படம் | Malayagakuruvi

புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டின் கம்பியின் நடுப்பகுதியான சுமார் நான்கு அடி உயரத்தில் ஆறு அடி உயர இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று புஸ்ஸல்வை நகரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொலிஸ் பாதுகாப்பிலிருந்த ஒரு கைதி எவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முடியும் என்ற நியாயமான கேள்வியை எழுப்பி அங்குள்ள மக்கள் வீதி மறியல் போராட்டம் நடத்தினர்.

அந்த இளைஞன் தற்கொலை செய்துகொள்ளவில்லை, பொலிஸார்தான் அவரை அடித்துக் கொலைசெய்துள்ளனர் என மக்கள் பிரதான பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து, அமைச்சர் திகாம்பரம் மற்றும் வேலுகுமார் எம்.பி. ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களை அமைதியடைச் செய்ய முயற்சித்ததுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் தரப்பிலிருந்து உறுதிமொழியையும் பெற்றுக்கொடுத்தனர்.

அத்துடன், புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலைய உப பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் இடைநிறுத்தம் செய்யப்பட்டனர். இதனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

புஸ்ஸல்லாவயைச் சேர்ந்த 30 வயதுடைய நடராஜா ராமச்சந்திரன் என்ற இளைஞனே இந்த மர்ம மரணத்தைத் தழுவியுள்ளார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் சிறைக்கூண்டுக்குள் நடந்ததாகக் கூறப்படும் இந்த சர்ச்சைக்குரிய மரணம், நாட்டின் பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தச் சம்பவத்தில் மரணமடைந்த ராமச்சந்திரனின் உடலை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும், இதனூடாகவே இது கொலையா அல்லது தற்கொலையா என்பதைக் கண்டறியமுடியும் என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கடந்த திங்கட்கிழமை அறிக்கையொன்றினூடாக வலியுறுத்தியிருந்தது.

இவ்வாறான நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை முழுமையான விளக்கத்தை வழங்கியிருந்தார் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க. பொலிஸாரின் தவறு காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் வழங்கியிருந்த விளக்கத்தில்,

“உயிரிழந்த இந்த இளைஞர் புஸ்ஸல்லாவை ரொஸ்வெல் தோட்டம் வை.ஆர்.சீ. பிரிவில் வசித்து வந்த 30 வயது தொழிலாளியாகும். அனுமதிப்பத்திரம் இல்லாமல் ரா (கள்ளு) 750 மில்லிலீற்றர் மேலதிகமாக தமது கைவசம் வைத்திருந்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டு எல்பொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அதன் பின்னர் சமூகசேவை மீறலுக்காக பிடியாணையொன்று அவர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரகாரம் கடந்த 17ஆம் திகதி புஸ்ஸல்லாவை நகரில் வைத்து அந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

“அவர் சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டபோது பச்சைநிற ரீ சேர்ட்டும் நீலநிற டெனிம் காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும் வெளிப்புற, உடற்காயங்கள் எதுவும் இருக்கவில்லை என்றும் பதிவாகியுள்ளது. பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பில் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்காணித்து பதிவிடவேண்டும் என்ற பொலிஸ் ஒழுங்குவிதியொன்று இருக்கிறது. பொதுவாக சிறைக்கூடம் கண்காணிப்புக்குத் தெரியக்கூடியதாகவே அமைந்திருக்கும் என்கின்றபோதிலும் இந்தப் பொலிஸ் நிலையத்தில் அப்படி அது அமைந்திருக்கவில்லை. அதுமட்டுமல்லாது, இந்தச் சம்பவத்தில் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படவேண்டிய கண்காணிப்பின் பதிவு இதில் இடம்பெறவில்லை. அந்த கண்காணிப்பானது ஒரு மணிநேர இடைவெளியில் பதிவாகியுள்ளது. அதாவது, 17ஆம் திகதி 6.40 மணிக்கு இடம்பெற்றது, பின்னர் 7.40 மணியளவில். இவ்வாறான நிலையில், கடமையில் இருந்த அதிகாரிக்கு சிறைக்கூடத்தினுள் சத்தமொன்று கேட்டு அங்குபோய் பார்த்தபோது சந்தேகநபர் தாம் அணிந்திருந்த ரீ சேர்ட்டை சிறைக்கூட கம்பியில் சுருக்கிட்டு அதில் தூக்கிட்டுத் தொங்கியவாறு பின் கம்பிகளில் படும் வகையில் துடித்துக்கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிறைக்கூடத்தின் பிரதான கதவு திறக்கப்பட்டு ஏனைய அதிகாரிகளின் உதவியுடன்  சந்தேகநபரை தூக்கிலிருந்துவிடுவித்து சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது அங்கு அவரைப் பரிசோதித்துப் பார்த்த வைத்தியரால் சந்தேகநபர் உயிரிழந்துவிட்டதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்வரும் 23ஆம் திகதி மஜிஸ்ட்ரேட் விசாரணைகள் இடம்பெறவுள்ளதுடன், உயிரிழந்தவரின் உடற்கூறுகள் இரசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் தமது கடமையிலிருந்து தவறியிருந்தாலோ அல்லது ஒழுக்கத்தை மீறி நடந்திருந்தாலோ உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தனது நீண்ட விளக்கத்தை முன்வைத்திருந்தார் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க.

பொலிஸாரின் தவறு காரணமாகவே இந்த  மரணம் சம்பவித்துள்ளது என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இது தற்கொலையா? கொலையா? என்ற உண்மையை வெளிக்கொணரவேண்டிய பொறுப்பு அரசுக்குள்ளது. இந்தச் சம்பவம் மலையக மக்கள் மத்தியிலும், ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சட்டத்தின்மூலம் உண்மை வெளியுலகுக்கு வரும்வரை அமைதியுடன் காத்திருக்க வேண்டும்.

பாரதி