படம் | WIKIPEDIA

பிரித்தானியாவின் வட அயர்லாந்து மீதான சட்ட அதிகார எல்லையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த சின் பெயின் (Sinn Fein), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இதன் அங்கமாகவே, குறித்த வாக்களிப்பு முடிவு தொடர்பான செய்திகள் வெளிவந்து குறுகிய நேரத்துக்குள்ளேயே, வட அயர்லாந்தின் ஜனநாயக திடசங்கற்பத்தை ஆங்கில வாக்குகள் தடம்புரள வைத்துள்ளன. இது, ஐக்கிய அயர்லாந்தின் தேவையை மீளவும் கோடிட்டு காட்டுகிறது என சின் பையினின் தலைமைத்துவம் தெரியப்படுத்தியுள்ளது. வட அயர்லாந்தின் 56% மக்கள் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றித்திற்குள் தொடர்ந்தும் அங்கம் வகிக்கவே வாக்களித்திருந்தனர்.

சிதையாத சித்தாந்தம்

பிரித்தானியாவின் பிரித்தாளும் தந்திரத்துக்குள் சிக்கிய அயர்லாந்துக்கே உரித்தான வட அயர்லாந்து, மீண்டும் அயர்லாந்து குடியரசுடன் இணைக்கப்பட்டு ஐக்கிய அயர்லாந்து உருவாகும் என்ற போராட்டம் நீண்டது. அயர்லாந்தின் சுதந்திரத்துக்கான ஆயுதப் போராட்டத்தை நடாத்திய அயர்லாந்து குடியரசு இராணுவம் – ஐ.ஆர்.ஏ (Irish Republican Army -IRA) பின்னர் ஐக்கிய அயர்லாந்தையும் வலியுறுத்தி தனது தாக்குதல்களை முன்னெடுத்தது. அதேபோன்று, சின் பையின் என்ற அயர்லாந்தின் முதன்மையான அரசியல் அமைப்பு அரசியல் போராட்டத்தை சுமார் நூறு வருடங்களாக மேற்கொண்டுவருகிறது. சின் பையினின் ஆயுத அமைப்பே ஐ.ஆர்.ஏ என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தாலும் சின் பையினின் அயர்லாந்தின் சுதந்திரத்துக்கான போராட்டம் தடைகளை தகர்த்து முன்னகர்ந்தது.

ஆங்கில அதிகாரத்தை அயர்லாந்தில் நிலைநிறுத்த முயற்சித்த பிரித்தானியர்களுக்கும், தனித்துவத்தையும் தன்னாட்சியையும் நிலைநிறுத்த போராடிய அயர்லாந்து குடியரசுக்குமிடையிலான மோதுகை சுமார் எண்ணூறு வருட வரலாற்றைக் கொண்டது. ஆயினும், கத்தோலிக்கர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அயர்லாந்தை புரொட்டஸ்தாந்தை பெரும்பான்மையாகக் கொண்ட ஐக்கிய இராச்சியத்துடன் 1801இல் இணைத்த போது தீவிர ஆயுத மோதல்களுக்கான அடித்தளமிடப்பட்டது.

விடுதலைக்கான வித்து

பிரித்தானியாவின் பிடிக்குள் அயர்லாந்து கடுமையாக சிக்குண்டிருந்த காலம். அந்நிய ஆக்கிரமிப்புக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் தொடர்ந்தும் வாழமுடியாது, எம்மை எதிர்த்து நிற்பது எம்மைவிட பலம்வாய்ந்த படைகள் என்றாலும் எமது தேசத்தின் சுதந்திரத்திற்காக நாம் போராடியே ஆகவேண்டும் என்ற முடிவு அயர்லாந்தின் புரட்சியாளர்களால் எடுக்கப்பட்டது. எடுக்கப்பட்ட முடிவை அமுல்படுத்துவதற்காக இயேசுபிரான் மரித்து அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த காலப்பகுதி நிர்ணயிக்கப்படுகிறது.

அதன் நிமிர்த்தம் இந்த எழுச்சி Easter Rising (ஈஸ்டர் எழுச்சி) என பெயரிடப்பட்டு 24 ஏப்ரல் 1916 வெடித்தது. இருப்பினும், எழுச்சி ஆரம்பிப்பதற்கு அண்மித்த நாட்களில் தலைமைத்துவத்திற்கு இடையில் உறுதியற்ற தன்மையும், உடன்பாடற்ற தன்மையும் காணப்பட்டது. இது போராளிகளுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணியதோடு தாக்குதல் திட்டத்தை பிற்போட நிர்ப்பந்தித்தது. அத்துடன், அயர்லாந்து தொண்டர்கள் (Irish Volunteers) படைப்பிரிவைச் சார்ந்த பல நூற்றுக்கணக்கானவர்கள் தமது தலைமைத்துவத்தின் வேண்டுதலுக்கு இணங்க தாக்குதல்களில் இறங்கவில்லை. ஆதலால், பிரஜைகள் இராணுவம் (Citizen Army) என்ற மற்றைய அமைப்பின் படைப்பிரிவே பெரும்பாலான தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்கியது. அத்துடன், ஜேர்மனியிடம் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆயுதங்களும் இராணுவத் தளபாடங்களும் வழங்கல் தடைப்பட்டதால் உரிய நேரத்திற்கு வந்தடையவில்லை. இத்தகைய உறுதிப்பாடற்ற தன்மைகளால், ஆரம்பத்தில் அயர்லாந்து தழுவிய ரீதியில் நடாத்தப்படுவதாக திட்டமிடப்பட்ட புரட்சி இறுதியில் டப்ளின் நகரத்தை பிரதானமாகக் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டது.

டப்ளின் நகரில் அமைந்திருந்த பொதுத் தபால் நிலையம் உட்பட்ட கேந்திர முக்கியத்துவம் மிக்கதாக கருதப்பட்ட இடங்களை புரட்சியாளர்கள் கைப்பற்றினார்கள். கைப்பற்றிய பொதுத் தபால் நிலைய படிக்கட்டுக்களில் சக போராளிகள் புடைசூழ நின்ற பற்றிக் பியேஸ் (Patrick Pearse), அயர்லாந்து மக்களுக்கான அயர்லாந்து குடியரசின் அதிகாரபூர்வ அறிக்கையை வாசித்தார். கடவுளினதும் மரணித்த எங்கள் சந்திதியின் பெயரிலும், தேசத்தின் பழைய மரபை அயர்லாந்து அன்னை எங்கள் ஊடாக பெற்றுக்கொள்கிறாள். தனது கொடிக்குக் கீழ் அணிதிரள அழைக்கும் அயர்லாந்து அன்னை, தனது சுதந்திரத்திற்காகப் போராடுவதற்கு அழைக்கிறார் என்ற தொனிப்பட்ட அந்த அறிக்கை நீண்டு சென்றது. அயர்லாந்து குடியரசை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியும் ஏற்றப்பட்டது. அந்தநிறங்களே அயர்லாந்தின் தேசியக்கொடியை இன்றுவரை அலங்கரிக்கின்றன.

தவிர்க்கமுடியாத தோல்வி

போராட்டம் தொடங்கிய அடுத்த நாளே பெருமளவான பிரித்தானியா படைகள் டப்ளின் நகரில் வந்து குவிந்தனர். இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. மூன்றாவது நாள், பிரித்தானிய படைகளின் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்தது. துப்பாக்கி ரவைகளும், குண்டுகளும் முடிவடைந்த பின் ஒரு முனையில் இருந்த போராளிகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைகின்றனர். அதனைத் தொடர்ந்து நகரத்துக்குள் நுழைந்த பிரித்தானியப் படையினருக்கு உணவு வழங்கி வரவேற்றார்கள் அயர்லாந்து மக்கள்.

இன்னொரு முறையில் தீவிர மோதல்கள் தொடர்ந்தது. அதில் பிரித்தானியப் படைகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெனரல் சேர் ஜோன் கிரென்பெல் மக்ஸ்வேல் பிரித்தானியாவிலிருந்து களமிறக்கப்பட்டார். தீவிர தொடர் மோதல்களால் நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தீ பரவியது. பொதுத் தபால் நிலையத்திலிருந்தும் போராளிகளை பின்வாங்குமாறு கட்டளை பிறப்பித்தார் பற்றிக் பியேஸ். போராக மாறிய போராட்டத்தின் ஆறாவது நாள் நிபந்தனையற்ற சரணடைவுக்கு போராளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

ஆறு நாட்களில் தோல்வியில் முடிந்த Easter Rising இல் சில நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினார்கள். Eater Rising இற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்கினார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 3,000 மேற்பட்ட அயர்லாந்து மக்கள் கைதுசெய்யப்பட்டனர். டப்ளின் நகரம் அழிவடைந்தது.

அயர்லாந்தின் சுதந்திரத்திற்கான புரட்சிக்கு தலைமை வகித்த அயர்லாந்தின் போராளிகள் அடையாளம் காணப்பட்டு தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டனர். பிரித்தானியப் படைகளின் காரணமற்ற கைதுகளும் தடுத்து வைப்புகளும் ஆத்திர அலையை அயர்லாந்து மக்களிடம் ஏற்படுத்தியது.

ஈற்றில் மக்கள் மயப்படுத்தப்படாத போராட்டம், தலைமைத்துவங்களுக்கு இடையில் நிலவிய முரண்பாடுகள், திட்டமிடல், தொடர்பாடல், ஒருங்கிணைப்பு மற்றும் கட்டளை வழங்கலில் காணப்பட்ட பலவீனங்கள் போன்றவற்றால் Easter Rising  தோல்வியில் முடிந்தது.

தோல்விக்கு பின்னர் தோன்றிய மக்கள் எழுச்சி

அந்தப் பொழுதுகளில் விடுதலைப் பொறியொன்று வெளிக் கிளம்புமென்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. நிலைமை மாறியது. தோல்வியிலிருந்து தோற்றம் பெற்றது சுதந்திரத்துக்கான திறவுகோல். இழப்புகள், வலிகள், தோற்றுப்போனோம் என தோற்றிய எண்ணப்பாடுகள், தொடர்ந்த அவமானங்களும் அடக்குமுறையும் மக்களை அயர்லாந்தின் சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தூண்டியது.

பற்றிக் பியேஸ் உட்பட Easter Rising ற்கு முன்னிலையிருந்து செயற்பட்ட பலரும் தேசியவாதத்தின் அடிப்படையில் தோன்றிய எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, அரசியல் செயற்பாட்டாளர்களாக இருந்தார்கள். எங்களை அழிப்பதன் ஊடாக அயர்லாந்தின் சுதந்திர தாகத்தை அழிக்க முடியாது. நாம் மரணித்தாலும் சுதந்திரத்தில் விருப்புக்கொண்ட எமது எதிர்கால சந்ததி தொடர்ந்து போராடும். நாம் விட்டுச் செல்லும் வரலாறும் எமது அர்ப்பணிப்புளும் வீண் போகாது என்ற தொனிப்பட்ட பற்றிக் பியேஸ் போன்றவர்களின் எழுத்துக்களும் பேச்சுக்களும் அயர்லாந்தின் தேசியவாதத்தை பலப்படுத்தியிருந்தது.

இதன் காரணமாகவே, படுகொலைசெய்யப்பட்ட உடல்களை உறவினர்களிடம் கையளிக்கக்கூடாது என்ற கருத்தை பிரித்தானியா கட்டளைத் தளபதியான கிரென்பெல் மக்ஸ்வேல பிரித்தானியாவின் அன்றைய பிரதமர் அஸ்குயித்துக்குத் (Asquith) தெரியப்படுத்தினார். ஏனெனில், அயர்லாந்தில் வேரூன்றத் தொடங்கிய தேசியவாதம் இந்த உடலங்களை கண்டதும் கிளர்ந்தெழும். அது ஒரு எழுச்சியாக மாறும் என்ற எண்ணமே உடலங்களை கையளிக்கக் கூடாது என்ற அவரது நிலைப்பாட்டுக்கு காரணமாகும்.

இது போன்ற விடயங்கள், அயர்லாந்து மக்களின் ஆத்திரத்தையும் சுதந்திரத்துக்கான அபிலாசையையும் இரட்டிப்பாக்கியதுடன் விடுதலைக்கான வேட்கைக்கு வித்திட்டது.

அயர்லாந்தையும் உள்ளடக்கிய ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத் தேர்தல் 1918இல் இடம்பெற்றது. இதில் அயர்லாந்தின் சுதந்திரத்துக்காக போராடிய சின் பையின் அமைப்பும் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டியது. பிரித்தானியர்களுக்கு சார்பானவர்கள் அயர்லாந்தில் தெரிவுசெய்யப்படுவதை தவிர்க்கும் நோக்கோடும் தாமே அயர்லாந்து மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்பதை வெளிப்படுத்தும் எண்ணத்தோடும் ஒரு தந்திரோபாயமாகவே சின் பெயின் ஐக்கிய இராச்சியம் நடாத்திய தேர்தலில் பங்குபற்றியது. ஆயினும், ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தில் அமர்வதை புறக்கணித்தார்கள். அத்துடன், அரசியல் போராட்டத்தின் அங்கமாக, அயர்லாந்துக்கான நாடாளுமன்றத்தை கூட்டி அயர்லாந்தின் சுதந்திர பிரகடனத்தை வெளியிடுவதற்காக போரினால் சிதைக்கப்பட்ட டப்ளின் நகரில் 1919இல் ஒன்றுகூடினார்கள்.

(தொடரும்)

நிர்மானுசன் பாலசுதந்தரம்