படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம்

பதுளை, கொஸ்லந்தை பிரதேசத்தில் புதையுண்ட தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதியில் மண்சரிவு அபாயம் இருந்ததை யாரும் தனது கவனத்திற்குக் கொண்டுவரவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், அப்படியிருக்கும் போது நான் எவ்வாறு அறிவேன், ஜோதிடம் பார்த்தா அறிவது? எனத் தெரிவிக்கிறார்.
 
நேற்று பிபிசி தமிழ் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். பிபிசிக்கு அவர் வழங்கிய செவ்வி கேள்வி – பதில் அடிப்படையில் எழுத்து வடிவில் முழுவதும்  இங்கு தரப்பட்டுள்ளது.
 

பிபிசி செய்தியாளர் – கொஸ்லந்தைப் பகுதியில் நிலைமை எப்படி இருக்கிறது?

அமைச்சர் ஆறுமுகன் – இன்னும் மழை பெய்துகொண்டுதான் இருக்கிறது. அதனால், கிளியர் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்படுகிறது. உடுப்பு, துணிமணி, சாப்பாடு கொடுக்கப்படுகின்றன.

பிபிசி செய்தியாளர் – இதுவரைக்கும் எத்தனை உடல்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன?

அமைச்சர் ஆறுமுகன் – இன்னும் அது கிளியர் இல்லை. மூன்று, நான்கு என்கிறார்கள்…

பிபிசி செய்தியாளர் – மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் எத்தனை பேர் வசித்தார்கள்? எத்தனை பேர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என்ற புள்ளிவிவரம் ஏதும் உள்ளதா?

அமைச்சர் ஆறுமுகன் – ஒரு சஸ்பிஷன் (சந்தேகம்) இருக்கிறது, ஒரு 45, ஜம்பது பேர். அது ஒரு யூகம்தான்…

பிபிசி செய்தியாளர் – இங்கு வசித்த மக்களுக்கு மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டிருந்ததாக சொல்கிறார்கள். ஆகவே, மாற்றுக் காணிகள் ஏன் இவர்களுக்கு வழங்கப்படவில்லை?

அமைச்சர் ஆறுமுகன் – எச்சரிக்கை விடப்பட்டிருந்ததாக சொல்கிறார்கள். அதேநேரம் சிலருக்கு காணி வழங்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து சென்றார்கள் என்றும் ஒரு கதை இருக்கிறது. இதில் எது உண்மை என்று தெரியவில்லை. இன்று காலை ஜனாதிபதி வந்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஐ.ஜிக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அப்போது முழு விவரத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

பிபிசி செய்தியாளர் – நீங்கள் ஏற்கனவே இந்தப் பகுதியில் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்திருக்கிறீர்கள். உங்களது தொழிற்சங்க பிரதிநிதிகளும் இந்தப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்களிடம் தகவல்கள் இல்லையா?

அமைச்சர் ஆறுமுகன் – நேற்றுதானே இந்தச் சம்பவம் நடந்தது. அதனால், நிவாரணம் வழங்குவதில் கொஞ்சம் பிஸியாக உள்ளோம். நாளை அல்லது நாளை மறுநாள் என்ன நடந்துள்ளது என்ற விவரம் தெரியவரும்.

பிபிசி செய்தியாளர் – நேற்று எங்களிடம் பேசிய இடர் முகாமைத்துவ அமைச்சர், காணிகளை தோட்ட நிர்வாகம் வழங்குவதில்லை, அதனால்தான் மக்களுக்கு பாதுகாப்பான குடியிருப்புக்களை அமைக்க முடியாதுள்ளது எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு பிரச்சினை உங்களது கவனத்துக்கு வரவில்லையா?

அமைச்சர் ஆறுமுகன் – அப்படியொரு பிரச்சினை என்னிடம் வரவில்லை. அப்படி வந்திருந்தால் உடனடியாக காணியை வாங்கியிருப்போம்தானே.

பிபிசி செய்தியாளர் – மலையகத்தில் ஏராளமான பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளுக்கு – தோட்டங்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க உங்களது அமைச்சு அல்லது உங்களது கட்சி ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

அமைச்சர் ஆறுமுகன் – காலை ஜனாதிபதியுடன் பேசினேன். ட்ரஸ்டுக்கும் (நிதியத்துக்கும்) அறிவித்துவிட்டேன். எங்கு இந்த மாதிரியான ஆபத்துகள் இருக்கின்றனவோ அவற்றுக்கு மாற்றுக் காணிகள் வழங்கவேண்டும் என அனைத்து கம்பனிகளுக்கும் எழுதச் சொல்லியிருக்கிறேன். அதை NBRO (தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு) உறுதிப்படுத்தியவுடன் என்னிடம் தருமாறு சொல்லியிருக்கிறேன்.

பிபிசி செய்தியாளர் – எவ்வளவு காலத்திற்குள் செய்யுமாறு கூறியுள்ளீர்கள்?

அமைச்சர் ஆறுமுகன் – இமீடியட்லி… (உடனடியாக)

பிபிசி செய்தியாளர் – ஜனாதிபதி என்ன சொல்கிறார்?

அமைச்சர் ஆறுமுகன் – உடனடியாக செய்யுமாறு சொன்னார்.

பிபிசி செய்தியாளர் – உங்களுக்குத் தெரியும், கடந்த வரவு – செலவுத் திட்டத்தின்போது ஐம்பதாயிரம் வீடுகள் கட்டித் தருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்திருந்தார். அடுத்த – இரண்டாவது வரவு – செலவுத் திட்டமும் வந்துவிட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையே?

அமைச்சர் ஆறுமுகன் – நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. UDA (நகர அபிவிருத்தி அதிகார சபை) மற்றும் எனது அமைச்சும் சேர்ந்துதான் செய்கிறோம். வரைபடமும் வரைந்துவிட்டோம். அநேகமாக நவம்பர் மாதம் 10 இடங்களில் வேலையை ஆரம்பிக்க இருக்கிறோம்.

பிபிசி செய்தியாளர் – கடந்த ஏப்ரல் மாதம் பிபிசியிடம் பேசிய அமைச்சராகிய நீங்கள், இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கிவிடும் என்று…?

அமைச்சர் ஆறுமுகன் – ஆமா… UDAவால் கொஞ்சம் தாமதமாகியது. ஏனென்றால், வரைப்படம் எடுப்பதற்கும், NBROவின் (தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு) அனுமதியை பெறுவதற்கும் தாமதமாகியது. இப்போது அனுமதி வழங்கி இருக்கிறார்கள். பட்ஜெட் முடிவடைவதற்குள் தொடங்க ஒரு ஐடியா இருக்கு.

பிபிசி செய்தியாளர் – இந்தப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 300 பேர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அவ்வாறு புதையுண்டிருந்தால் நிச்சயமாக அத்தனை பேரும் தோட்டத் தொழிலாளர்களாகத்தான் இருப்பார்கள். ஆகவே, இவ்வளவு பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் தோட்ட நிர்வாகங்களிடம் இருந்து காணிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது, இவ்வளவு கால உங்களது அரசியலில் ஒரு பெரிய கேள்வி எழுகிறதுதானே?

அமைச்சர் ஆறுமுகன் – காணிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இல்லை. எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், NBRO (தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு) அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், மீண்டும் இதுமாதிரியான ஆபத்து வராமல் இருக்க…

பிபிசி செய்தியாளர் – ஐயா, இந்த அரசில் நீங்கள் பங்காளிக் கட்சியாக இருக்கிறீர்கள். உங்களது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுதந்திரம் காலம் தொட்டு இலங்கையை ஆளும் அரசுகளின் பங்காளியாக – கூட்டணியாக இருந்து வந்திருக்கின்றது.

அமைச்சர் ஆறுமுகன் – ம்…

பிபிசி செய்தியாளர் – மலையக மக்களின் அபிவிருத்திக்காகவே அரசுடன் பங்காளிகளாக இருக்கிறோம் என்று ஒவ்வொரு கட்டத்திலும் கூறிவந்திருக்கிறீர்கள்.

அமைச்சர் ஆறுமுகன் – ம்…

பிபிசி செய்தியாளர் – ஆனால், இன்றுவரை இந்த மக்களுக்கு சொந்தமாக ஒரு துண்டு காணியைக் கூட பெற்றுக்கொடுப்பதற்கு உங்களது தொழிற்சங்கங்களால் முடியாமல் இருக்கிறதே?

அமைச்சர் ஆறுமுகன் – முடியாமல் இல்லை. வேலைத்திட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நீங்க… இன்னும்… கொஞ்சம் நாள் பொறுத்துப் பாருங்கள்… என்ன நடக்கப் போகிறதென்று… அவர்களுக்கு வீடே கொடுக்கப் போகிறோம்.

பிபிசி செய்தியாளர் – கடந்த ஜனாதிபதித் தேர்தல், மத்திய மாகாண சபைத் தேர்தலின் போதும் இதே வாக்குறுதிதான் வழங்கப்பட்டது.

அமைச்சர் ஆறுமுகன் – ஆமா… கிராமங்கள் அமைப்போம் என்று நாங்கள் வாக்குறுதி அளித்தோம். நிச்சயமாக அதை செய்வோம்.

பிபிசி செய்தியாளர் – மலையகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் உங்களது கட்சிக்குத்தான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள், பெரும்பான்மையான மக்கள் உறுப்பினர்களாக – சந்தாதாரர்களாக இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

அமைச்சர் ஆறுமுகன் – ஆமா…

பிபிசி செய்தியாளர் – சுதந்திரமடைந்த காலம் தொட்டு இந்த மக்கள் மீது உங்களது கட்சிக்குத்தான் மிகப்பெரும் பொறுப்பு உள்ளதென்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

அமைச்சர் ஆறுமுகன் – ஆமா… அந்தப் பொறுப்பை சரிவர செய்துகொண்டிருக்கிறோம்.

பிபிசி செய்தியாளர் – சரிவர செய்திருந்தீர்களேயானால் வெள்ளைக்காரர்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட லயன் அறைகளில் ஏன் இன்னும் இருக்கிறார்கள்?

அமைச்சர் ஆறுமுகன் – வீடுகள் கட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். சில தாமதங்கள் இருக்கின்றன. காலநிலை, NBRO (தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு) போன்றவற்றால் தாமதம் ஏற்படுகிறது. சில இதுகள் இருக்கிறது (எது என்று கூறவில்லை). அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அவற்றையும் மீறிதான் செய்துகொண்டு வருகிறோம்.

பிபிசி செய்தியாளர் – 1980ஆம் ஆண்டு மலையக மக்களின் வீட்டுத்திட்டத்துக்காக ஒரு நிதியம் அமைக்கப்பட்டது.

அமைச்சர் ஆறுமுகன் – ஆமா…

பிபிசி செய்தியாளர் – இந்த நிதியத்தில் பிரதான பங்கை உங்களது தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸே எடுத்திருந்தது.

அமைச்சர் ஆறுமுகன் – எனது அமைச்சின் கீழ்தான் இப்போது அந்த நிதியம் இருக்கிறது.

பிபிசி செய்தியாளர் – உங்ளது அமைச்சின் கீழ் இருந்தும், கிட்டத்தட்ட 35 வருடங்களாக இந்த வேலைத்திட்டத்தை முடிக்க முடியாமல் உள்ளதே?

அமைச்சர் ஆறுமுகன் – 1980ஆம் ஆண்டிலிருந்து எங்களுக்குக் கீழ் அந்த நிதியம் இருக்கவில்லை. இப்போதுதான்… 10, 15 வருடங்கள்தான் எங்களுக்குக் கீழ் வந்துள்ளது. என்னென்ன திட்டங்கள் செய்யவேண்டுமோ, அத்தனையும் செய்துகொண்டுதான் இருக்கிறோம். எங்கெங்கு அனுமதி பெறவேண்டுமோ அதனையும் பெற்றுக்கொண்டுதான் வருகிறோம்.

பிபிசி செய்தியாளர் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நிபந்தனையின்றி ஆதரிப்பதாக அண்மையில் நீங்கள் கூறியிருந்தீர்கள். ஜனாதிபதியின் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம், அதனால் ஆதரிக்கிறோம் என்று சொல்கிறீர்கள். ஆனால், தோட்ட நிர்வாகங்களின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் மக்கள் வாழும் தோட்டங்கள் இருக்கின்றன. மக்களின் பிரதிநிதிகளான உங்களைப் போன்றவர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட இந்தத் தோட்டங்களுக்குள் சுதந்திரமாக உள்ளே சென்று பணிசெய்ய முடியாத நிலையில்தான் சட்ட திட்டங்கள் இருக்கின்றன. அதனை மாற்றுவதற்கு நீங்கள் முயற்சிக்கவே இல்லை?

அமைச்சர் ஆறுமுகன் – அந்த சட்டத்தை மாற்றுவது தொடர்பாக அன்று கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இப்போது அதன் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

பிபிசி செய்தியாளர் – மலையகத்தில் நீண்டகாலமாகவே இயற்கை அனர்த்தங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இலகுவில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பகுதிதான் தோட்டப்புறங்கள். இடர் முகாமைத்துவம் அதிகமாக இருக்கவேண்டியது இந்தப் பிரதேசங்களில்தான். தோட்டப்புறங்களில்தான் அதிக உட்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. வீடுகள், வீதிகள் போன்ற வசதிகள்… இந்த இரண்டு அமைச்சுமே உங்களுடைய பிரதான தொழிற்சங்கத்தின் கைகளில் இல்லை. அதேவேளை, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை இந்த அரசு இல்லாமல் செய்துவிட்டது.

அமைச்சர் ஆறுமுகன் – அமைச்சின் பெயர்தான் மாறியிருக்கிறதே தவிர செயல்பாடுகள் மாறவில்லை.

பிபிசி செய்தியாளர் – வசதியான, பாதுகாப்பான வீட்டுத்திட்டம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு இன்னும் எவ்வளவு காலம் மக்கள் காத்திருக்க வேண்டும்?

அமைச்சர் ஆறுமுகன் – ம்… சரியாக சொல்வதானால் இன்னும் ஒரு மாதத்தில் கட்டத் தொடங்குவார்கள். நிலமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. NBRO (தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு) அனுமதி வழங்கிவிட்டது. இனி கட்டத் தொடங்கத்தான் இருக்கிறது.

பிபிசி செய்தியாளர் – மக்களின் கைகளில் இந்த வீடுகள் எப்போது கிடைக்கும்?

அமைச்சர் ஆறுமுகன் – கட்டுவதற்கு 5 மாதங்கள் எடுக்கும். மே மாதம்…

பிபிசி செய்தியாளர் – மே மாதம் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டப்படும்?

அமைச்சர் ஆறுமுகன் – ஐம்பதாயிரம் வீடுகள் மே மாதம் கட்டப்படாது. படிப்படியாக கட்டப்படும். சில பகுதிகளில் குறைந்தது 50 வீடுகள் கட்டப்படும். அதைவிட எத்தனை குடும்பங்கள் இருக்கிறதோ, அந்த அடிப்படையில் கட்டப்படும்.

பிபிசி செய்தியாளர் – மலையக மக்களுக்கு கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் வீடுகள் தேவைப்படுகின்றன.

அமைச்சர் ஆறுமுகன் – ஆமா…

பிபிசி செய்தியாளர் – இப்போது ஐம்பதாயிரத்துக்கான திட்டம்தான் அரசிடம் உள்ளது. மிகுதி எப்போது?

அமைச்சர் ஆறுமுகன் – இதை செய்துகொண்டு போகும்போதே ஜனாதிபதியிடம் கேட்டு வாங்கிக்கொள்ள முடியும். அந்த சக்தி எங்களிடம் உள்ளது.

பிபிசி செய்தியாளர் – இதுவரை காலமும் உங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மக்களுக்கு சொந்தக் காணி பெற்றுக் கொடுக்கவில்லை. இன்னும் சொந்த வீடு பெற்றுக் கொடுக்கவில்லை. பெரும்பாலான தோட்டங்களில் இன்னும் அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை.

அமைச்சர் ஆறுமுகன் – இங்க பாருங்க… சிலவற்றை கட்டம் கட்டமாகத்தான் செய்யவேண்டும். ஏனென்றால், நம்மிடையே காட்டிக்கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது… ஜனாதிபதியுடன் பேசிப் பேசித்தான் ஒவ்வொன்றையும் செய்யவேண்டும். காங்கிரஸ் போட்ட அடித்தளத்தில்தான் இப்போது காணி உறுதிப்பத்திரமும் தயாராகிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் தாமதமாகத்தான் செய்யும். நம்மிடையே காட்டிக்கொடுப்பவர் இருப்பதால் அப்படித்தான் தாமதமாகும்.

பிபிசி செய்தியாளர் – அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களுக்குப் பெற்றுக்கொடுத்த அபிவிருத்தித் திட்டங்களோடு ஒப்பிடுகையில், உங்களது தலைமைத்துவத்தின் கீழ் மலையக மக்களுக்கு என்ன பெற்றுக்கொடுத்துள்ளீர்கள்?

அமைச்சர் ஆறுமுகன் – ஐயாவுடன் என்னை ஒப்பிட முடியாது. எங்களால் முடிந்ததை செய்திருக்கிறோம். இன்னும் நிறைய செய்யவேண்டியிருக்கிறது.

பிபிசி செய்தியாளர் – மலையக மக்கள் நவீன அடிமைகளாக இன்னும் தோட்டங்களில் வாழ்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

அமைச்சர் ஆறுமுகன் – அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அடிமைகளாக வாழவில்லை. குறைப்பாடுகள் இருக்கிறதே தவிர அவர்கள் அடிமைகள் இல்லை.

பிபிசி செய்தியாளர் – இந்த மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றில் ஏன் நீங்கள் பேசுவதில்லை?

அமைச்சர் ஆறுமுகன் – பேசினால் உடனே கிடைத்திடுமா? நாடாளுமன்றத்தில் பேசுவது சரியா? ஜனாதிபதியிடம் பேசி வாங்குவது சரியா? உங்களுக்கு (மக்களுக்கு) காரியம் நடக்கவேண்டும். அதை எப்படி நடத்தவேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.

பிபிசி செய்தியாளர் – மக்கள் உங்களை தெரிவுசெய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது, அவர்களது பிரச்சினைகளைப் பேசுவதற்காகத்தானே?

அமைச்சர் ஆறுமுகன் – அங்கு என்ன பேசனுமோ, அதைப் பேசுவோம்… மக்களுக்கு எவற்றைக் கொண்டு வந்து சேர்க்கவேண்டுமோ, அதை முடிவுசெய்வோம்.

பிபிசி செய்தியாளர் – ஆனால், கடைசியாக பாதிக்கப்படப்போவது மக்கள்தானே?

அமைச்சர் ஆறுமுகன் – நிச்சயமாக கிடையாது. உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள்தான் தூண்டிவிடுகின்றனர்; மக்களைக் குழப்புகின்றனர். எங்கள் வேலையை நாங்கள் சரியாகத்தான் செய்கிறோம்.

பிபிசி செய்தியாளர் – பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இவர்களுக்கு காணிகள் கிடைக்கவில்லை. அதனை ஏன் நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லை?

அமைச்சர் ஆறுமுகன் – அதனை யாரும் எனது கவனத்திற்குக் கொண்டுவரவில்லை. அப்படியிருக்கும் போது நான் எவ்வாறு அறிவேன். ஜோதிடம் பார்த்தா அறிவது? நேற்றுதான் இந்தக் காணிப்பிரச்சினை தொடர்பாக கூறினார்கள். இவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன். உடனடியாக விசாரணை நடத்துமாறு ஐ.ஜியிற்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். யாராவது இந்த சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தால் பதில் சொல்லலாம்.

பிபிசி செய்தியாளர் – உங்கள் கட்சியைச் சேர்ந்த செந்தில் தொண்டமான் இந்தப் பகுதியைத்தான் பிரதிநிதித்துப்படுத்துகின்றார். அவருக்குத் தெரியுமா?

அமைச்சர் ஆறுமுகன் – இதை நீங்கள் செந்திலிடம்தான் கேட்கவேண்டும். தெரிந்திருந்தால் நிச்சயமாக தெரிவித்திருப்பான்.

பிபிசி செய்தியாளர் – அண்மையில்தான் ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்தது. வாக்கு சேகரிப்பதற்காக உங்களது கட்சி கட்டாயம் இந்தப் பகுதிக்கும் சென்றிருக்கும்.

அமைச்சர் ஆறுமுகன் – ஆமா…

பிபிசி செய்தியாளர் – அதன்போது, இந்த மக்களின் பிரச்சினைகள் முன்வைக்கப்படவில்லையா?

அமைச்சர் ஆறுமுகன் – எது? இந்த அனர்த்தம்தானே?

பிபிசி செய்தியாளர் – ஆம்.

அமைச்சர் ஆறுமுகன் – அது பற்றி யாரும் சொல்லவில்லை.

பிபிசி செய்தியாளர் – இந்தப் பிரதேச மக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்? என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

அமைச்சர் ஆறுமுகன் – கம்பனி பிரதான நிறைவேற்று அதிகாரியுடன் பேசினேன். NBRO உறுதிப்படுத்தி காணி தந்தவுடன் இராணுவத்தைக் கொண்டு வீடுகளைக் கட்டிக்கொடுப்போம். ஜனாதிபதியிடமும் இது தொடர்பாக கூறியிருக்கிறேன்.

பிபிசி செய்தியாளர் – அந்த வீடுகள் லயன் வீடுகள்தானா?

அமைச்சர் ஆறுமுகன் – இல்லை. அவை தனித்தனி வீடுகளாக இருக்கும்.

பிபிசி செய்தியாளர் – அந்தக் காணிகள் மக்களுக்கு சொந்தமாக்கப்படுமா?

அமைச்சர் ஆறுமுகன் – நிச்சயமாக…

பிபிசி செய்தியாளர் – அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்குப் பிறகு உங்களது காலத்திலாவது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துகிற மலையகத்தில் மக்களுக்கு காணி, வீட்டு உரிமைகள் பெற்றுக்கொடுக்க முடியும் என்று பகிரங்கமாக உத்தரவாதம் அளிக்க முடியுமா?

அமைச்சர் ஆறுமுகன் – நிச்சயமாக நூற்றுக்கு நூறுவீதம் உத்தரவாதம் அளிக்க முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

பிபிசி செய்தியாளர் – இது தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா?

அமைச்சர் ஆறுமுகன் – நிச்சயமாக முடியும்.

பிபிசி செய்தியாளர் – கடந்த தேர்தலின்போதும் இதையேதான் கூறினீர்கள். இவ்வளவு காலமாகியும் ஒன்றும் நடைபெறவில்லையே?

அமைச்சர் ஆறுமுகன் – ஆண்டாண்டு காலமாக உள்ள பிரச்சினையை ஒரே இரவில் முடிக்க சொல்கிறீர்களா? அதற்காக பேசிப் பேசி… சுமூகமாக செய்துகொண்டு வருகிறோம். அதை மற்றவர்கள் குழப்பாமல் இருந்தால் போதும்.

பிபிசி செய்தியாளர்  – அரசு வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் மக்களின் காணிகளையோ, தனியார் காணிகளையோ, அரச காணிகளையோ இராணுவத் தேவைக்காக, அபிவிருத்தி தேவைக்காக கையகப்படுத்துகிறது. அதற்கான அதிகாரம் இந்த அரசிடம் இருக்கிறது. ஆனால், தோட்டங்களுக்குள் சென்று அந்த தோட்டங்களில் வேலை செய்யும் மக்களுக்காக காணிகளை கையகப்படுத்தி கொடுப்பதற்கு இந்த அரசால் முடியாதா? அதில் அரசுக்கு என்ன அவ்வளவு கஷ்டம்? என்ன தயக்கம்?

அமைச்சர் ஆறுமுகன் – ஒரு கஷ்டமும் இல்லை. எடுப்பதாக இருந்தால் ஒரு முறை உள்ளது. முழுமையாக பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். கொடுக்கப்பட்ட பிறகு அது இல்லை, இது இல்லை என்று கூறக்கூடாது.

பிபிசி செய்தியாளர் – இந்த மக்கள் தொடர்ந்தும் உங்களது தொழிற்சங்கத்தின் சந்தாதாரர்களாக, உங்களது அரசியல் கட்சியின் ஆதரவாளர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் அவர்களை சுதந்திரமாக தனியான வீடுகளுக்கு அனுப்புவதில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?

அமைச்சர் ஆறுமுகன் – குற்றச்சாட்டை வைத்தவன் மடையன். என்னுடைய மக்கள் சுதந்திரமாக தனிவீடுகளில் வாழவேண்டும் என்ற ஆசை எனக்கிருக்காதா? குற்றச்சாட்டு வைக்கிறவன் மடையன்.

பிபிசி செய்தியாளர் – இந்த மக்கள் படும் கஷ்டத்தைப் பார்க்கும்போது…

அமைச்சர் ஆறுமுகன் – எனக்குத் தெரியும். மக்களுக்கு என்னென்ன செய்துகொண்டிருக்கிறோம், எது வெளியில் சொல்லலாம், எது சொல்லக்கூடாது என்று… எவனோ… நான்கு பேர் சொல்வதற்காக எனக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது.