படம் | Firstpost

இந்திய தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர். மாறுபட்ட அரசியல் நோக்கங்களுடன் இந்த வாழ்த்துச் செய்தி அமைந்துள்ளது. நரேந்திர மோடியின் வெற்றி இலங்கை தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுமா என்பதுதான் இன்று பலரின் கேள்வியாகவுள்ளது. சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் மாற்றம் இல்லை என்றும் – ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. வெற்றி பெற்றதால் இலங்கைத் தமிழர்களுக்கு ஏதேனும் விடிவு கிடைக்கும் என்றும் – பலர் நம்புகின்றனர். ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போது இவ்வாறான நம்பிக்கைகள்வந்து போவது இயல்பானதுதான்.

பிராந்திய நலன் கருதிய செயற்பாடு

இந்தியாவை பொறுத்தவரை அதன்வெளியுறவுக் கொள்கை என்பது எழுதப்பட்ட மாற்றமடையாத ஒன்று. காலத்தின் தேவைக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்படும். அத்துடன், பிராந்திய நலன் கருதி சில விட்டுக்கொடுப்புகளுக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் இடமுண்டு. ஆனால், எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் இந்திய வெளியுறவுக் கொள்ளை என்பதில் மாற்றம் செய்ய முடியாது. அது இந்திய கொள்கை வகுப்பாளர்கள், இந்திய தேசிய நலன்கருதி தீர்மானம் எடுப்பவர்களின் கைகளில்தான் உள்ளது. ஆகவே, பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைத்தாலும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை எடுத்தவுடன் செய்ய முடியாது என்பது வெளிப்படை. இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்ட நெகிழாத யாப்பு. அதற்கு ஏற்பவே இந்திய வெளியுறவுக் கொள்கையும் தீர்மானிக்கப்படுகின்றது.

இந்தியாவைப் பொறுத்தவரை கட்சி அரசியல் செயற்பாடுகளை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் பண்பு கிடையாது. கட்சிக் கொள்கைக்கு ஏற்ப வெளியுறவுக் கொள்கையை வகுக்கும் பண்பு இலங்கை அரசிடம் மாத்திரமே உண்டு. ஏனெனில், இது சிறிய நாடு என்பதுடன் பிராந்தியத்தில் அதன்முக்கியத்துவம் குறைவு என்பதனால் இலங்கை வெளியுறவுக் கொள்கையில் சர்வதேச நாடுகள் பெரியளவு கவனம் செலுத்துவது இல்லை. ஆனால், போர் நடைபெற்ற காலத்தில் புலிகளை அழிப்பதற்கான அல்லது தமிழ் மக்களின் அரசியல் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு ஏற்ற முறையில் அனைத்து நாடுகளுடனும் உறவை பேணுகின்ற ஒரு இராஜதந்திர முறையை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர், ஜெயவர்த்தன உருவாக்கிக் கொடுத்தார். ஆனால், இந்தியாவில் அவ்வாறு இல்லை.

1990களிலும் 2000ஆம் ஆண்டிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி புரிந்தபோது இலங்கைத் தமிழர் விவகாரத்தில் எதிர்ப்பார்க்கப்பட்ட மாற்றங்கள் ஏற்படவில்லை. எழுதப்பட்ட இந்திய வெளியுறவுக் கொள்ளைதான் அதற்கு பிரதான காரணம். இலங்கைத் தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டில் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

எதிர்பார்த்த மாற்றம் வராது

ஆகவே, இந்தியத் தேர்தல் முடிவுகளில் தமிழர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படாது. அவ்வாறு இந்திய வெளியுறவுக் கொள்கை இலங்கையின் வெளியுறவுக் கொள்கை போன்று கட்சி அரசியலுக்கு ஏற்ப மாறுவதாக அமைந்திருக்குமானால் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டு 1990ஆம் ஆண்டு பி.வி.சிங் ஆட்சியமைத்த போதும் அதன் பின்னர் வாஜ்பாய் ஆட்சி அமைத்த போதும் இலங்கைத் தமிழர்களுக்காக எதுவும் செய்ய முடியாமல் போனது ஏன்? ஜோர்ஜ் பெர்ணான்டஸ் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் புலிகளுக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டை முன்வைத்திருந்தார். ஆனால், அவர் அங்கம் வகித்த அரசினால் கூட இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்ற ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க முடியவில்லை. புலிகள் மீதான தடையைக் கூட நீக்க முடியவில்லை.

ஆக, கட்சி அரசியல் ஊடாக இலங்கைத் தமிழர்களுக்காக குரல்கொடுத்து இந்தியா எங்கும் பேசலாம் என்ற ஒரு சுதந்திரத்தை தவிர, யார் ஆட்சியமைத்தாலும் இந்தியாவின் எழுதப்பட்ட வெளியுறவுக் கொள்கைளை தான்டி இலங்கைத் தமிழர் விடயத்தில் அரசியல் தீர்வை முன்வைக்கவோ அல்லது உதவிகூட செய்யவோ முடியாது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். ஆகவே, பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிட்டது, எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கைகள் ஊட்டப்படுவது மற்றுமொரு ஏமாற்று முயற்சி. வேண்டுமானால் மஹிந்த ராஜபக்‌ஷ அரசுக்கு சிறிய அளவில் சில இடையூறுகள் வரலாம். ஆனாலும், இரு நாட்டு இராஜதந்திர உறவின் அடிப்படையில் அந்தத் தடைகள் கூட விலகுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் காணப்படுகின்றன.

தமிழ் நாட்டு அரசியல்

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.கவின் வெற்றி பேரம் பேசும் சக்தியை இல்லாம் செய்துள்ளது. ஜெயலிதா தலைமையிலான அ.தி.மு.க 37 ஆசனங்களை பெற்றபோதும் அந்த ஆசனங்களைக் கொண்டு மத்தியில் எதுவும் செய்யமுடியாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. அறுதிப் பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி ஆட்சி அமைக்கும் நிலையில் தமிழகம் சார்பான கோரிக்கைகளைக் கூட பேரம் பேச முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மத்தியில் உள்ள அ.தி.மு.க உறுப்பினர்கள் 37 பேரும் எதைச் சாதிக்கப் போகின்றனர் என்பது இங்கு கேள்வியாகும்.

இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கை ஒரு நேர்கோட்டில் இருக்கின்றது. இந்த நிலையில், அறுதிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சியும் அமைத்துள்ளது. ஆகவே, தேர்தல் பிரச்சாரங்களில் தமிழக அரசியல் கட்சிகள் கூறியது போன்று இலங்கைத் தமிழர் விடயத்தில் எதனையும் சாதிக்க முடியாது என்பதை ஆரம்பத்திலேயே அறிய முடிகின்றது. புலிகள் மீதான தடையை ஐந்து ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த வாரம் நீடித்தது. ஆட்சி மாற்றம் வரும் என்று தெரிந்தும் அவசர அவசரமாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதுவும் வழமைக்கு மாறாக ஐந்து ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளது. இதனை நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் குறைக்கவோ அல்லது நீக்கவோ முடியாது.

பா.ஜ.கவுக்கு இலகுவானது

ஏனெனில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டது என்பதுடன் நீதித்துறை தொடர்பாக விடயங்கள் அதுவும் அரசியலமைப்பு ஏற்பாட்டுக்கு உட்பட்ட விடயங்களில் அறுதிப் பெரும்பான்மையுள்ள எந்த அரசும் நினைத்தபடி கை கைவைக்க முடியாது. ஆகவே, இந்த தடை நீடிப்பு நரேந்திர மோடி அரசுக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. குறிப்பாக ஆட்சியமைத்ததும் தமிழ் நாட்டு மக்களை சமாளிக்க ஏதாவது செய்தாக வேண்டிய ஒரு நிலை இருந்தது. குறிப்பாக புலிகள் மீதான தடையை அகற்றல் மற்றும் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்தல் போன்ற விடயங்களில் நரேந்தர மோடி கவனம் செலுத்தவேண்டிய நிலை இருந்தது.

ஆனால், புலிகள் மீதான தடை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடிக்கப்பட்டமை நரேந்திர மோடிக்கு சாக்குப்போக்கு சொல்ல வசதியாக அமைந்துவிட்டது. அதாவது, சட்டத்தை காண்பித்து தனது அரசால் எதுவும் செய்ய முடியாது என்பதை தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு கூற அவருக்கு வசதியாக அந்த தடை அமைந்துள்ளது. ஆகவே, இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் என்பது வெறுமனே ஒரு அரசியல் நகர்வுகளே தவிர கொள்ளை ரீதியாகவும் செயற்பாட்டு முறையிலும் பாரிய மாற்றங்களை கொண்டுவராது என்பது மட்டும் கண்கூடு.

அ. நிக்ஸன்

Nix P0001