படம் | GETTY IMAGES

அய்லான்.

உலகம் எங்கும் இந்தக் குழந்தையை இப்போது எல்லோருக்கும் தெரியும். ஆனால், துரதிர்ஷ்டம், தன் பெயரை உலகிலுள்ள உதடுகள் உச்சரிக்கும் தருணத்தில் அந்தக் குழந்தை உயிரோடு இல்லை. உலகுக்கு அந்தக் குழந்தை அறிமுகமானதே உயிரற்ற உடலாகத்தான்.

ஆரவரித்தபடி இருக்கும் துருக்கிக் கடலோரத்தில், சிவப்பு நிற ரீ-சேர்ட்டுடனும், நீல நிறக் காற்சட்டையுடனும் ஒருக்களித்த நிலையில் குப்புறக் கிடந்த பாலகன் அய்லானின் சடலம், புகைப்படமாக ஊடகங்களில் வெளியான போது, அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு கதவடைப்புச் செய்த நாடுகளின் கன்னங்களில் ‘பளார், பளார்’ என்று கண்ணுக்குத் தெரியாத கரம் ஒன்று ஓங்கி அறைந்தது.

அந்தக் குழந்தைக்கு என்ன நடந்தது?

சிரியப் போர் நாளுக்கு நாள் தன் கொடும் நாக்குகளால் உயிர்களைக் காவு கொண்டு வருகின்றது. அதிலிருந்து தப்பிப்பதற்காக ஏராளமான சிரிய மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி வேறு நாடுகளுக்கு அகதிகளாக ஓடத் தொடங்கினர். ஆனால், சிரிய அகதிகளை சட்டபூர்வமான உள்நுழைவை பல நாடுகளும் தடை செய்திருந்தன. இதனால், அவர்கள் கள்ளத்தோணிகளாக சட்டவிரோதமாகக் கடல்மார்க்கப் பயணங்கள் மூலமே சிரியாவில் இருந்து வெளியேறி, வேறு நாடுகளில் கால் பதிக்க முடிந்தது. இப்படியான நிலையில்தான் சிரியாவின் 3 வயதுக் குழந்தையான அய்லானும், சகோதரனும் தம் தாய் தந்தையோடு படகொன்றில் பயணத்தைத் தொடங்கினர். பேரலைகள் நடுவே சிறு படகு எப்படித் தாக்குப் பிடிக்கும்? படகுக்கும் அலைக்குமான பெரும் போராட்டத்தில் கடைசியில் அலை வென்றது. படகைத் தின்றது.

அடுத்த நாட் காலை துருக்கிக் கடலோரத்தில் பாலகன் அய்லான், சிவப்பு மேலங்கி, நீலக் காற்சட்டை சகிதம் அமைதியாக மீளாத்துயில் கொண்டபடி கரையொதுங்கினான். கடலில் சிதைந்த படகுப் பயணிகளின் சடலங்கள் கரையொதுங்கிய தகவல் கிடைக்க ஊடகவியலாளர்கள் விரைந்தனர். கமெராக்கள் அய்லானை விழுங்கிக் கொண்டு, அவனின் மீளாத்துயிலை உலகுக்கு அறிவித்தன.

ஏதுமறியாப் பச்சிளம் பாலகன் தொட்டிலில் துயில்வது போன்று, கடலோரத்தில் பிணமாகக் கிடந்த காட்சி உலகின் இதயத்தை குலுங்கச் செய்தது.

பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப் என்று சமூக வலைத்தளங்களில் அய்லானின் புகைப்படம் தொடர்ச்சியாகப் பரம்பலாக, அதிர்வின் வீரியம் கூடிக்கொண்டே சென்றது. வெறுமனே அய்லானின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு, அகதிகளுக்கு இடம் கொடாத நாடுகளை வாய்க்குள் சபித்து விட்டு, தத்தம் வேலைகளைப் பார்க்கச் செல்லாமல், பலரையும் செயலில் இறங்கச் செய்யுமளவுக்கு அய்லானின் ஒற்றைப் புகைப்படம் ஏற்படுத்திய அதிர்வின் இருந்தது. எந்தெந்த நாடுகளெல்லாம் சிரிய அகதிகளின் உள்வரவைத் தடுக்கும் நோக்குடன் எல்லைக் கதவுகளையும், இதயக் கதவுகளையும் இறுகச் சாத்தினவோ அந்த நாடுகளின் அரசுகளுக்கு எதிரான கோஷங்களோடு பெருமளவானோர் வீதிகளில் இறங்கினர். கைகளில் அய்லானின் ஒற்றைப் புகைப்படத்தையும், கண்ணில் வழியும் இரட்டை விழிநீர்க் கோடுகளோடும் அகதிகளுக்கான போரடியவர்களின் ஆன்மபலம், இரும்புக் கோட்டைக்குள் இருந்த ஐரோப்பிய நாடுகள் பலவற்றினதும் இதயங்களை அசைத்தன. சட்ட திட்டங்கள் தூக்கியெறியப்பட்டு, மனிதத்துக்கு மதிப்பளிக்கப்பட்டது. சிரிய அகதிகளை நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ள ஐரோப்பிய நாடுகள் பலவும் முன்வந்தன. இப்போது சிரிய அகதிகளுக்கான இடம்பெயர்தலின் முக்கிய பிரச்சினை ஒன்று தீர்க்கப்பட்டு வருகிறது.

முன்னரெல்லாம் சிரியாவை விட்டு வெளியேறினாலும் எங்கு போவது என்ற கலக்கம் அந்த மக்களுக்கு இருந்தது. ஏனெனில், உயிரைப் பணயம் வைத்து அவர்கள் வேறு நாடுகளின் கரைகளை அடைந்தாலும், அப்படியே வந்த வழியே சிரியர்களைத் திருப்பி அனுப்புவதையே பல நாடுகளும் மரபாகக் கொண்டிருந்தன. இப்போது அப்படியல்ல. சிரியாவை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இன்னொரு நாட்டை அடைந்துவிட்டால் போதும். அவர்களுக்கு அகதி அந்தஸ்தும், அடிப்படை வசதிகளும் ஐரோப்பிய நாடுகளில் கண்டிப்பாகக் கிடைக்கும் நிலை உருவாகி விட்டது. இந்தத் தலைகீழ் மாற்றத்துக்கு காரணம், அய்லானின் மனதைக் கலங்க வைக்கும் அந்த ஒற்றைப் புகைப்படம் தான்.

தன் உயிரைக் கொடுத்து சிரிய மக்களின் வாழ்வில் சிறு வெளிச்சத்தை உண்டுபண்ணிச் சென்றுவிட்டான் அந்தப் பாலகன்.

அய்லானின் ஒரேயொரு புகைப்படம், உலகை ஒழுங்கையே தலைகீழாக மாற்றி, மனிதம் பற்றிய நம்பிக்கையை விதைத்தமை பற்றி அறியும் தருணங்களில் எல்லாம் ஏனோ முள்ளிவாய்க்கால் நினைவுகள் ஈழத்தமிழர்களின் மனங்களில் எட்டிப் பார்க்கத் தவறவில்லை. ஏனெனில், அய்லானின் சடலத்தை விடவும் கோரமாகக் கொல்லப்பட்ட குழந்தைகளின் கதைகள் கண்முன்னே நிகழ்ந்திருக்கிறது. தலை சிதைந்து, அவயவங்கள் உருக்குலைந்து அடையாளமே தெரிய முடியாதபடி இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். இறுதிப்போரில் மட்டுமல்லாது போர் மேகம் சூழ்ந்த பின்னரான பொழுதுகளிலும் யுத்தம் குழந்தைகளையே அதிகமாகப் பலி கேட்டது. அந்தப் பலியெடுப்புகளில் சாதி, மத, வர்க்க வேறுபாடின்றி தமிழ்க்குழந்தைகள் சிதைக்கப்பட்டார்கள். பாடசாலைகளில், வீடுகளில், வீதிகளில், பதுங்கு குழிகளில், ஆலயங்களில் என்று குழந்தைகளை போர் தின்று கொண்டே இருந்தது. குழந்தைகளின் உயிர்கள் மீதான போரின் பசி முள்ளிவாய்க்கால் வரை தொடரவே செய்தது.

குழந்தைகளின் நெஞ்சப் பதற வைக்கும் சடலங்களின் விம்பங்களும் புகைப்படங்களாக வெளிவரவே செய்தன. அய்லானைப் போல ஒற்றைக் குழந்தையின் சடலம் மட்டுமல்லாது, கூட்டாக போர்க்கழுகால் கொத்திக் குதறி வீசப்பட்ட ஏராளமான குழந்தைச் சதைக்குவியல்கள் இறுதிப் போர்க்காலத்தில் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளிவரவே செய்தன. அப்போதெல்லாம் சர்வதேசத்தின் மனச்சாட்சி ஏன் கொஞ்சம் கூட இரங்கவில்லை? அப்படி இரங்கியிருந்தால் அந்தச் சதுப்பு நிலத் துண்டுக்குள் எங்கள் வாழ்வு மானமிழந்து, வாழ்விழந்து போயிருக்காதே. அய்லானின் புகைப்படத்தால் சிரிய மக்களின் தலையெழுத்து மாற முடியுமென்றால், ஏன் எங்கள் குழந்தைகளின் சடலப் புகைப்படங்களால் எங்கள் தலைவிதியை மாற்ற முடியாமல் போனது?

போர் முடிந்த பின்னர் கூட குழந்தைப் பலியெடுப்புகள் பற்றிய ஆதாரங்கள் புகைப்பட வடிவில் வெளிவரவே செய்தன. புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் இராணுவக் காவலரணில் வைத்து பிஸ்கட் உண்ணும் புகைப்படமும், அந்த பிஸ்கட்டை உண்ட சில நிமிடங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படமும் போருக்குப் பின்னர் ‘சனல்-4’ ஊடகத்தில் வெளியாகி, உலகத்தின் கண்ணில் படவே செய்தது. அப்போது கூட இப்போது அய்லானின் சடலத்தைக் கண்டு பதறியதைப் போல உலகம் ஒப்பாரி வைக்கவில்லை. சின்னதான ஒரு அனுதாபப் பார்வையோடு பாலச்சந்திரனின் சடலத்தை உலகம் கடந்து சென்றது.

குழந்தைகள் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்ட புகைப்படங்களை கண்டும் காணாமல் இருந்த உலகம், இப்போது மட்டும் அய்லானின் சடலப் புகைப்படத்தைக் கண்டு இரத்தக் கண்ணீர் வடிப்பது ஏன்?

காரணம் இருக்கிறது, இங்கு குழந்தைகள் கொல்லப்பட்ட போது, போரை நடத்திக் கொண்டிருந்த அரசின் பின்பக்கமாக இதே உலகநாடுகள் நின்றிருந்தன. குழந்தைகளின் சாவுகளைத் தடுப்பதை விடவும், போரை ஈவிரக்கமின்றி நடத்துவதே அந்த நாடுகளின் குறியாக இருந்தன. இலங்கை அரசுக்கு உலக நாடுகள் அள்ளிக் கொடுத்த ஆயுதங்களால் தான் எங்கள் சிறிசுகள் சின்னாபின்னமாக்கப் பட்டனர். ஆயுத விற்பனை, பூகோள அரசியல் நலன் என்பவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்த உலக நாடுகளுக்கு எம் குழந்தைகளின் சாவுகள் நிகழும் போது குருடாக நடிப்பதே லாபமாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அய்லானை விடவும் உருக்குலைந்த எம் குழந்தைகளின் சடலங்களை நேரில் கண்டும் கூட உலகின் ஆன்மா துடிக்கவில்லை.

ஆனால், சிரியாவின் கதையோ வேறு. சிரிய அரசை உலகின் பல நாடுகளுக்கும் – குறிப்பாக அமெரிக்காவுக்கு – கண்ணிலும் காட்டக் கூடாது. சிரியாவை நேரடியாகத் தாக்குவதற்கு போதிய சாட்டுக்கள் இப்போதைக்கு சிக்கவில்லை. எனவே, சிரியாவை எப்படி வீழ்த்துவதென்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன. எகிப்து, லிபியாவைப் போல ‘அரபு வசந்தம்’ ஒன்றை சிரியாவிலும் வீச வைப்பதே உலக நாடுகளின் (உலக நாடுகள் என்றால் அதன் அர்த்தம் அமெரிக்கா என்றாகிவிட்டது) திட்டம். அதற்கு முதல் படியாக சிரிய மக்களைத் தன் வசப்படுத்த வேண்டிய தேவை உலக நாடுகளுக்கு உண்டு. எனவேதான் அய்லானின் புகைப்படத்துக்கு இத்தனை தூரம் நீலிக்கண்ணீர் வடிக்கிறது சர்வதேசம். பாவம், பாலகர்களின் சடலங்களும் அரசியல் பகடைக்காய்களாகி விட்டன.

தபின்