பட மூலம், Thyagy Ruwanpathirana

முஸ்லிம்களுக்கெதிரான அளுத்கம மதத் தீவிரவாதக் கலவரம் நடைபெற்று  2017 ஜூன் 15 உடன் 3 வருடங்கள் கழிகின்ற நிலையில், தீய இனவாத சக்திகளால் மீண்டும் ஒரு கலவரம் ஏறபடக்கூடும் என்கின்ற அச்சத்தோடு முஸ்லிம்கள் நாட்களை கடந்து செல்கின்ற நிலையே தோன்றியுள்ளது.

2014 இல் கடந்த மஹிந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது, நடைபெற்ற இந்தக்கலவரத்தில், 31 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன. 195 வீடுகள் சேதத்திற்குள்ளாகின. மற்றும் 69 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. 52 கடைகள் பகுதியளவில் சேதமுற்றன. அழிவுக்குள்ளான வீடுகள் அரசாங்கத்தால் புனரமைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், 3 பஸ்கள் நிறைய வந்து கலவரத்தில் ஈடுபட்ட குண்டர்களால் திருடப்பட்ட நகைகள், சூறையாடப்பட்ட சொத்துக்களுக்கு இதுவரை எந்த நஷ்டயீடும் வழங்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கெதிரான இந்தக் கலவரத்தின் மொத்த இழப்பு 400 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

4 பேரின் உயிரையும், இரு இளைஞர்களின் கால்களையும் காவுகொண்ட இந்தக் கலவரமானது பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையிலேயே நடைபெற்றது. தற்போது அளுத்கம மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பீதி என்னவெனில், கடந்த அரசாங்கத்தின் போது அப்பட்டமாக நடைபெற்ற இக்கலவரம், பாதுகாப்புத் தரப்புகள் குறித்த இடத்தில் பிரசன்னமான நிலையிலேயே கண்முன் நடைபெற்றது.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ மற்றும் பாதுகாப்புத் தரப்புகளிடம் இருந்து மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் உறுதி மொழிகள் வழங்கப்படுகின்ற நிலையிலும், நாட்டில் மதத் தீவிரவாதத்தை முன்னெடுத்து வரும் சக்திகள்   மீண்டும் முஸ்லிம்களுக்கெதிராக, முஸ்லிம்களின் பொருளாதர நிலைகளிலும், முஸ்லிம்களின் சுதந்திரத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் வெறுப்புமிழும் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு உரிய நேரத்தில் பாதுகாப்போ, மதத்தீவிரவாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளோ எடுக்காத நிலையிலும் சட்டம் மற்றும் பாதுகாப்பை நடைமுறைப்படுத்துவதில் உள்ள அசமந்தங்கள் மீண்டும் இந்த இனவாத சக்திகள் ஒரு கலவரத்தை திட்டமிட்டு நடத்திவிடக்கூடும் என்கின்ற அச்சத்தை மேலோங்கச் செய்கின்றது.

இந்த நாட்டின் பிரஜைகள் என அனைவரையும் அரவணைத்து, வளங்களை நாட்டின் வளர்ச்சிக்காக உச்சபட்சமாக பயன்படுத்தி, இளையவர்கள் மனதில் மனிதத்தின் பெறுமானங்களையும், சூழலைப் பாதுகாத்தல் தொடர்பில் அக்கறையையும் உருவாக்க வேண்டிய கடப்பாட்டை பெற்றிருக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர்கள் சட்டம் மற்றும் பாதுகாப்பு விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை வெளிக்காட்டுகின்றார்களா? அல்லது அசமந்தமாக நடந்துகொள்கின்றார்களா? என்பதே ஒவ்வொரு நாளும் முஸ்லிம் மக்களிடம் தோன்றும் கேள்விகளாகும்.

2013 – 2015 க்குள் மட்டும் 538 இனவாத சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதாக முஸ்லிகம்களுக்கான செயலகம் (The Secretariat for Muslims (SFM) தெரிவித்துள்ளது.

2017 இன் நிலைமையும் அதேபோன்றதொரு மோசமான கட்டத்தை அடைந்திருப்பது முஸ்லிம்கள் இன்னுமொரு அளுத்கமவைச் சந்திக்க வேண்டி வருமோ என கவலை கொள்ளச் செய்துள்ளது. கடந்த 7 வாரங்களுள் மட்டும் 25 இனவாத சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன. இவற்றுள் 5 பள்ளிவாசல் தாக்குதல் சம்பவங்களும்  முஸ்லிம்களுக்குச் சொந்தமான 10 கடைகளுக்கு தீவைக்கப்பட்ட அல்லது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களும் அடங்கும்.

இத்தகைய இனவாத சம்பவங்களை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு மூலோபாயத்தையும், நாட்டில் அனைத்து மக்களும் அனுபவிக்கக்கூடிய சமாதானத்தையும் ஏற்படுத்துவது அதிகாரத்தில் உள்ளவர்களின் கடமையும் தார்மீகப் பொறுப்புமாகும்.

குரோதமும், வெறுப்புணர்வும் நாட்டுப்பற்றாகப் போற்றப்பட்டு, ஆள் ஆள் அடித்துக்கொண்டு சண்டை பிடித்துக்கொள்ளும் நோய் பிடித்த பூமியாக இந்த நாடு ஆகிவிடக்கூடாது என்பதே சமாதானத்தை விரும்பும் இந்நாட்டு மக்களின் பிரார்த்தனையாகும்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் வரலாற்றில் இருந்து பாடம் பெற்றுக்கொள்ளத்தவறும் நிலையில், வரலாற்றில் இருந்து பாடம் கற்பதில்லை என்கின்ற வரலாற்றையே விட்டுச்செல்லும் நிலை உருவாகிவிடும் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.

அஹமட் ரிப்கான்