வலிந்து காணாமலாக்கப்பட்ட தங்களுடைய அன்புக்குரியவர்கள் வீடு வந்து சேருவார்கள் என்ற நம்பிக்கையில் உறவுகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நினைவுகளோடு தங்களுடைய மிகுதி வாழ்க்கையின் ஒவ்வொரு கனத்தையும் நம்பிக்கையோடு கடத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய அன்புக்குரியவர்களை நினைவூட்டும் பொருட்களை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் காப்பாற்றி, பாதுகாத்து அவற்றோடு (அவர்களோடு) உரையாடி, உறவாடி வாழ்ந்துவருகிறார்கள். அவ்வாறான பொருட்கள் மற்றும் அவற்றின் கதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மெய்நிகர் நினைவகமே (Virtual Memorial) இது.
-
“இது அவர் கட்டின தாலி. முகாமுக்க போகேக்குள்ள கழட்டிட்டுதான் போனன். திருப்பி இங்க வந்தவுடனே மஞ்சல் கயிறுல தாலிய போட்டுக்கிட்டன். அவர கையாளதானே குடுத்தன். விசாரிச்சிட்டு விடுறதா சொன்னவங்க. ஆமி கூட்டிக்கொண்டு போகும்போது மகன் ரெண்டு பேருக்கும் ஒன்றரை வயசும், நாலு வயசும்தான் இருக்கும்.
அவர் செத்தத கண்ணால காணலயே... அவர் எங்கயாவது இருப்பார். அந்த நம்பிக்கையிலதான், அவர்ட நினைவா இந்தத் தாலிய போட்டிருக்கன். நான் சாகும் வரை இது என்ட கழுத்திலயே கிடக்கட்டும்.
மனைவி – ஜோர்ஜ்ராஜன் ராஜேஸ்வரி (வயது 53)
முன்னாள் போராளியான கணவர் பத்தினிநாதன் ஜோர்ஜ்ராஜனை (வயது 35) வட்டுவாகல் பகுதியில் வைத்து ராஜேஸ்வரி இராணுவத்திடம் கைளித்துள்ளார். தன்னால் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரமுடியாது என்று கூறியபோதும் தானே வற்புறுத்தி அழைத்துவந்து, விசாரணை செய்துவிட்டு விடுதலை செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இராணுவத்திடம் கையளித்ததாகக் கூறுகிறார் ராஜேஸ்வரி.
-
“கனவில வருவான், கனவில வருவான் தம்பி. இப்ப கொஞ்ச நாளா காணேல்ல. ஒரு ஆறு மாதம் ஏழு மாதமா காணேல்ல. அதுக்கு முன்ன ஒரே கனவுதான்... அம்மம்மா என்டு கூப்பிடுவான். அம்மாவும் அப்பாவும் இவன் சின்ன வயசா இருக்கும்போதே செத்திட்டினம். 8 வயசில இருந்து நான்தான் வளர்த்தன். 12 வருசமாக என்னோடயே இருந்தவன், 14 வருசமா எங்க இருக்கானோ தெரியல...
இந்தப் படம் மல்லாவியில எடுத்தது. நாங்கதான் போய் எடுத்தம். இவன்ட அக்கா செட்டிக்குளத்தில இருக்கா. அவா ஒரு படம் கேட்டிருந்தவ. தன்னிட்ட ஒரு படமும் இல்ல, ஒரு படம் வேண்டுமென்டு கேட்டிருந்தவ. அவக்காகத்தான் ஒரு படத்தில இப்படி எழுதி, குடுக்கச்சொல்லித் தந்தவன். இப்ப இந்தப் படமும் அவன்ட கையெழுத்தும்தான் அவன் நினைவா இருக்கு.
நாகமணி (அம்மம்மா – வயது 88)
22 வயதான பேரன் கதிர்வேல் மயூரன் முள்ளியவளையில் வைத்து 2009ஆம் ஆண்டு காணாமல்போயுள்ளார் என்று கூறும் அம்மம்மா நாகமணி, எந்த இடம், திகதி எதுவும் நினைவிலில்லை என்று கூறுகிறார்.
-
“அவாட தோடு இருக்கு. அத வச்சிருக்கன், அழிக்கேல்ல. ரெண்டு இருக்கு. அத யாருக்கும் குடுக்கிறதில்ல. அவாட நினைவாதான் வச்சிருக்கன். அவா போட்ட வளையல் ஒன்டும் இருக்கு. அத எல்லோரும் போடுவினம். பரம்பரை பரம்பரையா போட்டதால அத போடக் குடுக்கிறனான். ஆனா, தோடு அவாவுக்காக வேண்டினது. அத யாருக்கும் குடுக்கமாட்டேன். அவா திருப்பி வந்த பிறகு அவாவே போட்டுக்கொள்ளட்டும்.”
தாய் – நடராசலிங்கம் திலகவதி (வயது 59)
20 வயதான கவிதா நடராசலிங்கம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி அம்பலவன்பொக்கனை பகுதியில் வைத்து காணாமல்போயுள்ளார்.
-
“அவா பள்ளிக்கூடம் போகும்போதே ஜீ.எஸ். கிட்ட எழுத்துக்குப் போவா. குடும்ப அட்டைகள் பதியக்குள்ள இவாவத்தான் கூப்புடுவார். இவாட எழுத்து அழகா இருக்குமென்று கூப்பிடுவார். அப்படி உதவி செய்றதுக்கு மாதம் எவ்வளவாவது குடுப்பார். அப்படி சேர்த்த காசுலதான் இந்த சட்டய அவா வாங்கினா. தச்சபடியே வாங்கினது. அப்போ 200 ரூபா இருக்கும். இது மட்டும்தான் அவாட ஞாபகத்துக்கு இருக்கு. அதில குத்திவச்ச பின் ஒன்டு கூட அப்படியே இருக்கு. அத அப்படியே வச்சிருக்கன்.
தாய் – சிவகுரு யமுனாதேவி (வயது 57)
19 வயதான சிவகுரு யாழினி இராணுவத்திடம் சரணடைந்ததாக தாயார் யமுனாதேவி கூறுகிறார்.
-
“2001 இருக்கும், அப்ப நான் வெளிநாட்டுல இருந்தேன். பட்டி வச்ச உர்லோச வாங்கும்போதுதான் இங்க இருந்தேன். நான் வீட்டுக்கு வந்த பிறகுதான் இந்த உர்லோச காட்டுனாரு. அவரு ரொம்ப ரூல்ஸாதான் இருப்பாரு. வீணா செலவழிக்க மாட்டாரு. அதனால ஒன்னும் அவருகிட்ட கேட்டுக்கிறதில்ல. இத கல்யாணம், சடங்கு அப்படி விசேஷமான நாள்ல மட்டும்தான் கட்டுவாரு. அதனாலதான் கோல்ட் கலர்ல இருக்கிற இந்த உர்லோச வாங்கியிருக்காரு. விலை கூடனு சொன்னாரு. ஆனா, எவ்வளவுனு சொல்லல. நானும் கேக்கல. சும்மா டவுனுக்குப் போறதா இருந்தா பட்டி வச்ச உர்லோசதான் கட்டுவாரு.
மனைவி – சண்முகம் வசந்தகுமாரி (வயது 44)
34 வயதான கந்தசாமி ராமகிருஷ்ணன் (வயது 34) 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி காணாமலாக்கப்பட்டுள்ளார். மொனறாகலை நகரில் வைத்து ராமகிருஷ்ணனின் முச்சக்கரவண்டியில் ஒருவர் ஏறியதன் பின்னரே அவரைக் காணவில்லை என்றும் பின்னர் முச்சக்கரவண்டியை மட்டும் பொலிஸார் கண்டுபிடித்ததாக வசந்தகுமாரி கூறுகிறார்.
-
“ஒரு விரதத்தையும் விடமாட்டா. எல்லா கோவில்களுக்கும் தவறாம போயிடுவா. வீட்டில இருக்கிற சாமி படங்கள் எல்லாம் பழசு என்டு சொல்லி இந்தப் படத்த வேண்டி வந்தவ. இங்க இருந்து இடம்பெயரும் வரைக்கும் இந்தப் படத்துக்குத்தான் விளக்கேத்துவா. திரும்பி வந்திடுவோம் என்ட நம்பிக்கையில இந்தப் படத்த எடுத்துக்கொண்டு போகேல்ல. திரும்பி இங்க வரும்போது கரையான்கிட்ட இருந்து கடவுள் தப்பிட்டு. காயமடைந்த நிலையில இராணுவத்திட்ட குடுத்த அவாவ தேடிக் கண்டுபிடித்து கூட்டிக்கொண்டு வர முடியேல்ல..
Image Name: Sellan Kandasamy
கணவர் – செல்லன் கந்தசாமி (வயது 70)
48 வயதான கந்தசாமி விக்னேஸ்வரி ஷெல் தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில் இராணுவத்திடன் ஒப்படைத்ததாகக் கூறும் கந்தசாமி, அவரோடு துணைக்கு இருக்கவிடாது இராணுவம் தன்னை வெளியேறுமாறு கோரியதாகவும் கூறுகிறார். தன்னுடைய மனைவி எங்காவது ஓர் இடத்தில் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் கந்தசாமி, அவரது மகள் அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்து வருகின்றனர்.
-
“அவர் பாவிச்ச சாமான் எல்லாத்தையும் இங்கேயே விட்டுட்டு போய்விட்டம். உடுத்தின உடுப்போடதான் வீட்ல இருந்து வெளிக்கிட்டம். யுத்தம் நடக்கும்போதும் அவர் பங்கருக்குள்ளேதான் இருந்தவர். அப்ப அந்தக் கட்டத்தில பாவிச்ச எந்தப் பொருளும் எங்களிட்ட இல்ல. ஒரு ஆல்பம் மட்டும் இருக்கு. வட்டுவாகல் கடந்துபோகும்போது ஒரு சூட்கேஸ மட்டும் பாதுகாப்பா கொண்டு சேர்த்திட்டம். அதுலதான் இந்த ஆல்பம் இருந்தது. இந்த ஆல்பம் மட்டும்தான் அவன் நினைவா இருக்கு.
“இளநீர் பறிக்கப்போய் விழுந்து மருந்து போட்டிந்தப்போ இந்தப் படம் எடுத்தது. அவன் எதற்கும் துணிஞ்சவன். யாருக்கும் பயப்படமாட்டான். ஏதாவது பிரச்சினையென்டா இவன்தான் அதற்கு தலைமை தாங்குவான். இப்ப இதையெல்லாம் கதைச்சி என்ன செய்ய? முடிஞ்சது முடிஞ்சி போச்சி.தந்தை – வல்லிபுரம் ஜெயவீரசிங்கம் (வயது 58)
8ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவனான ஜெயவீரங்கம் இந்துஜன் வட்டுவாகல் பகுதியில் வைத்து காணாமல்போயுள்ளார்.
-
“நான்தான் இந்த பாஸ்போர்ட்ட எடுக்கச் சொல்லி கொழும்புக்கு அனுப்பினன். இந்தப் பக்கம் கொஞ்சம் கரைச்சலா கிடக்கு, என்னைய அனுப்புங்க மம்மி என்டு சொன்னவர். என்ன மம்மி என்டுதான் கூப்பிடுவார். ஒரு மாதிரி பாஸ்போர்ட்ட செய்து வெளிநாட்டுக்கும் அனுப்பினம். நானும் அவரும்தான் எயார்போர்ட்டுக்குப் போய் வழியனுப்பிவிட்டு வந்தம். ரெண்டு வருசம் இருந்திட்டு திடீரென்டு எனக்கும் சொல்லாம வந்திட்டார். நாட்டு நிலம சரியில்ல என்டு சொல்லியும் கேட்கல்ல. எனக்கு சுகமில்ல என்டு சொல்லித்தான் வந்திருக்கார். அப்படி வந்து வவுனியாவுல இருக்கும்போதுதான் வெள்ளை வான்ல வந்த ஆக்கள் கடத்தியிருக்கினம். இப்ப இந்த பாஸ்போர்ட பார்த்துக்கொண்டே இருக்கிறன். இதால பாதுகாப்பா போய் எங்கேயோ இருந்தவன், திரும்பவம் வந்து காணாமல்போயிட்டான்.”
தாய் – வரதகேசரி தவமணி (வயது 74)
27 வயதான வரதகேசரி ஜீவதாசன் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிந்துவிட்டு 2008ஆம் ஆண்டு வவுனியா வந்திருந்தபோது கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளார்.
-
“அவாட படங்கள் நிறைய இருந்தது. இடம்பெயர்ந்து போகேக்க எல்லாம் அழிஞ்சிப் போயிட்டது. எங்கட ஆவணங்கள் எல்லாத்தயும் போட்டு வச்சிருந்த பேக்கில அப்போ ஸ்டூடியோவில குடுத்த நெகடிவ்வ எப்படியோ போட்டு வச்சிருந்தம். அத கொண்டுதான் இந்த அல்பத்த செய்திருக்கம். முகாமுல இருந்து வெளியில வந்தவுடனே படத்த கழுவிட்டன். அதிலயும் எல்லா படத்தயும் கழுவ முடியாது என்டு சொல்லிட்டினம். 2010 இருக்கும், முகாம்ல இருந்து பாஸ் எடுத்துக்கொண்டு வவுனியா டவுனுக்குப் போனன். அப்போ ஒரு படம் கழுவ 15 ரூபா. அந்தப் படங்கள கொண்டுதான் இந்த அல்பத்த செய்திருக்கன். இதுதான் அவாட ஞாபகத்துக்கு இருக்கு.”
தாய் – முரளிதரன் மல்லிகா (வயது 46)
மகள் (முரளிதரன் திஸ்யா) 13 வயசிருக்கும். 2009, முள்ளிவாய்க்கால்தான் காணமல்போனவ. எங்களோடதான் கூட்டத்தோட கூட்டமா இடம்பெயர்ந்துகொண்டு வந்தவ. எங்க போனாவோ என்டு தெரியேல்ல. இதுவரைக்கும் அழைந்து திரிந்துகொண்டிருக்கம் என்கிறார் தாய் மல்லிகா.
-
“தான் விளையாடுறதுக்கென்று மரத்தால டிரெக்டர் செய்தவர். அப்போ ஒன்பது வயசு போல இருக்கும். என்ட கை வாள் எடுத்து வீட்டுல கிடத்த முதிர மரத்த அறுத்து இத செய்தவர். நல்ல மூளசாலி. நல்லா அழகா இருந்தது, இப்போ கரையான் அரிச்சிட்டு. ஒரு விசயத்த ஒரு தடவ சொன்னா போதும், திரும்ப திரும்ப சொன்னா பிடிக்காது. பார்க்கிறவங்களுக்கு இது மரக்கட்டையா தோனலாம். ஆனா, இது எனக்கு அவன்ட நினைவு.”
அப்பா – சேகர் (வயது 66)
23 வயதான ஆனந்த சேகர் 2009ஆம் ஆண்டு மாத்தளன் பகுதியில் வைத்து காணாமல்போயுள்ளார்.
-
“எத்தனை தடவ இடம்பெயர்ந்திருப்போம். முதல்ல யாழ்ப்பாணத்தில இருந்து இடம்பெயர்ந்தப்போ அங்க அத்தனையயும் விட்டுட்டு வந்தம். இப்ப, திரும்பி வந்திடலாம் என்ட நம்பிக்கையோட இடம்பெயர்ந்துகொண்டே போனம். கடைசியில முள்ளிவாய்க்கால்ல எல்லாத்தையும் விட்டுட்டு உடுத்துன உடுப்போட போய் சேர்ந்தம். பாஸ்போர்ட், ஐசி, லைசன்ஸ் எல்லாம் கிடந்த. ஒரு சூட்கேஸ்ல போட்டு வச்சிருந்தம், ஷெல் அடியில எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிட்டம். இந்தப் படம்கூட மூத்த மகன்ட சிநேகியப் பொடியன் கிட்ட இருந்ததுதான். குரூப்பாவும் தனியா நின்டும் படம் எடுத்திருக்கார். தனியா எடுத்த படம் இல்ல. குரூப்பா இருந்த படத்திலதான் தனியா பிரிச்சி எடுத்திருக்கம். இரண்டாவது மகன்ட படத்தையும் அப்படித்தான் தேடி எடுத்தம். இப்ப இது ரெண்டு மட்டும்தான் அவங்க ரெண்டு பேரின்ட ஞாபகத்துக்கு இருக்கு. காணாமல்போன மகளின்ட ஞாபகத்துக்கு எதுவுமே எங்களிட்ட இல்ல”
தாய் – நாகேஸ்வரி (வயது 65) / விசியாம்பிகா (மகள் – வயது 35)
விசியாகுமார் (மகன் - வயது 37, 2009 மே மாதம் 13ஆம் திகதி மாத்தளன் பகுதியில் வைத்து காணாமல்போயுள்ளார்)
விசியாதரன் (மகன் – வயது 28, 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து காணாமல்போயுள்ளார்) -
எங்கட கல்யாணம் பேசிதான் முடிச்சது. அவர பார்த்ததும் பிடிச்சிருந்தது. அத்தோட அவர் குடிக்கவும்மாட்டார். அப்போ எனக்கு 19 வயசு இருக்கும். கல்யாண நாள் இன்னும் அப்படியே நினைவிருக்கு. 1999 ஜனவரி 23தான் ரெஜிஸ்டர் நடந்தது. அடுத்த மாதம் பெப்ரவரி 13ஆம் திகதி இங்கதான் (மன்னார், பள்ளிமுனை) கல்யாணம் முடிச்சது. தாலியெல்லாம் இங்க வச்சிதான் கட்டினவர். பிறகு ‘கூர’ சாரி கட்டிக்கொண்டு அவரின்ட ஊருக்குத்தான் கூட்டிட்டுப் போனாங்க. அவங்கதான் கல்யாணத்த பெரிசா செய்தாங்க. படங்கள்ல காட்டுற மாதிரி கல்யாணம் இருந்திச்சி. குடையெல்லாம் பிடிச்சி, பாட்டெல்லாம் படிச்சி, மோளம் எல்லாம் அடிச்சி விசேசமா கல்யாணத்த செய்தாங்க. அவரின்ட ஞாபகத்துக்கு இந்த கல்யாணப் போட்டோதான் இருக்கு. இந்த போட்டோவ என்னோட ஸ்கூல்ல படிச்ச ஒரு பொடியன்தான் பிடிச்சவர்.
மனைவி – என்டனீட்டா பிகறாடோ (வயது 43)
2007 ஏப்ரல் 6ஆம் திகதி தலைமன்னாரிலிருந்து ஊர் கோயில் (தேவாலயம்) திருவிழாவுக்காக வந்துகொண்டிருந்தபோது, ஒருவரிடம் காசு வாங்கவேண்டியிருக்கு, வாரேன் என்டு சொலிட்டு பேசாலையில் வைத்து பஸ்ஸில் இருந்து இறங்கியவர் இன்றுவரை வீடு வந்து சேரவில்லை என்று கூறுகிறார் என்டனீட்டா. செபமாலை நெல்சன் கனுதாசியஸ் (30 வயது) காணாமலாக்கப்பட்டபோது ஆறு மற்றும் இரண்டரை வயது மகன்களுடன் போராட்டத்தைத் தொடங்கிய என்டனீட்டா பிகராடோ உறவினர்களின் உதவியுடன் இதுவரை காலமும் காலத்தை கடத்திவருவதாகக் கூறுகிறார்.
-
“பிள்ளையின்ட மனி பர்ஸ் ஒன்டு கிடக்கு. கொப்பி ஒன்டுல சைன் ஒன்டு வச்சவர். அவன்ட ஞாபகத்துக்கு ஆசையில சைன கூட இந்த மனி பர்ஸுக்குள்ள கிழிச்சி வச்சிருக்கன் தம்பி. நான்தான் இந்த பர்ஸ வேண்டிக் குடுத்தன், தனக்கு இந்தக் கலர் பிடிக்கும் என்று பிள்ளை சொல்ல கிளிநொச்சியில வச்சுதான் வேண்டிக் குடுத்தன். கிளினிக்குக்கு கிளிநொச்சிக்குத்தான் போய் வாரது. அந்தநேரம்தான் பிள்ளைய கூட்டிக்கொண்டு போய் வாங்கிக்கொடுத்தன். கடைசியா பிள்ள இததான் கையில தந்திட்டுப்போனது.”
தந்தை சின்னையா ராமசாமி (வயது 59)
18 வயதான ராமசாமி குலேந்திரன் 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி தேவிபுரம் பகுதியில் வைத்து காணாமல்போயுள்ளார்.
-
ஒவ்வொரு நிமிசமும் அவரத்தான் நினைச்சிக் கொண்டிருக்கன். என்னென்று மறக்கிறது என்டு சொல்லுங்க பார்ப்பம். உயிர் எப்போ போவுதோ அப்போதான் மறப்போம். இல்லையென்டா சுயநினைவு எப்போ இல்லாம போகுதோ அன்டைக்குத்தான் மறப்போம். அதுவரை மறக்கமாட்டோம். அவரின்ட நினைவா போட்டோ மட்டும்தான் இருக்கு. அதுவும் மெனிக்பார்ம் முகாமிலிருந்து இங்க வந்த பிறகு சனங்கள் குடுத்த போட்டோக்கள வச்சுக்கொண்டுதான் அவரோடு வாழ்ந்துகொண்டிருக்கன். அதுவும் இல்லையென்டா இதுவரைக்கும் உயிரோட இருந்திருப்பேனோ தெரியாது.
மனைவி – ரவிக்குமார் மேரி இம்மாகுலேட் (வயது 54)
2009 மே மாதம் 16ஆம் திகதி, 3 வயதான மகனுக்கு தாகம் எடுக்க, தண்ணீர் எடுப்பதாக் கூறிச்சென்றவர் மீண்டும் தங்களிடம் வந்துசேரவில்லை என்று கூறுகிறார் மனைவி மேரி இம்மாகுலேட். “அவ்வளவு சனநெருக்கடி, அவர் வராததால் எங்களை இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பிவிட்டினம். அவரை ஓமந்தையில் வைத்து கண்டதா முகாமுக்கு வந்தவங்க சொன்னவங்க. தனியா இருந்தவங்கள பஸ்ஸில ஏத்தினத கண்டதா அவங்க சொன்னவங்க” என்கிறார் மேரி இம்மாகுலேட்.
-
“அவர் நினைவா ஒரே ஒரு படம்தான் இருக்கு. நிறைய படம் இருந்திச்சி. அந்தப் படத்தையெல்லாம் அங்க இங்கனு ஒழிச்சி வைச்சிருவோம். அம்மா கண்ணுல பட்டுட்டா அழுதுகிட்டே இருப்பாங்க. அப்படி அத்தனை படங்களும் எங்க போயிருச்சினு தெரியாது. ஒரு மாதிரி இந்தப் படத்த மட்டும் காப்பாத்திட்டோம். அண்ணா, சர்ச் விசயங்கள்ல நெறைய கலந்துக்குவாரு. அப்ப ஒரு குழுவொன்னு இருந்திச்சி. அதுல இவரு சிறப்பா வேலை செஞ்சதுக்காக கண்டியில இருந்து வந்த பிஸொப் கெளரவிச்சாரு. 1980 ஆரம்பத்துல இருக்கும், சரியா ஞாபகத்துல இல்ல...”
தம்பி – குரூஸ்பிள்ளை (வயது 62)
அண்ணன் சந்தனம் செல்வநாயகம் (வயது 34) அம்பாறைக்கு வேலைக்குச் சென்றிருந்தபோது 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டதாக குரூஸ்பிள்ளை கூறுகிறார்.
-
“தன்ட உடுப்பு கொலுவுறதுக்காக வேண்டி இத தண்ட கையாலயே செய்தவர். இப்ப இதுக்கு 25 வயசாவது இருக்கும். பென்சிலால மார்க் பண்ணதுகூட இன்னும் இருக்கு. முகாம்ல இருந்து திரும்பி வந்தப்போ எங்கட பழைய வீட்லதான் இத கண்டெடுத்தனாங்கள். உடைஞ்சும் போயிருக்கு. நேர்த்தியா செஞ்சிருக்கார். இது மாதிரியான வேலைகள திறமையா செய்வார். இதில யாரும் இப்ப உடுப்பு கொலுவுறதில்ல. வருவார் என்ட நம்பிக்கையில அவர் நினைவா வச்சிருக்கம்.”
மனைவி – சிவபுண்யம் ராஜினி (வயது 53)
2009 மே மாதம், சரியான திகதி ஞாபகமில்லை, போரின் இறுதி நாட்கள் என்று நினைக்கிறேன். நான்தான் கணவரை (சுப்ரமணியம் சிவபுண்யம் - வயது 40) வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் கையளித்தேன். அவர் பற்றி இதுவரை எந்தவித தகவலும் இல்லை என்று கூறுகிறார் மனைவி ராஜினி.
-
“இவா ரொம்பவும் கஷ்டத்துக்கு மத்தியில் படிச்சவ, யாழ்ப்பாண யுனிவர்சிட்டிக்குத் தெரிவானா. அதுக்குப் பிறகு இங்க வந்து தற்காலிகமாக படிப்பிச்சுக் கொண்டிருந்தவ. இவாவ நம்பித்தான் இருந்தோம். சொந்தக்காரரோடதான் இவா இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தா. ஆனா முகாமுக்கு வந்துசேரல. என்ன நடந்ததென்றே தெரியல்ல. யுனிவர்சிட்டில பட்டம் கிடைச்ச படமும் ஒரு சட்டையும், பெட் சீட் ஒன்றும் இவாட தங்கச்சிட கையில கிடைச்சிட்டது. இது மட்டும்தான் மிச்சம்.
இவரும் யுத்தத்தில காயமடைந்ததோட புல்மோட்டைக்கு வந்திட்டன். அதுக்குப் பிறகு எங்கள அனுப்பல, அவர மட்டும் குணப்படுத்துறதா சொல்லிட்டு என்னை மட்டும் அனுப்பினவங்க. அவரும் திரும்பி வந்துசேரவே இல்ல.”தாய் – சந்திரசேகரன் பத்மாவதி (வயது 62)
28 வயதான சந்திரசேகரன் புரோமினா (வயது 28) இடம்பெயர்ந்து பாதுகாப்பாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துசேர்ந்திருப்பாள் என்ற நம்பிக்கையில் தான் இருந்ததாகவும் இடைத்தங்கல் முகாம்கள் அத்தனைக்கும் அழைந்து திரிய ஆரம்பித்து இன்றுவரை தன்னுடைய கால்கள் ஓயவில்லை என்றும் பத்மாவதி கூறுகிறார்.
-
மகன் இளந்தாரியா இருக்கும்போது, கல்யாணம் முடிக்க முன்னால வாங்கிக் குடுத்த கதிரை இது. இதுக்கு முன்னாடி இரண்டு கதிரை வாங்கித்தந்தவன். 1995ஆம் ஆண்டு என்டு நினைக்கிறன், நீல நிற கதிரைகள். அந்தக் கதிரைகள் உடைஞ்ச பிறகு, மகன் காணாமல்போன வருஷம் என்டு நினைக்கிறன், தை மாதம் இந்த இரண்டு கதிரையும் ஸ்டூல் ஒன்டும் வாங்கினவன். அவன் தலைதூக்கின பிறகுதான் நாங்க கொஞ்சம் முன்னேறினோம். இந்தக் கதிரைய இவ்வளவு நாளா ரூமுக்குள்ளதான் வச்சிருந்தன். போன மார்கழி மாசம்தான் வெளியில எடுத்தன். நான் இருக்கும் வரை இந்தக் கதிரைகள பார்த்துக்குவன். நான் சாகும் வரைக்கும் இதோடுதான் வாழனுமோ தெரியல்ல?
தாய் – ஜேசுதாசன் மரியா (வயது – 65)
இரவு மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லவேண்டியிருப்பதால் 2006 ஜூன் மாதம் 7ஆம் திகதி படகை கழுவி, வலைகளை ஏற்றிவைப்பதற்காக கடற்கரைக்குச் சென்ற 29 வயதுடைய மகன் நண்பரொருவருடன் கதைத்துக்கொண்டிருந்தபோது வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச்செல்லப்பட்டதை சிலர் கண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார் தாய் மரியா.
-
“இந்தப் படத்த பார்க்கும்போது எனக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வருது. பேரன்ட முதலாவது பிறந்தநாளன்டு எடுத்த படம். இது மட்டும்தான் என்னிட்ட இருக்கு. 2009 இரண்டாம் மாதமிருக்கும், இந்த வீட்டடியில ஷெல் ஒன்டு விழுந்து 11 ஆடு செத்தது. அத்தோடு ஒன்டு ரெண்டு சாமன்கள கையில எடுத்துக் கொண்டு போனதுதான், அதில இது மட்டும்தான் இருக்கு. சரியான குழப்படிக்காரன் தம்பி. கொஞ்சம் கறுப்பா இருப்பான். பள்ளிக்கூடத்தில, போற வழியில இவன குழப்புறதுக்கென்டு ‘சூலக்கருப்பான்’ என்டு கூப்பிடுவினம். கல்லகொண்டு எறியுவான். ஆனா, முதலாமாண்டுல இருந்து 10ஆம் ஆண்டு வரைக்கும் வகுப்புல முதலாவது ஆலாதான் வருவான்.
அவன் செஞ்ச குழப்படிகளெல்லாம் மறக்கவே முடியாது தம்பி, செத்தா கூட மறக்க முடியாது. எங்க இருக்கிறானோ? என்ன செய்றானோ?
தாய் – முருகேசு தங்கம்மா (வயது 72)
முருகேசு குலேந்திரன் (வயது 22) 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து காணாமல்போயுள்ளார் என்றும் தனக்கு காணாமல்போன திகதி சரியாக நினைவிலில்லை என்றும் தாய் தங்கம்மா கூறுகிறார்.
-
ரோசாப்பூ பொக்கெட்டுல குத்தினபடி 21ஆவது ‘கீ’ பெர்த் டேக்கு எடுத்த போட்டோ இது. அதோ அந்த இடத்திலதான் முன்ன நாங்க இருந்த வீடு இருந்தது. நாங்கதான் இத ஏற்பாடு செய்தம். அவருக்கு போட்டோ பிடிக்கறதென்டா பிடிக்காது. ஓடி ஓடி ஒளிஞ்சிக் கொள்வார். அவர்ட அக்கா திட்டினதாலத்தான் இந்தப் போட்டுவுக்கும் ஓம் என்டு சொன்னான். அதுக்குப் பிறகுதான் அவருக்கென்று ஒரு ஆல்பம் செய்தம். அந்த ஆல்பமும் இப்ப இல்ல. இடம்பெயரேக்க விடுபட்டுப் போயிட்டு. இந்தப் போட்டோ மட்டும் மகளின்ட பேக்ல இருந்ததால இப்போ இருக்கு.
தந்தை – சின்னத்துரை தேவராசா (வயது 70)
தேவராசா தயாபரன் (வயது 23) பொக்கனையில் வைத்து காணாமல்போயுள்ளார். பெருந்திரளான மக்களோடு இடம்பெயர்ந்துகொண்டிருந்தபோது மகன் காணாமல்போய்விட்டதாக தந்தை தேவராசா கூறுகிறார்.
-
“அவரின்ட நினைவா இந்த செர்டிபிகேட் மட்டும்தான் இருக்கு. 17 வயசுதான் இருக்கும், படிச்சுக் கொண்டிருந்தவன். வீட்டுக் கஷ்டம் என்டதால கடைக்கு வேலைக்குப் போனவன். நல்ல திறமைசாலி. போற இடத்திலயெல்லாம் அப்படித்தான் சொல்லுவினம். மூத்த மகன், இப்ப அவன் இருந்தா நான் இந்த நிலைமையில இருப்பேனா, எனக்கு கொஞ்சம் சுகமில்லையென்டாலும் தவிச்சுப் போயிடுவான். இப்ப அவனுக்கு என்ன நிலைமையோ?”
பாலசுப்ரமணியம் மாலினி (வயது 47)
மகன் பாலசுப்ரமணியம் போஜராஜன் (வயது 17) பாடசாலை சென்றுகொண்டிருந்தபோதுதான் இடம்பெயரவேண்டி நிலையும் தங்களுக்கு ஏற்பட்டதாகவும் அப்படி ஒரு நாள் (2009.04.19) பல்லாயிரம் மக்களுக்கு மத்தியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்தபோது சனநெருக்கடியில் எவ்வாறு காணாமல்போனான் என்று இன்று வரை ஊகித்துக்கொள்ள முடியாதுள்ளது என்றும் தாய் மாலினி கூறுகிறார்.
-
“அவரின்ர நினைவா ஒன்றுமே இல்ல. படங்கள் இருந்தது. இடம்பெயர்ந்து போகேக்க எல்லாத்தையும் விட்டுட்டு போயிட்டம். ஐசிய மட்டும் பத்திரமா வச்சிருக்கன். படிப்பு விசயமா யாழ்ப்பாணத்துக்கு போனவன், திரும்பி வரவே இல்ல. பள்ளிக்கூடம் விசயமாத்தான் போனவர். இராணுவம் சுற்றிவளைச்சதா சொன்னவங்க. அதில இவரும் இருந்ததா சொன்னவ. என்ன நடந்ததோ தெரியாது. ஒரு மகன் இடம்பெயரும்போது ஷெல் பட்டு செத்திட்டார். இவரும் இல்ல. மகள் இருக்கா. அவாக்கு ஒன்டும் ஏலா. எங்க போனாலும் கூட்டிட்டு திரியனும். அதனால போராட்டங்களுக்கும் போறதில்ல. இவன் இருந்தா இந்த நிலைமை எனக்கு ஏற்படுமா?
Image Name: Sabaratnam Thillaynayagi
தாய் – சபாரத்தினம் தில்லைநாயகி (அம்மா – 73)
மகன் உமாகரன் சபாரத்தினம் இராணுவத்தால் கடத்தப்பட்டுத்தான் காணாமலாக்கப்பட்டார் என்று கூறும் தில்லைநாயகி, விசேட தேவையுடைய மகளை யாருடைய உதவியும் இல்லாமல் இன்னல்களுக்கு மத்தியில் வளர்த்துவருவதாகவும் கூறுகிறார். மகளை யாரிடமும் தனியாக விட்டுவிட்டு மகனுக்காக நீதிகேட்டு ஒரு போராட்டத்தில் கூட பங்கெடுக்க முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
-
“கடைசியா போட்ட உள் உடுப்பு இது தம்பி. 17, 18 வயசுக்கு இடைப்பட்ட வயசில போட்ட உடுப்புதான் இது. அப்ப இடம்பெயரும்போது கையில கிடைச்சததானே எடுத்துக் கொண்டுப் போனம். இவரின்ட ஞாபகத்துக்கு ஒரு சேர்ட்டும் இந்த உள் உடுப்புதாம் மிச்சமா கிடக்கு. அவரோடயே வந்துசேர்ந்திடலாம் என்டுதானே அவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியிலயும் இடம்பெயர்ந்துகொண்டிருந்தம். இந்த உடுப்பு, அவர் பாவிச்ச பொருள் ஞாபகத்துக்காக வச்சிருக்கவேண்டி வரும் என்டு அந்த நேரம் யார் நினைப்பா... மூத்த ஆம்பலப் புள்ளய ஷெல்லடியில இழந்திட்டன், எப்படியாவது இந்த புள்ளயயாவது கொண்டுவந்து சேர்ந்திடலாம் என்டுதானே அவ்வளவு பாடுபட்டன். கடைசிய ஒன்டுமே நடக்கல தம்பி. 2010 மே மாதம் 18ஆம் திகதி வீரகேசரி பேப்பர்ல 5ஆம் பக்கத்தில வெளிவந்திருந்த ஒரு கட்டுரையில இருந்த படத்தில என்ட மகன் இருக்கார். கூட்டமா சனம் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருக்கு, அவரும் அதில இருக்கார். அதையும் பத்திரமா வச்சிருக்கன்.”
தாய் – ஜசிந்தா ராசம்மா (வயது 69)
19 வயதான ரவீந்திரன் கஜன் 2009 மார்ச் மாதம் 6ஆம் திகதி காணாமல்போயுள்ளார் என்றும் கடைசியாக மாத்தளன் வைத்தியசாலையில் மகனைக் கண்டதாக தன்னிடம் சிலர் வந்து கூறினார்கள் என்றும் தாய் ஜசிந்தா கூறுகிறார்.
-
“இத பார்க்கும்போது பெரிய ஆக்கள் போடுற சேர்ட் மாதிரிதான் இருக்கும். ஆனா, 16 வயசுல மகன் போட்ட சேர் தம்பி இது. நல்ல உடம்பு அவனுக்கு, உயரமா இருப்பான். சித்தப்பான்ட கல்யாண வீட்டுக்குத்தான் வாங்கிக் குடுத்தம். கொஞ்சம் பெரிசு என்டுதான் சொன்னவர். பிறகு அதையே உடுத்தினவர். வீட்டில நாலு பேருக்கும் ஒரே மாதிரிதான் உடுப்பு எடுக்கனும். அப்படி இல்லையென்டா ஒரே பிரச்சினதான், உடுத்த மாட்டினம். விசேசம் என்டதால எல்லாரையும் கிளிநொச்சிக்குக் கூட்டிக்கொண்டு போய் உடுப்பு வாங்கினம். கடைசி வரைக்கும் இந்த சேர்ட்ட கொண்டு திரிஞ்சனான். 15 வருசமாகப்போகுது இன்னும் வச்சிருக்கன், அவன் வருவான் என்ட நம்பிக்கையில.”
தாய் – திருச்செல்வம் நாகதேவி (வயது 63)
17 திருச்செல்வம் அகிலன் 2009ஆம் ஆண்டு ஆனந்தபுரம் பகுதியில் வைத்து காணாமல்போயுள்ளார் என்று நாகதேவி கூறுகிறார்.
-
அவன்ட நினைவா ஒன்டுமே இல்ல. இங்கிருந்து இடம்பெயர்ந்து போகும்போது கொஞ்சம் பொருளத்தான் கொண்டுபோனம். அவன் பாவிச்ச எல்லா பொருளயும் இங்கயே விட்டுட்டு போனம். திரும்பிவந்து பார்த்தப்போ ஒன்டுமே இருக்கேல்ல. அவனும் இப்ப இல்ல, அவன் நினைவாவும் என்னிட்ட ஒன்டுமே இல்ல. அவனத் தேடித் தேடி அலைஞ்சி நோய் வந்ததுதான் மிச்சம்.
தாய் – ரத்தினம் கமலாம்பிகை (வயது 74)
ரத்தினம் ஜெகதீஸ்வரனை (வயது 30) அவரது தயார் முள்ளிவாய்க்காலில் வைத்து 2009 மார்ச் 15ஆம் திகதி கடைசியாகச் சந்தித்துள்ளார். அதன் பிறகு அவரைச் சந்திக்கவே இல்லை.
-
“அவாட ஞாபகத்துக்கு தென்னமரமொன்டு இருக்கு. அவாதான் அந்த மரத்த வச்சவ. இடம்பெயர்ந்து மீள்குடியேற இங்க வந்தபோது ஷெல்பட்டு மரத்துல துண்டொன்டு இருக்கேல்ல. நாங்க நினைச்சம் மரம் செத்திரும் என்டு. ஆனா, மரம் காய்க்குது. இந்த முறை நல்ல காய். இந்த மரத்த காயதான் எங்கட மகன் பிடுங்கி திருகோணமலைக்குக் கொண்டு போறவன். மத்த பிள்ளைகளும் அக்கான்ட மரமென்டுதான் சொல்வாங்க. நானும் இத லோஜின்ட (தமிழினியின் வீட்டுப் பெயர்) மரமென்டுதான் சொல்வன். இது லோஜியின்ட மரத்துக் காயோ என்டு கேக்குற அளவுக்கு இயல்பாகிடுச்சி.”
தந்தை – சத்தியநாதன் விஜயேந்திரன் (வயது 59)
விஜயேந்திரன் தமிழினி (வயது 17) 2009 மார்ச் 7ஆம் திகதி மாத்தளன் இடைக்காடு பகுதியில் வைத்து காணாம்போயுள்ளார். “எங்களோடயேதான் இருந்தவ. குளிக்கப்போறதா சொல்லிட்டு போயிருக்கா. திரும்பி வரவேயில்ல. ஆமி ரவுண்டப் பண்ணிட்டதா சொன்னவங்களாம். கடைசி வரைக்கும் தேடினம், வட்டுவாகல் வரை பார்த்துக் கொண்டிருந்தம். இன்று வரை தேடிக்கொண்டுதான் இருக்கிறம்” என்று கூறுகிறார் விஜயேந்திரன் கூறுகிறார்.
-
மகன் ஸ்கூலுக்குப் போறதுக்காக வாங்கின சைக்கிள் இருக்குது. நெடுக இதுலயேதான் திரியிறவர். ஸ்கூல்ல இருந்து, டியூசன், கடை என்று எல்லா இடத்துக்கும் இந்த சைக்கிள்ளதான் போவார். தகப்பனுக்கு ஒரு புது சைக்கிள் வாங்கிக் குடுத்திருக்கு. இருந்தும் மகன் ஓடுன சைக்கிளதான் கொண்டு திரியிறவர். ஓட ஏலாம இருந்த சைக்கிள திருத்தி திருத்தி வச்சிருக்கார்.
தாய் – சந்திரலிங்கம் மகேஸ்வரி (வயது 70)
சுந்தரலிங்கம் பாபு (வயது 27) இடம்பெயர்ந்துகொண்டிருந்தபோது 2009 மார்ச் மாதம் 19ஆம் திகதி உடையார்கட்டு பகுதியில் வைத்து காணாமல்போயுள்ளார்.
-
“இந்த மரத்துக்கு என்ட மகன்ட வயசு இருக்கும். அவன்தான் இந்த மரத்தையும் வச்சவன். இந்த தோட்டத்தில் இருக்கிற தென்னை மரங்கள்ல நிறைய மரங்கள் அவன் வச்சது. அவன் எங்களோட இருக்கும்போதும் உழைச்சுக் குடுத்தான். இப்ப அவன் எங்களிட்ட இல்லாதபோதும் அஞ்சு, பத்து உழைக்கிறதுக்கு வழிவிட்டுட்டுதான் போயிருக்கான். மகளின்ட ஞாபகத்துக்கு ஒன்டுமே இல்ல. அது எங்களுக்கு பெரிய மனவேதனையா இருக்கு தம்பி.”
அம்மா – சந்திரவடிவேல் விஜிதா (வயது 53)
மகன் சந்திரவடிவேல் சந்திரபிராகாஸ் (வயது 20) இடம்பெயர்ந்துகொண்டிருந்தபோது காணாமல்போனதாக தாய் விஜிதா கூறுகிறார்.
மகள் சந்திரவடிவேல் நகுலேஸ்வரி (வயது 27) வட்டுவாகல் பகுதியில் வைத்து காணாமல்போயுள்ளார். -
அவரின்ட நினைவா இந்தத் தாலி இருக்கு. அஞ்சு பிள்ளைகள் இருக்கினம். என்னோடு வாழ்ந்த அந்த நினைவுகள் இருக்கு. நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனா, இந்தத் தாலி ஸ்பெஷல் எனக்கு. நாங்க 1992ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி கல்யாணம் செய்தம். லவ் பண்ணிதான் கல்யாணம் செய்தம். எங்க வீட்டால விருப்பம் இல்ல. 15 வருசத்துக்குப் பிறகுதான் கொடி செய்து தாலி போட்டுக்கிட்டன். 2007 விடத்தல்தீவு அடைக்கலம் மாதா கோவில்ல இருந்த பாதர்கிட்ட ஆசீர்வதிச்சிப் போட்டு தாலிய கட்டிக்கிட்டன். தாலிய கழற்றச் சொல்லி எத்தன பேர் சொல்லியிருக்கினம் தெரியுமா? மனுசன் இல்ல, இருந்தா வந்திருப்பார்தானே, என்னதுக்கு தாலிய போட்டிருக்கனு கேக்குறாங்க? எங்களுக்கு முன்னாடி அவர் சாகலயே. அப்படி என் கண் முன்னாலயே செத்திருந்தா தாலிய கழற்றிரலாம். பிள்ளைகள வளர்க்க எவ்வளவோ கஷ்டம் வந்தும் இந்தத் தாலிய கழற்றி கைமாத்துக்கு காசு வாங்கவே இல்ல. ஏன்னா இதுதான் என் மனுசன்.
மனைவி – அன்ரன் சுகந்தன் அற்புதசீலி (வயது 52)
35 வயதான அன்ரன் சுகந்தன் 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி மீன் பிடிப்பதற்காக தொழிலுக்குச் சென்றிருந்தபோது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டார் என்று அற்புதசீலி கூறுகிறார்.
-
“பேரனுக்கு சோறு தீத்துர வயசு என்று நினைக்கிறன், அப்பதான் சைக்கிள கொண்டுவந்தவர். மகளும் இவரும் பேரனும் சைக்கிள்ளயேதான் எங்கயும் போய்வருவினம்.
ஒவ்வொரு நாளும் பின்னேரம் வீட்டுக்கு வந்த பிறகு சைக்கிள கிணத்தடிக்கு கொண்டுபோய் நல்லா கழுவி துடைச்சுதான் வச்சிருப்பார். அந்த நேரம் தார் ரோட் இல்லதானே, கிரவல் ரோட்தானே. வீட்டுக்கு வரும்போது ஒரே மண்ணாதான் இருக்கும். முழுசா கழிவி துடைச்ச பிறகுதான் வீட்டுக்குள்ளயே வருவார். அப்படித்தான் அந்த சைக்கிள பார்த்தவர்.
சம்பவம் நடந்தும் 2 நாளா ஒன்டும் சொல்லேல்ல. அதற்குப் பிறகுதான் சொன்னவர். அவருக்கு தாங்க முடியேல்ல. கிபீர் அடிச்ச இடத்தில சைக்கிள் இருந்திருக்கு. பார்த்துக் கொண்டிருக்க சைக்கிள் மேல போய் கீழ விழுந்திருக்கு. சைக்கிள் சாவியத்தான் காட்டினார். இதுமட்டும்தான் மிச்சம் இருக்கு என்டு. இப்ப அவரின்ட ஞாபகத்துக்கு இந்த சாவி மட்டும்தான் இருக்கு.”
மாமா – சிவசம்பு தர்மலிங்கம் (வயது 76)
மருமகன் செலம்பரம் புவனேஸ்வரன் (வயது 39) 2009 ஏப்ரல் 31ஆம் திகதி காணாமல்போயுள்ளார்.
-
கடவுள் மேல அவருக்கு பக்தி அதிகம். அவர் வீட்ட இருக்கேக்க செய்த தொழில் பந்தல் தோட்டம். ஒவ்வொரு தடவையும் தொழிலுக்குப் போகும்போதெல்லாம் இந்த இடத்துக்கு வந்து கற்பூரம் கொளுத்திவிட்டு வழிபட்டுவிட்டுத்தான் போவார். அவர்தான் இந்த வேப்ப மரத்தையும் நட்டவர். அவர் போன பிறகு நாங்க இந்த இடத்தில வழிபடுறதயும் நிறுத்திட்டம். வழிபட்டு என்ன பிரயோசனம்?
தந்தை – சிற்றம்பலம் ரகுநாதன் (வயது 72)
16 வயதான ரகுநாதன் கெளசிகன் இறுதிப் போர்க் காலப்பகுதியின்போது விடுதலைப் புலிகள் அமைப்பில் பலவந்தமாக இணைக்கப்பட்டிருக்கிறார். இருந்தபோதிலும் போர் இறுதி நாட்களில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்த நிலையில் தன் கண்முன்னே இராணுவத்திடம் சரணடைந்ததாக சிற்றம்பலம் ரகுநாதன் குறிப்பிடுகிறார்.
-
“இந்தப் படத்த ஒவ்வொரு தடவையும் பார்க்கும்போது அவா எங்கேயோ இருக்கிற மாதிரியே எனக்குத் தோனும். அடிக்கடி அவாவ கனவில காணுவன். ஜன்னல் கம்பி பிடிச்சிக்கொண்டு என்னோட பேசிக்கொண்டிருக்கிற மாதிரி கனவு காணுவன். மரண செர்டிபிகேட் எடுக்கச் சொல்லி சொன்னவங்க, நான் அவங்ககிட்டயும் இததான் சொன்னனான். அவா இருக்கா, எதுக்கு நீங்க அவா செத்திட்டா என்டு சொல்றீங்க?
ஓ.எல் படிச்சிக்கொண்டிருந்தப்போ எடுத்த படம் இது. அன்றைய நாள் பள்ளிக்கூடத்தில ஏதோ விழா நடத்தியிருக்கினம். அதனால ஸ்பெசலா படம் எடுத்திருக்கினம். இப்போ அந்தப் படம்தான் அவா நினைவா என்னிடம் இருக்கு.”தாய் – ரகுநாதன் ராசாத்தி (வயது 52)
16 வயதான (1992.09.11) ரகுநாதன் லாவன்யா இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் தங்கியிருந்தபோது காணாமல்போயுள்ளார்.
-
“எந்த உடுப்பா இருந்தாலும் நான்தான் எடுத்துக் குடுப்பன். அவன் எடுக்க மாட்டான். நான்தான் எடுத்துக் குடுக்கனும். இந்தக் காற்சட்டை துணி வாங்கி தச்சது. ரெடிமேட் போடமாட்டார். காற்சட்டை கீழ கால்ல லோவா இருக்கனும். சேர்ட் என்டா ரெடிமேட்தான் அவருக்கு விருப்பம். இந்தக் காற்சட்டைய சும்மாதான் எடுத்துக் குடுத்தன். கொம்பியூட்டர் கிளாஸ் போய்க்கொண்டிருந்தார். அதுக்குப் போய்வரத்தான் இதை எடுத்துக் குடுத்தன். இடம்பெயர்ந்து போகேக்க, இந்த உடுப்பெல்லாம் வச்சிருந்த சூட்கேஸ விட்டுட்டுப் போயிட்டன். திருப்பி வந்து பார்த்தப்போ வீடே எரிஞ்சி கிடந்தது. சூட்கேஸ கிளரிப் பார்த்தப்போ அவரின்ர காற்சட்ட மடிச்சபடி கிடந்தது. ஷெல் அடி, நெருப்பால எரிஞ்சி போய்க் கிடந்தது. இந்தக் காற்சட்டைய மட்டும் எடுத்து துவைச்சி ஞாபகத்துக்கு எடுத்து வச்சிருக்கன்.
எனக்கு 4 பொம்பளப் பிள்ளைகள், ஒரே மகன், இவர் மட்டும்தான். அவன பார்க்க முதல்லே செத்துருவேனோ என்டு பயமா கிடக்கு.”
தாய் – தவராசா பகீரதி (வயது 54)
2009 மே மாதம் அம்பலவன்பொக்கனை பகுதியில் வைத்து தவராசா தமிழ்ச்செல்வன் (வயது 17) காணாமல்போயுள்ளார்.
-
2007ஆம் ஆண்டு முதலாம் மாதம், இரண்டாம் மாதம் மாதிரிதான் இந்தப் ‘போன்’ வாங்கினவர். இன்னொரு சின்ன போன் ஒன்டும் வச்சிருந்தவர். ஆனா, இந்தப் போன பாட்டுக் கேட்கத்தான் வாங்கினவர். அந்த நேரம் இது விலை கூடின போன். மன்னார் டவுன்லதான் வேண்டினவர். சொனி எரிக்சன் என்டா அப்போ பேமசான போன். நாங்க யாரும் பணம் குடுக்கேல்ல. அவரேதான் உழைச்சி வாங்கினவர். காணாமல்போறதுக்கு முன் இந்தப் போன அவரின்ட கூட்டாளி ஒருத்தர்ட வீட்டதான் சார்ஜ்ஜுக்கு போட்டுட்டு போயிருக்கார். கடைசியில இது மட்டும் எங்களுக்கு மிச்சம் இருக்கு. அந்த வீட்டாக்களும் இத தரல்ல என்டா அவர் நினைவா ஒன்டும் இருந்திருக்காது.
தாய் – குமாரசாமி கணேஸ்வரி (வயது 73)
38 வயதான குமாரசாமி ரத்னசிங்கம் 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதாக தாய் கணேஸ்வரி கூறுகிறார். பியர் அருந்திவிட்டு வருவதாக பைக்கில் நண்பருடன் சென்றவர் வீடு திரும்பவில்லை என்றும் அவரோடு சென்ற நண்பரையும் காணவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
-
அவா பிறக்கும்போதே நடக்கமாட்டா. கால் இரண்டும் துப்பரவா ஏலாது. தவந்து தவந்துதான் திரியுவா. அவாவ கொண்டு திரிஞ்ச வீல்செயார விட்டுட்டு வந்திட்டம். ஆனா, அவாட ஊசி கார்ட பத்திரமா வச்சிருக்கம். ஆவணங்கள் எல்லாத்தையும் பேக்ல போட்டு கடைசி மகனிட்ட குடுத்திருந்தம். அதனால இதுவும் தப்பிச்சது. அவாட நினைவா இதுமட்டும்தான் இருக்கு தம்பி. அஞ்சு வயசு வரைக்கும் அவாட வளர்ச்சி, ஊசி போட்டது பற்றின எல்லா விவரும் இது இருக்கு. நடக்கக்கூட முடியாத புள்ளக்கு என்ன நடந்திருக்குமோ?
தாய் – செல்வராசா சரஸ்வதி (வயது 53)
மகன் செல்வராசா குகசீலன் (பிறந்தது 1991.09.06) மற்றும் மகள் செல்வராசா பூஜிதா (பிறந்தது 1994.05.22) முறையே 2009 மார்ச் 14ஆம் திகதி, 2009 பெப்ரவரி 13ஆம் திகதி காணாமல்போயுள்ளனர்.
-
“சின்ன டயரி ஒன்ட பொக்கட்லயே வச்சிருப்பார். அதுல அவர் எழுதுறதயும் பார்த்திருக்கன். எந்தநேரம் என்டு இல்ல, சும்மா இருக்கிற நேரமெல்லாம் எழுதுவார். மற்ற நேரமெல்லாம் அது பொக்கட்டுலேயேதான் இருக்கும். கவிதை எழுதுறவர் என்டு மட்டும் தெரியும். மற்றபடி நான் ஒன்டும் கேக்குறது இல்ல. அவர் என்னிட்ட சொல்றதும் இல்ல.
ஆசை ஆசையா முதல் முதலா பெத்தெடுத்த ஆம்பளப் பிள்ள... அவருக்குப் பிறகு மூன்டும் பொம்பளப் பிள்ளைக. ஏதாவது பிரச்சினையென்டா, றோட்டுல போகேக்க அடியே என்டு யாராவது கூப்பிட்டா கூட ஏன் என்டு கேக்க யாருமில்ல எங்களுக்கு?
தாய் – ராஜரத்தினம் மகாதேவி (வயது 53)
18 வயதான ராஜரத்தினம் சத்தியரத்தினம் 2009 ஆம் ஆண்டு சுதந்திரபுரம் பகுதியில் வைத்து காணாமல்போயுள்ளார்.
-
“வயல் வேலை முடிஞ்சதும் நெல்ல வித்திட்டு இந்த செயின வாங்கிக் கொடுத்தனாங்கள். முன்ன நாங்கள் அப்படித்தான், நெல்ல குடுத்ததும் கால் பவுண், அரை பவுணுக்கு செயின் வாங்கிடுவம். பிறகு விளைச்சலுக்கு காசு இல்லாதபோது செயன அடகு வச்சிடுவம். இப்படித்தான் எங்கட விவசாயம் நடக்கும். ஆனா, இவனுக்கு வாங்கிக் குடுத்த செயின அப்படியே வச்சிருக்கம். அத வெளியில எடுக்கக்கூட இல்ல. அத எடுத்துப் பார்த்தா பிரஸர்தான் கூடுது. நீங்க வந்து கேட்கவும்தான் எடுத்தன். தங்கச் செயின் கறுப்பாகிப் போயிட்டு.”
தந்தை – காத்தலிங்கம் கணேசபிள்ளை (வயது 58)
2008 டிசம்பர் 20ஆம் திகதி தர்மபுரம் பகுதியில் வைத்து 24 வயதான தனது மகனை கடைசியாகக் கண்டதாக கணேசபிள்ளை கூறுகிறார்.
-
“காப்பு, மோதிரம், கை செயின், கம்மல் எல்லாம் வாங்கிக் குடுத்திருந்தன். இந்தா இங்கதான், புதுக்குடியிருப்புல. திருகோணமலையில இருந்து வந்த ஒருத்தர்தான் கடைய வச்சிருந்தவர். கையில காசு கிடைக்கும்போதெல்லாம் சேர்த்து சேர்த்து மூன்று மகளுக்கும் வீட்டுக்காரிக்கும் வாங்கிக் குடுத்திருக்கன். அப்ப பெரிய விலை இல்லதானே.
அதுல காணாமல்போன மகளின்ட ஞாபகத்துக்கு இந்த கம்மல் மட்டும்தான் இருக்கு. அவா பாவிச்ச அத்தன தங்க சாமானயும் மத்த பிள்ளைங்க பாவிக்கினம். புள்ளயே இல்ல தம்பி, இதெல்லாம் வச்சிருந்து என்ன செய்ய? அவா வாருவான்னு எந்த நம்பிக்கையில இருக்கிறது?
தந்தை வீரமலை நடராசா (வயது 78)
வீரமலை சுலோச்சனா (வயது 22) 2009ஆம் ஆண்டு காணாமல்போயுள்ளார். மகள் எந்த இடத்தில் வைத்து, எப்போது காணாமல்போனார் என்பது தனக்கு நினைவில்லை என்றும், எல்லாம் மறந்துபோய்விட்டது என்றும் நடராசா கூறுகிறார்.
-
15 வயசுல இருந்து சின்ன அண்ணா கட்டின சரம் இது. அவர் விட்டுட்டுப் போன உடுப்புல இது மட்டும்தான் எடுக்க முடிஞ்சது. இடம்பெயர்ந்து போகேக்க நான்தான் இத போர்த்திக் கொண்டிருந்தன். அப்போ எனக்கு 7 வயசு இருக்கும். இத கட்டுக்கொண்டும் திரிஞ்சிருக்கன். அதனால இது மட்டும் மிஞ்சினது.
“பெரிய அண்ணாட ரிசல்ட் சீட் மட்டும்தான் அவரின்ட நினைவா இருக்கு. நிறைய ஆவணங்கள் இருந்தது. இடம்பெயர்ந்து போகேக்க அத்தனையும் இழந்திட்டம். அவரின்ட டயரி ஒன்ட கடைசி வரைக்கும் வச்சிருந்தம். அதையும் கொண்டுவர முடியாம போயிருச்சி.
தங்கை – சாலினி சந்திரசேனன் (வயது 26)
சந்திரசேனன் வினோதன் (1988) மற்றும் சந்திரசேனன் விருந்தன் (1990) மாத்தளன் பகுதியில் வைத்து காணாமல்போயுள்ளனர். அண்ணன்கள் இருந்த இடத்தை இராணுவம் முன்னேறி சுற்றிவளைத்துவிட்டதாக இடம்பெயர்ந்து வந்தவர்கள் கூறினார்கள் என சாலினி கூறினார்.
-
“மகன் கூலி வேலைக்குத்தான் போறவர். அப்படி போய் கிடைத்த காசுலதான் இந்த சேர்ட வாங்கினவர். நாங்கள் பெரிசா எதுவும் வாங்கிக் குடுக்குறதில்ல. அவரே தனக்குத் தேவையானத வாங்கிக்கொள்வார். இவாவோடதான் (மனைவி) எல்லா கதையும். எங்க போனாலும் இவாவோடதான் போவார். இந்த சேர்ட்ட பத்திரமா இவா வச்சிருக்கா, எப்பயாவது வருவான் என்ட நம்பிக்கையில.”
தந்தை – முருகேசு (வயது 72)
முருகேசு பிரபு (வயது 27) 2009ஆம் ஆண்டு பொக்கனை பகுதியில் வைத்து காணாமல்போயுள்ளார். எப்ப அவர் காணாமல்போனார் என்டு எனக்குத் தெரியா. இவாக்கும் தெரியுமோ தெரியேல்ல தம்பி என்கிறார் தந்தை முருகேசு.
-
“தம்பிக்காக (மனோகரன்) அவனுட்டு அண்ணன் (நவரத்னம்) வாங்கிக்குடுத்த கிப்ட்தான் இது. எதுக்கு வாங்குனானு ஞாபகம் இல்ல. எங்கேயோ தூர போய்ட்டு வரும்போது இத வாங்கிட்டுவந்து குடுத்தது மட்டும்தான் ஞாபகம் இருக்கு. அவனும் இத பத்திரமா வச்சிருந்தான். பாருங்க, இப்ப வாங்குன மாதிரி புதுசா இருக்கு.
இந்த சின்ன பேர்ஸ் சின்னவன் (மனோகரன்) வச்சிருந்தது. அவனுட்டு பொக்கட்லயே வச்சிருப்பான். அதுல கொஞ்சம் விபூதியும் இருக்கும். நெத்தியில விபூதி இல்லாத நாள் இல்ல. அதுல ஒரு படமும் இருந்திச்சி. எங்க போனுச்சினு தெரியாது.
அம்பாறையில இருக்கிற பெரிய மக வீட்டுப் போய், அங்க இருக்கிற ஒரு செங்கல் செய்ற இடத்திலதான் ரெண்டு பேரும் வேலை செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. ஒரு நாள் இரவு 11 மணிக்கு வந்து ரெண்டு பேரையும் கொண்டு போய்ட்டாங்க. இதுவரை அவங்கள பத்தி ஒரு தகவலும் இல்ல.”தந்தை – மாரியப்பன் ஆறுமுகம் (வயது – 73)
வேலை முடிந்து வேலைத்தள தங்குமிடத்தில் இருந்தபோது நள்ளிரவு ஜீப்பில் வந்தவர்களால் பலவந்தமாக ஆறுமுகத்தின் மூத்த மகன் நவரத்னம் (வயது 30) மற்றும் இளைய மகன் மனோகரன் (வயது 25) ஆகியோரை கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள்.
-
“அப்ப நான் கல்யாணம் முடிச்சி 6 மாசம் இருக்கும். கர்ப்பமா இருந்தேன். இங்க பெரிசா வேலை இல்லாதனால அம்பாறையில அரிசி மில்ல மெனேஜர் வேலையிருக்கு, போய்ட்டு 10 நாள்ல வந்துடுறேன்னு சொல்லிட்டு போனார், வரவேயில்ல. ஒரு மாசத்துக்குப் பிறகுதான் கடிதம் வந்திச்சி. அங்க ஒரே குழப்பமா இருக்கு, என் மேல கோபப்படவேண்டாம், உங்கள பிரிஞ்சி இருக்கிறது எனக்கு கஷ்டமா இருக்குதுனு ஒரு கடிதம் எழுதி அரிசி கொண்டுவரும் லொறியில குடுத்து அனுப்பியிருந்தாரு. அந்தக் கடிதம்தான் இது. திரும்ப அந்த லொறி வரும்போது கடிதம் ஒன்னு எழுதி அனுப்புங்கனு சொல்லியிருந்தாரு. அப்படியே நானும் கடிதம் ஒன்னு எழுதி அனுப்பினேன். அந்தக் கடிதம் போய் கிடைச்சிச்சானுகூட தெரியாது. திரும்ப அந்த லொரி வந்தப்போ அவர்கிட்ட இருந்து ஒரு கடிதமும் வரல. லொறியில இருந்தவங்க, எல்லாத்துக்கும் டயர் போட்டாங்க (டயர் போட்டு எரித்துவிட்டார்கள்), அவங்களுக்கு வேண்டிய காரியங்கள செய்யுங்கனு சொன்னாங்க. என் பிள்ளைக்காக மட்டும்தான் உசுர புடிச்சிகிட்டு இருந்தேன். இந்தக் கடிதத்த பாருங்க, அவரு என் மேல எவ்வளவு உசுரா இருந்திருக்காருனு.”
மனைவி – வர்ஜினி மரியதாஸ் (வயது – 68)
35 வயதான ஞா. மரியதாஸ் 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அம்பாறையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டார் என்று வர்ஜினி கூறுகிறார்.
-
எனக்கு 6 பிள்ளைகள் தம்பி. ஆறு பேரும் ஆம்பலப் பிள்ளைகள். ஒரு பொம்பலப் பிள்ளை கூட இல்ல. ஆனா அந்தக் குறைய இவன்தான் தீர்த்தான் தம்பி. பொம்பலப்புள்ள செய்யவேண்டிய அத்தனை வேலையையும் செய்வான். சமைப்பான், பாத்திரமெல்லாம் கழுவுவான், உடுப்பெல்லாம் கழுவுவான், வீட்ட சுத்தமா வச்சிக்குவான். எப்படி இருந்தாலும் வீட்டுக்கு ஒரு பொம்பலப் புள்ள ஒன்டு இருக்கனும். இவன் காணாமல்போன பிறகு எல்லாமே நான் மட்டும்தான் செய்தன். அவன்ட குறைய யாரும் தீர்க்கல்ல. அவன்ட நினைவா ஒன்டுமே இல்ல. ஒரு படம் கூட என்னிட்ட இல்ல தம்பி.
தாய் – அந்தனி புளோமினா பீறாடோ (வயது 74)
21 வயதான அந்தனி ஜோன் வெல்வீஸ் பீறாடோ 2008 ஜூலை மாதம் 13ஆம் திகதி தலைமன்னார், கரிசல் பகுதியில் விவசாய பண்ணையொன்றில் வேலை செய்துகொண்டிருந்தபோது காணாமலாக்கப்பட்டுள்ளார் என்று புளோமினா கூறுகிறார். மாலை 5.30 மணியளவில் பண்ணையில் வேலைசெய்துகொண்டிருந்த வயதான ஒருவர் வெற்றிலை வாங்கிவருமாறு மகனிடம் கூற, அதை வாங்க கடைக்குச் சென்றவர் வீடுவந்துசேரவில்லை என்கிறார் புளோமினா.
-
அண்ணன்ட ஞாபகமா எதுவுமே இல்ல. அவர் எனக்காக கட்டின குசினி மட்டும்தான் இருக்கு. அவரின்ட ஞாபகமா அததான் வச்சிருக்கன். 1988ஆம் ஆண்டு என்ட கல்யாணத்துக்காக கட்டினது. அந்த காலத்திலேயே நிறைய செலவு செய்து என்ட கல்யாணத்த வடிவா செய்தவர். என்ட மகளின்ட கல்யாணத்துக்காக இந்த வீட திருத்தினம். இந்தக் குசினிய உடைச்சிட்டு திருத்துவம் என்டு பிள்ளைகள் சொன்னவங்க. நான் விடேல்ல. அண்ணன்ட ஞாபகத்துக்கு இது மட்டும்தானே இருக்கு. இப்பவும் இதுலதான் சமைக்கிறம்.
அக்கா – அந்தனி கொன்சன்ஸி பிகறாடோ (வயது 59)
1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி தலைமன்னார் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையைச் சேர்ந்த கப்பலொன்றில் வந்த கடற்படையினர் தன்னுடைய அண்ணா உட்பட மன்னாரிலிருந்து இந்தியாவுக்கு கடல்வழியாக இடம்பெயர்ந்துகொண்டிருந்தவர்களை கைதுசெய்து கப்பலில் ஏற்றிச்சென்றதாகவும் கைதுசெய்யப்பட்டவர்களில் கடற்படையால் விடுதலை செய்யப்பட்ட இரு முஸ்லிம்களே தங்களிடம் வந்து அண்ணா கைதான சம்பவம் குறித்து கூறியதாகவும் தங்கை அந்தனி கொன்சன்ஸி பிகறாடோ கூறுகிறார்.
-
மகன்ட நினைவா போட்டோக்கள் மட்டும்தான் இருக்கு. நிறைய படங்கள் இருந்தது. ஒவ்வொரு இடத்துக்கும் போய் முறைபாடு செய்றப்போ படங்களையும் குடுத்திட்டு வந்திருக்கன். இப்போ ரெண்டு படங்கள் மட்டும்தான் அவன்ட நினைவா இருக்கு. மகன் கொழும்பு செட்டித்தெருவில கடையொன்டுலதான் வேலைசெய்துகொண்டிருந்தவன். கொழும்புலதான் இருக்கான், அவன் பாதுகாப்பா இருப்பான் என்ட நம்பிக்கையில இருந்தம். நாங்கதான் ஒவ்வொரு இடமா இடம்பெயர்ந்து போய்க்கொண்டிருந்தம். அவர் எப்போ காணாமல்போனார் என்ற எந்த விவரமும் எங்களுக்குத் தெரியாது. நானும் ஒவ்வொரு இடமா போய் கொண்டிருக்கன், எந்தத் தீர்வும் கிடைக்கிற மாதிரி இல்ல.
தந்தை – அந்தனி ஜேசுராசா (வயது 63)
-
அவருடைய ‘பர்த் செட்டிபிகேட்’ மட்டும்தான் இருக்கு.வேற ஒன்டுமே இல்ல. அவரின்ட பட அல்பம், உடுப்புகள் எல்லாம் வச்சிருந்தம். கடைசி நேரத்தில எல்லாத்தையும் தவறவிட்டுட்டம். இத மட்டும்தான் காப்பாத்த முடிந்தது. அவன்ட நினைவு எப்போதுமே என்னைவிட்டுப் போகாது. செத்தாலும் அது மறையாது தம்பி. இருந்தாலும் அவன்ட நினைவா அவன் பாவிச்ச பொருள் ஏதும் இல்லையென்ட வலி எனக்குள்ள இருக்குது தம்பி.
தாய் – ஜெகதீஸ்வரன் சரோஜாதேவி (வயது 62)
1983ஆம் ஆண்டு பிறந்த கேதீஸ்வரன் மதன்ராஜ் 2009 பெப்ரவரி மாதம் தன்னோடு இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்தபோது சனநெரிசலுக்கு மத்தியில் காணாமல்போனதாக தாய் சரோஜாதேவி கூறுகிறார்.
-
“வீட்டு வளவுக்குள்ள கிபீர் அடிச்சவன். அதுக்குப் பிறகுதான் வீட்ட விட்டுட்டு இடம்பெயர்ந்தனாங்கள். எல்லாத்தயும் விட்டுட்டுப் போயிட்டன். வெத்தல பேக்ல ஒரு பாக்கு வெட்டிய மட்டும் போட்டுட்டுப் போனன். பாக்கு வெட்டி மட்டும்தான் இப்ப மிச்சம் இருக்கு. அவன்ட ஐசிய தவிர வேறெதையும் காப்பாற்றிக்கொள்ள முடியேல்ல. இந்த இடத்திலேயே உட்கார்ந்துதான் அத்தனை வேலையையும் செய்வன். ரோட்ல போறாக்கள், வாராக்கள் நல்லா தெரியும், எப்பயாவது ஒரு நாள் இந்த வழியால அம்மா என்டு கூப்பிட்டுக்கொண்டு ஓடி வருவான் என்ட நம்பிக்கையில உட்கார்ந்துகொண்டு இருக்கன் தம்பி.”
தாய் – துளசியம்மா (வயது 76)
பொக்கனை பகுதியில் வைத்து 2009ஆம் ஆண்டு 21 வயதான தன்னுடைய மகன் காணாமல்போனதாகக் கூறும் துளசியம்மா, காணாமல்போன தினம் தனக்கு நினைவில்லை என்று கூறுகிறார். தாங்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்தபோது குடிக்க தண்ணீர் எடுத்துக்கொண்டு வருவதாகக் கூறிச்சென்ற மகன் மீண்டும் வந்துசேரவில்லை என்று துளசியம்மா கூறுகிறார்.
-
“கணவருக்குச் சொந்தமாக இருந்த காணிய வித்துத்தான் இந்த பைக்கை வாங்கினோம். 1993, 94 என்று நினைக்கிறேன். 20 ஆயிரம் குடுத்துதான் வாங்கினோம். அவர் இருக்கும்போது சாப்பாடு செய்து கடைகளுக்கு விற்றுவந்தோம். சைக்கிளில்தான் தூர இடங்களுக்குப் போய் வருவார். அதற்குப் பிறகுதான் ஒரு பைக் வாங்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். பைக் வாங்குவதற்கு அன்று அவர் சென்ற தருணம் இன்று போல் நினைவிருக்கிறது. இப்போது பைக் உடைந்திருக்கிறது. அவரின் ஞாபகத்துக்காக மகன் வைத்திருக்கிறான். எப்படியாவது திருத்தியெடுக்க வேண்டும் என்பதுதான் அவனது எண்ணமாக இருக்கிறது. பைக் நல்லா இருந்தபோது முப்பதாயிரம் தாரேன் பைக்க தாங்கனு ஒருவர் வந்து கேட்டார். எங்களுக்கு உழைத்து கொடுத்த பைக், கணவர் ஓட்டித் திரிந்த பைக்க எப்படி நாங்கள் கொடுப்பது?”
மனைவி – அங்கமுத்து ருக்மணி (வயது 34)
2009 ஜனவரி 13ஆம் திகதி நள்ளிரவு மொனறாகலையில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு வந்த சிவில் உடையணிந்த இனந்தெரியாதோர் விசாரணைக்காக என்று கூறி கணவர் காத்தமுத்து திருச்செல்வத்தை (வயது 43) பலவந்தமாக இழுத்துச் சென்றதாக ருக்மணி கூறுகிறார். அவ்வேளை, பாதையில் ஜீப்பொன்று நிறுத்தப்பட்டிருந்ததாகவும் துப்பாக்கிச் சூடு நடாத்தி எங்களை அச்சுறுத்தியதன் பின்னரே கணவரை அழைத்துச் சென்றதாக அவர் கூறுகிறார்.
-
“இவா பெரியபுள்ளையாகி இருக்கும்போது இவர்தான் இந்தத் தோட வாங்கிக் குடுத்தவர். கிளிநொச்சிக்குப் போய் வாங்கிவந்தவர். எவ்வளவோ சாமான்களையெல்லாம் இழந்து இங்க வந்து சேர்ந்தம். ஒருமாதிரி இத பத்திரமாக கொண்டுவந்து சேர்த்திட்டன். எத்தனையோ கஷ்டங்களையெல்லாம் சந்திச்சாச்சி, இனியும் என்னென்ன வரப்போகுதோ தெரியல்ல. என்ன நடந்தாலும் இத மட்டும் யாருக்கும் குடுக்கமாட்டன். ஏழு பிள்ளைகள்ல இவாதான் மூத்தவ. இவளையே இழந்திட்டு இருக்கிறன் தம்பி.
தாய் – சின்னையாக பூலோகநாயகி (வயது 49)
காணாமல்போகும்போது சின்னையா அனுசாவுக்கு 18 வயதிருக்கும், எப்போது எந்த இடத்தில் வைத்து காணால்போனார் என்ற விவரம் நினைவிலில்லை என்கிறார் பூலோகநாயகி.
-
“மகன்ட 19ஆவது பிறந்தநாளுக்கு வேண்டினது. மல்லாவி டவுனுக்குப் போய் துணி வாங்கி தச்சது. அவருக்குப் பெரிசா இந்தக் கலர் உடுப்புதான் பிடிக்கும் என்று இல்ல. நான் வாங்கிக் குடுத்தா எதையும் உடுத்துவார், அவருக்கு என் மேல அவ்வளவு விருப்பம். இந்தக் கலர் எனக்குப் பிடிச்சிருந்ததால வாங்கிக் குடுத்தனான். ஆசையா உடுத்துனார்.
தாயார் – சந்திரன் சிவமலர் (வயது 52 )
19 வயதான சந்திரன் சஞ்சீவனை 2009 ஜனவரி 10ஆம் திகதி உடையார்கட்டு பகுதியில் கடைசியாக கண்டதாக தாய் சிவமலர் கூறுகிறார். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான ஓமந்தையில் மகனைக் கண்டதாகவும் சிலர் தெரிவித்ததாக சிவமலர் கூறுகிறார்.
-
“படிச்சிட்டு வேலையொன்னு தேடிக்கிட்டு வீட்லதான் இருந்தாரு. அந்த நேரம்தான் சிறுகலயில (மொனறாகலை) இலவசமா இரத்தம் குடுக்கிறத கேள்விப்பட்டுட்டு போய் குடுத்திருக்காரு. இரத்தம் குடுத்ததால இத பரிசா குடுத்திருக்காங்க. நான் அனுமதிக்காம எதையும் அவர் செய்யமாட்டாரு. இந்தப் பரிச எனக்குத் தெரியாம வீட்ல ஒழிச்சிட்டாரு. ஒரு நாள் கபர்ட்ல உள்ள சாமான் எல்லாத்தையும் கழுவிட்டு அடுக்கிவைக்கும்போது இத கண்டுட்டு அவருகிட்ட கேட்டேன். “மகன், யாரு இரத்தம் குடுத்திருக்கா? இது யாருட்டுனு? கேட்டேன். நான்தான் அம்மா, கஷ்டமான ஒருத்தருக்கு இரத்தம் குடுத்தேன்னு சொன்னார். அதுக்குப் பிறகு நான் ஒன்னும் சொல்லல. அதுக்குப் பிறகு எல்லோருக்கும் தெரியிற மாதிரி முன்னுக்கே வச்சிட்டாரு.
தாய் – கணேசன் அமராவதி (வயது 52)
உயர்தர பரீட்சை எழுதிவிட்டு வீட்டில் இருந்த மகன் கணேசன் மோகன்ராஜ் (வயது 21) 2008 நவம்பர் மாதம் 29ஆம் திகதி பகல் கிரிக்கெட் விளையாடச் சென்றவர், அன்றிலிருந்து இன்று வரை வீடு திரும்பவில்லை என்கிறார் தாயார் அமராவதி.
-
மகன் பிறந்தபோது எழுதினது. இத நான் எடுக்கிறதே இல்ல. பார்க்கிற நேரம் எல்லாம் வேதனையா இருக்கும். அதனால, எங்கயாவது கண்ணில படாத இடத்தில வச்சிடுவன். இருந்தாலும் மனம் இடம்கொடுக்காது. அடிக்கடி எடுத்துப் பார்த்துக்குவன். வீட்டில் இருக்குற எவ்வளவோ பொருளயெல்லாம் தூக்கி வீசியிருக்கன், குப்பையில போட்டு எரிச்சிரிக்கன். ஒரு சில நேரம் இதையும் அப்படி வீசத்தோனும். அடுத்த நிமிசமே அவன் முகம்தான் நினைவுக்கு வரும். அவன் நினைவா இது மட்டும்தானே இருக்குனு தோனும்...
தாய் – சிவபாதம் ராஜேஸ்வரி (வயது 65)
இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி இடம்பெயர்ந்துகொண்டிருந்தபோது 20 வயதான சிவபாதம் சிவதர்ஷன் பொக்கனையில் வைத்து காணாமல்போயுள்ளார்.
-
“கிரிக்கெட்னா அவருக்கு உசுரு. எங்கயாவது ஒரு மெச் இருக்குனா, வீட்டுல இருக்கமாட்டார். இன்டைக்கு மட்டும் கடைய பார்த்துக்கனு போயிருவார். இருட்டான பிறகுதான் வீட்டுக்கே வருவார். இந்த கப் கொண்டுவந்த நாள், போய நாள்னு நினைக்கிறேன். ஒரே ஆட்டம் பாட்டம், வெடி போட்டுக்கிட்டுதான் எல்லோரும் வந்தாங்க. இந்த வாசல்ல அத்தன த்ரீவில். டெண்டுல்கர செண்டுல்கர்னுதான் சொல்வாரு. அவருக்கு புடிச்சவர்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு. இந்தியா டீம்தான் அவருக்குப் பிடிக்கும். நான் கூட சொல்வேன், இங்க இருந்துகிட்டு அவங்களுக்கு சப்போர்ட் பண்றீகளேன்னு. இந்த கப்ப பார்க்கும்போது அந்த நாள் அவர் சந்தோசமா சிரிச்சிக்கிட்டு இருந்தத மறக்கமுடியாது.”
மனைவி – ஞானசெல்வம் ஞானமலர் (வயது – 50)
2008 மார்ச் மாதம் முதலாம் திகதி கணவர் வேலுசாமி புண்ணியமூர்த்தி (வயது 32) மொனறாகலை நகரில் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்தபோது ஒருவர் அவருடைய முச்சக்கரவண்டியில் ஏறிச்சென்றார் என்றும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்றும் மனைவி ஞானமலர் கூறுகிறார். மாலை வேளை காட்டுப் பகுதியொன்றில் அவருடைய முச்சக்கரவண்டி இருப்பதாக சிலர் வந்து கூறியபோது அங்கு சென்று பார்த்ததாகவும் அப்போது அந்த இடத்தில் கணவருடைய செருப்பொன்று இருந்ததாகவும் கூறுகிறார்.
-
“ஓ.எல். எக்ஸேமுக்காக வேண்டி இத எடுத்தவர். பள்ளிக்கூடத்தால போர்ம் எல்லாம் நிரப்பிக்குடுத்தவங்க. அவங்கதான் இவர போஸ்ட் ஒபிஸுக்கும் கூட்டிக்கொண்டு போனவங்க. பிறகு போஸ்டல் ஐடிய எடுக்க மகன்தான் போஸ்ட் ஒபிஸுக்குப் போனவர். 2008 மார்கழியென்டு நினைக்கிறன், அப்பதான் ஓ.எல். எக்ஸேம் எழுதினவர். அடுத்த மாதமே ஜனவரி 20 திகதி இடம்பெயரத் தொடங்கிட்டம். அப்படியே இருக்கிறத எடுத்துக்கொண்டு கிளம்பினதுதான், கடைசியா அவரின்ர நினைவா இது மட்டும் மிச்சம் இருக்கு. உடுப்பு சோடி ஒன்டும் பத்திரமா வச்சிருக்கன்.”
தாய் – கணேசன் கதிரமலர் (வயது 61)
பாடசாலை சென்றுகொண்டிருந்த கணேசன் திக்னஸ்குமார் (வயது 16) 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி பொக்கனை பகுதியில் காணாமல்போயுள்ளார். இடம்பெயர்ந்து பொக்கனையில தங்கியிருந்தபோது கடற்கரைக்கு குளிக்கப்போனவர், திரும்பி வரவேயில்ல. இன்றுவரை தேடி அழைந்து திரிகிறேன் என்கிறார் தாய் கதிரமலர்.
-
அவருக்கு நாங்க வாங்கிக் கொடுத்த சங்கிலி ஒன்டு இருக்கு. அவரின்ர நினைவா நான்தான் அத போட்டிருக்கன். ‘கெ’ எழுத்துல ஒரு பென்டன் ஒன்டு இருந்தது. அத தவறவிட்டுட்டன் தம்பி. அவன்ட ரெண்டாவது பர்த்டேக்கு வாங்கிக் கொடுத்தம். பர்த்டேக்கு கிடைச்ச காசகொண்டு இத சாவகச்சேரியிக்குப் போய் இவர் (கணவர்) வாங்கி வந்தார். இடம்பெயர்ந்து போகும்போது கழற்றி எனக்குக் குடுத்தார். அன்டையில இருந்து நான்தான் போட்டிருக்கன். நான்தான் அந்த பென்டன தவறவிட்டுட்டன்.
தாய் – யோகேஸ்வரன் இந்திராதேவி (வயது 57)
20 வயதான மகன் யோகேஸ்வரன் கையூரன் மார்ச் மாதம் 16ஆம் திகதி 2009 பொக்கனையில் வைத்து காணாமல்போயுள்ளார்.
-
“9ஆம் ஆண்டு படிக்கேக்க எடுத்த படம் ஐயா இது. ஏதாவது விசேசம் என்டா மட்டும்தான் படம் எடுப்பம். அப்படி ஒரு நிகழ்வு செய்தும் அவர்ட படம் ஒன்டுகூட எடுக்கேல்ல ஐயா. அவர்ட நினைவா இந்தப் படம் மட்டும்தான் இருக்கு. போராட்டங்களுக்கு கொண்டுபோறதுக்காக வேண்டி இத பெரிசாக்சி வச்சிருக்கன். இப்படியொன்டு நடக்கும் என்டு யாருக்கு ஐயா தெரியும்?
தாய் – குமார் சந்திரா (வயது 62)
பாடசாலை சென்றுகொண்டிருந்த 17 வயதான மகன் இடம்பெயர்ந்து தற்காலிகமாக தங்கியிருந்தபோது 2009 மே மாதம் காணாபோனார் என்றும் எந்த இடத்தில் வைத்து காணாமல்போனார் என்று தனக்கு நினைவில்லை என்றும் தாய் சந்திரா கூறுகிறார்.
-
அவர லவ் பண்ணிதான் கல்யாணம் செய்தன். அப்போ எனக்கு 19 வயசிருக்கும். அவருக்கு 20 வயசு. 6 வருசமா அவரோட வாழ்ந்த அந்த நினைவுகளோட மட்டும்தான் நாட்கள கடத்திக்கொண்டிருக்கன். அந்த நினைவுகள்தான் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கு.
மனைவி – ரூபகாந்தன் லூசியா (வயது 41)
2008ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி இரவு ஏழு மணியளவில் வவுனியாவில் வைத்து முருகையா ரூபகாந்தன் (வயது 25) வெள்ளை வானில் வந்தோரால் காதுக்குள் துப்பாக்கிக்கியை வைத்து அச்சுறுத்தியே தன் முன்னால் வானில் ஏற்றிச் சென்றதாக மனைவி லூசியா கூறுகிறார். கணவரை கடத்திச் சென்றபோது தன் கையில் 3 மாதக் குழந்தையும் ஒன்றரை வயது இன்னுமொரு மகளும், 3 வயது மகனும் தன்னுடன் இருந்ததாக கூறுகிறார்.
-
14 வயசில இந்த சட்டைய எடுத்துக் குடுத்தம். ஊர்க் கோயில் திருவிழாவுக்காக வேண்டி எடுத்தம். முதல்ல கோயிலுக்குத்தான் போட்டுக்கொண்டு போனவ. தான் விரும்பி இந்தக் கலர் சட்டத்தான் வேண்டுமென்டு கேட்டு வாங்கினவ. அவாட அக்கா – இவா வேலை செஞ்ச காசுல வாங்கிக் கொடுத்தவ. இததான் விரும்பி விரும்பி எடுத்து போட்டுக்கொண்டு திரியுவா. அவாட நினைவா வேற எந்தப் பொருளும் இல்ல. 3 சட்ட இருக்கு. இந்த சட்ட அவாக்கு ரொம்ப விருப்பம் என்டதால பத்திரமா வச்சிருக்கன்.
தாய் – நாகராசா தவமணி (வயது 66)
நாகராசா தர்ஷினி (வயது 15) குடும்பத்துடன் இடம்பெயர்ந்துகொண்டிருந்தபோது காணாமல்போயுள்ளார்.
-
“இடம்பெயர்வதற்கு முன்னால இந்தக் கிணத்த கட்டினம். இவர்தான் (கணவர்) மகள்ட கால் அடையாளத்த வைக்கச் சொல்லி சொன்னவர். கால் அடையாளத்த பதிச்சி ஏதோ எழுதிட்டு தனக்குத்தான் இந்தக் கிணறு, இந்த வீட்டோட சேர்த்து இந்தக் கிணத்தையும் எனக்குத்தான் தரவேண்டும் என்று அவ சொன்னத இன்னும் மறக்க முடியல. எதையெண்டாலும் எடுங்க, எல்லாம் உங்களுக்குத்தானே, புள்ளைகளுக்குத்தானே எல்லாமே, நாங்க சுடலைக்கா கொண்டுபோகப்போறோம் என்று நானும் சொன்னது இன்று போல நினைவிருக்கு.”
தாய் – பாலசந்திரம் ராதாராணி (வயது 63)
பாலசந்திரம் கனதூரா (வயது 17) இடம்பெயர்ந்துகொண்டிருந்தபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து காணாமல்போயுள்ளார்.
-
“இடம்பெயர்ந்து போகேக்க மகன் வச்ச மாமரம் மரம் தம்பி இது. நாங்க திரும்பி வரும்போது காச்சிருந்தது. இரண்டு மரம் வச்சவர். அதில ஒரு மரம் பட்டுபோயிட்டு. அவருக்கு இதுகள்தான் வேலை தம்பி. வீட்ட அழகா வச்சிருக்கனும், தோட்டத்த அழகா வச்சிருக்கனும் என்டு வேலை செஞ்சிக்கொண்டிருப்பார். இந்த மரத்தால வீடு பழுதா போகும் என்று ஆக்கள் சொல்லுவினம். என்ட புள்ள வச்சிட்டுப் போனது, அது நிற்கட்டும் என்று நான் சொல்லுவன். அவன் நினைவா என்னிட்ட இது மட்டும்தான் இருக்குது தம்பி.”
தாய் – அருளம்பலம் ஶ்ரீரஞ்சனி (வயது – 65)
1982.10.13ஆம் திகதி பிறந்த அருளம்பலம் பிரபாகரன் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி காணாமல்போயுள்ளார்.
-
இங்கு எங்களுக்கு படிப்பிச்சிக்குடுத்த மாஸ்ரர் ஒருத்தர் இருந்தவர், புங்குடுத்தீவாள். இப்ப ஆள் இல்ல, செத்திட்டார். நான்தான் போய் அவர பார்த்து எழுதினனான் (ஜாதகம்). நான் இதெல்லாம் நம்புறதில்ல. அப்ப நல்லபடியாதான் சொன்னவர். இப்போ போய் சாஸ்திரம் பார்த்தா, அங்க இருக்கா, இங்க இருக்கா என்டு பொய்தான் சொல்வினம். இதுலயெல்லாம் நம்பிக்கையில்ல தம்பி. சொன்னா நீங்க நம்பமாட்டீங்க, முகாம்ல இருக்கும்போது 32 பேரிட்ட சாஸ்திரம் பார்த்தனான். புள்ள எங்கயாவது காசு உழைச்சு குடுத்தா அதுல போய் சாஸ்திரம் பார்ப்பன். இப்பயும் அத்தன விரதமும் பிடிக்கிறன். என்ன நடக்குமோ தெரியல்ல. கெட்டதுல ஒரு நல்லது, மகள்ட நினைவா இந்தக் குறிப்பு மட்டும்தான் என்னிட்ட இருக்கு தம்பி. அவாட ஒரு படம் கூட இல்ல.
இல்லையென்டு சொல்லிட்டா ஒரு புடி சோத்த கிள்ளி வச்சிட்டு இருப்பம் தம்பி. இருக்குதோ இல்லையோ என்டு தெரியாம அவஸ்தபடுறம். செத்திருந்தா பரவாயில்ல, நாங்க பார்த்திருப்பம், அழுதிருப்பம். நான் செத்தாலும் என்ட மனம் நிம்மதியடையாது.சிவஞானம் தவமணி (வயது 65)
வட்டுவாகல் பகுதியில் வைத்து 2009 மே மாதம் 16ஆம் திகதி 21 வயதான சிவஞானம் சத்தியகலா காணாமல்போயுள்ளார்.
-
“அவர் நட்ட நெல்லி மரம் ஒன்டு இருக்கு. ஒரு தடி ஒன்டதான் கொண்டுவந்து நட்டவன், இப்ப மரமா நிற்குது. நல்லா காய்க்கும். ஒரு நாள் பள்ளிக்கூடம் போய்வரும்போது ஒரு தடிய கையில எடுத்துக்கொண்டு வந்தான். என்னடா இது என்டு கேட்டதும், நெல்லி மரத்துத் தடி நட்டா வருமா என்டு கேட்டான். என்னென்டு தெரியேல்ல, கன்றுதான் வைக்கிறாங்க, தடி நட்டா வருமா என்டு தெரியாது என்டு சொன்னன். நட்டுப்போட்டு தண்ணி ஊத்தி ஊத்தி தழைக்கப்பண்ணிட்டான். இடம்பெயர்ந்து, முகாமுக்கும் போய் வந்து பார்த்தப்போ, தடி மரமா வளர்ந்து நின்டது. அவன்ட அடையாளத்துக்கு இந்த நெல்லி மரம் மட்டும் இருக்கு.”
தாய் – காளிமுத்து அழகம்மா (வயது 63)
காலிமுத்து நாகேந்திரன் (வயது 17), 2009 பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி பச்சைபுல்மோட்டைப் பகுதியில் வைத்து காணாமல்போயுள்ளார்.
-
இவர்தான் பெங்குக்குப் போய் இந்தப் புத்தகத்த திறந்தவர். ஆயிரம் ரூபா போட்டுத்தான் புத்தகத்த திறந்தவர். வீட்டுத்திட்டத்துக்காகவோ எதுக்கென்று சரியா ஞாபகம் இல்ல. இருபத்தி ஐயாயிரம் காசு இந்த எக்கவுன்ட்ல போட்டாங்க. அரசாங்கம் என்டுதான் நினைக்கிறன். இடையில நாங்களும் கையில இருக்கிற காச போட்டம். பிறகு அவசரத்துக்கும் எடுத்தம். இப்ப இதுல பெரிசா ஒன்டும் இல்ல, ஒரு ஆயிரம் ரூபாவோ ரெண்டாயிரம் ரூபாவோ கிடக்கு. அவரின்ட ஞாபகமா இது இருக்கு. அவரின்ட ‘சைன்’ வேற எதிலயும் இல்ல. இதுல மட்டும்தான் கிடக்கு. எழுத்தும் இல்ல. அதனால இத பாதுகாப்பா வச்சிருக்கன்.
மனைவி – சச்சிதானந்தம் பத்மரஞ்சனி (வயது 46)
முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளியான சச்சிதானந்தம் மனைவு பத்மரஞ்சனி மற்றும் பிள்ளைகள் இருவர் முன்னிலையில் இராணுவத்திடம் சரணடைந்துள்ளார்.
-
“தெஹிவளையில் இருக்கேக்க மகன் இங்கிலீஸ் கிளாஸ் போனவர். வெளியில போறதுக்காக கிளாஸ் போனவர். கிளாஸ் கொண்டுபோன கொப்பிதான் இது. நல்லா படிப்பான், அழகா எழுதுவான். பெரியண்ணாவின் மகளும் இப்படித்தான் எழுதுவா. இது தவிர அவன் நினைவா எதுவுமே என்னிட்ட இல்ல. கொழும்புல வெள்ளவத்தையில வச்சிதான் என்ட மகன கடத்தினவங்க. இப்ப எங்க இருக்கிறாரோ தெரியலயே?”
தாய் – பாலசந்திரன் தனலெட்சுமி (வயது – 65)
37 வயதான பாலசந்திரன் காண்டீபன் கொழும்பில் புடவைக் கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது 2007ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளார்.
-
“அவர்ட நினைவா இரண்டு பிள்ளைகள்தான் இருக்கினம். அவர் காணாமல்போகும்போது ரெண்டு பேருக்கும் 5 வயசும் 6 வயசும்தான் இருக்கும். எனக்கு அப்போ 28 வயசு.
நீண்டகாலமா மழை பெய்யாத காலமது. விவசாயம் மட்டும்தான் செய்து வாழ்க்கைய நடத்திக்கொண்டிருந்தம். மழை இல்லாதனால வவுனியாவுல இருந்து சைக்கிள்ல மண்ணெண்ணை ஏத்தி சாவகச்சேரி வரை எடுத்துக்கொண்டு போய் வித்திட்டு வருவார். இவரோட நிறைய பேர் போவினம். அவர் காணாமல்போன பிறகு இந்தப் பக்கமா சைக்கிள்ள யாராவது போனா பிள்ளைகள் ஓடுங்கள், அப்பா போறார் அப்பா போறார் என்டு, பிறகு எங்கட அப்பா இல்லையம்மா என்டு ஏங்கி ஏங்கி அழுங்கள். அழுது அழுது காய்ச்சலே வந்திடும். இப்படியேதான் என்ட பிள்ளைகள வளர்த்தெடுத்தன்.
மனைவி – வரதராசா மாலவி (வயது 64)
1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி மண்ணெண்ணை விற்பனை செய்வதற்காக வீட்டிலிருந்து சென்ற வரதராசா (வயது 29) இன்றுவரை வீடுவந்துசேரவில்லை என்று கூறுகிறார் மாலவி.
-
“சித்தி வீட்ல இருந்துதான் ஸ்கூலுக்குப் போனேன். அப்ப இருந்து நானும் இவரும் லவ் பண்ணத் தொடங்கினோம். எனக்கு 19 வயசு இருக்கும், அவருக்கு 21ன்னு இருக்கும், கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவருட வீட்டாக்களும் நாமளும் சொந்தக்காரங்கனால எந்த பிரச்சினையும் வரல. கல்யாணம் முடிஞ்சி 2 மாசத்துக்குப் பிறகுதான் ரெஜிஸ்டர் பண்ணோம். 6 பேரு இருக்கும், ரெஜிஸ்டார் ஒபிசுக்குப் போய்தான் ரெஜிஸ்டர் பண்ணோம். அந்த ரெஜிஸ்டார் கொப்பிதான் இது. கொப்பி இருக்கு, அவரு இல்ல. நான் வெளிநாட்டுக்குப் போயிருந்தேன். அவர் காணாமல்போனப்போ நான் போய் 6 மாசம் இருக்கும். அப்ப என் ஒரு மகனுக்கு 3 வயசும், மத்தவருக்கு 6 வயசும் இருக்கும். ஒரு மாசம் கழிச்சிதான் அவரு காணாமல்போன விசயத்தையே எனக்கு சொன்னாங்க. இப்ப அவரு நினைவா இது மட்டும்தான் இருக்கு. கிழிஞ்சி போயிருமுனு பயத்துலதான் லெமினேட் பண்ணி வச்சிருக்கேன்.
மனைவி – பெரியசாமி புத்திரன் லோகம்மா (வயது 44)
2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லோகம்மாவின் கணவர் கந்தசாமி ஜெகதீஸன் (வயது 38) காணாமல்போயுள்ளார்.
-
“மகன் பருத்தித்துறையில இருந்து படிச்சவர். அங்க எங்களுக்குத் தெரிஞ்ச சொந்தக்காரர் வீட்ல தங்கியிருந்துதான் படிச்சவர். மகன் காணாமல்போன பிறகு நான் அங்க போய்தான் இத எல்லாத்தயும் இங்க கொண்டு வந்தன். இதுல இந்த டையும் இருந்தது. இந்த டையும் சப்பாத்தொன்றும் போட்டுக்கொண்டு வந்த அந்த நாள் இன்னும் நினைவிருக்கு. டொக்டராக வேண்டும் என்டுதான் யாழ்ப்பாணம் போய் படிச்சவர். இப்ப அவரின்ட நண்பர்கள் டொக்டர்களாக இருக்கினம். அவங்களே சொன்னவங்க, எங்களை விட உங்கட மகன் நல்லா படிப்பான் என்டு. அவர் இருந்திருந்தா இப்ப எனக்கு இருக்கிற நோய்க்கு வைத்தியம் பார்த்திருப்பான்தானே தம்பி...”
தாய் – சூசை விக்டோரியா (வயது 73)
21 வயதான மகன் ஜேசுராசா ஜெகராஜ் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி காணாமலாக்கப்பட்டுள்ளார் என்று கூறுகிறார் தாய் விக்டோரியா. மகளையும் அழைத்துக்கொண்டு சென்றதால் மகனை தவறவிட்டுவிட்டதாகவும், அவனை பஸ்ஸில் ஏற்றிச்சென்றதை நேரில் கண்டவர்கள் தன்னிடம் தெரிவித்தார்கள் என்றும் விக்டோரியா கூறுகிறார்.
-
அவாட பிறந்த நாளுக்கு வாங்கி உடுப்பு இது. ஆனா, ஒரு தடவை கூட இத அவா உடுத்தல. தகப்பன் முன்ன அடிக்க வவுனியா போய் வாரவர். தனக்கு இப்படியொரு உடுப்பு வேணுமென்டு அவாதான் இவருக்கு சொல்லியிருக்கா. அந்த நேரம் தொடர்ச்சியா இடம்பெயர்ந்து போனதால பர்த்டே கொண்டாட முடியேல்ல. எல்லா இடத்துக்கும் கொண்டு திரிஞ்சா. ஆசையா வேண்டி வரச்சொன்னவ இத கடைசி வரைக்கும் உடுத்தவேயில்ல. அப்படி கலர் மங்காம புதுசு மாதிரி இருக்குது. இதோடதான் வாழ்ந்துகொண்டிருக்கிறம்.
தாய் – தங்கவேல் வளர்மதி (54வயது)
தங்கவேல் கீர்த்தனா (14 வயது) 27ஆம் திகதி பெப்ரவரி 2009 பொக்கனையில் வைத்து காணாமல்போயுள்ளார்.
-
“விசேச நாளென்டு இல்ல, சும்மா கடைக்குப் போயிருந்த நேரம் இந்த ரீசேர்ட வாங்கிக் குடுத்தனான். அவாதான் விருப்பப்பட்டு கேட்டவ. எனக்கு பெரிசா பிடிக்கேல்ல. இருந்தாலும் புள்ள ஆசைப்பட்டு கேக்குறாள்தானே என்டு வேண்டிக் குடுத்தனான். இப்ப அவா ஆசைப்பட்டுக் கேட்ட ரீசேரட் இருக்கு, என்ட புள்ளதான் இல்ல. புள்ளய பாதுகாப்பாதான் கூட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்தன். எப்படி தவறினா என்டு தெரியாது தம்பி, ஷெல் அடி. எந்தப் பக்கம் ஓடுறதென்டு தெரியாது. ஆமி கட்டுப்பாட்டுக்குள்ள புள்ளய கண்டதாக சொன்னவங்க. எல்லா இடத்துக்கும் போய் அலைஞ்சாச்சி. இனி எங்க போக?”
தாய் – வேலு மேனகாதேவி (வயது 65)
வேலு துஷ்யந்தி (வயது 25) 2009ஆம் ஆண்டு காணாமல்போயுள்ளார்.
-
அவர்ட பிறந்த நாளுக்கு லவ்வர் எடுத்துக் குடுத்த ஷேர்ட் இது. இதையேதான் அவன் விரும்பி போடுறவன். அவாட பெயர் எனக்கு ஞாபகமில்ல. வடிவான பெயர். அவா வேண்டிக் குடுத்த ஷேர்ட், வடிவா இருக்கா அம்மா என்டு கேப்பான். ஓ... அம்மா வேண்டிக் குடுக்கிற ஷேர்ட்ட விட நல்லாத்தான் இருக்குதுனு பகிடி பண்ணுவன். கோயில் (தேவாலயம்) பூசைக்கெல்லாம் இந்த ஷேர்ட்ட மட்டும்தான் போடுவான். நான் நிறைய உடுப்பு வாங்கிக் குடுத்திருக்கன். ஆனாலும், இந்த ஷேர்ட் மேல அவனுக்கு அவ்வளவு விருப்பம். அவாவுக்காகவும் நிறைய கிப்ட் வேண்டியிருக்கான். லிப்ஸ்டிக், செயின், கியுடெக்ஸ் (Nail Polish), கிப்ட் எல்லாம் வேண்டி வச்சிருக்கான். ஒன்டும் அவாவுக்கு குடுக்கேல்ல. ஏன் என்டு தெரியேல்ல. எல்லாமே வேண்டி வச்சிருக்கு என்ட புள்ள. அவன் காணாமல்போன நாளன்டு அவா வீட்டுக்கு வந்து அழுதது இன்றும் நினைவிருக்கு.
தாய் – மனுவல் உதயசந்திரா (வயது 67)
2008 நவம்பர் மாதம் 11ஆம் திகதி அன்ரன் செனிஸ்டர் பீறாடோவை (வயது 24) கடற்படையினர் கடத்திச் சென்றதை பலர் கண்டுள்ளனர் என்று தாய் உதயசந்திரா கூறுகிறார். “மகனுடைய பைக்கை அவரே ஓடிக்கொண்டு போயிருக்கார், வெறும் மேலோடு. நேவிக்காரன்தான் கூட்டிக்கொண்டு போயிருக்கான். அவன் கூட்டிக் கொண்டு போன ரோட்ல மூன்டு பொயின்ட் (Navy Check Point) இருக்கு. அத தாண்டாம எப்படியும் போகமுடியாது. அப்படியென்டா மகன எங்க கூட்டிட்டுப் போயிருப்பாங்க? தெளிவா தெரிந்தும் ஒன்டும் செய்ய முடியேல்ல என்கிறார் உதயசந்திரா.
உலகில் அதிகமாக காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், பல ஆயிரம் பேர் காணாமலாக்கப்பட்டிருக்கின்ற போதிலும் முறையான ஆவணங்களூடான பதிவுகள் எதுவும் இல்லை. தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இடம்பெற்ற மோதல்களின் போதும், 30 ஆண்டுகால போரின்போதும், அதன் பின்னரான காலப்பகுதியிலும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமலாக்கப்பட்டார்கள். இதுவரை காலமும் அரசாங்கத்தினால் பல்வேறு ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்ட போதிலும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எந்தவித நீதியும் கிடைக்கப்பெறவில்லை.
2009ஆம் ஆண்டு போர் நிறைவுற்றதன் பின்னர் தங்களுடைய அன்புக்குரியவர்களை தேடியலைந்த 200இற்கும் மேற்பட்ட உறவுகள் நீதி கிடைக்கப்பெறாத நிலையில் - அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமலேயே உயிரிழந்துள்ளார்கள். அவர்களுடைய நீதிக்கான போராட்டமும் அத்தோடு முற்றுபெறுகிறது. அதேபோல, நூற்றுக்கணக்கான போராட்டங்களில் பங்கேற்று, காணாமலாக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி கிடைக்க அதிகாரத்தில் உள்ளவர்கள் மீது அழுத்தம் கொடுத்து, தற்போது போராட்டத்தை தொடர முடியாத நிலையில் பொருளாதார நெடிக்கடிக்கு, நோய், குடும்ப சூழ்நிலை, புலனாய்வாளர்களின் கெடுபிடி காரணமாக பல நூற்றுக்கணக்கானோர் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள்.
எனவே, அவர்களையும் அவர்களின் நீதிக்கான போராட்டத்தையும் தொடர்ந்து மேற்கொள்ளவும் காணாமலாக்கப்பட்டவர்களின் நினைவுகளை உயிர்ப்போடு வைத்திருக்கவும் மெய்நிகர் நினைவகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, தற்போது நாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கும், எதிர்காலத்தில் கொண்டுவரப்படவிருக்கும் சட்டங்களால் மக்கள் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் மற்றும் நினைவுகூருவதற்கான சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலை மோசமடைந்தால் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை தொடர முடியாத நிலை கூட உருவாகலாம். அவ்வாறான நிலையில், இந்த மெய்நிகர் தளம் அவர்களின் குரலுக்கும் அவர்களை நினைவில் கொள்வதற்கும், போராட்டத்தை தொடரவும் வாய்ப்பை வழங்குவதோடு உண்மை மற்றும் நீதியை அடைந்துகொள்வதற்கான அவர்களது போராட்டத்திற்கு உறுதுணையாகவும் இருக்கிறது.