படம் | EFAY

நீங்கள் ஒரு சட்டையைப் பார்க்கிறீர்கள். பொருத்தமான விலை. நீங்கள் அதை வாங்குகிறீர்கள். “இலங்கையில் தயாரிக்கப்பட்டதுஎன அதில் எழுதப்பட்டுள்ளது.

ஆனால், அந்தச் சட்டையைச் செய்வதற்கான உண்மையான செலவு என்ன என்பது பற்றி நீங்கள் அனேகமாகச் சிந்தித்திருக்க மாட்டீர்கள். மேலும், GSP+ எனப்படும் ஓர் முன்னுரிமை வர்த்தகத் திட்டமானது எவ்வாறு அச்சட்டையை ஐரோப்பியச் சந்தைக்குக் கொண்டுவருகிறது என்பதைப் பற்றியோ, இலங்கையில் மனித உரிமைகள் நிலைநிறுத்தப்படுகின்றன எனும் பிம்பம் எவ்வாறு அதன் மூலம் ஏற்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றியோ உங்களுக்குத் தெரிந்திருக்கப் போவதில்லை. ஏப்ரல் 27, 2017 அன்று ஐரோப்பிய நாடாளுமன்றமானது, இலங்கைக்கு இம் முன்னுரிமை வர்த்தக நிலையை மீள அளிப்பதை மறுக்குந் தீர்மானத்தைத் தோற்கடித்து வாக்களித்துள்ளது.

2010 இல், இலங்கையின் மனித உரிமை நிலைமை காரணமாக, இலங்கைக்கான GSP+ வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் திரும்பப் பெற்றுக்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை ஆயதப் படைகளால் தோற்கடிக்கப்பட்டு, 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்த நேரமது. யுத்தத்தின் இறுதி மாதங்களில் மட்டும் 40,000 அல்லது அதற்கும் மேற்பட்டளவு மக்கள் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள், குடிசார் சமூகக் குழுக்கள், போரினாற் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் மதச் சிறுபான்மையினர் மீதான பரவலான மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச எச்சரிக்கையின் மத்தியிலும் போரை வெற்றிகொண்ட அரசானது தனது அதிகாரத்தை உறுதியாகப் பற்றிகொண்டிருந்தது. GSP+ வரிச் சலுகையைத் தொடர்ந்து பேணுவதற்கு, சர்வதேசக் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) மற்றும் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை (CAT) உட்பட GSP+ திட்டத்தின் கீழ்வரும் 27 சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்குக் கூறியிருந்தது. மேலும், ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாகக் காணாமற்போகச் செய்யப்படுவதற்கு வழிகோலிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) பல பகுதிகள் சர்வதேசக் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையுடன் முரண்படுகின்றன; எனவே, அவை நீக்கப்படவேண்டும் எனவும் அது இலங்கைக்குக் கூறியிருந்தது. ஆனால், முந்தைய அரசானது இவ் உடன்படிக்கைகளுக்கு இணங்காத தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றபோது, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் GSP+ வரிச் சலுகையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

2015இல் இலங்கையில் ஒரு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தது. அது GSP+ அங்கத்துவத்துக்கு மீண்டும் விண்ணப்பித்ததுடன், எதிர்காலத்தில் அத்துமீறல்கள் நடவாது தடுப்பதற்கும், கடந்தகாலத்துக்குப் பரிகாரஞ் செய்வதற்குமான விரிவான நடவடிக்கைகளை உள்ளடக்கிய நான்கு நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு உறுதியளிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 இலக்கமுடைய பிரேரணைக்கு இணையனுசரணையையும் வழங்கியது. ஏனைய கடப்பாடுகளுடன், நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவாக்கம் இயற்றப்படுமென அரசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், மனித உரிமைகள் பேரவைக்கும் உறுதியளித்திருந்தது.

உறுதிமொழிகள் அளிக்கப்பட்ட போதிலும், அவற்றில் மிகக் குறைந்தளவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர், 2015 இலிருந்தான இலங்கையின் நிலைமாறுகால நீதி தொடர்பான முன்னெடுப்புகளைக் “கவலைதரும் வகையில் மந்தமாகவுள்ளது” எனவும், அரச அதிகாரிகள் “அடிக்கடி தெளிவற்ற மற்றும் முரண்பட்ட தகவல்களைத்” தரும் நிலையில் அவை “உண்மையான முன்னேற்றத்தை உறுதிசெய்வதற்குப் போதுமானதாக இல்லை” எனவும் விவரித்திருந்தார். உறுதியளிக்கப்பட நான்கு நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளிற் தற்போது காணாமற் போனோருக்கான அலுவலகம் மட்டுமே சட்டவாக்கத்தைக் கொண்டுள்ளது. அதுவுமே செயலற்றதொன்றாகவுள்ள நிலையில், வெளிநாட்டுத் தொழிநுட்ப உதவியை அனுமதிக்கும் ஒரு முக்கிய ஏற்பாட்டை நீக்குவதற்கான நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மேலும், பொதுமக்கள் கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கையை அரச அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இச்செயலணியை அரசே நியமித்தது என்பது மட்டுமல்லாது, இதில் எல்லா இனச் சமூகங்களிலிருந்தும் 7,300 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்டு முன்செல்வதற்கான சிறந்த வழி எது என்பது பற்றிய தமது எண்ணங்களையும் பகிர்ந்திருந்தனர்.

குறிப்பாகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இன்னும் அகற்றப்படவில்லை. அதற்குப் பதிலாகப் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA) ஒன்று இயற்றப்பட்டு வருகிறது என அரசினாற் சொல்லப்பட்ட போதிலும், அச் சட்டவாக்கமானது இலங்கையின் மக்கள் மட்டுமல்லாது அதன் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கூடக் கலந்தாலோசிக்கப்படாது இரகசியமாகவே இயற்றப்பட்டு வருகிறது. ஏப்ரல் 24, 2017 அன்று ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவர்களைச் சமாதானப்படுத்தவும், GSP+ வரிச் சலுகையினை மீண்டும் பெற்றுக்கொள்ளவும், CTA வரைவானது அவசரமாக அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது. இச் CTA வரைவானது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்கள் பற்றிய மிகையானதோர் வரைவிலக்கணம், தடுத்து வைப்பது தொடர்பில் பொலிஸாருக்கு மிகை அதிகாரம், மற்றும் தடுப்புக் காவலின் ஆரம்ப நாட்களில் மட்டுப்படுத்தப்பட்ட சட்ட அணுகல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவை அனைத்துமே ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சர்வதேச நியமங்களை விடக் கீழ் நிலையிலுள்ளதுடன், GSP+ வரிச் சலுகையை மீண்டும் அளிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யுமாறும் இல்லை. மேலும், அரசானது அரசிலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் இழுத்தடிப்புச் செய்து வருகிறது. இதன் காரணமாக மிதவாதத் தமிழ் அரசியல்வாதிகளுக்கான ஆதரவு குறைந்து, அவர்களும் கடும்போக்குத் தமிழ் அரசியல்வாதிகளைப் போல் அரசுடன் இணைந்து செயற்படுவதை எதிர்க்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கிடையில் காணாமற்போனோர் தொடர்பில் பதிலளிக்க வேண்டியும், இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் நிலங்களை விடுவிக்க வேண்டியும், போரினாற் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டங்களையும், உண்ணாவிரதப் போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், 2010 இலிருந்து இன்றுவரை இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் பாரிய மாற்றமேதும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும், ஜனவரி 11, 2017 அன்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு GSP+ அங்கத்துவத்தை வழங்குமாறு முன்மொழிந்தது. ஜனவரி 18, 2017 அன்று, “முரண்பாட்டுக்குக் காரணமாக அமைந்ததோடு, எல்லா இலங்கை மக்களதும் வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் தரத்தினை மோசமாகப் பாதித்த, வரலாற்றுடன் தொடர்புடைய நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் அர்ப்பணிப்புடையதாக உள்ளதற்கு” இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டுத் தெரிவித்தது.

இலங்கையிலுள்ள போரினாற் பாதிக்கப்பட்ட சமூகமானது, GSP+ வரிச் சலுகையினை இலங்கைக்கு மீள வழங்குவது தொடர்பிற் தமது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. GSP+ வரிச்சலுகை நீக்கத்துக்கான மூலக் காரணங்கள் யாவும் பதிலளிக்கப்படாத நிலையில், வெறும் வாக்குறுதிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தற்போதைய அரசாங்கத்திற்கு இச் சலுகையை வழங்குவது சாதகமற்ற விளைவையே ஏற்படுத்தும். எனினும், யதார்த்தத்தைக் கருத்திற்கொள்ளும்போது, GSP+ வரிச்சலுகை இலங்கைக்குக் கிடைப்பதென்பது உறுதியெனத் தெரிகிறது. ஐரோப்பியப் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை இத்தீர்மானத்தை எதிர்த்தால் மட்டுமே இது இலங்கைக்குக் கிடைக்காது போகும். ஆனால், கடந்த காலத்தில் மனித உரிமைகள் தொடர்பில் மோசமான பதிவுகளைக் கொண்ட பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு GSP+ வரிச்சலுகை அளிக்கப்பட்டதைக் கவனத்திற் கொள்ளும்போது, அது சாத்தியமற்றதொன்றாகவே தோன்றுகிறது.

ஆகவே, நானும் எனது சக பணியாளர்களும் வேறுவழியின்றி GSP+ இலிருந்து கிடைக்கக்கூடிய அனைத்தையும் பயன்படுத்திக்கொள்வதிற் கவனஞ் செலுத்த வேண்டியதாகிறது. “ஏனைய GSP+ நாடுகளைப் போலவே, இலங்கைக்கான சுங்கத் தீர்வைகளின் நீக்கத்தைத் தொடர்ந்து, நிலைபேறான அபிவிருத்தி, மனித உரிமைகள், மற்றும் நல்லாட்சி என்பவற்றில் இலங்கையின் முன்னேற்றமானது தீவிரமாகக் கண்காணிப்படும்” என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு GSP+ வரிச் சலுகையானது திரும்பக் கிடைக்கும் நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினை நீக்குதல், சர்வதேசக் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை மற்றும் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை என்பவற்றுடன் இணங்குதல் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 இலக்கமுடைய பிரேரணையை முற்றாக அமுற்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான கடப்பாடுகளைச் செவ்வனே நிறைவேற்ற உதவுமொரு கடுமையான கண்காணிப்பு முறைமையொன்றை எவ்வாறு உருவாக்குவதென்ற கேள்வி எழுகிறது.

GSP ஒழுங்குவிதிகளின் கீழ், GSP+ பயனாளிகள் 27 சர்வதேச உடன்படிக்கைகளை உறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதுடன், இவ் ஒவ்வொரு உடன்படிக்கையின் கீழ்வரும் அறிக்கையளித்தல் மற்றும் கண்காணித்தல் தொடர்பான தேவைப்பாடுகளுக்கு இணங்கவும் வேண்டும்.[1] மேலும் GSP+ “மதிப்பீட்டு அட்டை” என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புச் செயன்முறையுடன் பயனாளி நாடுகள் இணங்கவும் வேண்டும். ஒரு நாடு GSP+ இல் இணையும் போது, ஐரோப்பிய ஒன்றியம் அந்நாட்டின் குறைகளை 27 உடன்படிக்கைகளின் கீழும் நிரற்படுத்தி, அவை ஒவ்வொன்றிலும் வருடாந்தம் ஏற்படும் முன்னேற்றங்களைக் கண்காணிக்கும். தனது கண்காணிப்புச் செயன்முறையின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியமானது “மத்திய அரசு மட்டுமல்லாது, உள்ளூர் அல்லது பிராந்திய அதிகாரசபைகள், குடிசார் சமூகம் (உதாரணமாக, சமூகப் பங்காளிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள்), வியாபாரச் சங்கங்கள், மற்றும் சர்வதேச நிறுவனங்களின் உள்ளூர் அலுவலகங்கள் போன்ற “பரந்துபட்ட பல்வேறு பங்குதாரகளுடன்” இணைந்து செயற்படும். “குறிப்பாக GSP+ கண்காணிப்பு வருகைகளின் போது, உள்ளூர்ப் பங்குதாரர்களை” அணுகுவதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புச் செயன்முறையானது, உள்ளூர்ப் பங்களிப்பாளர்கள் “உடன்படிக்கைகளின் கீழான தமது பொறுப்புகளை, உள்ளூர், பிராந்திய, மற்றும் மத்திய அதிகாரசபைகள் நிறைவேற்றுவதற்கு உதவுவதில் ஆக்கபூர்வமானதோர் பாத்திரத்தை வகிக்க உதவுகிறது.”[2]

கொள்கை ரீதியாக நோக்கின், இச் சட்டகவமைப்பானது இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றத்துக்கு உதவிசெய்யக் கூடும். இலங்கைக்கான கண்காணிப்புச் செயன்முறையொன்றை வடிவமைக்கும்போது, வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையின் போரினாற் பாதிக்கப்பட்ட சமூகங்களை உள்ளடக்கிய, கொழும்புக்கு வெளியேயுள்ள பங்கேற்பாளர்களுடன் இணைந்தியங்குவதை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்த வேண்டும். ஒவ்வொரு ஆய்வறிக்கைக் காலத்திலும், இலங்கைக்கான GSP+ மதிப்பீட்டு அட்டையைத் தயாரிக்கும்போது, முந்தைய போரினாற் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குக் கள ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பவேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 இலக்கமுடைய பிரேரணை தொடர்பிலும், நிலைமாறுகால நீதி தொடர்பில் தன்னால் நியமிக்கப்பட்ட பொதுமக்கள் கலந்தாலோசனைச் செயலணியின் பரிந்துரைகளைச் செயற்படுத்துவது தொடர்பிலும், அரசின் முன்னேற்றத்தை ஐரோப்பிய ஒன்றியம் கண்காணிக்க வேண்டும். தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, குடிசார் சமூகம், போரினாற் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் களத்தில் இயங்கும் மனித உரிமைக் குழுக்கள் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் உள்ளீடுகளை இடையறாது நாடுவதுடன், மனித உரிமைகள் தொடர்பான தனது கடப்பாடுகளுடன் இணங்குவதற்கு இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்களின் கவலைகளை ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படுத்த வேண்டும். மேலும், வர்த்தக நலன்களை, மனித உரிமைகளுடன் இணைக்கும் நடைமுறை ரீதியான தெரிவுகளை அரசு ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவ முடியும். உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியமானது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றுவதனூடாக, GSP+ அங்கத்துவத்தின் மூலம் கிடைக்கும் வரிச் சேமிப்பின் ஒரு பகுதியை வைத்து இழப்பீட்டுத் திட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு இலங்கைக்கு உதவ முடியும்.

இறுதியாக, நிலைபேறான அபிவிருத்தி, மனித உரிமைகள், மற்றும் நல்லாட்சி என்பவற்றை ஊக்குவிப்பதே GSP+ இன் இலக்கு எனில், இலங்கை சரியான பாதையிற் செல்கின்றது என்பதை உறுதிசெய்ய ஐரோப்பிய ஒன்றியமானது உள்ளூர்ப் பங்குதாரர்களுடன் இணைந்து கடுமையான கண்காணிப்பினை மேற்கொள்ள வேண்டும். மேலும், நிலைமாறுகால நீதியும், சர்வதேசக் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR), சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை (CAT), பெண்களுக்கெதிரான அனைத்துப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை (CEDAW) மற்றும் GSP+ திட்டத்தின் கீழ் வரும் ஏனைய மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் என்பவற்றின் முழுமையான அமுலாக்கமும், ஒன்றுடனொன்று தொடர்புபட்டது என்பதை ஐரோப்பிய ஒன்றியம் உணர வேண்டும். தீர்வுக்கான உரிமை பாதிக்கப்பட்டோருக்கு உண்டு என்பதை மனித உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைகள் அங்கீகரிக்கின்றன; அதைப்போலவே இலங்கையும் தனது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை, நீதி, அவை மீண்டும் நிகழாதிருப்பதற்கான உத்தரவாதம் மற்றும் இழப்பீடுகள் என்பவற்றை வழங்குவது தொடர்பிலான தனது உறுதிமொழிகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.

இது என்னை மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வருகின்றது. “இலங்கையில் தயாரிக்கப்பட்ட” அந்தச் சட்டை – மனித உரிமைகளின் அடிப்படையில் அதன் உண்மையான செலவு என்ன? இலங்கைக்கு GSP+ வரிச் சலுகையை மீள அளிக்குமிடத்து, அதனூடாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகளை எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம் உறுதிசெய்ய முடியும்? கடந்த இரு ஆண்டுகளில் அரச அதிகாரிகளிடமிருந்து கிடைத்த வெற்று வாக்குறுதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தை சோர்வடையச் செய்திருக்க வேண்டும். GSP+ வரிச் சலுகை இலங்கைக்கு வழங்கப்படின், குடிசார் சமூகம் மற்றும் போரினாற் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் இணைந்து செயற்படும் பயனுள்ள கண்காணிப்புச் செயன்முறையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் கோராதவிடத்து, மனித உரிமைகள் தொடர்பான தனது கடப்பாடுகளை இலங்கை நிறைவேற்றும் என்பது கேள்விக்குறியே.

இக்கட்டுரை ஜேர்மன் மொழி சஞ்சிகையில் ஒன்றில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஷ்ரீன் சரூர், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் போரினாற் பாதிக்கப்பட்ட பெண்களுடன் பணிபுரியுமோர் மனித உரிமை ஆர்வலர் ஆவார்.


[1]      GSP+ அங்கத்துவமானது, தாம் ஒப்புக்கொண்டவற்றை நிலைநிறுத்துவதையும், மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சூழற் பாதுகாப்பு, மற்றும் நல்லாட்சி என்பவற்றின் மீதான 27 உடன்படிக்கைகளின் முறையான அமுலாக்கத்தை உறுதிசெய்வதையும் உறுப்பு நாடுகளிடமிருந்து கோருகிறது. மனித உரிமைகள் தொடர்பில் உறுப்பு நாடுகள் பின்வரும் உடன்படிக்கைகளை உறுதிசெய்து நடைமுறைப்படுத்த வேண்டும் – சர்வதேசக் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை; சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை; இனப்படுகொலையைத் தடுப்பது மற்றும் தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை; பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை; அனைத்துவகை இனத்துவப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை; பெண்களுக்கெதிரான அனைத்துப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை.

[2]            மூலம்: ஐரோப்பியப் நாடாளுமன்றத்துக்கான, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனவரி 28, 2016 திகதியிடப்பட்ட அறிக்கை. பின்வரும் லிங்கினூடாகப் பார்க்கலாம். http://trade.eப்c.europa.eu/doclib/docs/2016/january/tradoc_154180.pdf.


சமூக ஊடகங்களில் மாற்றம்:

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்

ருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்

இன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்