படம் | Amantha Perera Photo, SRILANKA BRIEF

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முக்கியமானதொரு தினமாக அமைந்திருந்தது. பலவந்தமான அல்லது தன்னிச்சையற்ற காணாமல்போதல்களுக்கு ஆளானவர்கள் பற்றி விசாரிப்பதற்கு முதலாவது நிரந்தர நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு அன்றை தினத்திலேயே இலங்கை நாடாளுமன்றம் சட்டமொன்றை இயற்றியிருந்தது. பாதிக்கப்பட்டோருக்கு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் இறுதியாக பதில்களை வழங்கவும் மௌனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடியதாகவும் இருக்கலாம். ஏனெனில், பாதிக்கப்பட்டவர்களில் பலரும் பல்வேறு விசாரணைகளின் முன்னிலைக்கு சென்றிருந்தபோதிலும் அவற்றினால் எந்த பெறுபேறுகளும் கிடைத்திருக்கவில்லை.

ஆகஸ்ட் 11 பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமான தினமாக இருந்த அதேநேரம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களானது கடந்தகால விடயங்களை புரிந்துக்கொள்வதை பொறுத்தவரையில் இலங்கையர்களினால் முகம்கொடுக்கப்பட்ட கடும் சவால்களை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தன. காணாமல்போனோர் பற்றிய அலுவலக சட்டமூலமானது நாடாளுமன்றத்தினால் 2016ஆம் ஆண்டு மே மாதம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு அதை நீதிமன்றத்தில் கேள்விக்கு உட்படுத்துவதற்கும், அதற்கு திருத்தங்களை கொண்டு வருவதற்கும் போதுமான கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தபோதிலும் கூட, சில எம்.பிக்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் மிகவும் வெறுக்கத்தக்க வகையிலும் நடந்து கொண்டனர். உண்மையை கண்டறிவதில் ஆயிரம் கணக்கானோருக்கு இருக்கக்கூடிய யாதேனும் நம்பிக்கையை இழக்கச் செய்வதற்கும் அவர்கள் முயற்சித்திருந்தனர்.

சில எம்.பிக்களின் கோமாளித்தனங்கள் நல்லிணக்கத்துடன் சம்பந்தப்பட்ட முக்கியமான விடயமொன்றை கலந்துரையாடுவதற்கான விவாதமொன்றுக்கான சந்தர்ப்பத்தை ஏனைய பலரிடத்தில் இருந்தும் பறித்திருந்ததுடன், கடந்த காலத்தை எதிர்கொள்வதற்கான முயற்சியையையும் இலங்கையர்களிடத்தில் இருந்து அபகரித்திருந்தன. அந்த சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டிருந்த போதிலும் கூட, சிலரது கோமாளிதனங்களுக்கு அந்த சட்டமூலம் பணையக்கைதியாக சிக்கிக் கொள்ளாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. உள்ளிட்ட பிரதான கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்படுவது இயலுமாக்கப்பட்டுள்ளது.

காணாமல்போதல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான நிரந்தர நிறுவனமொன்றை ஸ்தாபிக்கும் சட்டமொன்று தற்போது எமக்கு இருக்கின்ற போதிலும் கூட, இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பில் சரியான எண்ணிக்கையுடன் கூடிய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் எம்மிடம் கிடையாது. அண்மையில் தமது நடவடிக்கைகளை நிறைவு செய்திருந்த பரணகம ஆணைக்குழுவுக்கு காணாமல்போனோர் தொடர்பில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைபாடுகள் கிடைத்திருந்தன. பல வருடங்களாக பல்வேறுபட்ட ஆணைக்குழுக்களும் மேலும் ஆயிரக்கணக்கான முறைபாடுகளை பெற்றுள்ளன. இலங்கை முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் பதில்களை தேடிக்கொண்டிருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது. பல சந்தர்ப்பங்களிலும், தங்களது அன்புக்குரியவர்களை கண்டறியும் அயராத நம்பிக்கையுடன் அல்லது குறைந்தபட்சம் பதில்களையாவது பெற்றுக்கொள்வதற்காக குடும்ப உறுப்பினர்கள் ஒரு விசாரணையில் இருந்து இன்னுமொரு விசாரணைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். பல்வேறு சிரமங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும், எமது அன்புக்குரியவருக்கு என்ன நடந்தது? என்பதே இந்தத் தேடலின் அடிப்படை கேள்வியாக இருக்கிறது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் என்றால் என்ன?

காணாமல்போனோர் அலுவலகம் என்பது அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 7 உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீன அலுவலகமொன்றாகும். காணாமல்போனோர் அலுவலகத்தின் உறுப்பினர்களானவர்கள் மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்டம், மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் ஏனைய துறைகளின் மத்தியிலும் உண்மையை கண்டறிதல் தொடர்பில் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நபர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பினருக்கும் 3 வருடங்கள் கொண்ட பதவி காலம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறான உறுப்பினரொருவரால் இரு தடவைகள் மட்டுமே அந்தப் பதவியை வகிக்க முடியும் என்ற ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைமையகமானது கள அலுவலகங்களை கொண்டிருக்கலாம் என்ற தெரிவுடன் கொழும்பில் அமைந்திருக்கும். காணாமல்போனோர் அலுவலகத்துடன் தொடர்புகளில் ஈடுபடுவதற்கு வசதியளிக்கும் வகையில் அந்த அலுவலகமானது கள பிரசன்னங்களை கொண்டிருக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

காணாமல்போதல்கள் தொடர்பில் தம் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட முறைபாடுகள் தொடர்பில் விசாரணை, கண்டறிதல் மற்றும் தேடுதல்களை மேற்கொள்வதற்கான ஆணையை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் கொண்டுள்ளது. ஆகவே, உண்மையைக் கண்டறியும் அங்கமொன்றாக இருக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பதில்களுக்கான தேடலில் பாதிக்கப்பட்டோரும் ஈடுபடக்கூடிய நிரந்தர நிறுவனமொன்றாக இருக்கிறது என்பதே ஆரம்பத்திலேயே எழுப்பப்பட்டிருக்க வேண்டிய முக்கியமானதும் அடிப்படையானதுமான விடயமாகும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிரந்தரத் தன்மையின் காரணமாக, பல ஆணைக்குழுக்கள் எதிர்கொண்டதை போன்று இதனது ஆணையும் புதுபிக்கப்படுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்த ஏற்பாடானது காணாமல்போனோர் அலுவலகம் முழுமையாகவும் எந்தவொரு காலக்கெடுவினாலும் அவசரப்படாமலும் விசாரணைகளை நடத்துவதற்கு வழிச்செய்கிறது. தேடுதல் அலகொன்றுக்கான ஏற்பாடுகளை சட்டம் வழங்குகின்றபோதிலும், சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்குத் தேவையான நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அலுவலகம் பெற்றுக்கொள்ள இயலச்செய்வதை உறுதிப்படுத்தி ஏனைய அலகுகள் அல்லது பிரிவுகளை ஸ்தாபிப்பதற்கான விருப்புரிமையையும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் கொண்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் போரால் பாதிக்கப்பட்டவர்கள், அதன் பின்னர் அல்லது “போரின்போது காணாமல்போனவர்” என்று வகைப்படுத்தப்பட்ட நபரொருவர், அல்லது அரசியல் அமைதிகுலைவு அல்லது குடியியல் குழப்பங்களால் பாதிக்கப்பட்டவர் அல்லது அனைத்து நபர்களையும் பலந்தமான காணாமல்போதல்களில் இருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனத்தில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளமைக்கு அமைய பலவந்தமான காணாமல்போதல் சம்பவத்திற்கு ஆளானவர் என காணாமல்போன நபர் என்பவர் சட்டத்தில் பரந்தளவில் வகைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த பரந்தளவிலான வகைப்படுத்தலானது பலவந்தமான காணாமல்போதல்கள் மற்றும் காணாமல்போன நபர்கள் ஆகிய இரண்டு விடயங்களும் உள்வாங்கப்படுவதை உறுதிசெய்யும் அதேநேரம், சமாளிக்க முடியாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான முறைபாடுகள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு குவியக்கூடிய எதிர்மறையான விடயமும் இதில் காணப்படுகிறது. மேலும், பலவந்தமான காணாமல்போதல்கள் மற்றும் காணாமல்போன நபர்கள் ஆகிய இரு விடயங்களையும் விசாரிக்கும் ஆணை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு இருக்கின்ற போதிலும், காணாமல்போனோர் அலுவலகம் பற்றிய தலைப்பில் பலவந்தமான காணாமல்போதல்கள் தொடர்பில் குறிப்பெதுவும் இல்லாமல் இருப்பது தொடர்பில் பாதிக்கப்பட்டோரில் சிலர் கவலை எழுப்பியுள்ளனர். பரந்த செயற்பரப்பை அனைத்து பாதிக்கப்பட்டோரில் அனைவரும் புரிந்துக்கொள்வதை உறுதிசெய்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பிலான விளக்கப்படுத்தல்களின் போது இதைத் தெளிவுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று நம்பலாம்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் ஆணையானது விசாரணை செய்வதற்கு குறிப்பான அதிகாரங்களை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் வழங்குவதுடன், இந்த அதிகாரங்களானது சட்டத்தில் மிகத் தெளிவாக விதந்துரைக்கப்பட்டுள்ளன. எனினும், காணாமல்போனோர் அலுவலகத்தை மிகவும் பயங்கரமானது என்றும் யுத்த வெற்றி வீரர்களின் பொறுப்புக்கூறலுக்கு அது கதவை திறந்துவிடும் என்றும் கூறி சில விமர்சகர்கள் வேண்டுமென்றே உண்மைகளை திரித்து கூறுகின்றனர். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையில் குற்ற விசாரணை அல்லது வழக்கு விசாரணை மேற்கொள்வது பற்றி எதுவும் சொல்லப்பட்டிருக்காத நிலையிலும் – பாதிக்கப்பட்டோருக்கு இறுதியாக பதில்களை வழங்கக்கூடிய விசாரணைகளுக்கு மட்டுமே ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் – எப்படி அவ்வாறானதொரு செய்பணி சாத்தியமானதாக இருக்கும் என்பதே அந்த விமர்சகர்களுக்கான கேள்வியாக இருக்கிறது. உண்மையை அறிந்துகொள்ளும் உரிமை பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டு என்பதையும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்காகவே பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதாக ஒருவர் நியாயப்படுத்தினாலும் கூட, அவ்வாறான ஆணைக்குழுக்களின் முன்னிலைக்கு சென்ற பலரும் இன்னும் பதில்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் விசாரணைகளில் சான்று கட்டளைச்சட்டம் உள்வாங்கப்படாமையை குற்ற விசாரணைகளுக்கு போலியான சான்றுகள் திரட்டப்பட்டிருக்கக்கூடிய சாத்தியமான நிலைமையுடன் ஒப்பிட்டு ஏனைய விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் என்பது குற்றவிசாரணைக்கான அதிகாரங்கள் இல்லாத, பதில்களை தேடுவதற்கான ஆணையொன்றுடன் கூடிய வெறுமனே உண்மையை கண்டறியும் அங்கமாகும் என்பதே இங்கு மேலோங்கி நிற்கும் விடயமாகும். குற்றவியல் நீதி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விடயங்களுக்கு மட்டுமே சான்று கட்டளைச்சட்டம் பொருத்தமானதாகும். மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்திலும் இதேபோன்ற ஏற்பாடுகளைக் காணலாம்.

இதேநேரம், அண்மையில் சட்டமாக இணைக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைக்கான சட்டம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நடைமுறை சாத்தியமற்றதன்மை தொடர்பில் உண்மையில் தவறான அறிவித்தல்களை மேற்கொள்ளும் சில விமர்சகர்களும் இருக்கின்றனர். அது தவறாகும். தகவல்கள் இரகசியமாக வழங்கப்படும் மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களை தவிர தகவல் அறியும் உரிமை சட்டம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு உபயோகிக்கப்படும். அதை அறிந்து கொள்வதற்கு காணாமல்போனோர் பற்றிய அலுவலக சட்டத்தின் 15(1) ஆம் பிரிவை ஒருவர் வாசிக்க வேண்டும். “காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், அலுவலரும், சேவையாளரும் மற்றும் ஆலோசகரும் இரகசியமாக அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட கருமங்கள் தொடர்பாக இரகசியத்தன்மையை பேணி பாதுகாக்கவும் பேணி பாதுகாத்தலில் உதவவும் வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஏற்பாடுகள் அத்தகைய தகவல்கள் தொடர்பாக ஏற்புடையதல்ல” என்று அந்தப் பிரிவில் விதந்துரைக்கப்பட்டுள்ளது. இது பின்னர், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தினால் சட்டமாக்கப்பட்ட 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துடன் ஒப்பிடப்பட வேண்டும். அந்தத் திருத்தத்தில் அடங்கியுள்ள 14(அ) உறுப்புரையானது தகவல் அறியும் உரிமைக்கான ஏற்பாட்டை உபயோகப்படுத்தலில் குறித்த சில கட்டுப்பாடுகளுடன் அறிமுகப்படுத்தியது. “அவ்வாறான கட்டுப்பாடுகள் ஜனநாயக சமூகமொன்றில் அத்தியாவசியமானவை என்று சட்டத்தினால் குறித்துரைக்கப்பட்டுள்ளன. இரகசியமாக அறிவிக்கப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுவதை தடுப்பதற்கு…” என்பதும் அதில் உள்ளடங்குகிறது. அதேபோல், மூன்றாவது தரப்பொன்றினால் பொது அதிகாரியொருவருக்கு இரகசியமாக வழங்கப்பட்ட தகவல்களை அணுகுதல் பற்றிய கட்டுபாடுகள் 2016ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 5(1)(ஊ), (எ), (ஏ) மற்றும் (ஐ) பிரிவுகளின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்புக்கான 14(அ) உறுப்புரையும் தகவல் அறியும் உரிமை சட்டமும் முழுமையாக வாசிக்கப்பட்டால், தகவல்களை அணுகுதல் தொடர்பில் நல்ல காரணங்களுக்காக சில கட்டுபாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன என்பதை ஒருவரால் அறிந்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் எல்லைக்கு ஏனைய அனைத்தும் பகிரங்கமானதாகும். ஆகவே, காணாமல்போனோர் பற்றிய அலுவலகமானது தகவல் அறியும் உரிமை சட்டத்தினால் தவிர்க்கப்பட்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது. மாறாக, சட்டத்தினால் விதந்துரைக்கப்பட்ட குறித்த சில சந்தர்ப்பங்களை தவிர அது தகவல்களை வழங்க வேண்டியிருக்கும். சில விமர்சகர்கள் இந்த விடயம் தொடர்பில் வெளியிடும் தீர்மானங்களானது சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டத்தை முழுமையாக உள்வாங்குவதில் தவறவோ அல்லது போலியான தகவல்களை பரப்புவதன் மூலம் குழப்புவதற்கு திட்டமிட்டு முயற்சிக்கவோ செய்வது உண்மையில் துரதிர்ஷ்டவசமான விடயமாகும்.

சட்டரீதியான பாதுகாப்புகளுக்கு அப்பால், நடைமுறை சார்ந்த விடயமொன்றின் தேவையும் இங்கு காணப்படுகிறது. அதாவது, பாதிக்கப்பட்ட ஒருவரால் அல்லது சாட்சியாளரினால் வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மையின் தரம் பேணப்படுவது அவசியமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களும் சாட்சியாளர்களும் உத்தியோகபூர்வ விசாரணைகளுடன் தொடர்புபட்டமைக்காக ஏனைய விடயங்களுக்கு மத்தியில் அச்சுறுத்தப்பட்ட மற்றும் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்ட நிலைமைகளை கடந்த கால அனுபவங்கள் கோடிட்டு காட்டுகின்றன. நபர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் கண்காணிப்புகளுக்கும் முகம் கொடுத்திருந்த மிக அண்மைய ஆணைக்குழுவாக பரணகம ஆணைக்குழு அமைந்திருந்தது. இரகசியமாக வழங்கப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதையும் அடையாளங்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதையும் உண்மையை தேடுவதற்கான தமது ஆணையில் நேர்மையாக இருக்கும் யாதுமொரு சுயாதீன விசாரணையும் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறான பாதுகாப்புகள் இல்லாமல் இருப்பதானது காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தாது என்பதுடன், சாத்தியமான பாதுகாப்பு பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கக்கூடும்.

முன்னைய முன்னெடுப்புகளில் இருந்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் எப்படி வித்தியாசப்படுகிறது?

பல்வேறு விசாரணை ஆணைக்குழுக்கள் உட்பட அரசினால் செயற்படுத்தப்பட்ட விசாரணைகளின் நீண்டதொரு பட்டியல் இலங்கையிடம் இருக்கிறது. அவற்றில் பலவும் தனியாக பலவந்தமான காணாமல்போதல்கள் பற்றியதாகும். ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டோர் கடந்த கால நிகழ்வுகளையும் துஷ்பிரயோகங்களையும் விவரித்து நீதிவேண்டி பல்வேறு முன்னெடுப்புகள் முன்னிலையில் சென்றுள்ளனர். காணாமல்போன தங்களது உறவுகள் பற்றி பேசுவதற்கும் பதில்களை கோரியும் குடும்பங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு போன்ற அண்மைய ஆணைக்குழுக்களின் முன்னிலைக்கு செல்வதை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நான் கண்டிருக்கிறேன். பல சந்தர்ப்பங்களிலும் அவர்களது கௌரவம் பறிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் அவர்களது கேள்விகள் பதிலளிக்கப்படாமலேயே இருந்துள்ளன. அவ்வாறான அனுபவங்களானது நம்பிக்கை, விரக்தி, ஆத்திரம், சோர்வு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் மற்றும் மேலும் பல சிக்கலான உணர்வுகள் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட பல அரச முன்முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. அத்துடன், இன்னுமொரு ஆணைக்குழு அதிலிருந்து வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை அங்கு கிடையாது.

கடந்த கால முன்முயற்சிகளில் இருந்து காணாமல்போனோர் அலுவலகம் ஏன் வித்தியாசப்பட்டிருக்கும்? என்று மேற்கண்ட அனைத்தும் கேள்வி எழுப்புகின்றன.

  • முதலாவதாக, அது வரையறுக்கப்பட்ட கால இடைவெளியொன்றை கொண்ட விசாரணையொன்று கிடையாது. அதுவொரு நிரந்தரமான அங்கமாகும். அதாவது, காணாமல்போதல்கள் பற்றிய சம்பவங்களை விசாரிப்பதற்கு அதற்குத் தேவையான வளங்களும் நிபுணத்துவமும் இருக்க வேண்டும்.
  • காணாமல்போனோர் பற்றிய அலுவலகமானது விசாரிப்பதற்கான குறிப்பிடத்தக்க அதிகாரங்களுடன் நாடாளுமன்ற சட்டமொன்றினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. முன்னர் நியமிக்கப்பட்ட கட்டமைப்பு ரீதியாக குறைபாடுகளைக் கொண்ட ஆணைக்குழுக்களில் இருந்து இதுவொரு முன்னேற்றமாகும்.
  • காலப்பகுதி அல்லது புவியியல் ரீதியான பிரதேசங்களைப் பொறுத்த வரையில் காணாமல்போனோர் அலுவலகத்துக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. காணாமல்போனோர் தொடர்பான அனைத்து சம்பவங்களையும் அதனால் ஆராய முடியும்.
  • தகவல்களை வழங்குவதற்கோ அல்லது முறைபாடு செய்வதற்கோ யாரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னிலைக்கு செல்ல முடியும்.
  • நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏனையவர்களுக்காக காத்துக்கொண்டிருக்காமல் பாதிக்கப்பட்டோருடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் முடியும்.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதையும் வன்முறைகள் மீள இடம்பெறுவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்வதற்கு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் ஏனைய அரசாங்க நிறுவனங்களுடன் பணியாற்ற முடியும்.
  • பாதுகாப்பு விவகாரங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதையும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துடன் தொடர்பை கொண்டிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்கப்படும் நடவடிக்கைகளுக்கு முகம்கொடுக்காமல் இருப்பதையும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகாரங்கள் உறுதிபடுத்த முடியும். அதேபோல், நம்பிக்கையின் பேரில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் என்பதுடன், அவ்வாறான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு சாட்சியாளர்கள் அச்சப்பட தேவையில்லை.

தலையீடு பற்றிய அச்சமின்றியும் பாதிக்கப்பட்டோரை மையப்படுத்திய அணுகுமுறையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியும் நம்பகரமான முறையில் பணியாற்றுவதற்கான வளங்கள், நிபுணத்துவம் மற்றும் சுயாதீனத்தன்மை ஆகியவற்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு வழங்குகின்றன என்ற வகையில் இவை வரவேற்கத்தக்க நடவடிக்கைகளாகும். காணாமல்போனோர் அலுவலகம் என்றால் என்னவென்பது தொடர்பில் அரசாங்கமும் ஏனையவர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தேவையான வளங்களையும் நிபுணத்துவத்தையும் அதற்கு வழங்குவதும் மற்றும் விசாரிப்பதற்கும் தங்களுக்கு பதில்களை வழங்குதவற்கும் நம்பகரமான பொறிமுறையொன்றாக அதை பாதிக்கப்பட்டோர் நம்பக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்வதும் தற்போது மிகவும் முக்கியமாகும்.

காணாமல்போனோர் அலுவலகம் எதற்கு தற்போது முக்கியம்?

இலங்கை முழுவதிலுமுள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்களுக்கு காணாமல்போன அவர்களது அன்புக்குரிய உறவுகள் எங்கிருக்கின்றனர் என்பது பற்றி பதில்களை வழங்குவதற்கு அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் முயற்சித்துள்ள அதேநேரம், தோல்வியடைந்துள்ளன. விசாரணைகள், குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் என அனைத்தும் பல ஆண்டுகளாக பதில்களை கண்டறியும் அடிப்படை பணியிலக்கில் தோல்வியடைந்துள்ளன. அவ்வாறான முன்முயற்சிகள் தொடர்பில் நம்பிக்கையீனம் கொண்டிருந்த போதிலும், அடுத்த முன்னெடுப்பு பதில்களை வழங்கக்கூடும் என்ற நம்பிக்கையுடன் ஆயிரங்கணக்கான மக்கள் தொடர்ந்தும் அதில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முன்முயற்சிகளிலான தோல்விகள் மற்றும் கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் என்பனவே விசாரிப்பதற்கும் பதில்களை கண்டறிவதற்கும் தேவையான அதிகாரங்களுடனான புதிய நிறுவனமொன்றுக்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

பேராவல் மிக்க மறுசீரமைப்புகள் பற்றி இலங்கையர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பொன்றும் அதேபோல், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை நிறைவேற்றும் மறுசீரமைப்புகளும் விரைவில் வரவுள்ளன. இலங்கையர்களில் பலருக்கும் அற்புதமான நேரமான புதிய இலங்கையொன்று பற்றிய உறுதிமொழியையும் இந்த மறுசீரமைப்புகள் கொண்டுள்ளன. இதற்கு மத்தியில் இலங்கை முழுவதிலுமுள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் அவர்களது அன்புக்குரிய உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்கின்றனர். இந்த குடும்பங்களுக்கு புதிய அரசியலமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதி பற்றிய வாக்குறுதிகளானது வெறுமையானதொன்றே. அவர்களை பொறுத்த வரையில் அறிந்துக் கொள்வதற்கான அடிப்படை உரிமையானது இன்னும் மாயையொன்றாகவே காணப்படுகிறது.

இந்தத் தவறுகளை திருத்திக் கொள்வதற்கு காணாமல்போனோர் அலுவலகம் வாய்ப்பொன்றை வழங்குகிறது. அலங்காரச் சொற்களுக்கு அப்பாற் செல்வதற்கும் தங்களது அன்புக்குரிய உறவுகளை இன்னும் தேடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு பல வருடங்களாக தோல்விகண்ட முயற்சிகளுக்குப் பின்னர் இறுதியாக பதில்களை வழங்கக்கூடிய பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்கும் இதுவே நேரமாகும். மீண்டும் ஒருபோதும் நடக்காது என்று இறுதியாக ஒருமுறை சொல்வதற்கும் இதுவொரு வாய்ப்பாகும்.

பவானி பொன்சேகா

The Office on Missing Persons: A New Chapter or Another Empty Promise? என்ற தலைப்பில் கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.