படம் | EelamView

எழுந்த பின்? எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1)

எழுந்த பின்? எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 2)

###

எழுக தமிழ்ச் சத்தியங்கள்

நடப்பவற்றின் சரி, பிழைகளைத் தாண்டி, அவற்றிலிருந்து பாடம் கொள்ள வேண்டியது அவசியம். அவ்வகையில், எழுக தமிழ்ப் பேரணி தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கும், அதே மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியற் தலைமைகளுக்கும் சில முக்கியமான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கின்றது.

முதலாவதாக, மக்களாகிய எமக்கு, நாம் எங்கிருக்கின்றோம், எங்கு செல்லப் போகின்றோம் என்பதில் தெளிவு வேண்டும். திலீபன் மரணித்து மூன்று தசாப்தங்களாகியும் இன்றும் நாம் திலீபன் முன்வைத்த அதே கோரிக்கைகளையே கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இதுதான் எம் மூன்று தசாப்த காலப் பொங்குதல்களினதும், எழுச்சிக் கோஷங்களினதும் இறுதிப் பேறு. இன்று நாமிருக்கும் நிலையில், மீண்டுமொரு அழிவிற்கிட்டுச் செல்லக் கூடாதென்ற அர்ப்பணிப்பே, அக்கொள்கையின் மீதான பற்றுதியே இன்றைய தமிழ்த் தலைமைகளிடமிருக்க வேண்டிய அடிப்படைப் பண்பு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் போன்று ‘தாம் எவ்வித அர்ப்பணிப்புக்கும் தயார்’ என்றும், ‘தமிழினம் வீதிக்கிறங்கித் தன் வீரத்தை நிரூபித்தால் விடிவு நிச்சயம்’ என்றும் சில்லறைக்கும் பயனற்ற வீர வசனங்களைப் பேசி மக்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் தலைமைகளைத் தொடர்வது எம்மை மீண்டும் அழிவிற்கும், அபத்தத்திற்குமே இட்டுச் செல்லும். இவர்களின் சுய-அர்ப்பணிப்புக்களின் இலட்சணத்தை நாமறிவோம். இவர்களை இனங்கண்டு இவரது வெற்று அரசியலை நாம் வேரறுக்க வேண்டும்.

கடந்த காலத்தை நிதானமாக இரை மீட்டு, அதிலிருந்து பாடங்களைக் கற்கும் மக்கள் இயக்கமே எமது தற்காலத் தேவை. இம் மக்கள் இயக்கம் சிங்கள மக்களிடமும், முஸ்லிம்களிடமும் சமஷ்டி ஆட்சிமுறை, சமயச்சார்பிலா அரச கட்டமைப்பு, மற்றும் வட கிழக்கு மீள் – இணைப்புத் தொடபில் நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசி இணக்கம் காண முயற்சிக்க வேண்டும். சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் மேலும் விரோதிகளாக்கும் முயற்சிகள் எந்த நன்மையையும் தரப் போவதில்லை. தேவைப்படுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேலும் முற்போக்காக்கும், ஜனநாயகமயப்படுத்தும் மக்கள் இயக்கமேயன்றி வெற்றுக் கோஷங்களாலும், வெறுந் தேசியவாதத்தாலும் எமது அரசியல் தலைமைகளை மேலும் தீவிரப்போக்காக்கும் தமிழ் மக்கள் பேரவை போன்ற இயக்கங்களால் எமக்கு விடிவில்லை.

இரண்டாவதாக, எழுக தமிழில் திரண்ட கூட்டத்தையும், விக்னேஸ்வரனையும் வைத்துக் கொண்டு மீண்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் என்போர் அரசியல் மீள்பிரவேசம் செய்ய முயல்வார்களானால் மூக்குடை படவே நேரும். எழுக தமிழில் கலந்து கொண்டோர் தொகை 8,000-10,000 பேர் வரை. ஆனால், பேரணி முடிந்த கையோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் 30,000 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக அறிவித்திருந்தார்; யாழைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவுப் பத்திரிகையான வலம்புரி இன்று வரை இத் தொகையை 50,000 எனத் தொடர்ந்து அறிவித்து வருகின்றது. இதுவெல்லாம் எழுக தமிழ்ப் பேரணியின் உள்நோக்கங்களையும், ஏற்பாட்டாளர்களின் வங்குரோத்து அரசியலையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அத்தோடு, ஏதோ தமிழரசுக் கட்சியைத் துரோகிகளாகக் காட்டி அரசியல் செய்து விடலாம் என்கிற எண்ணப்பாடும் தப்புக் கணக்கே: தமிழரசுக் கட்சிக்கு அடுத்து, கூட்டமைப்பின் அடுத்த தனிப் பெரும் கட்சியான ரெலோ அமைப்பும் பேரணியில் கலந்து கொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாகக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மாத்திரமே எழுக தமிழ்ப் பேரணியில் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும், 2010இல் கூட்டமைப்பைப் பிரிந்த பின் தொடர்ந்த ஆறாண்டு காலத்தில் கஜேந்திரகுமார் சாதித்தது கடந்த பொதுத் தேர்தலில் விஜயகலா அம்மையாரிடம், கூட்டமைப்பிற்குச் சேர வேண்டிய ஆசனத்தைத் தாரை வார்த்தது மாத்திரமே. எங்கும், எதிலும், என்றும் கூட்டமைப்பை எதிர்ப்பதை வாழ்க்கையாக்கி விட்டு இன்று கூட்டமைப்பின் உழைப்பின் வினையாகக் கிட்டிய வட மாகாண முதலமைச்சர் என்கிற தலைமைப் பீடத்தின் பின்னால் தன் அரசியல் எதிர்காலத்தைக் காக்கத் தஞ்சம் புகுந்திருப்பதே இவரது ஆளுமையின் இலட்சணம். உள்ளேயிருந்து கொண்டு சம்பந்தனையும் சுமந்திரனையும் விரட்டிக் குழப்பிச் சாதிக்க முயன்று தோற்று, தொடர்ந்து வந்த தேர்தலிலும் தோற்று, பின்னர் அதே தலைமைகளிடம் தேசியப் பட்டியலில் ஆசனத்திற்கலைந்து தவித்துத் தரித்த பின்னர், கடைசியாக வழியேதுமின்றி யார் வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் கூடாதென்று கூவி வந்தாரோ அதே நபருக்குப் பின்னால் தன் இருப்பைத் தக்கவைக்க வரிசை கட்டியிருப்பதே சுரேஷ் பிரேமச்சந்திரனின் நகைப்பிற்குரிய, அருவருக்கத்தக்க அரசியல்.

பேரவையின் சேனைத் தளபதிகள் இப்படி, சக்கரவர்த்தி எப்படி? விக்னேஸ்வரன் தனது அரசியல் நிலைப்பாடுகளில் எதுவிதத் தெளிவோ, உறுதியோ இன்றித் தள்ளாடிக் கொண்டிருக்கிறார். 2013 வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் ‘தெரண’ தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில், “நீங்கள் இனிக் கூட்டமைப்பின் கையில் பொம்மையாகி (தீவிரவாதியாகி) விடுவீர்களா?” என்ற தொனியில் விடுக்கப்பட்ட கேள்விக்கு ‘கூட்டமைப்பு அரசியல்வாதிகள் தாம் நினைத்ததைச் சொல்லும், செய்யும் சூழ்நிலை போருக்கு முன்னர் இருக்கவில்லை. அன்று பேசியது விடுதலைப் புலிகளின் துப்பாக்கி ரவைகளே; கூட்டமைப்பு அரசியல்வாதிகளல்ல. இன்று போரோய்ந்து விட்டது. அவர்கள் என் போன்றவர்களே (மிதவாதிகளே)’ எனப் பதில் சொல்லியிருந்தார். மாகாண சபைத் தேர்தலுக்கு மிகச் சொற்ப நாட்களே எஞ்சியிருந்த நிலையில் வல்வெட்டித்துறைப் பிரச்சார மேடையில் வைத்து யார் கூட்டமைப்பை அடக்கித், தீவிரப் போக்காக்கி வைத்திருந்தவர்(கள்) என்று தெற்கில் அறிவித்திருந்தாரோ, அதை முற்றாக மறந்து, மறைத்து, தேர்தல் வாக்குகளைக் குறி வைத்துப் பிரபாகரன் ஒரு மாவீரன் என முழங்கினார். 2015 பொதுத் தேர்தலில் முற்றாகக் கூட்டமைப்பிற்கு எதிராகச் செயற்பட்டு அதில் தோல்வியடைந்த பின்னர், கிளம்பியிருந்த சூட்டைத் தணிக்கவென நல்லிணக்கத் தூதுவராக மாறி நாக விகாரையின் பிரதான பிக்குவைச் சந்தித்து வணக்கம் செலுத்தினார். கடந்த வருட நாக விகாரைச் சுற்றுலாவை மறந்து, எழுக தமிழிப் பேரணியில் சிங்கள – பௌத்த மயமாக்கலை நிறுத்து என வீரப் பிரகடனம் செய்தார். எழுக தமிழில் எழுந்தவர்கள் முற்றாக அமர்ந்து முடியவில்லை, பிரகடனத்திற்கெதிராகத் தெற்கில் கிளம்பிய எதிர்ப்பலையை சமாளிக்க ஜனாதிபதி சிறிசேன முன்னிலையில் சட்டபூர்வமாக விகாரைகளைக் கட்டுவதற்குச் சம்மதம் என்ற கருத்துப்பட சிங்களத்தில் பதுமையாகப் பேசி வைத்தார். போதாதென்று, புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி திரட்டும் பாத யாத்திரையை சிங்கக் கொடி அசைத்து துவக்கியும் வைத்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் முன்னை நாள் கருத்துக்களின் படி, சிங்கக் கொடியை அசைப்பதென்பது தமிழ் அரசியலை ‘தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும்’ மாபெரும் குற்றச் செயல். ஆக, இறுதியில் பேரணிக்குத் தலைமை தாங்கியவராலேயே எழுக தமிழ் ஏற்பாட்டாளர்களின் வீறு கொண்ட வெளிப்பாடுகள் யாவும் சொற்ப நாட்களுக்குள்ளேயே பெட்டிப் பாம்பாகச் சுருள நேர்ந்தது.

இந்தக் கூட்டணிதான் தமிழினத்தின் புதிய மீட்பர்களா? இவர்களை நம்பித்தான் நாம் வீதிக்கிறங்கி, வீரத்தை வெளிக்காட்டி, விடியல் தேடப் போகின்றோமா? புளுகுக் கதைகளையும், போலித் தீர்க்கதரிசனங்களையும் தவிர்த்து இவர்களிடமிருந்து பிறிதொன்றும் பிறக்காது. நிதர்சனம் இதுவே என்று தன் கட்சி நடுநிலை மற்றும் மக்களியக்கப் போக்காட்டல்களை விலக்கி, பேரவை தேர்தல் அரசியலிற்குள் தாவுகின்றதோ, அன்று பேரவையையும், அதன் தலைமைகளையும் (மீண்டும்) தமிழ் மக்கள் தீர்க்கமாக நிராகரிப்பார்கள்.

இறுதியாக, இப்பேரணி தமிழ் மக்களின் அரசியற் தலைவர்களிடம் ஜெனீவாவிலும், இலங்கைப் நாடாளுமன்றத்திலும், புதிய அரசியல் யாப்புத் தொடர்பான கலந்துரையாடல்களிலும் அவர்கள் எவற்றையெல்லாம் சாதித்தாலும் இறுதியில் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை இழந்தால் அது தம் செயற்பாடுகளை அர்த்தமற்றதாக்கும் என்ற சத்தியத்தை வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றது. தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களோடு நெருக்கமான உறவுகளைப் பேணுவதே தமிழ்த் தலைமைகளின் தலையாய கடன். என்று இவ் உறவினில் இடைவெளி விழுகின்றதோ வீட்டிற்குள் புகுந்து சூறையாட பல சக்திகள் காத்திருக்கின்றன. தேர்தல் காலங்களில் மக்களோடிருக்கும் தொடர்ச்சியான இடைப்படுதல், உரையாடல் என்பன பின்னரும் தொடர வேண்டும். வவுனியாவில் நடந்தது போன்ற காட்டசாட்டமான கட்சிக் கூட்டங்கள் வட கிழக்கெங்கும் நடக்க வேண்டும். தொடர்ச்சியான உரையாடலிருக்கும் போது மக்கள் மனம் தளர்ந்து போக மாட்டார்கள். மக்களே பலம். மக்களே மகுடம்.

1379755_435957633176933_1758230978_nஇலைஜா ஹூல்