படம் | SOALSHNE 

இந்தியாவில் மிகவும் பழங்காலத்திலிருந்தே குருகுலக் கல்வி முறையில் கற்பிக்கப்பட்டு வருகின்ற யோகாவானது மனதினைக் கட்டுப்படுத்தும் ஒரு முறையாகவும் பேணப்பட்டு வந்திருக்கின்றது. மனதினைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியும், மன ஆற்றலால் உண்டாகின்ற பல்வேறுபட்ட சாதனைகளும், மனம், உடல், செயலுணர்வுகளின் கட்டுப்பாடு, மற்றும் இயற்கைக்கும் மனிதனுக்குமான ஒத்திசைவு முதலியனவும் இணைந்தவொரு உருவாக்கமாக யோகதத்துவம் உள்ளது. இதன் விளைவாக யோக தத்துவத்தினை “மன விஞ்ஞானம்” (Science of mind) எனச் சுட்டித்துக் கூறுவர்.

யோகம் என்பது சேர்தல், இணைதல் அல்லது பிரிதல் என இருநிலையில் பொருள் கொள்ளப்படுவதுண்டு. பிரிதல் என்பது உயிர்களின் துன்பத்திற்கு காரணமாக விளங்கக் கூடியதான உலகத் தொடர்புகளிலிருந்து நீங்குதலாகும். இணைதல், சேர்தல் என்பது உலகத் தொடர்புகளிலிருந்து நீங்கிய ஆன்மாக்கள் பரம்பொருளுடன் ஒன்றித்தலைக் குறிக்கின்றது. சீவனும் பரம்பொருளும் இணைதலாகிய ஆன்மீகப் புணர்ப்பினை (Spiritual Union) யோகமெனும் சொல் சுட்டித்து நிற்பதாக ஞாக்யவல்கியர் எடுத்தாள்கின்றார். துன்பத்திற்குப் பிரிவு அடிப்படை என்றும், அத்துன்பத்தினை நீக்க வேண்டுமாயின் ஆன்மீகப் புணர்ப்பு அடைதல் வேண்டுமென்றும் தத்துவ வாதிகள் எடுத்துரைப்பர்.

இந்துசமய இலக்கியங்களில் யோகம் பற்றிய சிந்தனைகள் பரவலாக இடம்பெற்றிருந்தாலும் பதஞ்சலி முனிவரின் யோகசூத்திரம் இதனை விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகின்றது. மனம், உடல், மூச்சு ஆகிய அப்பியாசங்களினாலும் தியான முறைமைகளினாலும் கிடைத்தற்கரிய பல்வேறு ஆற்றல்களைப் பெற்றிருந்தாலும் இறுதியில் அடையப்பெறுகின்ற மெய்யுணர்தல் என்பது பற்றியதான சிந்தனையே யோகசூத்திரத்தின் அடிப்படைப் பொருள்மரபாக உள்ளது. இங்கு யோகம் என்பது “ஸித்த விருத்தி நிரோதக” என்று எடுத்தாளப்பட்டிருக்கின்றது. “Yoga is restraining the mind – stuff (-chitta) from taking various forms (-Vrittis)  என்று சுவாமி விவேகானந்தர் இதனை மொழிபெயர்த்திருக்கக் காணலாம். ஆகவே, பல்வேறு உருவங்களை எடுக்கும் சித்தத்தினைக் கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்துதலே யோகம் எனவும், மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரண விருத்தி, தூய்மை முதலியவற்றை மேம்படுத்துவதற்குரிய வழிகள் யோக தத்துவத்தினூடாக விளக்கப்பட்டுள்ளன என்பதனையும் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்தியவியலாளர்களின் கருத்துப்படி இந்நெறி வேதகாலத்திற்கும் முந்தியதாகும். இந்திய நாகரிகத்தின் தொன்மையை சிந்துவெளி காலத்தை மையமாகக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் விளக்குவர். சிந்துவெளியில் இடம்பெற்ற ஆராய்ச்சிகள் மூலம் கிடைக்கப்பெற்ற யோகிபோன்று அமர்ந்திருக்கும் தொல்பொருள் வடிவம் இதன் தொன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்திய தத்துவங்களின் விரிவாக்கத்திற்கு அடித்தளமாக அமைகின்ற உபநிடதங்களாலும், சிறந்த உளவளத் துணை நூலாக விளங்குகின்ற பகவத்கீதையாலும் மனதினைக் கட்டுப்படுத்தும் யோக நுட்பங்கள் கற்றுத்தரப்படுகின்றன.

யோக தத்துவத்தில் மந்திர யோகம், இலய யோகம், ஹட யோகம், இராஜ யோகம் முதலியன முதன்மைக்குரியனவாகப் பேசப்படுகின்றன. இராஜயோக முறைமைகள் யோகசூத்திரத்தில் விரிவாக்கப்பட்டுள்ளன. இலயயோகம் என்பது மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை படிமுறையில் ஆறாதாரங்களினூடாக சித்தத்தின் உச்சியிலிருக்கும் சிவத்தோடு இணைப்பது என்பர். நம்பிக்கை மருத்துவம் என சுட்டப்படுவதும் நரம்பு, மனம் முதலியவற்றால் பாதிப்புற்றவர்க்கு மந்திர சிகிச்சை அளிப்பதுமே மந்திர யோகத்தில் உள்ளடங்கும். உடலியற் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும்  அப்பியாச முறைமையே ஹடயோகம் ஆகும். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் அட்டாங்க யோகமுறைமைகளும் யோகதத்துவத்தில் முதன்மை பெறுகின்றன.

“இயம நியமமே எண்ணிலா ஆதனம்

நயமுறு பிராணாயாமம் ப்ரத்தியாகரஞ்

சயமிகு தாரணை தியானஞ் சமாதி

அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே”

என்கிறது திருமந்திரம். பதஞ்சலியும்,

“யம நியமாஸன பிராணயாம பிரத்யாஹார

தாரணா த்யான ஸமாதயோ அஷ்டாவங்கானி”

என எடுத்தாள்கின்றார். பகவத் கீதை கர்ம யோகம், பக்தி யோகம், இராஜயோகம், ஞான யோகம் முதலிய நால்வகை யோகங்களை எடுத்தாள்கின்றது. யோகத்தின் அங்கங்களாகச் சொல்லப்பட்டனவற்றை அப்பியாசம் செய்து மனமாசுகளை அகற்றுகின்ற போது, அங்கே மெய்மையின் விழிப்புணர்வை வளர்க்கின்ற ஆன்மா சார்ந்த பிரகாசம் மேலெழும் என்கிறது பதஞ்சலி சூத்திரம்.

இந்து சமயப் புலத்தில் யோகம் என்பது ஒரு தத்துவ முறையாக விருத்தியுற்றிருப்பினும், அது ஒரு கலையாக மக்களின் வாழ்வியலோடு ஒன்றித்துவிட்டமை சிறப்பான அம்சமாகும். தற்காலத்தில் விருத்தியுற்றிருக்கின்ற அறிவியற் சிந்தனைகளின் ஊற்றுக்கள் பலவும் இந்துசமய இலக்கியங்களில் காணப்படுகின்றன. அறிவியலின் அதியுன்னத வளர்ச்சியும், தொழினுட்ப சாதனங்களின் அதிகரித்த பாவனைகளும் மனித இனத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்கின்றன எனக் கூறப்பட்டாலும் அவை வாழ்வின் இருப்புக்கும் மேம்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக அல்லது சவால்களாகவேயுள்ளன. நிலையான அபிவிருத்தி என்ற தோரணையில் பல கைங்கரியங்கள் பொதுநல நோக்கில் அல்லது சிலரின் சுயநல அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்டாலும் விழுமியங்களற்ற, உடலுள ரீதியாக நோயுற்றிருக்கின்ற, பிரித்தாளும் செயற்பாங்குகளான முரண்பாடு, போட்டி முதலியன வாழ்வாகிவிட்ட சமூகத்தில் அவை எத்துணை பொருத்தப்பாடுடையதாக அமையும்?

பழைமைகளை இழந்துவிட்டு புதுமைகளைத் தேடி புதுமனிதர்களாக வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றான். சமயங்கள் மனித வாழ்வினை செப்பனிடுவதற்காகவே தோன்றின. ஆனால், சமயத்தையும் மனிதன் தோற்கடித்துவிட்டான் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனாலும் மனமும் உடலும் அமைதியற்று, நிம்மதியிழந்து, களைப்படைந்து, நோயுற்று துன்பமடைகின்ற காலத்தில் சமயங்கள் காட்டிய பாதைகளைத் தேடும் மனிதர்களாக மாற்றமடைகின்ற துன்பமான சூழலையும் அவதானிக்க முடிகின்றது.

உண்மையில், இந்துசமயப் புலத்தில் தோன்றி வாழ்ந்து வாழ்வினுடைய அர்த்தங்களை அறிந்து கொண்ட முனிவர்கள், ஞானிகள், சித்தர்கள், நாயன்மார்கள் என்போர் உடலுள மேம்பாட்டிற்கான உபாயங்களை அன்றைய காலத்திலேயே இன்றைய அறிவியலாளர்கள் கண்டு வியக்கும் வகையில் வகுத்திருக்கிறார்கள். அவ்வாறு வகுக்கப்பட்டவற்றில் இன்று உலகளவில் பிரபலமும் முக்கியத்துவமும் பெற்றிருக்கின்ற யோகாவும் ஒன்றாகும்.

யோகாவை உடல் பயிற்சி சார்ந்த ஒன்றாகச் சிலர் இனங்காண்கின்றனர். வேறு சிலர், ஆன்மீக சக்தியை விருத்தி செய்வதற்கும், வாழ்வின் குறியிலக்கினை அடைவதற்குமான வழியாகக் கருதுகின்றனர். இன்னும் சிலர் வேறுபட்ட வடிவங்களில் அதனை அணுகுகின்றனர். எவ்வாறாயினும் யோகத்தின் முதற்படி சுயகட்டுப்பாடு (இயமம்) ஆகும். அது அகிம்சை, உண்மை, நேர்மை, பால்சார்ந்த இச்சைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உடைமைத் தனமின்மை என்கின்ற ஐந்து உறுதி மொழிகளை தன்னுள் கொண்டுள்ளதாகும். இவ்வைந்து உறுதிமொழிகளும் ஒரு மகா விரதத்தை அளிக்கின்றது. அது சமுதாயப் பிரிவு, இடம், காலம் என்பவற்றைக் கருதாமல் ஞானத்தின் பலநிலைகளைக் கடந்து நீட்சியடைகின்றதாகும்.

யோகாவைப் பொறுத்த வரை எல்லாமும் சாதனமாகி விடும். யோகாவின் குறிக்கோள் அதனை அப்பியாசம் செய்பவர்களை விழிப்புணர்வு உடையவராக்குவதேயாகும். உள்ளத்தால் ஏற்படும் இவ்வுணர்வு உடலையும் மாற்றத்திற்கு உட்படுத்துகிறது. உடலும் மனமும் மாற்றத்திற்கு உள்ளாகின்ற போது பூரண மனிதனாக அவனும் மாற்றமடைகிறான். இம்மாற்றம் அறியாமையைக் களைவதனால் மட்டுமே ஏற்படுகிறது. தடுமாற்றமில்லாத பயிற்சியின் மூலம் எது உண்மை எது மாயை என்பதைப் பிரித்தறிவதால் அறியாமை சிதறடிக்கப்பட்டுவிடும் என்கிறார் ஓஷோ. விவேகத்தை இடைவிடாது பயில்வதே அறியாமையை ஒழிப்பதற்கான வழியாகும் என்பது பதஞ்சலி முனிவரின் சிந்தனை. இந்த விவேகமானது யோக அப்பியாசத்தினால் பெற்றுக்கொள்ளக் கூடியது. அறியாமை அகன்று, மனமாசு நீங்கி, உள்ளம் தூய்மையடைந்த நிலையில் புதிய பண்பாட்டுருவாக்கத்திற்கு யோக அப்பியாசங்கள் வழிசமைக்கும்.

உலகத்திலே அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்கு ஒரு வழிகாட்டியாக இருப்பது ஹத யோகா ஆகும். ஏனெனில், உலக சமாதானமானது ஒவ்வொரு தனிமனிதனுள்ளும் நிலவும் சமாதானத்திலேயே தங்கியுள்ளது. அதாவது, ஒவ்வொருவரும் தத்தமது உள்ளத்தில் சூழ்ந்திருக்கும் இருளாகிய கோபம், வெறுப்பு, அவா, நிலையற்ற பொருட்களின் மீதான பேராசை, மற்றும் அறியாமை என்பவற்றை அகற்றினாலன்றி உலகத்திலே சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எதுவுமே வெற்றியளிக்கப்படமாட்டா. இவ்விருளை யோக அப்பியாசம் செய்வதன் மூலமே நீக்கலாம் என்பர் பெரியோர்.

மனம் மற்றும் உடல் நலத்தைப் பராமரித்துப் பேணுவதற்கான அல்லது திடமாகத் தக்க வைத்திருப்பதற்கான தேர்ந்த திறனாகவும், உபாயமாகவும் யோகம் உள்ளது. அத்துடன், மனதிற்கும் உடலிற்கும் இடையிலான உறவுகளினுடைய ஆழமான அறிவு, அடிப்படையான பயிற்சி ஆகியனவற்றைப் பெறுவதற்கான மனோ உடலியல் முறைமை சார்ந்த ஒன்றாகவும் இது உள்ளது. யோக மகரிஷி கோபாலானந்தர்,

  • முறையான பயிற்சி
  • முறையாக உடலைத் தளர்த்துதல்
  • முறையான மூச்சுப் பயிற்சி
  • முறையான உணவு
  • நல்ல சிந்தனையும் தியானமும்

என்றவாறு யோக தத்துவத்தினை ஐந்து பிரிவுகளாக விளக்குகின்றார். இதன்படி யோகத்தில் முறையான பயிற்சி அவசியம். இத்தகைய பயிற்சியினை நல்ல குருவிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின் குருவின்றி அப்பியாசம் செய்வதனை வழக்கமாக்கிக் கொள்ளலாம். இங்கு அப்பியாசம் குலவிருது, அப்பியாச வித்தைக்கு அழிவில்லை என்ற முதியோர் உரைகள் நினைவில் கொள்ளத்தக்கன.

யோகா தன்னை உணரவைக்கும் கலை. ஒரு மனிதனை நோயிலிருந்து முழுவதுமாக குணமடையச் செய்து முழுமைத்துவம் உடையவனாக ஆக்கும் அற்புதக் கருவி சாதனமே யோகம், என்ற நிலையில் யோகாவின் சாதனைகளும் முக்கியத்துவமும் இன்று உணரப்படுகின்றது. யோகாவைப் பற்றி முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது விழிப்புணர்வு மக்களிடையே அமைதியாக அதேவேளை மிக வேகமாக பரவிவருகிறது. அதன் முக்கியத்துவம் இந்து சமய, தத்துவ நிலைகள் கடந்து உலகம் தழுவிய நிலையில் உணரப்படுகின்றது. இந்த உணர்திறனை மென்மேலும் அழுத்தம் பெறச் செய்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் வகிபங்கு இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தலையாய பணியாக அமைந்திருக்கின்றது.

வருடத்திலுள்ள ஒவ்வொரு நாட்களையும் நைமித்ய (விசேட) நாட்களாக உலகம் நினைவு கூர்ந்து வருகின்றது. இந்த விசேட நாட்கள் அவற்றைப் பேணுவதன் முக்கியத்துவத்தினையும் வலியுறுத்தி நிற்கின்றது. இதன் புரிதல்களும், ஞாபகப்படுத்தல்களும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளாகவே அமைகின்றன. இதற்கு உடலாகிய புறமும், மனமாகிய அகமும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். மனம் வலுவுற்று உடல் வலுவற்று, மாறாக மனம் வலுவற்று உடல் வலுவுற்றுக் காணப்பட்டால் அது ஆரோக்கியமான வாழ்வுக்கு உகந்தது அல்ல. இந்த அவசியத்தை உணர்ந்து கொண்ட உலகம், உடலுள நல மேம்பாட்டுப் பேணலுக்கு ஒரு வழியைத் தேடியது. அவ்வழியினூடாக விழிப்புணர்வினை ஏற்படுத்தி ஆரோக்கியமான சூழலை தோற்றுவிக்க முனைந்தது. அதுவே யூன் 21ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச யோகா தினமாகும். இது காலம் தாழ்த்திய கண்டுபிடிப்பு. ஆனாலும் அவசியமானதொன்றாகும்.

“யோகா” என்ற சொல் சமகாலத்தில் உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் ஒன்றாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக மேற்குலக நாடுகளில் இது புகழ் பெற்ற கலாசாரத்தின் ஒருபகுதியாகக் காணப்படுகிறது. இன்று உலகில் சுயபயிற்சி பெற்ற யோகிகளும், அதற்கான நிறுவனங்களும் யோகப் பயிற்சியினை முன்னெடுத்து வருகின்றன. இளைய சமுதாயத்தினரிடையே காணப்படுகின்ற மன அழுத்தங்கள், உளைச்சல்கள், பழிவாங்கும் எண்ணங்கள், விட்டுக்கொடுப்பற்ற தன்மைகள், புரிதலின்மைகள், வன்முறைகள், முறையற்ற பாலியல் நடத்தைகள் முதலிய சமூகப் பிறழ்வுகளில் இருந்து நீக்கி ஆரோக்கியமான உடலமைப்பையும், உளநலத்தையும்  மேம்படுத்துவதற்கு யோகாவைச் சாதனமாக்கியுள்ளனர்.

யோகாவை சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தும் யோசனையானது 2014ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 27ம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஆற்றிய உரையின் போது விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி யோகாவை சர்வதேச தினமாக பிரகடனம் செய்யும் தீர்மானம் 2014ஆம் ஆண்டு மார்கழி மாதம் 11ஆம் திகதி ஐக்கிய நாடுகளுக்கான பொதுச்சபையில் அதன் இந்தியத் தூதுவரால் முன்மொழியப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் ஐ.நாவின் இணை அனுசரணையாளர்களான 193 உறுப்பு நாடுகளில் 178 நாடுகள் இணைந்து கொண்டன. இவற்றுள் இஸ்லாமிய நாடுகளும் உள்ளடங்குகின்றன என்பது சிறப்பம்சம்.

ஐ.நாவில் முன்வைக்கப்படும் பொதுவான விடயம் தொடர்பான தீர்மானத்தை 90 நாட்களுக்குள் ஏற்றுக்கொண்டு அமுல்படுத்த அந்நாடுகள் இணங்கியிருப்பதும் இதுவே முதற்தடைவை எனவும் கூறப்படுகின்றது. இந்நிகழ்வுகள் யாவும் யோகாவின் சர்வதேச தரத்தையும், முக்கியத்துவத்தையும், இன்றைய சூழலில் அதன் அவசியத்தையும் உணர்த்துவதாகவே உள்ளது. அத்துடன், யோகா தொடர்பான நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கின்றது.

மேற்படி தீர்மானமானது, யோகா அப்பியாசங்களை மேற்கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடிய அனுகூலங்களையும், உடலுள ஆரோக்கியத்துக்கும், நலனுக்கும், தூய்மைக்கும் புனிதமான அணுகுமுறையை யோகா தருகின்றது என்ற புரிதலையும் அங்கீகாரத்தையும் பரந்தளவில் வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆகவே, உலகில் உயர்ந்த சபையாக விளங்கக் கூடிய ஐக்கிய நாடுகள் சபையில் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசி, அனைத்து நாடுகளின் முழுமையான அங்கீகாரத்தைப் பெற்று, யோகாவினை சர்வதேச தினமாக நடைமுறையில் சாத்தியமாக்கிக் காட்டிய இந்தியப் பிரதமர் என்றென்றும் போற்றுதலுக்குரியவர் ஆவார்.

கடந்த ஆண்டு உலகத்திலுள்ள அனைத்துப் பாகங்களிலும் முதலாவது  சர்வதேச யோகாதினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. உலகத்திலுள்ள 191 நாடுகளில் சுமார் 252 நகரங்களில் யோகா தினம் கொண்டாடப்பட்டதாக அறிய முடிகின்றது. இந்தியாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், சமயப் பெரியவர்கள், அரசியல் வாதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள்  மற்றும் இராணுவ வீரர்கள் எனப்பலரும் இதில் கலந்துகொண்டனர். அமெரிக்காவில் உள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் சர்வதேச யோகாதினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஐ.நாவின் செயலாளர் பான் கீ மூன் உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது..

இலங்கையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் சுமார் ஐயாயிரம் மாணவர்களும், காலிமுகத்திடலில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோரும் ஒன்றுகூடி யோக அப்பியாசத்தை மேற்கொண்டிருந்தமை சிறப்பான அம்சமாக இருந்தது. இவ்வாறு இலங்கையில் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற யோகா நிகழ்விற்குரிய செய்முறை விளக்கங்களை இந்திய கலாசார நிலையம், ஸ்கை கொன்சியஸ்நெஸ் அமைப்பு, பிரம்ம குமாரிகள் ராஜயோக அமைப்பு, ஓம் ஸ்பேஸ் அமைப்பு, வாழும் கலை அமைப்பு, செத் செத யோகா அமைப்பு முதலியன வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வருடம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஒரே நேரத்தில் பத்தாயிரம் மாணவர்களை ஒன்று சேர்த்து சர்வதேச யோகாதினத்தை  செய்வதற்கான முன்னேற்பாடுகளை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதுவராலயம் செய்து வருகின்றது. போருக்குப் பிந்தியதான சூழலில் இளம் சமூகத்தவர்களின் நடத்தைகளில் அதிகளவான மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது. இவர்களின் தவறான பயணங்களைத் தடுக்கவும், மனித நேயத்தைக் கட்டியெழுப்பவும், அனைவரையும் ஒன்றுசேர்த்து சமாதானமான வாழ்வியலுக்கான சூழலை விரிவுபடுத்தவும், உடலுள ரீதியாக ஆரோக்கியத்தை வளர்க்கவும், வேண்டத்தகாத உணவுகள், குடிபானங்கள், போதைப் பொருட்பாவனைகள், முறையற்ற உறவுகள் முதலியனவற்றிலிருந்து மீட்டெடுக்கவும், அமைதியானதும் மகிழ்வானதும் நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதுமான வாழ்வினை உருவாக்கவும் இத்தகைய நிகழ்வுகளும், விழிப்புணர்வுகளும் பயன்பாடுடையனவாக அமையும்.

யாழ்ப்பாணத்தில் யோகப் பயிற்சியானது பாடசாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களூடாக வழங்கப்பட்டு வருகின்றது. நல்லுர் நாவலர் மணிமண்டபம், நல்லுர் அறுபத்து மூன்று நாயன்மார் மடம், நல்லை ஆதீனம், வேதாந்த மடம், சின்மய மிஷன் முதலிய இடங்களில் தினமும் யோகப் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் குறைந்தளவானோர் பயிற்சி பெற்றனராயினும், அண்மைக்காலங்களில் இவ்வெண்ணிக்கையில் அதிகளவான மாற்றம் ஏற்பட்டுள்ளமையினையும் அவதானிக்க முடிகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இந்துநாகரிகத் துறையினர் நடாத்திய முதலாவது அனைத்துலகச் சைவ மாநாட்டின் இறுதிநாள் கலை நிகழ்வில் யோகாவினை காட்சிப் படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ். யோக அரங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இதனை அளிக்கை செய்து அனைவரினதும் பாராட்டினைப் பெற்றிருந்தனர்.

ஆகவே, யோகாவினை உளவியல் நோக்கில், சித்த மருத்துவ நோக்கில், ஆன்மீக நோக்கில் என்ற பன்முக வடிவத்தில் நோக்குவது சிறப்பாகும். உளவியலை “விஞ்ஞானத்தின் விஞ்ஞானம்” (Science of Science) என்கிறார் விவேகானந்தர். உளவியல் தனியான துறையாக வளர்ச்சி காண்பதற்கு முன்னரே யோகாவானது உளம் பற்றிய ஆய்வியலாக இருந்துவந்திருக்கிறது. மேலைத்தேயத்தவர்கள் யோகாவைப் பற்றி ஏராளமான விடயங்களை அறிந்திருப்பதுடன் பின்பற்றியும் வருகின்றனர். பிரித்தானியாவில் அதிக வயதுவரை வாழ்ந்தவர்களில் ஒருவரான (110 வயது) Charles Henry Arnold என்பவர், “நான் முதுமையினால் பலவீனமடைந்த பயனற்ற ஒருவன் என்பதனை ஒத்துக்கொள்ள மாட்டேன். இதுவரை நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் அதேவேளை, எனது மூளை சாதாரணமாக தொழிற்படக் கூடியதாகவும் உள்ளது. பொதுவாக எனது உடல் மிகவும் நன்றாக உள்ளது. யோகப் பயிற்சியினாலும் தியானத்தினாலும் விளையும் நன்மைகளை எடுத்துக்காட்டும் ஒரு வாழும் உதாரணமாகவே நான் இருக்கிறேன். யோகா சிந்திக்கும் திறனையும், மன ஒருமையையும் இணைக்கின்ற ஒரு சக்தியாகும். என்னுடைய நீண்ட ஆயுளுக்கு காரணம் கற்பிப்பதாக யோகாவே அமைகிறது.” என்று குறிப்பிட்டுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.

முதியவர்கள் தமது முதுமைக் காலங்களில் உடல், உள நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். நோய்கள் இலகுவாக அவர்களை ஆட்கொண்டு விடுகின்றது. மன உளைச்சல், ஞாபகமின்மை, நித்திரை இன்மை, உடற் பலவீனம், தள்ளாடும் நடை, தளர்ந்த பேச்சு, எலும்பு முறிவு போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர். முதுமைக் காலங்களில் ஆரோக்கியத்துடனும் மனமகிழ்வுடனும் வாழ்வதற்கு எளிமையான யோகப் பயிற்சிகள் உதவுகின்றன. இவர்கள் நாளாந்தம் தங்களால் செய்யக்கூடிய பயிற்சிகளை கிரமமாகச் செய்து வந்தால் உடலுள ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதனால், முதுமையில் தோன்றும் ஏக்கம், மனக்கவலை, மன உளைச்சல், உடற்சோர்வு, முதலியன நீங்கி மகிழ்வுடன் வாழ்வர். தொடர்ச்சியான பயிற்சிகளால் மனோதிடம் அதிகரித்து வாழ்விலேற்படும் பன்முகமான சவால்களை எதிர்கொள்ளும் பக்குவ நிலை உருவாகும்.

இவ்வாறாக இந்தயோகப் பயிற்சியினால் எண்ணிறைந்த நன்மைகளுண்டு.  யோகப் பயிற்சியினை சிறுவயது முதற்கொண்டு முறையாகப் பயில்பவர்கள் வளமான உடலையும், நலமான உணர்வையும், கூரிய அறிவையும், பொலிவான தோற்றத்தையும், ஞாபக சக்தியையும் உடையவர்களாக விளங்குவர். பெற்றோர்கள் தங்கள் மரபணுக்களில் உள்ள குறைகள் நீங்கப்பெற்று ஆரோக்கியமான பலசாலிகளான பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள இயலும். பரம்பரை பரம்பரையாகத் தாக்கும் சில நோய்களைத் தவிர்க்க முடியும். மரபணுச் சீர்குலைவுகளைச் சீர்படுத்த இயலும். புற்றுநோய், இதயநோய், ஆஸ்துமா, மலட்டுத் தன்மை, மூட்டுவாதம். நரம்பு மண்டல நோய்கள் போன்ற நோய்களுக்குரிய நிவாரணியாகவும் இதனைப் பயன்படுத்த முடியும். ஊனச்சதைகள் பற்றிக் கொள்ளாதிருப்பதனால் உறுதியான உடலமைப்பைப் பெறமுடியும். அகச்சுரப்பிகளின் செயற்பாடுகளும், நரம்பு மண்டலச் செயற்பாடுகளும் சீராக இடம்பெறவும் ஏதுவாகின்றது.

இழந்த உடல நலத்தை மீளப்பெறவும், உறுதியான மனோநிலையினை கையகப் படுத்தவும், ஆன்மாவிடத்தே மறைந்திருக்கும் சக்தியை உணரச்செய்யவும், ஆன்மாக்களிடத்தே தெய்வீகத் தன்மை வாய்ந்த இயல்புகளை வெளிவரச் செய்யவும், மனோதிடத்தை செழுமையாக்கவும், இராஜயோகத்தின் இருப்பிடத்தை நோக்கிச் செல்வதற்கும் யோக அப்பியாசம் துணைபுரிகின்றது. ஆகவே, உடற் தூய்மை, உளத்தூய்மை, பேச்சுத்தூய்மை. மன அமைதி, நல்லெண்ணம், நற்புத்தி, நற்செயல் என்பன யோகத்தினால் உண்டாவன. இப்பண்புகள் ஒரு சமூகத்தில் இருந்தால் சமூகத்தின் வளர்ச்சி அபரிமிதமாகும். மாறாக பாலியல் வன்முறைகள், ஒழுங்கற்ற வாழ்வியல், போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம் என்ற வகையில் காணப்படுகின்ற சமூகச் சீரழிவுகள் எமது பண்பாட்டுச் சீரழிவில் பங்கெடுக்கின்றன. இது உலகளவிலும் பாரிய அச்சுறுத்தலைக் கொடுக்கின்றன. இவ்வாறானதொரு அசாதாரண சூழற்புலத்தில் சர்வதேசம் கண்டுபிடித்திருக்கின்ற ஒரு அற்புதமான மருந்தே ‘யோக கலை’ என்பது. இன்று சர்வதேசம் இதனை உணர்ந்து யோகாவை உலக சமாதானத்துக்கும், அமைதிக்கும் ஆற்றுப்படுத்தும் கருவியாக அடையாளப்படுத்தியிருப்பினும் நம்முன்னோர்கள் என்றோ இதுபற்றி சிந்தித்து விட்டார்கள் என்றே கொள்ளவேண்டும்.

யோகாவினை இயக்கமாக்க வேண்டும் என நரேந்திர மோடி அண்மையில் கருத்துத் தெரிவித்திருக்கின்றார். வாழுகின்ற சமூகத்தில் மாற்றங்கள் வேண்டும் என்கின்ற தன்னுணர்ச்சிப் போக்கினை இயக்கங்கள் ஏற்படுத்தவல்லன. பல்லவர் கால பக்தி இயக்கம் பிற்கால இயக்கங்கள் பலவற்றுக்கும் முன்வழிகாட்டியாக செயற்பட்டிருந்தது. அது தென்னிந்தியாவை மையப்படுத்தியிருந்தது. ஆனால், யோக இயக்கம் உலகளாவிய நோக்கில் செயற்படுமாக இருந்தால் அமைதியும், சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்பட வழிவகுக்கும். அவ்வாறு யோகா ஒரு இயக்கமாகச் செயற்படுமிடத்து அதன் விளைவுகள் யாவும் ஆரோக்கியமான சமூக உருவாக்கத்தை ஏற்படுத்துமென்பது நம்பிக்கையாகவுள்ளது.

யோகக் கலையில் ஆசனம் முதன்மை பெறுகின்றது. ஆசனம் என்பது இருக்கை, அமர்தல் என்று பொருள்படுகின்றது. இருக்க இருக்க இருக்கை தெளியும் என்பர். இதனை அசைவற்ற சலனம் என்கிறார் சான்டர் எலியட். ஆகவே, யோகம் என்பதனை செயலில் உன்னத கவனம் (attention in action) என்று பொருள் கொள்ளும் போது ஆசனப் பயிற்சி என்பது அவ்வனுபவத்தின் தொடக்க நிலையே எனலாம். ஆசனம் என்பது மனதை அலைபாய விடாமல் ஒருமுகப்படுத்தச் செய்வதற்கான நிலையாகக் கருதப்பட்டது. பின்னர் தியானத்துக்கான உட்கார்ந்த நிலை, இருந்த நிலை மட்டுமல்லாமல் முதுகு கீழ்ப்படிய படுத்துச் செய்தல், தலைகீழ் செய்தல், நின்று செய்தல், நிமிந்துபடுத்துச் செய்தல் எனப்பல தளத்தில் இவ்வாசனப் பயிற்சிகள் விரிந்தன. சூரிய நமஸ்காரமும் சாந்தி ஆசனமும் இவ்வாசனப் பயிற்சியின் தொடக்கமும் முடிவுமாக உள்ளது.

எனவே, இன்றைய அறிவியல் உலகில் நிகழ்த்தப்படுகின்ற ஆராய்சிகளுக்கு அப்பாற்பட்டு விளங்குகின்ற யோகாவானது மனித நலவிருத்தியை மேம்படுத்துவதற்கான வழியாகவே காணப்படுகின்றது. யோகாவின் முக்கியத்துவம் அதனை உலக அரங்கில் நிலைநிறுத்தியுள்ளது. சர்வதேச யோகா நாளில் மட்டும் இதனை அப்பியாசப்படுத்தாமல் எமது வாழ்நாளில் சிலமணித்துளிகளை இதற்காக ஒதுக்கி தினமும் அப்பியாசம் செய்ய முன்வரவேண்டும். கண்கெட்டுப் போனபின் சூரிய நமஸ்காரம் அவசியமற்றது. அவற்றின் முக்கியத்துவத்தினை நாமும் உணர்ந்து ஏனையோர்க்கும் உணர்த்த வேண்டும். இவ்வுணர்வும் பின்பற்றுதல்களும் நல்வாழ்வுக்கு வழிசமைக்கும். ஆகவே, எதிர்கால வாழ்வின் பெறுமதிவாய்ந்த முதலீடாக யோகா அமைகின்றதென்பது புலனாகின்றது.

திரு. சி. ரமணராஜா

விரிவுரையாளர்,

இந்துநாகரிகத்துறை,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.