படம் | AFP Photo, THE STRAITS TIME

இலங்கைக்கான தேசிய கலாசார கொள்கையை வரைவு செய்யும் ஒரு முயற்சி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. கலை, கலாசாரம் ஆக்கபூர்வமான சிந்தனை போன்றவற்றை உள்ளூர் வாழ்க்கையாளரின் இதயத்தினுள் கொண்டு சேர்க்கவும் தேசத்தை கட்டியெழுப்பவும் முயற்சிக்கும்.

நான் எனது அதிகமான நேரத்தை ‘கலாசாரம்’ என மழுப்பலாக பிரதிபலிக்கும் எண்ணக்கரு பற்றி நினைத்து பார்ப்பதிலும் – அதனைச் சூழ்ந்திருப்பது என்ன? அது எதனைப் பிரதிபலிக்கின்றது? எனச் சிந்திப்பதிலும் செலவிட்டுள்ளேன். இயற்கையாகவே, எனது அதிகமான நேரமானது, இலங்கையின் கலாசாரம் என்றால் என்ன என்பதைப் பற்றிச் சிந்திப்பதாகவே இருந்துள்ளது.

உண்மையில் எது எமது நாட்டின் கலாசாரம்? உடனடியாக எமது சிந்தனையில் வருவது, புன்னகை, ஆவி பறக்கும் தேநீர் கோப்பை, நான்கு பிள்ளைகள் பாரம்பரிய முறையில் ஆடை அணிந்து வயல் வெளியினூடாக ஓடுவது, பிளிரும் யானை, எரிந்துகொண்டிருக்கும் சூரியனுக்கடியில் மீனவர்கள், உலகின் எட்டாவது அதிசயத்தை மிக அருகில் இழந்த சீகிரியா, பிரகாசிக்கும் கண்டிய நடனக் கலைஞர்கள் போன்றனவே. அநேகமாகவும் மிக இலகுவாகவும் எமது சிந்தனையில் மலரும் இவையே இலங்கை கலாசாரம் பற்றி சுழற்சியாகவும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் படங்கள் ஆகும்.

ஆனால், இது எமது கலாசாரம் அல்ல. இவை யாவும் எமது அஞ்சல் அட்டைகள்.

எமது கலாசாரம் என்ற அனைத்துமே, எமது வாழ்க்கை முறைக்காக நாங்கள் உருவாக்கிய மதிப்புத் தேர்வுகளும், நாம் தொடர்ந்தும் பேணுவதுமான, எம்முடன் வளர்ந்ததும், எம்முள் உருவானதும் ஆகும். நாம் முன்னுரிமை அளிப்பது, ஒப்புதல் அளிப்பது, நாம் பயிற்சி செய்து மற்றவர்களுக்கு அதை எவ்வாறு வழங்குவது, நாம் அடைய முயல்வது, எமது தேடல், நாம் மதித்து முதலீடு செய்வது போன்றவையே கலாசாரமாகும். அது எங்கள் வாழ்க்கைக்கான வழியுமாகும்.

ஓரளவிற்கு கலாசாரமானது, உதாரணங்கள் மூலமாகவும் உட்கட்டமைப்பு மூலமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய உலகில் பிரபலமான ‘கலாசார பண்பாட்டில் செல்வாக்கான’ நகரங்களும், நாடுகளும் இவ்வாறு வளர்வதற்கான காரணம், அவை அவற்றின் மீது தமது உணர்வுபூர்வமாக மேற்கோள் காட்டிய ஆக்கபூர்வமான கலாசாரம் மற்றும் அவற்றின் மீது செலுத்திய ஈடுபாடு, மன நோக்கில் ஏற்படுத்திய ஊக்குவிப்பு மற்றும் பௌதீக அளவில் உருவாக்கிய இடம் போன்றவையே.

கலாசாரம் என்பது விசித்திரமான சிக்கலான விடயம், அற்புதமான சந்தைகள் போன்று முற்போக்கான துடிதுடிப்பான கலாசாரம் உருவாக்கப்பட்டு, சமூகங்களுக்கும் நகரங்களுக்குள் மாத்திரமல்லாது மக்களது மனங்களிலும் உள் உணர்வுகளிலும் உருவாக்கப்படுதல் வேண்டும். மக்கள் கட்டாயமாக ஒரு அடித்தளமானதும் தேடுதல் உடையதும், ஆக்க பூர்வமான கலாசாரத்தினதும் நன்மைகளை அறிந்துகொள்ள வேண்டியதன் கட்டாயம் என்னவெனில், அவை மேலும் வளரும் பொருட்டும், சில விசயங்களை உணர்ந்து கொள்ளவும், அதனுடன் வாழவும், தேர்ந்தெடுக்கவும், கடத்தவும் வேண்டும் என்பதாலாகும்.

இந்தத் தேவையானது, அடித்தளமானதும் தேடுதல் உடையதும், ஆக்கபூர்வமான கலாசாரத்தினை சந்திக்காவிடில் இலகுவானதும், உடனடியாகக் கிடைக்கக் கூடியதும், வசதியானதும், அணுகக் கூடியதுமான கலாசாரங்களை இந்தத் தேவை சந்திப்பது இயல்பாக அமைந்து விடும்.

இந்த விடயத்தில் இலங்கையின் தொடக்கப்புள்ளி அநேகமாக மிகவும் இலகுவானது, மிகவும் ஆணித்தரமானது (இதன் தொடக்கப்புள்ளி சிறப்பாகவே இருக்கின்றது). கிட்டத்தட்ட கலை, கலாசாரத் துறையில் தலைமைத்துவமோ, விருப்பமோ அல்லது அரச முதலீடோ எம்மிடம் இல்லை. அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கலாசாரத்திற்கு முன்னுரிமை அளிக்கவில்லை. கிட்டத்தட்ட கலை, கலாசாரம் சம்பந்தமாக அரச நிதி ஒதுக்கப்படவில்லை. ஆக்கத்துறைக்கான கட்டமைப்பு ஒத்துழைப்பு இல்லை; தலையீடுகள் இல்லை. சிறந்த தரம், நடைமுறைகள், சரியான வழிகாட்டல் வழங்கப்படவில்லை. மேலும், உண்மையாகவே எமது உள்துறை அமைச்சின் கலாசாரத்தின் கற்பனை மற்றும் நோக்கத்தின் மீதான வெறுமையானது, இருண்ட உருவகமாக காணப்படுவதன் காரணமாகவே, பரந்த கலாசாரம் தொடர்பில் மிகவும் நெருக்கடி நிலவுகின்றது.

ஆக்கபூர்வ கலாசார உற்பத்தி பற்றிய அரசின் அக்கறையின்மை, ஏமாற்றத்தைத் தருவதோடு (ஆனாலும் முழுவதுமாக வியக்கத்தக்க வகையில் அல்ல) தனியார்துறை, கொடை வள்ளல்கள், அரச சார்பற்ற நிறுவனத்தார் யாருமே கலை கலாசாரத்திற்கு முன்னுரிமை அளிக்கவில்லை. எப்பொழுதுமே முன்னுரிமையோ, அர்ப்பணிப்போ, அவசரமோ அல்லது முக்கியமாக தேவையானது என்றோ யாரும் இதனைக் கருதவில்லை. இதனுடைய இந்தச் சூழ்நிலைக்கான காரணமானது, எமது விரிவடைந்த கல்வி முறை, கிட்டத்தட்ட உண்மையாகவே கலை பற்றிய நோக்கத்தினை பாடசாலைக் கல்வியின் கடைசி சந்தர்ப்பமாகக் காட்டுவதுடன், தாழ்ந்த நிலையில், தரம் குறைந்த பயிற்சியினையும் கொண்டுள்ளமையாகும்.

இதனால், எமது கலை கலாசார துறை வளரச்சியடையவில்லை அல்லது திருப்திகரமான விகிதத்தில் முதிர்ச்சி அடையவில்லை. ஆக்கத்திறன் மற்றும் விமர்சனத் தேடுதல் போன்றன மக்களுடைய வாழ்க்கை முறைக்குரிய ஒரு தேர்வாக உடனடியாகக் கிடைக்கக்கூடியதாகக் காணப்படவில்லை. அவை கண்ணுக்குத்தெரியாமல் மறைந்து, செயலற்று, நிலையற்று, சீரற்ற, அடிக்கடி தரமிழந்து எப்பொழுதும் இழக்கப்பட்டதாகவே காணப்படுகின்றன.

எப்படியாயினும், கலாசாரம் பற்றிய விடயம் என்னவென்றால்… எது நடந்தாலும் கலாசாரம் சாதாரணமாகவே இடம்பெறுகிறது.

கலாசாரம் எப்பொழுதும் இடம்பெறுகிறது. கலாசாரமானது, வாழ்க்கைக்கு அர்த்தத்தினையும், நோக்கத்தையும் சுவையையும் வழங்கும் பொருட்டு மக்கள் தேடித் திரும்புவதாக காணப்படுகின்றது. இதனால்தான் அனுபவிக்க கற்றிருக்கின்றார்கள். அது அமைப்புக்களையும் பழக்கவழக்கங்களையும் உருவாக்குகின்றது. இதனுள்ளேயே, மக்கள் ஆறுதல் அடைந்து, பாதுகாப்பை உணர்ந்து, ஓய்வெடுத்து மற்றும் தமது பிள்ளைகளுக்கு விழுமியங்களை தெரிந்தெடுத்து கடத்தவும் முயலுகின்றார்கள்.

கலாசாரமானது ஒரு வழியாக அல்லது வேறொரு வழியாக செழிக்கின்றது. இது நகர்ப்புற கொழும்பில் செழிக்கின்றது. இது எங்கும் நிறைந்து, உணரப்பட்டு, இணைக்கப்பட்டு, புரிந்து கொள்ளப்பட்டும் உள்ளது. இது ஒவ்வொரு நாளும் தன்மையிலும் வலிமையிலும் வளர்கின்றது.

கொழும்பில் எந்தெந்த கலாசாரம் எமது வாழ்க்கை முறையை ஆக்கிரமித்துள்ளது… நாங்கள் பின்னால் அடிவைத்து சுற்றிப் பார்ப்போமேயானால், எங்களால் இதனை அவதானிக்க முடியும்.

எமது வீதிகளின் கலாசாரம் – முடிவற்ற சில்லறை ஆடை கடைகள், வணிக வளாகங்கள், அழகுசாதன நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், உணவகங்கள், போக்குவரத்து நெரிசல் (இனிமேலும் சுவரொட்டிகள் இல்லாமைக்காக கடவுளுக்கு நன்றி), ஆக்கிரமிக்கும் சொகுசு வாகனங்கள், அளவுக்கு மீறி சனத்தை ஏற்றிய பஸ்கள்.

எமது பாடசாலைகளின் கலாசாரம் – பரீட்சைகள், வீட்டுப் பாட வேலைகள், மேலதிக நேர வகுப்புகள், சுமையான புத்தகப் பொதிகளுடன் இரண்டாய் வளைந்த பிள்ளைகள், மாணவர் தற்கொலைகள், போக்குவரத்து நெரிசல், லட்சியத்தில் குறுக்கிடும் பெற்றோர், அனுமதிக்கு லஞ்சம், அதிருப்தியான செயல் நோக்கமற்ற ஆசிரியர்கள்.

எமது அரசியல்வாதிகளின் கலாசாரம் – தண்டனையிலிருந்து தப்புவதற்கான, பொறுப்புக் கூறாத, நிலையற்ற, திமிரான, பதவி மோகம் பிடித்த, அழுகின்ற உரைகள், கொழுத்த உடல்கள், துப்பாக்கிகள், பாதுகாவலர்கள், அனைத்தும் பலத்த சத்தமாக மற்றும் மிகப்பெரிய.

எமது நூதனசாலைகளினதும் நூலகங்களினதும் கலாசாரம் – (எந்த நூதனசாலைகள், நூலகங்கள்?)

எமது பெருநிறுவனங்களின் கலாசாரம் – சுய ஊக்குவிப்பு, மிகை சாதனையாளர்கள், நீண்ட வேலை நேரங்கள், பணம் சம்பாதித்தல், உடற்பயிற்சி நிலையங்கள், பெரிய பெரிய வாகனங்கள், காணி மற்றும் மனைக் கொள்வனவு, சொகுசு ஹோட்டல்களில் மற்றும் வெளிநாடுகளில் விடுமுறைகள்.

எமது விடுமுறைத் தலங்களின் கலாசாரம் – குப்பைக்கு மேல் குப்பை, அதிகாரபூர்வமான பெரிய வாகனங்கள், இயற்கைப் பூங்காக்களில் நெரிசல், புனிதத் தலங்களின் கொள்ளை, குழந்தைகள் மீதான பாலியல் இச்சை, நம்ப முடியாத அளவிலான உணவு ஊதாரித்தனம்.

எமது பல்கலைக்கழகங்களின் கலாசாரம் – தனியான மாணவர் அரசியல், தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள், ஆர்வமற்ற இளங்கலைமானியினர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கான புலமைப்பரிசில்கள் மீதான மிகையுணர்வு.

‘மெகா’ என்பதன் கலாசாரம் – நிரப்புவதற்கு எதுவுமேயல்லாத பாரிய அமைப்புகள் – இவை வணிகமயமான கலாசார நிகழ்வுகளாகவோ, வெறுமையான பட்டச் சான்றிதழ்களாகவோ, யாரும் வேண்டாத அல்லது யாருக்கும் தேவைப்படாத ஒரு துறைமுக நகரமாகவோ அல்லது பணவீக்கமுடைய பாராளுமன்றமாகவோ இருக்கலாம்.

எமது தொலைக்காட்சி நிலையங்களின் கலாசாரம் – 600 அத்தியாயங்களைக் கொண்ட மோசமான நாடகங்கள், இடைவிடாத பலதரப்பட்ட விளம்பரங்கள், சிறந்த நட்சத்திர தேர்வுப் போட்டிகள், பரபரப்பூட்டும் நேரடி நிகழ்ச்சிகள், சிறுவர் நிகழ்ச்சிகள்.

எமது ஊடக கலாசாரம் – பரபரப்புத்தன்மை, பொறுப்பற்ற அறிக்கையிடுதல், ஆராயப்படாத எழுத்து, உண்மை மீதான கருத்து, பயிற்றப்படாத குறைந்த கொடுப்பனவுடனான எழுத்தாளர்கள், குறுக்கிடும் உரிமையாளர்கள்.

வானொலி / தொலைக்காட்சி அறிவிப்பாளர்களின் கலாசாரம் – சுவாரசியமான எதுவுமற்ற மற்றும் சுவாரசியமாக எதைனையுமே கூற முடியாத இளையவர்கள்.

எமது கலைகளின் கலாசாரம் – சோர்வடைந்த கலைஞர்கள், கேலித்தனமான நாடகங்கள், நிலையற்ற விளம்பரப்படுத்தப்படாத – தனிமைப்படுத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள், வணிகமயமான கலை, வெறுமையான திரையரங்குகள் மற்றும் சினிமா கூடங்கள்.

முன்மாதிரிகளின் கலாசாரம் – எமது கிரிக்கெட் வீரர்களைத் தவிர வேறு யார் எங்களுக்கு உள்ளனர்? பல்கூட்டுச் சந்தைகள் முதல் ஆடைகள், வங்கிகள், தொலைபேசிகள், உணவகங்கள் வரை, எல்லாவற்றிற்கும் கண்மூடித்தனமாக ஒப்புதல் அளிக்கும் இவர்கள் நுகர்வினைத் தவிர வேறு எதனைப் பிரகடனம் செய்கின்றனர்?

எமது வைத்தியசாலை கலாசாரம் – நொந்துபோன நோயாளிகள், வெகுவான நிபுணர்கள், வெறித்தனமான மற்றும் கண்மூடித்தனமான சோதனைகள்.

சிக்கல் தீர்க்கும் கலாசாரம் – மறுப்பு, பழி கூறல், பொய், சட்டமிடுதல், தவிர்த்தல்.

எமது இல்லங்களின் கலாசாரம் – தொலைக்காட்சியை சுற்றி அமர்தல், வகுப்புக்களுக்காக பிள்ளைகளை பிரயாணித்தல், வீட்டுவேலைப் பாடக் குவியல்கள், தனித்தனியான சாதனங்களுடனான பிள்ளைகள், சாதனங்களுடனான பெற்றோர்கள், சமையலறையில் தாய்.

ஆதிக்கக் கலாசாரம் – எதுவரை, நாம் அனைவரும் இதனைப்பற்றி கோஷமிடுகின்றோம் (எமக்குரியவர்களில் ஒருவர் இதன் பயனை பெறும் வழியை அடையும் வரையில்).

அமைதியின் கலாசாரம் – கூறியது போதும்.

ஆம். என்ன நடந்தாலும் கலாசாரம் இடம்பெறுகின்றது. நாம் அனைவரும் வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாலும் அல்லது எங்களை மாத்திரம் கவனித்துக் கொண்டிருந்தாலும் அல்லது எமது முழுமையான கவனமும் முதலீடும் கட்டிடங்கள் மற்றும் வீதிகள், பரீட்சைகள் மற்றும் சான்றிதல்கள், கோவில்கள், ஆலயங்கள், துப்பாக்கிகள் மற்றும் அரசியல் பிரச்சாரங்கள் போன்றவற்றில் இருந்தாலும், எமது பிள்ளைகள் மற்றும் எமது மக்கள் வாசிப்பதில் எந்தவொரு நாட்டமுமின்றி வளர்ந்து வருகின்றதுடன், உண்மையைத் தொடர்வதில் குறைவான ஆர்வமும், கடினமான வினாக்களைத் தொடுப்பதில் எந்தவொரு சார்புமின்றி, சாதாரண முறைமைகளிலிருந்து விழகிக் கொள்வதற்கான எந்தவொரு துணிவுமின்றி, ஆன்மீகத்தில் நுண்ணியளவு ஈடுபாடும், கலைகளின் மீது எவ்விதமான பசியுமின்றி, ஒரு சுதந்திரமான கருத்தினை உருவாக்குவதில் மிகவும் சிறியளவிலான திறனையும், விவேகத்தில் நம்பிக்கையற்றும், நீதியில் புற ஆர்வமும், எமக்கு மிகவும் தெளிவான அல்லது வசதியான எதற்கும் அப்பால் சென்று சவால் விடுவதிலும், மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் மிகவும் சிறியளவிலான விருப்பத்துடனும் காணப்படுகின்றனர்.

ஆக்கபூர்வமான ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்ட கலாசாரத்தை உருவாக்குவதற்கான தாகத்தை நாம் உருவாக்கவில்லையெனின், நாம் எமது மக்களையும், தேசத்தையும், எம்மையும் அக்கறையின்மை, ஒதுக்கவியல்பு, குறுகிய சிந்தனை போன்றவற்றிற்குள் இழக்க ஆரம்பிக்கின்றோம்.

துப்பாக்கிகளை எதிர்கும் எமது அரசியல்வாதிகள் எங்கே? பணம் சம்பாதிப்பதில் மட்டுமன்றி தமது ஊழியர்களை வேறு எதையாவது செய்வதற்கும் ஊக்குவிக்கும் முதலாளிகள் எங்கே? பத்திரிகைகளை வாசிக்கும் எமது வானொலிப் பிரமுகர்கள் எங்கே? குறித்த கலைத்துறையை தமது முழுநேரப் பணியாகக் கொள்ளக்கூடிய கலைஞர்கள் எங்கே? ஊக்கப்படுத்தும் எமது ஆசிரியர்கள் எங்கே? 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பயங்கரத்தை நிறுத்தத் தைரியமான அதிபர்கள் எங்கே? மேம்போக்கான எமது பெற்றோர்கள் எங்கே? பொலித்தீன் பைகளை வாங்க மறுக்கும் எமது இளைய சமுதாயம் எங்கே? ஊதாரித்தனத்தைக் கேள்வி கேட்கும், போதனைகளின் மூலமன்றி முன்மாதிரியாக வாழ்வதன் முலம் வழிநடத்தும் எமது மதத்தலைவர்கள் எங்கே? தங்களுடைய உரிமைகளுக்காகவன்றி மற்றவரின் உரிமைக்காகப் போராட்டங்களை நடாத்தும் எமது பல்கலைக்கழக மாணவர்கள் எங்கே? எமது தமிழ் கலைஞர்கள் எங்கே? எமது நூதனசாலைகள் எங்கே? பூங்காக்களில் அமர்ந்து புத்தகம், பத்திரிகை வாசிக்கும் எமது மக்கள் எங்கே? எமது ஆசிரமங்கள் எங்கே? எமது முன்மாதிரிகள் எங்கே? வியக்கவைக்கும் கேள்விகளை எழுப்பும் எமது இளையவர்கள் எங்கே? எமது வீதிச் சித்திரங்கள் எங்கே? எமது கற்பனை எங்கே? எமது கருணைக் கலாசாரம் எங்கே?

உணர்ச்சியுடைய, ஒன்றுடனொன்று இணைக்கப்பட்ட, தேர்ச்சியுள்ள மற்றும் சுவாரசியமான, நிலையான கலாசாரத்தினையுடைய ஒரு நாடானது எங்களைச் சுற்றி எங்கே காணப்படுகின்றது என சான்று பகரக்கூடியது எது?

ஓ, நிச்சயமாக தனித்தனி உதாரணங்களாக, இவ்வகையான மக்கள் காணப்படுகின்றனர். ஆனால், அவர்கள் விதிவிலக்காகக் காணப்படுகின்றனர். இவர்கள் தனித்து வாழ்கின்றனர் அல்லது கடந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேறி வாழ்கின்றவர்கள், இது ஒரு நெருக்கடியாகும். ஏனென்றால், கலாசாரம் என்பது ஒரு விதிவிலக்கு அல்ல. கலாசாரம் என்பது விதிமுறையாகும். லஞ்சம் வாங்காத நபர், பொய் சொல்லாத ஒருவர், மெய்யாக சிந்திக்கும் ஒருவர், மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாத பிள்ளை, மெலிதான அரசியல்வாதி, கௌரவமான இராஜினாமா, கைதில் உள்ளவர்களைத் தாக்காத பொலிஸ் அதிகாரி, அதிர்ச்சியளிக்கும் வீதியோரச் சிற்பம், வாசிக்கும் தனியார்துறை, சித்திரத்தைக் கைவிடாத ஓவியர் போன்ற அனைவரையும் விதிவிலக்குகளாகக் கொண்டது எமது தேசமாயின், அவமானம் எங்களுக்கே.

அவமானம் எங்கள் அனைவருக்குமே.

அவதானியுங்கள். அஞ்சல் அட்டைகள் அல்ல எமது கலாசாரம். அஞ்சல் அட்டைகளின் பின்னால் அடங்கியுள்ளவைகளே எமது கலாசாரத்தினை உருவாக்குகின்றது. புன்னகைக்கும் அந்தப் பெண் ஒரு வீட்டு வன்முறைக்குட்பட்டவளா? ஆவி பறக்கும் தேநீர் கோப்பைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைத் தொழிலாளிகளின் வாழ்க்கைத் தராதரங்கள் எவை? வயல் வரம்புகளில் ஓடும் அந்த நான்கு சிறுவர்களும் அதாவது, குறிப்பிட்டுக் கூறுவதாயின், சிறுபான்மையினரைப் போல் ஆடைகள் அணிந்த அனைத்து சிறுவர்களும் சிங்களச் சிறுவர்களா? அந்த பிளிரும் யானை அதன் கூண்டிற்கு அருகில் கிடந்த பொலித்தீனை விழுங்கியதால் மூச்சடைத்து உயிரிழந்து விட்டதா? வெயிலினால் சுட்டெரிக்கப்பட்ட மீனவர்களின் பிள்ளைகள் மீன்பிடித் தொழிலைத் தொடர்கின்றனரா? சீகிரியா இன்னும் குப்பை மேடாகக் காணப்படுகின்றதா? கண்டிய நடனக் கலைஞர்கள் எத்தனை பேர் நடனத்தை விட்டுவிட்டு வங்கிகளில் பணியாளர்களாக மாறியுள்ளனர்?

என்ன நடந்தாலும் கலாசாரம் இடம்பெறுகின்றது.

எமது அஞ்சல் அட்டைகள் எதைக் கூறினாலும்.

“Culture happens, No matter what” என்ற தலைப்பில் ருவன்தி டி சிக்கேரா எழுதி Groundviews தளத்தில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.