படம் | சம்பத் சமரகோன், (பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கணேசன் நிமலரூபனின் இறுதிக்கிரியை)

“முதலில் அவர்கள் என் ஆடைகளைக் களைவார்கள். கைகளை முதுகிற்கு பின்னால் கட்டி கூரையிலிருந்து தலைகீழாக தொங்கவிடுவார்கள். பின்னர் அடிக்கத்தொடங்குவார்கள். ஒவ்வொருவரும் தவணைமுறைப்படி கைகளில் என்ன கிடைக்கிறதோ அதைக் கொண்டு அடிப்பார்கள். தடிகள், உலோகக்கோல்கள், சிலநேரங்களில் மரக்கதிரைகளினாலும் அடிப்பார்கள். பின்பு இன்னோர் இரவு வந்தது, கைகளை முதுகிற்கு பின்னால் கட்டினார்கள். பொலித்தீன் பையினால் தலையை மூடி, பற்றவைத்த சிகரட்டினால் அதனை எரித்தார்கள். அந்த வேதனையை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.”

இது ரவியின் கதை, தோட்டத்தொழிலில் ஈடுபடும் ஒரு தமிழர். அவர் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு தகுந்த காரணமின்றி ‘பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்’ தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். அவருக்கெதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் தள்ளுபடிசெய்யப்பட்டன. ரவியின் கதை, தேசமெங்கும் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு அல்லாடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கானோரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. பலர், எந்தவிதமான முடிவுமின்றி பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் போராடிக்கொண்டும் தொடர் வழக்கு விசாரணைகளினால் அல்லாடிக்கொண்டும் இருக்கிறார்கள். குற்றவாளிகளென தீர்ப்புக்குள்ளான சிலரும் ஏற்கனவே தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதிக்கும் அப்பால், தமது தண்டனை காலத்தையும் கழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

“தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இருந்ததில்லை. நான் பிறந்து வளர்ந்தது முழுவதும் கண்டியில்” என்று ரவி கூறினார். “எனது சகோதரர் இராணுவத்திற்காக மரதன் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பவர். அதனால், சுற்றுப்புறத்தில் எல்லோருக்கும் எங்கள் குடும்பத்தை தெரியும். அவர் காற்றைப் போல் ஓடுவார்.”

கொடிய சித்திரவதைகளுக்குப் பின்னர், ரவி இன்னமும் கால்களில் மிகுந்த வலியுடன் இருக்கிறார். படம்: சம்பத் சமரகோன்

2008இல் கைதுசெய்யப்பட்டதன் பின்னர், ரவி குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளால், 3 மாதங்கள் தொடர்ச்சியாக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, வலியை மேலும் தாங்கிக்கொள்ளமுடியாத பட்சத்தில் சிங்களத்தில் எழுதப்பட்டிருந்த ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றில் கையொப்பமிடுவதற்கு உடன்பட்டார். அதன் உள்ளடக்கம் என்னவென்று இன்னுமே அவர் அறியாதிருக்கிறார். கையொப்பமிட்ட அடுத்தகணமே சித்திரவதை நிறுத்தப்பட்டு நான்கரை வருடகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தார் (எந்த குற்றச்சாட்டிலும் குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்படாதபடியால்).

பயங்கரவாத தடைச்சட்டமும் உத்தேசிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும்

கடுமையான தீவிரவாத எதிர்ப்பு சட்டமான, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கும்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கை பலனளிக்காமலேயே இருந்து வந்துள்ளது. பொதுவாகவே இந்த சட்டம், தனிமனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் மீறுகிறதென நாம் அறிந்திருப்பினும், அதில் அதிகமாக அச்சுறுத்தும் அம்சங்கள் இவை: பொலிஸ் அதிகாரிகளிடம் சட்ட ஆலோசனை அற்ற ஒப்புதல் வாக்குமூலம், நீதித்துறையின் மேற்பார்வையற்ற நீடித்த நிர்வாக தடுப்புக்காவல், சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மிகையான அதிகாரம், அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கும் திட்டமிட்ட சித்திரவதைகளுக்கும் ஏதுவான சூழல் உருவாக்கப்படல். மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டமானது, எதிர்ப்புப் போராட்டம், பேச்சு சுதந்திரம், கூட்டங்கூடுதல் ஆகியவற்றை அடக்குவதற்கும் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 2015இல் அரசாங்கமானது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மறுபரிசீலனை செய்து நீக்கி, அதற்குப் பிரதியீடாக, சிறந்த சமகால சர்வதேச சட்டங்களுக்கு அமைய பயங்கரவாத – எதிர்ப்பு சட்டமொன்றை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்புகளை மேற்கொண்டிருந்தாலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் பொதுமக்களின் கருத்துபெறல் மற்றும் தகவல் வழங்கல் போன்ற விடயங்களில் முற்றிலும் ஒரு இருட்டடிப்பான பாங்கினையே கொண்டிருந்தது.

மேலும், ஒரு குழப்பகரமான கட்டமாக, “இலங்கையின் உத்தேசிக்கப்பட்ட பயங்கரவாத – எதிர்ப்புச் சட்டத்தின் கொள்கை மற்றும் சட்டக்கட்டமைப்பு” என்கிற தலைப்பில் ஆவணமொன்று தற்போது உத்தியோகபூர்வமற்ற முறையில் பொதுப்பரப்பில் வெளிவந்து, முதல் வாசிப்பிலேயே, பயங்கரவாத தடைச் சட்டத்தை விட பலமடங்கு பிரச்சினைக்குரியதொன்றாக தென்படுகிறது. ஏற்கனவே பாரிய அச்சுறுத்தலாக இருந்த கூறுகளை இந்த உத்தேசிக்கப்பட்ட பயங்கரவாத – எதிர்ப்பு சட்டமானது மேலும் பலப்படுத்துகிறதென தோன்றுவதுடன் வேறும் பல புதிய அம்சங்களையும் எட்டு பக்க நீளத்திற்கு முன்வைக்கிறது.

அரசாங்கமானது, இந்தச் சட்டத்தின் இருப்பை இன்னமும் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யவில்லை. எனினும், பயங்கரவாத – எதிர்ப்புச் சட்டத்தின் வரைவொன்று நாடாளுமன்றத்தின் மேற்பார்வை குழுவின் முன்னிலையில் தற்போது இருக்கிறதென எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.

பெயரற்ற மனிதர்கள், மறக்கப்பட்ட முகங்கள்

பயங்கரவாதத் தடைச்சட்டமானது மோதல்கள் இடம்பெற்ற காலங்களிலேயே பாரிய அளவில் பயன்படுத்தப்பட்டிருப்பினும், அது இன்னமும், போராட்டக்காரர்களுக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றாகவே இருந்துவருகின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி சிறைச்சாலைகளில் அல்லல்படும் பல கைதிகளின் நிலையையே இந்தப் பதிவு சுருக்கமாக எடுத்துக்காட்டுகிறது. சிலர் 19 வருடங்களாக வழக்கு விசாரணைகளில் எந்த முடிவுமின்றி விளக்கமறியலிலும், வேறும் சிலர் குற்றம் சுமத்தப்படுவதற்கு முன்னரே 15 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டும், ஏனையோர் சுமார் 400 – 500 வழக்கு விசாரணைகளினால் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டும் எந்தத் தீர்வுமின்றி இருக்கின்றனர்.

ரஜனியின் தந்தை 1998ஆம் ஆண்டு, புகழ்பெற்ற கண்டி தலதா மாளிகை குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்கிற சந்தேகத்தின் பேரில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். 5 வருடங்களுக்குப் பின் 2003இல், அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. “அவரைக் கொண்டுசெல்லுவதற்கு அவர்கள் வீட்டுக்கு வந்தபோது எனக்கு வயது பத்து. அந்தச் சம்பவம் நேற்று நடந்ததுபோல் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது” என்கிறார் ரஜனி. “தைப்பொங்கல் பண்டிகைக் காலப்பகுதிகளில், திருகோணமலையிலிருந்து நீண்டகாலமாக தொடர்பற்றுப்போன உறவினர்கள் என்று கூறிக்கொண்டு நாங்கள் இதற்கு முன் கண்டிராத இரு மனிதர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் என் தந்தையை ‘பாப்பா’ (சித்தப்பா) என்று அழைத்தார்கள். அவர்கள் ஒரு லொறியை செலுத்திக்கொண்டு வந்து, வியாபாரத்திற்காக கண்டிக்கு வந்திருப்பதாகவும் இந்த இடம் பழக்கமில்லாதமையினால், நகர்ப்புறங்களுக்கு வண்டியைச் செலுத்திச்சென்று தங்களுக்குச் சுற்றிக் காண்பிக்கும்படியும் என் தந்தையிடம் கேட்டுக்கொண்டார்கள். அதற்குப் பணம் செலுத்துவதாகவும் கூறினார்கள். எனது தந்தை, மாதம் ரூபா 15,000 மாத்திரமே சம்பாதித்ததால் அந்த மேலதிக வருமானத்தை வரவேற்றார்.

கண்டியின் சோதனைச்சாவடிகளில் லொறி நிறுத்தப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம், வாகனம் அந்த இருமனிதருக்கு சொந்தமாயிருந்தபோதும்கூட, தனது தந்தையின் விபரங்கள் மட்டுமே பதியப்பட்டதாக ரஜனி நினைவுபடுத்தினார்.

“நான் சிறுபிள்ளையாக, அப்பாவிடம் அதிக பிரியமாக இருந்தபடியால் பல நானும் அவர்களுடன் நகரத்திற்கு சென்றிருக்கிறேன். அவ்வாறு, இறுதியாக நகரத்திற்கு சென்ற பயணத்தின்போது அவர்கள் ஒரு இடத்தில் லொறியை நிறுத்திவிட்டு எனக்கு ஐஸ்கிரீமும் வாங்கிக்கொடுத்துவிட்டு திரும்பி வரும்வரை லொறியிலேயே இருக்கச்சொன்னார்கள். அவ்வாறு திரும்பிவந்தபோது, எனது தந்தை மதுபானம் அருந்தி போதையில் நிற்கக்கூட முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார், ஆனால் அந்த இரு மனிதர்களோ சாதாரணமாகத் தான் தென்பட்டனர். எனது தந்தையை லொறியில் ஏற்றியதும் அந்த மனிதரில் ஒருவர் எனது தந்தையின் சட்டைப்பையில் இருந்து ஏதோ ஒரு பொருளை எடுப்பதை நான் அவதானித்தேன். ஆனால், அது என்னவென்று கண்டறியுமளவுக்கு எனக்கு அப்போது விவரம் போதவில்லை. பின்பு அவர்கள் என்னையும் என் அப்பாவையும் வீட்டில் இறக்கிவிட்டு, லொறியை செலுத்திக்கொண்டு சென்றுவிட்டனர். அதற்குப்பின் நாங்கள் அவர்களை காணவோ அவர்களிடமிருந்து எதுவும் கேள்விப்படவோ இல்லை”

என்றவாறு கலங்கிய கண்களுடன் தனது தந்தையுடன் கழித்த கடைசிவாரத்தை நினைவுக்குக்கொண்டுவந்தார் ரஜனி.

“ஒரு வாரத்திற்கு பின்னர் தலதா மாளிகையில் ஒரு குண்டுவெடிப்பு இடம்பெற்றது. குற்றப்புலனாய்வுத் துறையிலிருந்து அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து அப்பாவை வெளியே அழைக்கும்படி கூறினார்கள். அவர் வந்ததும் அவரிடம் வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரத்தைக் கேட்டார்கள். அவர் வீட்டினுள் சென்று பின்னர் வெளியே வந்து வழக்கமாக வைக்கும் இடத்தில் அதனைக் காணவில்லை எனக் கூறினார். ஓட்டுனர் பத்திரம் காணாமல்போனதைக் குறித்து ஏன் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை எனக்கேட்டதற்கு, அவர்கள் விசாரிக்கும்வரை அது காணாமல்போயிருப்பதைக் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என அவர் பதிலளித்தார். விகாரையின் சுற்றுப்புற வளாகத்தில் எனது தந்தையின் ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதுகுறித்து விசாரித்துவிட்டு திருப்பி அனுப்புவதாகவும் கூறிவிட்டு அவரை அழைத்துச்சென்றார்கள். பின்பு அவரை கைவிலங்கு பூட்டப்பட்ட நிலையிலேயே வீட்டுக்கு திரும்பக்கொண்டுவந்து வீடு முழுவதும் சோதனைசெய்தார்கள். அதற்குப் பின்னர் அவரை கொண்டுசென்றுவிட்டார்கள். ஆறு மாதங்களுக்கு அவர் எங்கிருக்கிறாரென்று எங்களுக்குத் தெரியவில்லை. அவரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என எதுவும் அறியாத கவலைக்கிடமான நிலையில் இருந்தோம்”

என அவர் கூறினார்.

கடைசியாக கொழும்பிலுள்ள பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவில் இருப்பதாக, நன்கறிந்த ஒருவரினால் தெரியவந்ததும், அவரைப் பார்க்கச்சென்றோம். எங்களைக் கண்டதும் அப்பா அழத்தொடங்கினார். “விகாரையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை நான்தான் திட்டமிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்” என்றார். 21 தடவைகள் உடற்பாகங்களுக்கு சூடுகாட்டியதாகவும், மேலிருந்து கீழே தொங்கவிட்டு அடித்துத்துன்புறுத்தி நகங்களைக்கூட கழற்றியதாகவும், பல வருடங்கள் கழித்து எனக்குக் கூறினார். நான் சிறுபிள்ளையாக இருந்தமையினால் எனக்கு தாக்கம் ஏற்படக்கூடாதென்று, சமீபத்திலேயே அப்பா இவையெல்லாவற்றையும் என்னிடம் கூறினார். தான் நிரபராதியென்று கெஞ்சியும் பலனின்றியே, நோவை மேலும் சகிக்க இயலாமல் வாக்குமூலத்தில் கையொப்பமிடுவதற்கு உடன்பட்டிருக்கிறார்.

திகன தோட்டங்களிலுள்ள தடுப்புக் காவலிலிருப்பவர்களின் குடும்பங்களின் லைன் வீடுகள். படம் – கட்டுரையாளர்

“ஆங் போம்ப கஹபு எகாகே லமய் யனவா” (குண்டுவைத்தவரின் பிள்ளைகள் செல்கிறார்கள் பாருங்கள்) என்கிற அக்கம்பக்கத்தினரின் வசைச்சொற்களுக்கு ஆளாக நேர்ந்ததினால், ரஜனியும் அவரது சகோதரியும் தினமும் பாடசாலைக்கு நடந்து செல்வதற்குப் பயப்படுவார்கள். அவர்களது தாயார் 10 வருடங்களுக்கு முன்பே இறந்துபோயிருந்தபடியினால் அவர்களிருவரையும் பராமரிப்பதற்கு எவருமிருக்கவில்லை. அவர்களின் உறவினரொருவருடன் வசித்துவந்தபோதிலும், அவருக்கும் மூன்று பிள்ளைகள் இருந்தமையினால் அன்றாடத் தேவைகளை பூர்த்திசெய்வது கடினமாக இருந்தது. “ஒரு நிரபராதியை சிறையிலடைக்கும் இந்த உலகத்தில், வேறு எதனை எதிர்ப்பார்க்க முடியும்? சட்டம் ஒரு நிரபராதியை தண்டித்தால், பின்னர் குற்றவாளியை யார் தண்டிப்பார்?” என இயலாமையுடன் தொடர்ந்தார் ரஜனி.

கொடிய சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர், யோகேஸ். 8 வருடங்கள் தகுந்த காரணமில்லாமல் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் 2016இல் குற்றச்சாட்டுக்கள் நீக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர். அவரும் தோட்டங்களிலிருந்து வந்தவர், 2008 இல் கைதானவர். ஆனால், 2012 இலேயே அவர் மீதான குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. கண்டி பொலிஸ் நிலையத்தில் மூன்று மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த யோகேஸ் கூறுவதாவது, தாம் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும், கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் (உயர்வலு மின்கம்பிகளினால் மின்சாரம் பாய்ச்சப்பட்டதாகவும்), அத்துடன் பொய்யான வாக்குமூலத்தைப் பெறுவதற்காக வெற்றுக்காகிதங்களில் கையொப்பமிடும்படி வற்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் யோகேஸ் மீது குற்றம்சுமத்தும் வகையில் இந்த வெற்றுக் காகிதங்கள் பின்னர் நிரப்பப்பட்டன. ஒரு சந்தர்ப்பத்தில் 15-20 நிமிட மின்அதிர்ச்சியினால் அவருக்கு இரத்தம் கசியத்தொடங்கியதும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். பொது வைத்தியசாலையில் தன்னை அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டபோதும்கூட சிறைச்சாலை அதிகாரிகளினால் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இறுதியாக, சட்டத்தரணிகளுடன் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டதும் தனக்கு நடந்த தாக்குதல்களையும் மின்அதிர்ச்சி வழங்கப்பட்டது குறித்தும் தெரிவித்தார். சட்டத்தரணிகள் அவரது உடலில் இருக்கும் தடயங்களையும் விரல் முறிவடைந்து இரத்தம் கசிந்திருப்பதையும் அவதானித்தார்கள்.

அவர்களின் விடுதலைக்கான அயராத உழைப்பு

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் இருவகையானவை: முதலில் தடுப்புக்காவல் உள்ளடக்கும் சித்திரவதையின் பயங்கரம். அடுத்து, விடுவிக்கப்பட்டதன் பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதிலுள்ள போராட்டம்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களுக்காகவே பணிபுரியும், கண்டி மனித உரிமைகள் அலுவலகத்தின் சட்டஒருங்கிணைப்பாளர் லுசிலி அபேகோன் பொதுவாக நிலைமைகள் எவ்வாறு செயற்படுகிறது என விளக்குகிறார். உதாரணத்திற்கு 2007இல், திகன பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸார் ஒரு கிராமத்தில் தமிழ் இளைஞர்களை கைதுசெய்தனர். ஒரு கிராமத்திலுள்ள இளைஞர்களிடம் விசாரணைகளையும் சித்திரவதைகளையும் முடித்தபின்னர், அடுத்த கிராமத்திற்கும் சென்று அதனையே செய்தனர், அதற்கடுத்த கிராமத்திலும் அதனையே தொடர்ந்தனர். கிட்டத்தட்ட ஒரேவகையான போக்கை பின்பற்றினர். இரவுநேரங்களில் அதிகாரிகள் போதையில் இருந்தமையினால், அடிகளும் துன்புறுத்தல்களும் இரவுநேரங்களிலேயே வழக்கமாக நடத்தப்பட்டன. தடுக்கப்பட்டிருந்தவர்களினால் வாசிக்க முடியாத, புரிந்துகொள்ள முடியாத சிங்களமொழியில் எழுதப்பட்டிருந்த ஒப்புதல் வாக்குமூலங்களுக்கு கைச்சாத்திட உந்தப்பட்டனர், இல்லையேல் வெற்றுக்காகிதங்களில் கைச்சாத்திடச்செய்த பின்னர், அதிகாரிகள் தாம் விரும்பியவற்றை அதில் எழுதிக்கொள்ளக்கூடிய வகையிலும் நிலைமை இருந்தது. சிலநேரங்களில் ஆடை களையப்பட்டு, தலைகீழாக தொங்கவிடப்பட்டு, தாக்கப்பட்டு முடிந்தபின்னர் பயங்கரவாத அல்லது குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தடுத்துவைக்கப்பட்டவரிடம், அடுத்த அறையில் அவரின் மனைவி விசாரணைக்காக கொண்டுவரப்பட்டிருக்கிறார் எனக்கூறுவார்கள். தனது மனைவியும் அதே விதத்தில் சித்திரவதையை எதிர்கொள்ளவேண்டிவரும் என்று பதறி, உடனேயே ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பமிட உடன்படுவார்கள்.

“விடுவிக்கப்பட்டவர்களில் பலர், தமக்கு நடந்த கொடூரமான சம்பவங்கள் குறித்து எமக்குக் கூறியிருப்பினும், பாதுகாப்புப் படையினர் அல்லது சட்ட அமுலாக்க அதிகாரிகளினால் தாம் பழிவாங்கப்படலாம் என்கிற அச்சத்தின்பேரில், தங்கள் அனுபவங்களை பொதுவில் பகிர்ந்துகொள்ளவோ அல்லது இழப்பீட்டை சட்டரீதியாக முன்னெடுப்பதற்கோ தயங்குகிறார்கள்”

என அபேகோன் கூறினார்.

“நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பான்மையானோர் தமது சமூகங்களுக்கு திரும்பும்போது மீள்இணைவதில் சிக்கல்களை சந்திக்கிறார்கள். பலர், காவலில் இருந்தபோது அனுபவித்த துன்புறுத்தல்களினால் ஏற்பட்ட காயத்தினால் இன்னும் வலியுடன் வாழ்கிறார்கள். அத்துடன், நித்திரையின்மை மற்றும் விரக்தியினால் அவதிப்படுவதுடன் பலநேரங்களில் அவர்களது சமுகத்தினரால் விலத்தியும்வைக்கப்படுகிறார்கள்”

என அபேகோன் விளக்கமளித்தார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு

இராணுவ – நீக்கம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம் பற்றிய ஏகோபித்த குரல்கள் பரவலாக எழுந்திருந்தாலும், ‘தேசிய பாதுகாப்புக்கு’ குறிப்பிட்டளவு அச்சுறுத்தல் நிலவுவதாக கூறி அரசாங்கமானது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் வடக்கு – கிழக்கில் ஸ்திரமான இராணுவ இருப்பின் தேவை குறித்து தொடர்ச்சியாக ஒரு உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்துவந்துள்ளது. மேலும் அரசாங்கமானது, ISIS அமைப்புடன் உள்நாட்டுத் தொடர்புகள் இருக்கலாம் எனக்கூறி உளவுத்துறை அமைப்புகளை உயர் எச்சரிக்கையில் வைத்திருந்து, பயங்கரவாத – எதிர்ப்புச் சட்டங்கள், கண்காணிப்பு, இராணுவ தரிப்பு போன்றவற்றுக்கான தேவையை சட்டரீதியாக உறுதிப்படுத்தியிருக்கிறது.

1978 முதல் அமுலில் இருக்கும் பயங்கரவாத – எதிர்ப்பு சட்டமான, பயங்கரவாத – தடைச் சட்டமானது, வெற்றிகரமாக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அதன் உக்கிரத்தினால் பாதிக்கப்பட்டவர்களை, பொதுமக்களின் பார்வையில் மனிதத்தை இழக்கும்படி செய்திருக்கிறது. ஒரு தனிமனிதன் குற்றவாளியெனவோ நிரபராதியெனவோ தீர்மானிப்பது எமது கைகளில் இல்லை. அதனால்தான் இந்தச் செயற்பாட்டை நிறைவேற்றுவதற்கு சட்டங்களை நம்பியிருக்கிறோம். ஆனால், ஒரு நியாயமற்ற செயன்முறையை சட்டரீதியாக்குவதற்கென்றே ஒரு சட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தால், அது குறித்து நாமனைவரும் வருந்தியேயாகவேண்டும். சட்டத்தின்கீழ் ஒவ்வொருவரும் சமம், அதனால் ஒவ்வொருவரும் அதன் உகந்த செயன்முறைக்கு உரியவர்கள். அடிப்படை உரிமைகள் இவை. விவாதமோ, சமரசமோ இதில் தேவையற்றது. இத்தகைய உரிமைகளை முன்னிறுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு. அத்துடன், இத்தேசத்தின் குடிமக்களாகிய நாமும் அதனை செயற்படுத்துவதற்கு உறுதிபூணவேண்டும்.

  • பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

மரிசா டி சில்வா