படம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS

அறிமுகம்

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் புதிய அரசியல் களத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் இலங்கை ஒவ்வொரு நாளும் புதிய புதிய உருவத்தை பெறுகிறது. இதனை இலங்கைத் தமிழர் மட்டுமல்ல சிங்கள மக்களும் வியப்பாக பார்க்கவேண்டியுள்ளது. இதில் எந்த வேட்பாளர் தோற்றாலும் அரசியல் சுனாமி அடிக்கத்தான் செய்யும். அதனை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டும். இக்கட்டுரை இரு வேட்பாளரின் வெற்றிக்கான வாய்ப்புகள் பற்றி உசாவுவதே நோக்கமாகும்.

இலங்கை அரசியலில் நிறைவேற்று அதிகார முறைமை (Executive System) கவர்ச்சிகரமானதாகவும், ஆளுமை நிறைந்ததாகவும், அதிகாரம் பொருந்தியதாகவும் அமைந்திருந்தமை புரியக்கூடிய அம்சம். ஆனால், நிறைவேற்று அதிகார ஆட்சிக்கு அவற்றோடு இசைகின்ற இன்னோர் அம்சமாக வன்முறை அரசியல் மாதிரியும் (Violence Political) ஒன்றாகும். இதனை ஜே.ஆர். ஜெயவர்த்தன மிக குறைந்த அளவில் பயன்படுத்தினார். ஆர். பிரேமதாச மிக உச்சளவில் பயன்படுத்தியதுடன், அதுவே அவரது ஆட்சிமுறைமைக்குரிய அடிப்படையாகவும் அமைந்திருந்தது. அதாவது, மிதவாதமும் தீவிரவாதமும் கலந்த ஓராட்சி முறைமை அதீதமாக வளர வாய்ப்பாக நிறைவேற்றுத்துறை ஆட்சி அமைந்தது. இதுவே நவீன முடியாட்சிக்குரிய இயல்பினை காண்பிக்கும் அம்சமாக உள்ளது. இதில் தேர்ச்சியும் செயல்வடிவமும் உடையவர்களே நிறைவேற்றதிகார ஆட்சியை கைப்பற்றவோ தக்கவைக்கவோ முடியும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது. இதனை தற்போதைய பொது வேட்பாளரிடம் காண்பதற்கு அதிகமாக ஆளும் தரப்பிடம் குவிந்துள்ளது. இது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் பண்பாடாக வளர்ந்துவருகின்றது.

தற்போது எழுந்துள்ள தலைமைத்துவப் போட்டி முதனிலைத் தலைமைத்துவத்தைப் பெற்று இரண்டாம், மூன்றாம் தலைமைத்துவங்களின் போட்டியையும் அவர்கள் ஆளும்தரப்புக்கு கட்சி தாவியதும் குறிப்பிடத்தக்க பாதிப்பாக உள்ளது. இதனால், தனிமனிதர்களது செல்வாக்கையும் அரசியல் மீதான நம்பிக்கையையும் மக்கள் மத்தியில் தகர்த்துவதும் மாற்று தலைமைத்துவம் பற்றிய எண்ணப்பாடும் இயல்பாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஜனநாயகம் நாட்டிற்கு தேவையென போதிக்கும் எந்த அரசியல் கட்சிக்குள்ளும் ஜனநாயகம் இல்லாத போக்கு காணப்படுகிறது. அரசியல் தலைமைகளின் அதிகாரமும் போட்டியும் அதனைத் தக்கவைக்கும் கட்சித்தாவலும் இலங்கையில் சாதாரண விடயமாக மாறிவிட்டது. அதிகார வெறிக்குள்ளாகும் இலங்கை அரசியல் கட்சிகளின் இயல்பு பாரிய அழிவுக்கு இலங்கையை இட்டுச்செல்லும் நடவடிக்கைகள் மிக நீண்டகாலமாக நிலவுகின்றது. இனப்பிரச்சினை, வறுமை, வேலையின்மை, அடிப்படை வசதியின்மையென பிரச்சினைகள் நீண்டுசெல்கின்றன. 1960களில் சிங்கப்பூர் தலைவர்களால், வளங்கொழித்ததென குறிப்பிடப்பட்ட இலங்கை தற்போது சோமாலியா, ருவண்டாவிற்கு சமனானதாக மாறிவருகிறது. இதற்கு இவ்வகையில் அரசியல் கலாசாரத்தில் காணப்பட்ட பலவீனமே பிரதான காரணமாகும்.

புதிய உலக ஒழுங்கின் வரைபு உலகளாவிய மட்டத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அது சர்வதேச, பிராந்திய அரசியலை மட்டுமல்ல உள்நாட்டு அரசியல் பொருளாதார அமைப்பிலும் மாற்றங்களை செய்யத் தவறவில்லை. அந்த வகைக்குள் இலங்கையின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் உலகமயவாக்கம் கொள்கை வடிவமற்ற மனித சமுதாயத்தை உருவாக்கிவிட்டுள்ளது. இதிலிருந்து அரசியல் கட்சிகள் விலகியிருக்க முடியாத நிலை எழுந்துள்ளது. இலங்கையிலுள்ள தற்போதைய அரசியற் கட்சிகளில் எவற்றுக்கும் தெளிவான வரையறுக்கப்பட்ட, சார்பான கொள்கை கிடையாது. குந்தர் பிராங் குறிப்பிடுவது போல் எதிர்முரணிய வரைபிற்குள்ளேயே கட்சிகளும் கட்சிகளின் கொள்கைகளும் அமைந்திருப்பதுபோல் அரசுகளும் அரசுகளை இயக்கும் அரசாங்கங்களும் செயற்படுகின்றன. இவ்வகை அரசாங்கங்களை உருவாக்கிவரும் கட்சி முற்றாக குறைநிலைக்கு உட்பட்ட உள்நாட்டு அரசியல், பொருளாதார சமூக கொள்கைகளை வரைவது போல் வெளிநாட்டுக் கொள்கைகளையும் வடிவமைத்து வருகின்றன. இதனால், தெளிவான வரையறைக்குட்பட்ட கொள்கை வடிவம் அரசியல் கட்சிகளிடம் இல்லை. ஆனால், அவ்வகை அரசியல் முடிவை ஆளும் தரப்போ எதிர்த் தரப்போ எடுக்கும் தலைமை துரதிஸ்டவசமாக அருகிவருகிறது. இதன் கையறு நிலை இலங்கை மக்களின் எதிர்காலத்தை முற்றாக பாதிக்க வாய்ப்புள்ளது.

பொருளாதார நலனே உலக அரசுகளின் இணைவிற்கும், பிரிவிற்கும் காரணம் என்பதை தற்போதைய அரசியல் வகுப்பினர்கள் கருத்தில் கொள்ளவேண்டிய அம்சமாகும். பொருளாதார இலாபங்களே அரசியல் இருப்புக்களை நிர்ணயம் செய்கின்றன. அந்தவகையில், இன்றைய பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரம், அதை நோக்கி உலக முதலீடுகளும் உற்பத்திகளும் ஒன்றுசேருகின்றதே அன்றி அரசியல் கொள்கைகளுக்காக ஒன்று கூடவில்லை. அதனால், அரசுகளையும் அரசுகளின் பொருளாதார முதலீடுகளையும் ஓர் இடத்தில் குவிப்பதற்கான உலக சந்தையை தற்போதைய வேட்பாளர்கள் இருவரும் தமது தேர்தல் பிரகடனங்களில் கண்டுகொள்ளத் தவறிவிட்டனர். உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பொருளாதார இயக்கவிதிக்காக அரசுகள் கைவிட்டுவிட்ட வரலாறு கடந்த பல தசாப்தங்களாக பதிவிலுள்ள அம்சமாகும். இதனை தென்கிழக்கு ஆசிய நாடுகள் பல தசாப்தங்களுக்கு முன்பே கைவிட்டுவிட்டன. அந்த நாடுகளின் பொருளாதார சுபீட்சத்திற்காக ஜனநாயகத்தினை முடிவிற்கு கொண்டுவந்ததுடன் தனிக்கட்சி ஆதிக்கத்தினை பின்பற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே, பொருளாதார இயங்குவிசையினையும் அரசியல் சமூகக் கொள்கைகளையும் புதிய உலக ஒழுங்கின் மாறுதல் காலவிதிகள் உருவாகியுள்ளன.

இலங்கையில் ஆட்சிமாற்றத்தை விரும்புபவர்களாக மத்திய உயர் வர்க்கமே காணப்படும் மரபு நிலவுகிறது. சாதாரண மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஆட்சிமாற்றத்தை விட நாளாந்த வாழ்க்கையிலேயே கவனத்தை கொண்டவர்களாக உள்ளனர். மேலும், நாட்டின் அரசியலிலும் தீர்மானம் எடுக்கும் வலுவுடையவர்களாக விளங்குகின்றனர். மின்னணுச் சாதனங்களைப் பயன்படுத்தி தமக்கிடையே உயர், மத்திய தரவர்க்கம் தெளிவான ஒரு வலைப்பின்னலை செய்துள்ளது. தமது எண்ணப்பாட்டையும் சிந்தனையையும் ஊடகங்கள் வாயிலாக பிறருக்கும் அவர்களின் மூளைகளை சலவை செய்தவதற்கு பயன்படுத்துகின்றமை மிகப்பெரிய பிரச்சாரம் ஆகிவிட்டது. இதனால், ஆளும், எதிர்வர்க்கம் என்பதற்கு அப்பால் பிரச்சாரம் எல்லோரையும் வெற்றிகண்டுவருகிறது.

ஆயுதப்போராட்டங்கள் முடிவிற்கு வந்துள்ளனவே அன்றி அவர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இது மக்களின் வேகமான அரசியல் மயவாக்கத்தினூடாக பரவலடைந்து கொண்டுவருகின்றது. இது சிறுபான்மை வாக்காளர்களின் முடிவுகளைப் பாதிக்கும்.

முடிவுரை

இலங்கை அரசியல் தொடர்ச்சியில் இருகட்சி பாரம்பரியம் சுதந்திரத்திற்கு பின்பு வளர்ந்துள்ளது. இருகட்சிப் பாரம்பரியத்தினை ஆசியாவுக்குள் மிக நீண்டகாலமாக பின்பற்றிய நாடு என்ற பெருமை இலங்கைக்கு உரியது. அதனை முடிவுக்கு கொண்டுவரும் பதிவில் இரு வேட்பாளரின் பங்கு அதிகரித்துவருகிறது. இதனால் ஏற்படப் போகும் அரசியல் வெற்றிடம் தவிர்க்க முடியாத நெருக்கடியை ஏற்படுத்தலாம். அதுமட்டுமன்றி ஒரு கட்சி அரசியல் தென்கிழக்கு, கிழக்கு ஆசியப்பாணியில் வளருமாயின் இலங்கையின் அரசியல் அமைப்பை மட்டுமல்ல மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கலாம். தேர்தல் முடிவுகள் இத்தகைய நெருக்கடியை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அதனால், புதிய உபாயத்தையும், தந்திரத்தையும் கையாண்டு அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதே சாமர்த்தியமான பதிலாக அமையும். அதனை நோக்கி தலைமை கட்சி, நாடாளுமன்ற பிரதிநிதிகள் கட்சி, பிரதிநிதிகள் பணியாற்றுவது தவிர்க்க முடியாத அரசியல் நடவடிக்கையாக உள்ளது. 1977ஆம் ஆண்டிலிருந்து 1994 வரை ஐ.தே.க. ஆட்சி செய்ததைவிட சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அரசு அதிக காலத்தை எடுக்க வாய்ப்பு உண்டு. அதனை தீர்மானிப்பது ஐ.தே.கவின் மீளுருவாக்க (Rebirth) நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது. ஐ.தே.கவின் தலைமைத்துவப் போட்டியும், மக்கள் சார்பற்ற தேர்தல் போட்டியும், அரசியல் முதிர்ச்சியற்ற நிலைமையும், எதிர்கொள்ள முடியாத ஆளும் தரப்பின் பலமும் தொடருமாயின் ஐ.ம.சு. கூட்டமைப்பின் அரசியல் வாழ்வு பல தசாப்தங்களுக்கு நகரலாம். அவ்வகை பலமும் உறுதியும், தேசியவாத உரமேற்றலும் கொண்ட அரசியல் கலாசாரம் பாரிய பொருளாதார நெருக்கடியை தருவிக்கும். அதனால், எழும் போராட்டம் அரசியல் விதிகளை மாற்றம் செய்யும் வலுவுடையதாகும். எனவே, எதிரணியின் உபாயம் பொருளாதார போட்டிக்கூடாக ஓர் அரசியல் உறுதிப்பாட்டை கட்டியெழுப்புவது அவசியமானது. மறுபக்கத்தில் பாரம்பரிய அரசியல் கட்சி மரபை பேணுவது என்பதாகும்.

கே.ரீ.கணேசலிங்கம்