படம் | Selvaraja Rajasegar Photo

வறுமையே வாழ்வானதே! வாழ்க்கையே வறுமையானதே!

தலைவிரித்தாடும் வறுமைக்குதான் விடியலும் இல்லையா?

காடுகளிலும் மலைகளிலும் கரைந்துபோகும் உழைப்புக்குதான்

ஊதியமும் இல்லையா? கடவுளே எம்மீதும் கருணை கொள்வாயா?

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளர்களின் தேசிய தினம் உலகலாவிய ரீதியில் இன்று கொண்டாடப்படுகின்றது. உணர்வுபூர்வமாக உலகெங்கும் தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்பட்டாலும், எமது மலையக மண்ணில் இன்று தொழிலாளர் தினம் ஒரு கரிநாளாகவே அனுஷ்டிக்கப்படுகிறது.

200 வருடங்களுக்கு மேல் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகத் திகழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்கள் இன்னமும் அன்றாட உணவுக்கு அல்லல்படும் ஒரு துர்ப்பாக்கிய வாழ்வையே வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கையில் ஏனைய மக்களின் வாழ்க்கைத்தரம் அபிவிருத்தியடைந்துச் செல்லும் சூழலில் மலையக மக்களின் வாழ்க்கைச் செலவு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்த நாட்டின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஒரே ஒரு சமூகமாக மலையக மக்கள் காணப்படுகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் ஒரு வருடமும் ஒரு மாதமும் கடந்துள்ளதால் இன்று எமக்கு கரிநாள் அதனைக் கருப்புக்கொடி ஏந்தியே வரவேற்போம் என்று மலையக மக்கள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 1886இல் ஏற்பட்ட தொழிலாளர் புரட்சி பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைச் சந்தித்து இன்று 130ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. உலகளாவிய ரீதியில் பெரும்பாலான நாடுகளில் தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுத்துள்ள போதிலும், இலங்கையில் இன்னமும் தொழிலாளர்களின் உரிமைகள்  முற்றுமுழுதாக வழங்கப்படவில்லை என்பது வேதனைக்குறிய விடயமாகும். குறிப்பாகத் பெருந்தோட்டத்துறையில் தொழில்புரியும் மக்கள் அடிமை கூலிகளாகவே நடத்தப்படுகிறனர்.

அடிப்படை உரிமை முதல் பொருளாதார, கலாச்சார,  அபிவிருத்தி விடயங்கள் இன்னமும் மலையக மக்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளன. உலக நாடுகளிளெல்லாம் தொழிலாளர்கள் தம்முடைய சுய உரிமையைப் பெற்று வாழும் இந்த தசாப்தத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்ட வேண்டும் என்று மலையகத்தை மையமாகக் கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மகளிர் அமைப்புகள் என்பன கடந்த காலங்களில் பாரிய போராட்டங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்திருந்தாலும் அந்த மக்களுக்கு முழுமையான உரிமைகள் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம்.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம், தோட்டங்கள் தனியார் உடமையாக்கப்பட்ட 1992ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1992ஆம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டுவந்த கூட்டு ஒப்பந்தம் கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் 30 திகதி இறுதியாக கைச்சாத்திடப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி கைச்சாத்திடப்படவிருந்த கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் ஒரு வருடமும் ஒரு மாதமும் கடந்துள்ள நிலையில், அதன் நடைமுறைத் தன்மை தொடர்பில் அரசாங்கமும், கம்பனிகளும் எதிர்வினையாகச் செயற்பட்டு வருகின்றன.

கடந்த ஜனாதிபத் தேர்தலில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் சூடுபிடித்தது. மலையகத்தின் பெரும்பான்மை வாக்கு வங்கியைப் பெற்று ஜனாதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவாகினார் என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இன்றுவரை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டுகொள்ளவும் இல்லை, தாம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள்  கடக்கவுள்ள நிலையில், இன்னமும் மலையகத்திற்குச் சென்று அந்த மக்களை சந்திக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் மைத்திரிக்கு ஆதரவாக வாக்களித்ததால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இருப்புக்கு பங்கம் ஏற்பட்டது. கடந்த 50 வருட அரசியலில் இ.தொ.காவுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சோதனையாகவும் அது அமைந்தது.

மீண்டும் மக்கள் மத்தியில் தமது  செல்வாக்கை நிலைநிறுத்த இ.தொ.கா. பல யுத்திகளை கையாளத் தொடங்கியது. இதன் விளைவே 1,000 ரூபா சம்பளக் கோரிக்கை. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலான பேச்சுகள் சூடுபிடித்ததால் 1,000 ரூபா சம்பள அதிகரிப்புக் கோரிக்கை அரசியல் களத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்டாயம் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்றார்.

ஆனால், நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் கூட்டு ஒப்பந்த விடயம் அரசால் புறந்தள்ளப்பட்ட ஒன்றாக மாறியது. இன்றும் அது தொடர்கதையாகத்தான் உள்ளது. ஏனைய தொழிலாளர்கள் போல் தோட்டத் தொழிலாளர்கள் மே தினத்தை வரவேற்கக் கூடியவர்களாக இல்லை. நாட்டின் வாழ்க்கைச் செலவு பாரிய அளவு அதிகரித்துச் செல்கிறது. ஆனால், தோட்டத்தில் வேலை நாட்களை குறைத்துள்ளமை மாத்திரமின்றி சம்பள அதிகரிப்பும் இழுபறியில் உள்ளதால் கடுமையான பொருளாதார நெருக்கடியை தோட்டத் தொழிலாளர்கள் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாளை முதல் பெறுமதிச் சேர் (வற் வரி) வரியை அதிகரிக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு வரி அதிகரிக்கப்படுமாயின், அதன் முற்றுமுழுதானத் தாக்கம் மலையகத்தையே பாதிக்கும். இலங்கையை பொறுத்தமட்டில் மலையக மக்கள் மாத்திரம் வருமானம் குறைந்தவர்களாகவும், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களாகவும் உள்ளனர்.

இது தொடர்பில் மலையகத் தலைவர்கள் வாய்திறக்காமல் உள்ளனர். சம்பள அதிகரிப்பு வழங்கப்படாதச் சூழலில் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்குமாயின் அதனை எவ்வாறு தோட்டத் தொழிலாளர்கள் ஈடுகொடுக்கப் போகிறார்கள். வரி அதிகரிப்பின் தாக்கம் மக்களைதான் சென்றடையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், வருமானம் குறைந்த மக்களுக்கு ஏனையவர்கள் போல் அதற்கு எவ்வாறு முகங்கொடுக்க முடியும்?

இம்முறை மலையத்தில் இரண்டு மே தினக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியாவில் தமது மே தினக் கூட்டத்தை ஒழுங்குச் செய்துள்ளதுடன், தமிழ் முற்போக்குக் கூட்டணி தலவாக்கலையில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளது. சுதந்திர இலங்கையில் மே தினக் கூட்டத்தை வலதுசாரி கட்சிகளைவிட இடதுசாரி சிந்தனை கொண்ட கட்சிகள்தான் காலங்காலமாக உணர்வுப் பூர்வமாக அனுஷ்டித்து வருவதுடன், இலங்கையில் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க காரணமாகவும் அமைந்துள்ளன. மலையத்தில் சௌமிய மூர்த்தி தொண்டமானுக்குப் பின்னர் மறைந்த மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் சந்திரசேகரன் தொழிலாளர்களின் உரிமைக்கு அஞ்சாது குரல் கொடுத்தவர்.

ஆனால், அவருக்குப் பிற்பட்ட காலத்தில் அதாவது இன்றைய காலப்பகுதியில் மலையகத்தில் தொழிலாளர்களின் உரிமைத் தொடர்பில் ஆணித்தரமாக குரல் கொடுப்பதற்கு எவரும் இல்லை. இலங்கை போன்ற நாடுகளில் மே தினக் கூட்டங்களை அனுஷ்டிக்கும் போது ஏதாவது கொள்கை வகுப்பை வலியுறுத்தியே அனுஷ்டிக்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைக்கு குரல்கொடுத்த பல்வேறு மே தினக் கூட்டங்கள் மலையகத்தில் முன்பு நடந்திருந்தாலும்,  தற்போது அவை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக கைவிடப்பட்டுள்ளன.

இன்று மேடை போட்டு கதைக்கின்றனர், நாளை அவற்றை மறந்துவிடுகின்றனர். எல்லோரும் செய்கிறார்கள்,  நாமும் கூட்டத்தை போட்டுவிடுவோம் என்பதே மலையக அரசியல் வாதிகளின் சிந்தனையாக உள்ளது. அரசாங்கத்தையும்,  அலட்சிய போக்கில் செயற்படும் அரசியல்வாதிகளையும் மே தினத்தில் புறக்கணிக்க வேண்டுமென மலையக புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களாகத் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பை அதிகரிக்க அரசும், முதலாளிமார் சம்மேளனமும் முன்வராவிட்டால் மே தினத்தை புறக்கணிப்போம் எனக் கூறியிருந்தனர்.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமைக்கு அரசு மலையக மக்கள் மீது கருணை கொள்ளாமையே காரணம் என்பது நிதர்சனம். கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் ஒரு தொழிற்சங்கமும், பெரும்பாலானக் கம்பனிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளவைதான். ஐ.தே.கட்சி ஆக்கப்பூர்வமானத் தீர்மானம் எடுத்தால் கண்டிப்பாகத் தோட்டத் தொழிலார்களின் வாழ்வில் ஒளியை ஏற்ற முடியும்.

கடந்த 2014ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் தின உரிமை கோரிக்கைகளாக 15 அம்சக் கோரிக்கைகள் மலையகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டன. அவையாவன,

  1. இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகலும் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்த தனி வீடு கட்டிக் கொடுக்கப்படுவதோடு காணியும் வழங்கப்பட வேண்டும்.
  2. மலையக மக்களிடையே வறுமையையும், கலாச்சார சீரழிவையும், நோய்களையும் ஏற்படுத்தும் மது, போதைப் பொருள் மலையகத்திலிருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டும். இவற்றைப் பயன்படுத்துவதிலிருந்து மலையக மக்களும் விடுபட வேண்டும்.
  3. மலையகத்தில் இடம்பெறும் சிறுவர் மற்றும் பெண் துஷ்பிரயோகம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
  4. மலையகத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் உடைக்கப்படுதல் நிறுத்தப்பட்டு மலையக மக்களின் சமய, கலை, காலாச்சார, விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
  5. மலையகத் தோட்டத் தொழிலாளர்களை குளவி தாக்குதல் போன்ற தொழில் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதோடு இவ்வாறான ஆபத்துக்களுக்கு முகங்கொடுக்கும் தொழிலாளர்களுக்கு நட்டஈடு காப்புறுதி வழங்க தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  6. மலையகத்தில் இடம்பெற்றுவரும் சந்தேகத்திற்கு இடமான கட்டாயக் கருத்தடை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  7. மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுதல் நிறுத்தப்பட வேண்டும்.
  8. மலையக மக்கள் இலங்கை திருநாட்டின் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு சமவுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  9. அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு 700 ரூபா அடிப்படைச் சம்பளமாகப் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கான சலுகைகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.
  10. படித்த மற்றும் வேலை வாப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். படித்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு அரச வேலை வாயப்பும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதோடு ஏனைய இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மலையகத்தில் உற்பத்தித் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
  11. மலையகத்தில் படித்த சமூகம் அரசியல்வாதிகள் பின் சென்று அவர்களில் தங்கியிருக்காமல் தங்களுக்கான சுய அரசியல் சமூக கட்டமைப்பை நிறுவ முன்வந்து எதிர்கால சமூகத்தின் நன்மை கருதி சமூக சிந்தனை மாற்றத்திற்காக உழைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  12. மலையகத்தில் கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்பட மலையக மக்களுக்கென தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.
  13. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மலையக மக்கள் பயன்படுத்தும் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையை உடனடியாக புனரமைப்பு செய்து அதில் காணப்படும் நிர்வாக மற்றும் அடிப்படை வசதிகள் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய உரிய அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.
  14. இலங்கை திருநாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டால் அதில் மலையக மக்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டும்.
  15. ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மலையக மக்களுக்கென்ற தனி அமைச்சு மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

உள்ளிட்டக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சியில் இருந்தது போல் தோட்ட உட்கட்டமைபு அமைச்சு மீண்டும் மலையகத்திற்கு கிடைத்தமை மற்றும் தற்போது பெயரளவில் நடைமுறைக்கு வந்துள்ள தனிவீட்டுத் திட்டம். இவ்விரு விடயங்கள் ஆட்சிமாற்றத்தால் கிடைக்கப்பெற்றுள்ளன. முன்னெடுத்துவரும் தனிவீட்டுத் திட்டத்தின்படி மலையகத்திற்குப் பற்றாக்குறையாக உள்ள வீடுகள் முழுமையாக கிடைக்க இன்னமும் எத்தனை வருடங்கள் செல்லும் எனக் கூற முடியாது.

மலையகத்தில் தலைவிரித்தாடு பிரச்சினைகளில் ஒன்று கட்டாயக் கருத்தடை. 15 இலட்சமாகக் காணப்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் சனத்தொகை இன்று 8 லட்சம் வரை குறைவடைந்துள்ளது. இது ஒரு இன ஒடுக்குமுறைக்குச் சமமானது. அரசாங்கமும், அரசியல் தலைமைகளும் இது தொடர்பில் அக்கறை கொள்ளாமல் உள்ளமையும் கோடிட்டுக்காட்டப்பட வேண்டிய விடயம்.

இந்த மே தினத்திலாவது மலையக அரசியல் தலைமைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான உறுதிமொழியை ஏற்க வேண்டும். தொழிலாளர்களின் தலையிடியாக உள்ள சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுக்காண வேண்டும். இல்லாவிடின் அவர்களின் வாழ்க்கை பாரிய கேள்விக்கு உள்ளாகும். மே தினத்தை உண்மையானத் தொழிலாளர் தினமாக மாற்றியமைக்க தமிழ் முற்போக்குக் கூட்டணியும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும்,  ஏனைய தொழிற்சங்கங்களும், சமூக அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும்.

அத்துடன், புதிய நல்லாட்சி அரசை கொண்டுவர உருதுணையாக இருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது அரசாங்கம் கருணை கொள்வதுடன், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுக்கும், வாழ்வாதாரத்திற்கும் வழிகோலும் கூட்டு ஒப்பந்தத்தை நியாயமான சம்பள அதிகரிப்புடன் கைச்சாத்திடல் வழிகோல வேண்டும் என்பதே தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

நிஷாந்தன் சுப்ரமணியம்