொரு அறைக்குள் கொண்டு சென்ற அவர் அங்கு வைத்து என்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்.”

பாலியல் வல்லுறவு முகாம்களில் பெண்களை பாலியல் அடிமைகளாக இலங்கை இராணுவம் நடத்தி வந்த அதிர்ச்சிமிக்க தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் (ITJP) என்ற அமைப்பினால் வழங்கப்பட்டுள்ள இவ்வறிக்கையில், பெண்கள் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு பாலியல் அடிமைகளாக இராணுவத்தினரால் நடத்தப்பட்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நாவில் வைத்து இன்று 22 ஆம் திகதி இலங்கை அரச பிரதிநிதிகளை சந்திக்கும் போது பாலியல்முகாம்கள் உள்ளிட்ட பாலியல் வன்கொடுமைகள் தொடர்பிலான விபரங்களை கையளித்து சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளை பணி நீக்கம் செய்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்களுக்களுக்கு எதிரான பாகுபாடுகள் தொடர்பான ஐ.நா குழுவிடம் அழுத்தும் கொடுக்கவிருப்பதாக ITJP அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்டுள்ள 6 இராணுவ அதிகாரிகள்

தமிழ்ப் பெண்களை (மற்றும் ஆண்கள்) சித்திரவதைக்கு உட்படுத்தி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் – கட்டளை அதிகாரிகளாக, நேரடியாக குற்றம் இழைத்தவர்களாக அல்லது இக்குற்றங்களைப் பற்றி அறிந்தும் அவை தொடர்பாக நடவடிக்கை எடுக்காதவர்களாக இருப்பதாக ITJP குறிப்பிடுகின்றது. இது பாதிக்கப்பட்ட 18 பேரிடம் மற்றும் சாட்சிகளிடம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், பாலியல் வல்லுறவு குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட இலங்கையின் 3 இராணுவ உயர் அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் ஒருவர் அண்மையில் ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் பணியாற்றியுள்ளார் என்றும், நான்காவது அதிகாரி சித்திரவதை மேற்கொள்வதில் நேரடியாக ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றும், ஐந்தாவது நபர் சித்திரவதையை மேற்கொள்வதற்கான கட்டளையை பிறப்பித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்றும், ஆறாவது நபர் சித்திரவதை இடம்பெறும்போது அந்த இடத்திற்குச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்றும் ITJP தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஐ.நாவுக்கு வழங்கப்பட்ட அறிக்கையுடன் குற்றம்சாட்டப்பட்ட 6 இராணுவத்தினரின் நிழற்படங்கள் உள்ளடக்கப்பட்ட இரகசிய இணைப்பொன்றையும் வழங்கியுள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

பாலியல் வல்லுறவு முகாம்கள்

இராணுவத்தினரால் நீண்டகாலமாக பாலியல் அடிமைகளாக பெண்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் முகாம்கள் குறித்த தகவல்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.நாவிடம் ITJP அமைப்பு தெரிவித்துள்ளது.

அவ்வாறு நடத்தப்பட்டு வந்த முகாம்கள் அமைந்திருந்த இடங்களையும் தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிடுகிறது.

“வவுனியாவிற்கு அருகாமையில் ஒன்று, புத்தளத்திற்கு அருகாமையில் ஒன்று, ஒன்று கொழும்பிலும், மற்றையது கொழும்பிற்கு வெளியிலும், வடக்கு கிழக்கில் முகாம்கள் இருக்கவில்லை” என்று குறிப்பிடுகின்றது.

“இரண்டு பெண்கள் விளக்கும்போது தங்களை ஒரு குழுவாக அறையொன்றில் தடுத்துவைத்திருந்ததாகவும், எந்த இராணுவமும் வந்து தெரிவுசெய்து அருகிலிருந்த அறைக்கோ அல்லது கூடாரத்துக்கோ பாலியல் வல்லுறவுக்காகக் கொண்டு சென்றதாகவும் கூறினார்கள். 3ஆவது பெண், ஆறு மாதங்களாக மிக இருட்டான கூண்டொன்றில் தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார். ஆனால், அருகில் உள்ள அறைகளில் ஏனைய பெண்கள் அலறும் சத்தம் கேட்டதாகக் கூறினார். இரு சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப் படையினரால் தொடர்ச்சியாக மாத்திரைகள் அல்லது ஊசி மருந்து கொடுக்கப்பட்டாகக் கூறினார்கள்” – இவ்வாறு ITJPஆல் ஐ.நாவுக்கு சம்ர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சிறிசேன மீதான குற்றச்சாட்டு

சித்திரவதை மேற்கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாகப் பாலியல் வன்முறைகளைப் பயன்படுத்துவதை இராணுவம் திட்டமிட்ட கொள்கையாகக் கொண்டிருந்தது என்ற ஐ.நா. சபையின் குற்றச்சாட்டை பதவிக்கு வந்து இரண்டு வருடங்களாகியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது புதிய அரசாங்கம் விசாரணை செய்யவேண்டிய கடமையில் தோல்விகண்டுள்ளது என்று ITJP விசனம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வன்முறைகளை விசாரணை செய்தல், இல்லாது ஒழித்தலுடன், அதற்குக் காரணமானவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதில் தவறியதனூடாக சிறிசேன அரசாங்கம் இத்தொடர்ச்சியான வன்முறைகளுக்கு உடந்தையாகக் காணப்படுவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

பாரதூரமான குற்றங்களை இழைத்த அல்லது அவற்றைச் செய்யும்படி  கட்டளையிட்ட அல்லது சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் இடம்பெறுவது தெரிந்தும் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த ஆயுதப்படைகளின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினரை விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி சிறிசேனவின் அரசாங்கமும், விருப்பமற்று இருக்கின்றது என்று உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் குறிப்பிடுகின்றது.

ITJP இன் அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.

Part 1 ITJP Public Submission to CEDAW 2017 1 Tamil 1 by Rajesh on Scribd