படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

25 ஆண்டுகளில் எந்த விசயத்துக்கும் சந்தோசப்பட்டிருக்காத மக்களின் முகங்களில், 2015 டிசம்பர் 20ஆம் திகதியன்று சந்தோசம் பெருக்கெடுத்து ஓடியிருக்கும் என்பது நிச்சயம். 25 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் மீண்டும் பூர்வீக நிலங்களில் குடியேறப்போகிறோம், தொழில்களைச் செய்யப்போகிறோம் என்ற நம்பிக்கைதான் அளவுகடந்த மகிழ்ச்சிக்கான காரணம்; கடந்த வருடம் டிசம்பர் 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிகாமத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிதான் இதற்கான காரணமாகும்.

தங்களுக்கு மீண்டுமொரு வாழ்க்கை – பழையபடி சீவியம் நடத்துவதற்கான வழி – பிறந்துவிட்டது என்ற நம்பிக்கை, சந்தோசம் அவர்களுள் எழுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால காரணமாக அமைந்தார். கால் நூற்றாண்டு காலமாக முகாம்களில் வாழ்ந்துவரும் தங்களை தென்னிலங்கையைச் சேர்ந்த எந்தவொரு அரசியல்வாதியும் வந்து பார்க்கவில்லை என்றிருந்த மக்களை, நாட்டின் ஜனாதிபதியே வீட்டுக்கு வீடு வந்து, அடுப்பங்கரை வரை வந்து பிரச்சினைகளைக் கேட்டிருந்தார்.

அதன் பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில், 6 மாதத்துக்குள் முகாமிலுள்ள அத்தனை மக்களையும் குடியேற்றுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிகூறியிருந்தார். அவர் அன்று தெரிவித்தவை (சிங்களத்தில் அவர் பேசியது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது),

“வடக்குக்கு வந்து இங்குள்ள மக்களைச் சந்திக்குமாறு ‘தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, மீண்டும் எல்.டி.டி.ஈ. தலைதூக்குகிறது’ என்று தெரிவிக்கும் அடிப்படைவாதிகளுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். கொழும்பிலிருந்து வடக்குக்கு வர பெற்றோல் என்னால் தரமுடியும், வடக்கை பார்க்க வேண்டுமாக இருந்தால் வாகனமும் தர முடியும். கொழும்பிலிருந்து கடல் வழியாக வருவதாக இருந்தால் என்னால் கப்பல் வசதியும் செய்து தரமுடியும், இவை இரண்டும் முடியாவிட்டால் வான் வழியாக வருவதற்கு விமானத்தையும் அவர்களுக்கு ஏற்பாடு செய்துதர முடியும். 25 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் மக்களை நான் இன்று சந்தித்தேன். அவர்களை வந்து சந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேசியப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை அரசுக்குள் அல்ல இருக்கிறது. அது 25 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் மக்களது பிரச்சினைகளுக்கு உள்ளேதான் இருக்கிறது. இன்று நான் இந்த மக்களைச் சந்திக்கச் சென்றேன், அவர்களுடன் பேசினேன், மக்களின் வீடுகளுக்குள் சென்றேன், அவர்கள் சாப்பிடும் பாத்திரங்கள், அடுப்பையும் சென்று பார்த்தேன், எப்படி படிக்கிறீர்கள் என்று பிள்ளைகளிடம் கேட்டேன், எவ்வாறு வாழ்க்கையைக் கொண்டு நடத்துகிறீர்கள் என்று பெற்றோர்களிடம் கேட்டேன், அவர்கள் எல்லோரும் கைகளை உயர்த்தியவாறு ஒரே குரலில், 25 வருடங்களுக்கு முன்னர் இருந்த இடங்களில் தங்களை கொண்டுபோய் விடுமாறு கூறினார்கள்.

வடக்குக்கு வந்து மக்களைச் சந்தித்ததன் பின்னர் தேசிய பாதுகாப்புப் பிரச்சினை எங்கிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுமாறு கொழும்பிலிருந்து கூச்சல்போடும் அடிப்படைவாதிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். விசேடமாக ஒரு விடயத்தை நான் இங்கு கூறவேண்டும். எதிர்வரும் 6 மாதங்களுக்குள் 25 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் மக்களது பிரச்சினையைத் தீர்த்துவைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். இதற்காக அவசர செயலணியொன்று உருவாக்குவேன். இது உடனடியாக தீர்த்துவைக்கப்பட வேண்டிய பிரச்சினை என்பதை புரிந்துகொண்டுள்ளேன்.”

இந்தப் பேச்சைக் கேட்ட மக்கள் கனவு காணத் தொடங்கினார்கள். முழுமையாக இல்லாவிட்டாலும் ஒரு தொகுதி மக்களையாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைமையாகக் கொண்ட நல்லாட்சி அரசாங்கம் குடியேற்றும் என்று சிவில் சமூகத்தினர் கூட நம்பினர். ஒன்றும் இடம்பெறவில்லை. முகாம் மக்களைப் பொறுத்த வரையில் ஏனைய அரசியல்வாதிகளின் பட்டியலில் ஜனாதிபதியும் உள்ளடங்கிவிட்டார்.

நேற்று முன்தினம் 20ஆம் திகதியுடன் 6 மாதங்கள் பூர்த்தியடைந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாக, 18ஆம் திகதி நவீனமயமாக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். தங்களது மீள்குடியேற்றம் தொடர்பாக ஏதாவது கருத்துத் தெரிவிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்த போதும் அது குறித்து அவர் எதுவும் கூறவில்லை. இது விடயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியதாக அறியமுடியவில்லை.

இடம்பெயர்ந்து முகாமில் வாழ்ந்துவரும் மக்கள், ஜனாதிபதி சிறிசேன அன்று வழங்கிய உறுதிமொழியை இன்னும் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் வெளியான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழிகள் சிலவற்றை கீழ் காணலாம்,


Presedent FB


Web page