படம் | BBC

தென்னிலங்கையின் ஹிக்கடுவைப் பகுதியில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பெளத்த பிக்குகள் தலைமை வகித்த குண்டர் குழுக்களால் கடந்த ஞாயிறு காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வணக்க ஸ்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் வரிசையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தற்போது இலக்காகியுள்ளன. கடந்த காலங்களில் பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் மீது இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தாக்குதல் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் அவர்களைச் சுலபமாக அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.

அப்படி இருந்தும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தீவிரவாத பெளத்த பிக்குகளால் மதஸ்தலங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு, தாக்குதல்காரர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியமையே காரணம். சுமார் 200 பேர் கொண்ட கும்பல் 20இற்கும் அதிகமான பெளத்த குருமார் தலைமையில் தமது வழிபாட்டின்போது வந்து தேவாலயங்களை அடுத்தடுத்துத் தாக்கியதாக தாக்குதலுக்குள்ளான தேவாலயங்களின் மதகுருமார்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் நடத்திய பெளத்த பிக்கு ஒருவர் கிறிஸ்தவ மதகுரு ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை சபைக் கூட்டத்தில் அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான மூன்றாவது தீர்மானத்தைத் தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஆதரவு கேட்டு உறுப்பு நாடுகளுக்குத் தூது அனுப்பிக்கொண்டிருக்கிறார் ஜனாதிபதி. இப்படியான நிலையில் மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அனுமதிப்பது இலங்கை தொடர்பான அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் அணுகுமுறை கடினப்படவே வழிவகுக்கும்.

ஹிக்கடுவ தாக்குதல்களின்போது பொலிஸாரின் செயற்படாமையை ஒப்புக்கொண்டார் பொலிஸ் பேச்சாளரான அஜித் ரோஹண. பொலிஸ் குழு மிகவும் சிறியதாக இருந்ததால் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தமுடியாது போனதாகக் கூறுகிறார்.

சம்பவம் நடந்தபோது பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்தபோதிலும் அவர்கள் பெளத்த குருமாரைத் தடுக்க முயற்சி எதுவும் செய்யவில்லை என்று கிறிஸ்தவ அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஹிக்கடுவையில் தேவாலயங்கள் தாக்கப்படப்போவது குறித்த தகவல் தாக்குதலுக்கு முதல்நாளே பொலிஸாருக்குத் தெரிந்திருந்தது என்றும் கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தப்படலாம் என்று தேவாலய மதகுருமாரைப் பொலிஸார் எச்சரித்திருந்தனர். தாக்குதல் நடக்கப்போவதான தகவல்  ஏற்கெனவே தெரியவந்த போதிலும் அவர்களால் தாக்குதலை நிறுத்தமுடியாது போனமை கவலைக்குரியது; கண்டிக்கத்தக்கது.

நாட்டில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் மீதும் மத ஸ்தலங்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை பெளத்த அடிப்படைவாத அமைப்புகள் மிகவும் திட்டமிட்டுச் செயற்படுத்தி வருகின்றன. ஹிக்கடுவையில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியோரில் எட்டுப் பிக்குகள் உட்பட 24 பேரை அடையாளம் கண்டுள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர். அடையாளம் காணமுடியுமானால் அவர்களைக் கைது செய்யத் தயங்குவது ஏன்?

தேவாலயங்கள் மீதான தாக்குதல்களின்போது பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்தும் நடவடிக்கை எடுக்காதமை குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். பிக்குகள் தலைமையிலான குண்டர்கள் சிங்களத்தில் கூச்சலிடுவதும் தேவாலயப் பொருள்களைத் தீயிடுவதும் கல்வீச்சு நடத்துவதும் தனியார் தொலைக்காட்சி நிலையங்களினால் ஒளிபரப்பப்பட்டுள்ளன.  தேவாலயங்களின் ஜன்னல்கள், கதவுகள், இசை வாத்தியங்களும் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளன.

கெளதம புத்தர் சகல இன மக்களும்,  மத மக்களும் சமாதானமாக வாழவேண்டும் என்றே போதித்தார். பெரும்பான்மை சிங்கள பெளத்த தேசியவாத எழுச்சியில் புத்தரின் போதனைகள் கூட காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. பெளத்த தேசியவாதம் என்ற பெயரில் பெளத்தம் அல்லாத மதங்கள் தாக்கப்படுகின்றன. சர்வதேச பார்வையில் இலங்கையிலுள்ள பெளத்தபிக்குகள் வன்முறையாளர்களாகக் கருதப்படுகின்றார்கள்.

தேவாலயங்கள் அமைக்கப்பட்டமை சட்டவிரோதமென்றால் அதற்கு நீதிமன்றம் இருக்கிறது. சட்டத்தைத் தமது கையில் எடுத்துக்கொண்டு செயற்படுகிறார்கள் பெளத்தமத தீவிரவாதிகள். நாட்டில் சட்ட ஆட்சி சீர்குலைந்து வருவதையே இது எடுத்துக் காட்டுகிறது. அரசு இனியாவது இப்படியான தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹிக்கடுவை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயம் மீது அடிப்படைவாத பிக்குகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சம்பவத்தை தனியார் அலைவரிசைகள் ஒளிபரப்பியுள்ளன. அது குறித்தான வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

நன்றி உதயன்