படம் | The Washington Post

இலங்கை நாட்டிலே இழைக்கப்பட்ட அட்டூழிங்கள் குற்றச்செயல்களையிட்டு நடந்து முடிந்துவிட்ட சம்பவங்களின் விளைவாக அர்த்தமுள்ள வழக்குகளை நடாத்துவதற்கு வழிவகுக்கும் விதத்திலே, இலங்கைச் சட்டத்துக்குள் சர்வதேசக் குற்றச்செயல்களும் உள்ளடக்கப்படவேண்டும் என நானும் எலியானோர் வெர்மன்ட் என்பவரும் (Eleanor Vermunt) அண்மையிலே பதிப்பிக்கப்பெற்ற கட்டுரையொன்றிலே வாதித்திருந்தோம்.

ஆயுதப்போர் முடிவுக்கு வந்ததுதொட்டு, சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் மீறல்கள் ஆகியவைகள் தொடர்பாகப் பல்வேறு உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகப்பற்றற்ற குற்றச்சாட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல ஐ.நா. அறிக்கைகளின்படி இந்தக் குற்றச்சாட்டுகள் – அவை நிரூபிக்கப்படும் பட்சத்திலே – மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்களாகவும் போர்க்குற்றங்களாகவும் கருதப்படும்.

‘சர்வதேசக் குற்றச்செயல்கள்’ எனும் பதமானது பொதுவாக சர்வதேசக் கலப்பு விசாரணை மன்றங்களின் தீர்ப்பின்படியும் மற்றும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியும் குற்றச்செயல்கள் என உள்ளடக்கப்படும் குற்றங்களையே குறிக்கும். அவை இனப்படுகொலைகளையும், மனுக்குலத்துக்கு எதிரான குற்றங்களையும், போர்க்குற்றங்களையும் உள்ளடக்கியவை. இந்தக் குற்றச்செயல்கள் “சர்வதேச சமூகத்தின் கரிசனையைப் பொறுத்தவரைக்கும் மிக மோசமான குற்றச்செயல்கள்” எனவும், “அவைகள் மனுக்குலத்தின் மனச்சான்றிலே ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்துபவை” எனவும் பட்டியலிடப்பெற்றவைகள். சர்வதேச நலன்களைச் சிதைத்து, சமாதானத்தைக் குலைத்து, சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பையும் பாதித்து, மனிதநேயக் கொள்கைகளுக்கும் அறநெறி விழுமியங்களையும் மீறும் செயல்களை அவைகள் உள்ளடக்கும்.

இலங்கையின் உள்ளூர் சட்டமானது, சர்வதேசமற்றதான உள்ளூர் ஆயுதப்போரின் பின்புலத்திலே இழைக்கப்பட்டதான  இனப்படுகொலைகளையும், மனுக்குலத்துக்கு எதிரான குற்றச்செயல்களையும் மற்றும் போர்க்குற்றங்களையும் குறிப்பாகக் குற்றச்செயல்களாகக் கருதுவதில்லை. முதலாவதாக, படையணிகளின் நடத்தைகளின் விளைவாக இடம்பெற்ற போர்க்காலத் துஷ்பிரயோகங்கள் மற்றும் மீறுதல்களைக் கையாள்வதற்கு உள்ளூர் குற்றச்செயல்கள் பற்றிய சட்டங்கள் அடிப்படையிலே சாலப் பொருத்தமானதாக இல்லை. உண்மையிலேயே சாதாரண குற்றச்செயல்கள் பற்றிய சட்டங்கள் பிரயோகிக்கப்படுமேயாயின், சர்வதேச மனிதநேய சட்டத்துக்கு குற்றச்செயல்களாகக் கருதப்படாத ஒரு சில நடத்தைகள் இலங்கைச் சட்டத்துக்குள்ளாகக் குற்றச்செயல்களாகக் கருதப்படக்கூடியவை. உதாரணமாக, எமது முன்னைய கட்டுரையிலே நாம் விளக்கிய பிரகாரமாகவே, விரோதிகளை நேரடியாக இலக்குவைப்பதும் கொலை செய்வதும் இலங்கைச் சட்டத்தின் கீழ் கொலை எனக் கருதப்படலாம், அதேவேளை, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்படியோ அது சட்டபூர்வமான ஒரு செயல். மறுபுறத்தே மனித உயிர்களைப்பற்றிச் சற்றும் கரிசனைகொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டதெனச் சான்றுள்ளதான மனதைப் பதைபதைக்கும் ஒரு சில மீறல்கள் – மனிதக்கேடயகங்களாக மக்களைப் பயன்படுத்தல் அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய நிவாரணங்களை மறுத்தல் போன்றவைகள் – அதற்காக வழக்குத்தொடுக்க இயலாத செயல்கள், ஏனெனில் அதற்கு ஒத்ததான குற்றச்செயல்கள் இலங்கைச் சட்டத்தின்கீழ் இல்லை. மேலும், பல உள்ளூர் மன்றும் சர்வதேச நீதிமன்றங்களால் சுட்டிக்காட்டப்பெற்ற பிரகாரம் சர்வதேசக் குற்றச்செயல்களை சாதாரண குற்றங்களைப்போலக் கருதி வழக்குத்தொடுப்பது போதுமானதாய் இராது, ஏனெனில் அது குற்றச்செயலின் மோசமான தன்மையைப் பிரதிபலிக்கத் தவறுவது மாத்திரமன்றி, மோசமான குற்றச்செயல்களை அற்பமானவையாகக் கருதும்படிக்கும் இட்டுச்செல்லும். எனவே, அப்படியான நடத்தைகள் உள்ளூர் குற்றவியல் சட்டத்தின்படி வழக்குத்தொடுக்கப்படலாமாயினும், அப்படியான வழக்குத்தாக்கல்கள் எதிர்காலத்திலே இடம்பெறாதபடி எச்சரிப்பதற்கோ அல்லது இழைக்கப்பட்ட குற்றச்செயல்களின் மோசமான தன்மை பற்றிய சம்பவக்கதையை நிலைநாட்டவோ உதவிடாது.

மோசமான குற்றச்செயல்களுக்குப் பொறுப்பான நபர்கள் அதற்காகப் பொறுப்புக்கூறியாகவேண்டும் என சர்வதேசச் சட்டம் அடையாளப்படுத்துகிறதாய் உள்ளது. இலங்கைச் சட்டத்துக்குள் சர்வதேசக் குற்றச்செயல்கள் மற்றும் கடப்பாட்டுக் காரியங்கள் போன்றவை உள்ளடக்கப்படாவிட்டால் மோசமான குற்றச்செயல்களுக்குப் பொறுப்பாக உள்ள தனிநபர்களுக்கு எதிராக வினைத்திறனுடன் வழக்குத்தொடுக்கப்படுவது இயலாததாகிவிடும். அது ஏனெனில், கட்டளை பிறப்பித்தல், மேலதிகாரத்துவம், இணைந்த நிறுவனக் குற்றச்செயல் அல்லது ஆணை பிறப்பித்தல் போன்றவற்றுக்கான பொறுப்புக்கூறும் கடப்பாடுகள் இலங்கைச் சட்டத்தின்கீழ் குறிப்பாக வழங்கப்படவில்லை. சர்வதேசக் குற்றச்செயல்களை வடிவமைத்திட, செயற்படுத்திட அல்லது அதற்கு அனுசரனை வழங்கி அதன்மூலம் சர்வதேசச் சட்டத்தின்பிரகாரமாக மோசமான குற்றச்செயல்களுக்குப் பொறுப்பானவர்களாய் இருந்த நபர்களுக்கு எதிராக வழக்குத்தொடுப்பதற்கு, அவர்களின் பொறுப்பையிட்டதான இப்படியான கடப்பாடுகள் இருக்கவேண்டியது அவசியமானதாகும். இலங்கைச் சட்டமானது சர்வதேசப் பொறுப்புக்கூறல் கடப்பாடுகளுக்கான சட்டங்களை வழங்கியிராதபடியால், இலங்கைச் சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் எந்தவொரு வழக்குத்தாக்கலும் சங்கிலியின் கீழ்ப்படிகளிலே உள்ளவர்களிலும் மற்றும் மேலிடத்து உத்தரவுகளைப் பெற்று அவற்றைச் செயற்படுத்திய “விசைப்பொறியினர்கள்” மேலுமே நோக்கக்குவியம் கொள்வதற்கான சாத்தியம் உள்ளது. தலைமைத்துவத்தில் உள்ளவர்களை விடுத்து இப்படியானவர்கள்மீது வழக்குத்தொடுப்பதானது பாதிக்கப்பட்டோர் தமக்கு நீதி வேண்டிக் கோரும் கோரிக்கைகளைச் சந்திக்கத் தவறுவதுடன், வழக்குகளுக்கான பொதுமக்கள் ஆதரவுக்குக் குழிபறித்து, ஆயுதப்படையின் சண்டையிடும் பிரிவினரிடையே காழ்ப்புணர்வையும் கருத்தரிக்கும்.

எனவே, சர்வதேசக் குற்றச்செயல்கள் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடுகள் போன்றவைகள் இலங்கைச் சட்டத்திற்குள் நடந்த சம்பவங்களின் விளைவாக உள்ளடக்கப்படுவது கட்டாயமானதாகும். அப்படியான நடந்த சம்பவங்களின் அடிப்படையிலே சர்வதேசக் குற்றச்செயல்கள் பற்றியதான சட்டம் இலங்கைச் சட்டத்துக்குள் உட்சேர்க்கப்படுவதானது, அத்தகையதோர் சட்ட மாற்றம் ஏற்பட முன்பதாக இடம்பெற்ற நிகழ்வுகளை நடாத்தியவர்களைப் புதிய குற்றறவியல் சட்டமும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டு வரம்புகளும் அதன் நீதிவிசாரணைக்குள் உள்ளடக்குவதை உறுதிப்படுத்தும். ஆயினும், “நடந்தவைகளைப் பாதிக்கும்” என்பது அத்தகையதோர் பின்புலத்திலே ஒவ்வாத சொற்பதமாக அமையும் என்பதையும் நாம் குறித்துக்கொள்ள வேண்டும். உண்மையிலேயே, இலங்கைச் சட்டத்தின் கீழ் சர்வதேசக் குற்றச்செயல் சட்டங்கள் குறிப்பாக இல்லையென்றாலுங்கூட, அவைகள் சர்வதேசச் சட்டத்தின்கீழ் குற்றச்செயல்களாக பன்னெடுங்காலங்களாகக் கருதப்பட்டு வந்தவைகளாகும். எனவே, நாம் கேள்விக்குரியதான நடத்தையானது கண்டிக்கப்படத்தக்கது என்பதையிட்டும், ஆணை பிறப்பித்த வேளையிலே அப்படியான குற்றச்செயற் தன்மையுள்ள நடத்தைகள் ஏற்கெனவே காணத்தக்கதாக இருந்துள்ளது என்பதையிட்டும் எவ்வித ஐயமும் கிடையாது. இடம்பெற்ற சம்பவங்கள் நிமித்தமாக சர்வதேசக் குற்றச்செயல் சட்டங்களை உள்ளூர் சட்டத்துக்குள் உள்ளடக்குவது இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 13 (6) இன்கீழ் ஏன் அனுமதிக்கப்பட்டது என்பதை விளக்குவதாய் உள்ளது. சேபால ஏக்கநாயக்க வழக்கிலே, 1992 இன் வானூர்திகள் சட்டத்துக்கு எதிரான குற்றச்செயல்களையிட்டதான இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பானது, இப்படியாக இடம்பெற்ற சம்பவம் தொடர்பான சட்டத்தின் இந்தப் பிரிவிலேயே தங்கியிருந்தது என்பது சுவாரஸ்யமானதோர் விடயமாகும்.

தேசங்களின் சமூகத்தால் அவற்றின் பொதுக் கொள்கைகளின்படியாகக் குற்றச்செயல்களாக் கருதப்பட்ட செயல்கள் இழைக்கப்படுகையிலே குடிமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் (ICCPR – International Covenant on Civil and Political Rights) தொடர்பிலான சர்வதேச உடன்படிக்கையின்  வழங்குதல்களை பிரிவு 13 (6) ஆனது பிரதிபலிப்பதாக உள்ளது. அந்த அடிப்படையிலேதான், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்பதாக பல நாடுகள் போர்க்குற்றம் மற்றும் மனுக்குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் ஆகியவற்றை, கடந்தகாலத்திலே அப்படியாக இயற்றப்பட்ட குற்றச்செயல்களையிட்டு வழக்குத்தாக்கல் செய்வதற்கு ஏதுவாகக் குற்றச்செயல்கள் என அறிமுகப்படுத்தியது.

இலங்கை அரசாங்கமானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திலே, “இலங்கையிலே நல்லுறவையும், பொறுப்புக்கூறலையும் மற்றும் மனித உரிமைகளையும் ஊக்குவித்தல்” எனும் தலைப்பின்கீழான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன்மூலம் இதற்கெனத் தன்னை வெளிப்படையாகவே அர்ப்பணித்திருந்தது. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் 7ஆம் பந்தி கூறுவதாவது:

(மனித உரிமைகள் பேரவை) இலங்கை அரசாங்கத்தை, அதன் சொந்த அர்ப்பணிப்புக்களை வினைத்திறனுடன் அமுல்படுத்துவதற்கு ஏதுவாக, அதன் உள்ளூர் சட்டத்தை மீள்சீரமைக்கும்படி ஊக்குவிக்கிறது. இனங்களிடையேயான நல்லுறவு மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பெற்ற கால எல்லை உள்ளடங்கலாக, சர்வதேச கடப்பாடுகளுக்கு இசைவான முறையிலே தேசங்களின் சமூகத்தால் பொதுவான கொள்கைகளின்கீழ் குற்றச்செயல்களாகக் கருதப்படும் அனைத்துக்கும் பொறுப்பாக உள்ளவர்களை வழக்குத்தொடுத்துத் தண்டிக்கப்படுவதை உள்ளடக்கும்படி ஊக்குவிக்கிறது.

எனவேதான், இலங்கை அரசாங்கமானது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை இயலுமானதாக்கும்படிக்கும், குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கு நேர்மையாக வழக்கு தொடுக்கவும், அனைவருக்கும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் செய்யும் விதத்திலே தனது சொந்த அர்ப்பணத்தை நிறைவேற்றுவது முக்கியமானதாகும்.

isabelle_lassee-portraitகலாநிதி இசபெல் லாஸி