படம் | Malloryontravel

“எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகையாளும் நியதிகளின் போக்கு விந்தையானது தான்”

– கோபி கிருஷ்ணன் –

யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டில் ஒரு முஸ்லிம் வியாபாரியை எனக்குத் தெரியும். கைகளில் பொருட்களை கொண்டு சென்று விற்று பிழைப்பவர். பல்வேறு தருணங்களில் அவர் என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். சில நாள் கதைத்தும் இருக்கிறேன். ஒரு நாள், பஸ்ஸில் ஒரு இளைஞன், கையில் துண்டு சீட்டு ஒன்று வைத்து பிச்சையெடுத்துக் கொண்டு வந்தான். நானோ குழந்தை குணம் கொண்டவன். பையில் இருந்து பணத்தை எடுத்து தயாராக வைத்திருந்தேன். அப்பொழுது தான் நமது வியாபாரி, தமிழ் சினிமா வில்லன்கள் மாதிரி சரியான நேரத்தில் என்றி ஆனார். அவனது தாள்களை பறித்து திட்டினார். “பிச்சை எடுக்கிறாய் ஆஹ்… இந்த வயசில். தொழில் செய்டா. வா… நான் வாங்கி தாரன் சாமான், எத்தன தரம் டா திருப்பி திருப்பி சொல்லுறது… இறங்கு டா.” பதிலுக்கு அவன் சிலுப்பிக் கொண்டு நின்றான். திருப்பித் திட்டி விட்டு இறங்கி போய் விட்டான். நான் என்னை நல்லவன் என்று காட்டிக் கொள்ள பிச்சை போட நினைத்தேன். ஆனால், உண்மையில் யார் நல்லவன்? அல்லாஹ்! அவருக்கு இருக்கும் அந்த குணத்தை அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் உணரலாம். அவர் மனிதர். முஸ்லிமோ, கிறிஸ்தவரோ, இந்துவோ அல்ல.

போன வாரம் யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டிருந்தேன். ஒரு கடை வாசலில் கொஞ்சம் நரை தட்டிய வயதான ஒருவர் குடித்து விட்டு விழுந்து கிடந்தார். அது ஒன்றும் பெரிய பாவமில்லை. இந்த நரகத்தில் குடிக்காமல் எப்படித் தான் வாழ்வது. ஆனால், நடந்த சம்பவம் என் கண்களையே என்னை நம்ப முடியாத படி செய்து விட்டது. எங்கிருந்து பார்த்தார்களோ தெரியவில்லை, இந்த பாட்டுப் போடும் அன்பர்கள், “கண்ணதாசன் காரைக் குடி, பேர சொல்லி ஊத்திக் குடி…” என்று அட்டகாசமாக Situation Song போட்டார்கள். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. தற்செயலாக விழுந்து கிடப்பவரை அந்த கடைக்கார் பார்த்து விட்டார். ஒரு போத்தலில் தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றினார். நிலமெல்லாம் நீர் வழிந்தது, எனக்கு பாவமாகி விட்டது.

ஆனால், மந்தையோடு மந்தையாக பார்த்துக் கொண்டு மட்டுமே நின்றேன். “எழும்பு, போ…” என்று கடைக்காரர் திட்டினார். தொடவில்லை, காலால் எத்தினார். எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது, என்னையறியாமல் ஒரு அடி முன்னே வைத்து விட்டேன். சரி, ஏதாவது செய்யலாம் என்று நினைப்பதற்குள், நமது வியாபாரி வந்து விட்டார். எங்கிருந்துதான் இவருக்கு அசரீரி கேட்கிறதோ என்று நினைத்துக் கொண்டேன். அவரை பேசினார். விழுந்து கிடந்தவருக்கோ பேசுவது எதுவும் ஏறவேயில்லை. ஏனென்றால் அவ்வளவு ஏறியிருந்தது அவருக்கு. இதுதான் நான் கண்ட தருணம்.

கற்பனை செய்து பாருங்கள். விழுந்து கிடப்பவரின் கைகளை பிடித்து தூக்கினார். எப்படி இயேசு கிறிஸ்து ஒரு ஆட்டுக் குட்டியை தூக்குவாரோ அப்படி. பின்னாலிருந்து கடைக்காரர் காலால் தள்ளினார். முன்னே சரிந்தவரின் சட்டைக்குள்ளிருந்து வெளியே விழுந்தது செப மாலையொன்று, இயேசு, சிலுவையிலிருந்தார். நான் உறைந்து போனேன். நான் கண்டு கொண்டிருப்பது, ஒரு மனித அறத்தின் அடிப்படையை. அதன் இயல்பான எழுச்சியை. அதன் எட்டித் தள்ளும் கருணையின்மையை. தூக்கி விடும் அன்பை. மாறி மாறி மனிதனின் எதிர்த் துருவங்களை பார்த்தபோது கண்கள் பனித்தது.

இதுதான் நான் கண்ட தருணம். பின் அவர்கள் சென்று விட்டார்கள். மற்ற சாதாரண கூட்டத்தோடு நின்று கொண்டிருந்தேன். பஸ் புறப்பட்டது. அந்த நிலத்தைப் பார்த்தேன். இன்னும் ஈரமாயிருந்தது. இதன்போது நான் நினைத்துக் கொண்டேன், கோபி கிருஷ்ணனின் வரிகளை. “எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகையாளும் நியதிகளின் போக்கு விந்தையானது தான்.”

மனிதன் எங்கேயும் மனிதனாக இருக்கிறான். இந்துவாகவோ, முஸ்லிமாகவோ அல்ல. ஆனால், இனத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிக்கும் அரைவேக்காட்டுத் தனமான சிந்தனைகள் எல்லாம் போலிகளால் தான் பரப்பப்படுகின்றன. மேற் சொன்ன சம்பவத்தின்போது அந்த வியாபாரிக்கு எந்த கோட்பாடும் தெரியாது. அவர் கோட்பாடும் கதைப்பதில்லை. ஆனால், அவர் அதை செய்ததற்குக் காரணம் அடிப்படையான உந்தல் மற்றும் மனிதம். இது இருந்தால் மட்டுமே எவனுக்கும் எதையும் சொல்லும் அருகதை இருக்கிறது.

கிரிஷாந்