பட மூலம், Selvaraja Rajasegar Photo

நீண்டகால இழுபறியின் பின்னர் கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில்  திரு. சுமந்திரன் அவர்களால் இழுவைமடித் தொழிலைத் தடைசெய்வதற்கான சட்டமுலம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதுவும் இந்தியாவின் ஒப்புதல்பெறப்பட்டே(?) இது கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆகவே, இச்சட்டத்தை இவ்வளவு காலமும் கொண்டுவரமுடியாமைக்கு இந்தியாவே முட்டுக்கட்டை போட்டிருப்பது போல் தெரிகிறது. பல தடவைகள் வட பகுதி மீனவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களுடன் பேசியபோதிலும் அவர்களது அத்துமீறல்களைத் தடுக்க முடியவில்லை. வள பாதுகாப்புக்கருதி வருட தொடக்கத்திலேயே 45 தினங்கள் மீன்பிடித் தடைவிதித்து அதனை அமுல்படுத்திவரும் தமிழக அரசு அக்காலப்பகுதி முடிவடைந்ததும் வட பகுதியில் மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எல்லோரையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்திருந்த இந்தியத் தரப்பு எப்பவோ இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கவேண்டும். இன்று அதனிடம் ஒப்புதல் பெற்றே இத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது விந்தையாகவே உள்ளது. ஆயினும், இப்போது இந்தியத் தரப்பு ஒப்புதல் கொடுத்திருப்பதால் இந்தச்சட்டம் இந்திய மீனவர்களின் அத்துமீறலை முடியுமானவரை கட்டுப்படுத்தும் என நாம் நம்புகின்றோம்.(?)

இச்சட்டமூலம் பெரும்பாலான  வடக்கு மீனவர்களுக்கு பெரு நிம்மதியினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பெரும் கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருப்பது அங்கு நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இச்சட்டமூலத்தை எதிர்த்து தமிழ்நாட்டுஅரசியல்வாதிகள் கட்சிபேதமின்றி இலங்கை அரசின் மீது சீறிப்பாய்ந்துள்ளனர். ஐ.நா. வரையிலும் இந்தப் பிரச்சினையைக் கொண்டுசெல்லப்போவதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

வட பகுதியின் பாரம்பரிய நீர்ப்பரப்பில் யுத்தத்தின் முன்னர் வட பகுதி மற்றும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கிடையே மீன்பிடி தொடர்பாக ஏற்பட்டிருந்த மோதலானது யுத்தத்தின் பின்னர் தீவிரமடைந்து அது இலங்கை  கடற்படை மற்றும் தமிழக மீனவர் மோதலாக மாறி பெரும் கடல்வள அழிவையும், மானிட நலவாழ்வு பாதிப்பினையும் (உயிரிழப்புக்கள் உட்பட) ஏற்படுத்தியிருந்தது. பல வருடங்கள் நீடித்திருந்த இந்த விவகாரமானது இன்று கொண்டுவரப்பட்ட இழுவைமடித்தொழில் தடைச்சட்டம் மூலம்  ஓரளவுக்கு முடிவுக்குக் கொண்டுவரக்கூடியதான ஓர் சூழலை ஏற்படுத்தியுள்ளது. வரவேற்கக்கூடிய இச்சட்டம் முழுமையாக அமுல்படுத்துவதிலேயே இதன் வெற்றி  தங்கியுள்ளது. மட்டுமல்ல மன்னார் குடாக்கடலிலும் இந்திய பெரும்படகுகள் தங்கூசி வலைகளை (monofilament)ப் பயன்படுத்துவதையும் நிறுத்தி கடல் சட்டங்களுக்கும், மீன்பிடித் தடைச்சட்டங்களுக்கும் மதிப்பளிக்கவேண்டிய காலமும் கனிந்துள்ளது.

பாதிப்படையும் உள்ளூர் இழுவைமடி மீனவர்கள்

இச்சட்டத்தினால் உள்ளூரில் இழுவைமடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் பாதிப்புக்குள்ளாவதும் கவனிக்கத்தக்கது. வடக்கில் ஆக நான்கு (மன்னார்-2 யாழ்ப்பாணம்-2)இடங்களிலுள்ளவர்களே இதில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 300க்கும் அதிகமான இழுவைப்படகுகள் இன்று  பயன்பாட்டிலுள்ளன. இத்தடை கொண்டுவரும்போது பெறுமதிமிக்க இறால் மற்றும் கடலுணவு வகைகளை எவ்வாறு பிடிப்பது? அதற்கான பொறிமுறை என்ன? அதற்குரிய புதிய தொழில்நுட்பம் யாது? என அவர்கள் கேள்வி எழுப்புகினறனர். இது நியாயமானதுதான். அதேவேளை, இழுவைமடி மூலம் பெறப்படும் வருமானத்தை விட அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் ஒன்றிற்கு பதினெட்டு  (1:18) என்ற விகிதத்தில் மிகமோசமானவை என்பதும் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கிலோ  அலகு மீனுக்கு பதினெட்டு கிலோகிராம் இலக்கற்ற (Bycatch) மீன்வளம் விரயமாவதாகச் சொல்லப்படுகிறது. இதனாலேயே சர்வதேச ரீதியில் பல நாடுகள் இந்த மீன்பிடிமுறையினைத் தடைசெய்துள்ளன. இறால் வளத்தை எவ்வாறு பிடிக்கமுடியும் என நியாயமான கேள்வி எழுப்பும் மீனவர்கள் அதேவேளை அதனால் அழிவடையும் மீன்களைப்பாதுகாப்பது எவ்வாறு? என்பதையும் சிந்திப்பது நல்லது என்பது எமது கருத்து. இச்சந்தர்ப்பத்தில் பெருந்தொகையான அந்நியச்செலாவணியை ஈட்டித்தருகின்ற இறால் வளத்தை உற்பத்திசெய்யக்கூடிய தொழில்நுட்பம் கண்டறியப்படுவதும் மிக அவசியம் என்பதுவும்  இங்கு உணரப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சு, ‘நாரா’ நிறுவனம் மற்றும் வட மாணசபை போன்றன இதில் கவனம் எடுப்பது அவசியம்.

இதனிடையே “பாதிப்புக்குள்ளாகும் உள்ளூர் இழுவைப்படகு மீனவர்களுக்குப் பொருத்தமான இடத்தில் சிற்றளவிலான படகுகளைப் பயன்படுத்தி ஏனையோருக்குப் பாதிப்பு அற்ற வகையில் மீன்பிடிப்பதற்கான ஒழுங்குகள் பற்றியும் கவனத்தில் கொள்ளவேண்டும்” எனவும் சட்டமூலத்தை முன்மொழிந்தவர் கேட்டிருக்கின்றார்.

ஆயினும், இதற்கான நடைமுறைச் சாத்தியங்கள் மிகக்குறைவானதாகவேயுள்ளது. எங்கு பயன்படுத்தினாலும் – by catch என்பது தவிர்க்கமுடியாதது. ஆயினும், இங்கு படகுகள் (trawlers)பிரச்சினைக்குரியதல்ல. அடித்தள இழுவைமடி வலைகளே பிரச்சினைக்குரியதாகும். ஆகவே, இவர்களுக்கு மாற்றுவழிகளாக குறித்த கடற்பரப்புக்களில்  குறித்த உள்இணை இயந்திரப்படகுகளைக் கொண்டு (trawlers)  மேற்கொள்ளக்கூடிய படுப்புவலைகள், மிதப்புத் தூண்டில் வரிசைகள் (Bottom and floating long lines) அனுமதிக்கப்பட்டுள்ள சுருக்குமடிகள் (பெரியகண் கொண்டது) (Purse seine) போன்ற மீன்பிடித்தொழிலை மேற்கொள்ளமுடியும். குறித்த உள்ளூர் மீனவர்களில் பெரும்பாலானோருக்கு இதில் போதிய தேர்ச்சியும் போதிய அனுபவமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு (படுப்புவலை) ஒரு அலகிற்கு (Unit) 5 இலட்சம் ருபாய் வரையில் தேவைப்படலாம்.அவற்றைப் பாதிப்புறும் மீனவர்களுக்கு வழங்க ஆவன செய்யப்படவேண்டும். வட மாகாணசபை இதுகுறித்து ஏற்கனவே ஆராய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கொள்ளைப் போகும் மீன் வங்கி


உள்ளூர் மீனவர்கள் இழவைமடித் தொழிலில் ஈடுபடுவதற்கு தமிழ் நாட்டு மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்கைகளே காரணமாக அமைந்தன. இழுவைமடி மூலம் கூடுதலான வருமானம் பெற்றவர்கள் இதனைக் கைவிடுவதென்பது இலகுவானதல்ல. ஆயினும், கடல்வள இருப்பின் எதிர்காலம் பற்றி கவலைப்படுவதும் சிந்திப்பதும் அவசியம்.

இந்தியத் தரப்பில் பாதிக்கப்படவுள்ள மீனவர்களுக்கான மாற்றுவழிகளைச் செய்வதற்காக பல மில்லியன் ஒதுக்கப்பட்டிப்பதாகக் கூறப்படுகிறது. முகற்கட்டமாக 200 கோடி ரூபா பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நட்டஈட்டினப் பெற்றுக்கொண்டு இழுவைமீன்பிடியிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளல் (Buyback system), ஆழ் கடலில் மீன்பிடிப்பதற்கான படுப்புவலைகள் (Drift net) மற்றும் தூண்டில்வரிசை மீன்வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபடுவதற்கான சகல வசதிகளையும் வழங்குதல் போன்ற திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஆயினும், அதிக சிரமம் இன்றி குறுகிய நேரத்தினுள் பெருந்தொகையான மீன்களையும் கடலணவுகளையும் பிடித்து பெரும்பணம் சம்பாதித்த இந்திய மீனவர்கள் இதனைக் கைவிட்டு மாற்றுத்தெரிவில் ஈடுபடுவார்கள் என்பது அவ்வளவு இலகுவில் நடைபெறப்போவதில்லை.

விளைவுகள்

இத்தடை உத்தரவானது உடனடியாக இழுவைமடி மீனவர்களுக்கு பொருளாதார ரீதியில் பாதிப்பினை ஏற்படத்துகின்றபோதிலும் சாதகமான பல நன்மைகள் கிடைக்க வழியேற்படும்.

இழுவைமடித்தொழிலைத் தடைசெய்வதினூடாக இறால் மூலம் பெறப்படும் வருமான இழப்புக்கள் மற்றும் உடனடியான தொழில்வாய்ப்பு இழப்புக்கள், அதில் நம்பியிருக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகும். இவர்களுக்கு மாற்றுவழிகள் காண்பது அவசியம்.

நன்மைகளைப்பொறுத்தவரையில்,

  1. இந்திய இழுவைப்படகுகள் தடுத்துநிறுத்தப்படும்போது போரின் முன்னர் பெற்றிருந்த (48 முதல் 50 ஆயிரம் மெ.தொன், வருடம்) உற்பத்தி இலக்கினை எய்த முடியும்.
  2. சுமார் இரண்டு இலட்சம் வட பகுதி மீனவமக்கள் நன்மையடைவர்.
  3. இப்போதுள்ள மூன்று நாட்கள் மீன்பிடி வாரத்தில் ஆறு நாட்களாக அதிகரிக்கும். இது உற்பத்தி அதிகரிப்புக்கு வழிவகுக்கும்
  4. பெருமளவு சிற்றளவு படுப்புவலை மீன்பிடியாளர்களின் வலைகளின் சேதாரம் இல்லாமற் போகும்.
  5. மீனவர் மோதல்கள் தணிந்து மீனவர்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்த உதவும்.
  6. பாதுகாப்புப் படையினரின் கெடுபிடிகள் தணியும்.
  7. இலங்கை மற்றும் தமிழ்நாடுகளுக்கிடையிலான அரசியல் ரீதியிலான உறவுகள் வலுப்படும்.
  8. கடற்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் உயிரியல் பல்வகைமைத்தன்மையும் பேணப்படும்.
  9. சிறகுவலை மற்றும் கரைவலை மீன்பிடிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

இலங்கை அரசு ஏற்கனவே சில மீன்பிடி முறைகளுக்குத் தடைவிதித்துள்ளது. ஆயினும், அதனை அமுற்படுத்துவதில் இதுவரையில் தோல்வியே கண்டுள்ளது. இழுவைமடிக்கும் அதேபோல் பூச்சாண்டி காட்டாது, இச்சட்டத்தை முழுமையாக அமுற்படுத்த உருப்படியான செயற்றிட்டத்தினை முன்னெடுக்க வேண்டுகின்றோம். மேலும், மாவட்டம்தோறும் கடற்கண்காணிப்புக் குழுக்களை அமைத்து மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் அவர்களுக்கான படகு வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள் போன்றவற்றை  ஏற்படுத்திக் கொடுப்பது பற்றியும் சிந்திப்பது நல்லது.

இல்லையெனில் வட பகுதி மீனவர்களுக்கு இத்தடைச்சட்டத்தினால் எதுவித நன்மையும் ஏற்படப்போவதில்லை.

இறுதியாக பல ஆண்டுகள் நீடித்திருந்த அண்ணன் – தம்பி மோதல் முடிவுக்கு வரவேண்டும் என்பதுதான் எமது அவா! பொறுத்திருந்து பார்ப்போம்.

பேராசிரியர் ஏ.எஸ். சூசை