படம் | விகல்ப Flickr

கேலிச்சித்திரக்காரரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு இன்றோடு 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி வேலைக்குச் சென்ற பிரகீத் எக்னலிகொட இன்றுவரை வீடு திரும்பவில்லை.

யுத்தத்தின்போது வடக்கு மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகிறது என பிரகீத் எழுதியதோடு இராஜதந்திரிகளுக்கும் தெரியப்படுத்தியமையால்தான்  கடத்தப்பட்டார் என அவரது மனைவி பி.பி.சி இற்கு அளித்த செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, ஜனாதிபதித் தேர்தலின்போது வேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கு தனது கணவர் ஆதரவளித்தார் என்றும் செவ்வியில் சந்தியா எக்னலிகொட மேலும் தெரிவித்திருந்தார்.

2010ஆம் ஆண்டு பிரகீத் காணாமலாக்கப்பட முன்னர் 2009 ஆகஸ்ட் மாதம் இனந்தெரியாத குழுவொன்றினால் கடத்திச்செல்லப்பட்டு ஒரு நாளைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

மனைவி சந்தியா எக்னெலிகொட தனது கணவரை தேடித்தருமாறு 4 வருடங்களாக போராடிக்கொண்டிருக்கிறார். தனது கணவரை மீட்க ஆர்ப்பாட்டங்கள், சத்தியாகிரகம், பேரணி, மனு அளித்தல் என பல விதமாக போராட்டங்கள் நடத்தியும் அவர் வீடு திரும்பவில்லை.

தனது கணவர் எப்படியும் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மஹரகம நகரில் இன்றும் சத்தியாகிரகப் போராட்டமொன்றை சந்தியா எக்னலிகொட ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்போது எமது சகோதர இணையத்தளமான ‘விகல்ப’வுக்கு சந்தியா எக்னலிகொ இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

“மஹிந்த ராஜபக்‌ஷவால்தான் பிரகீத் காணாமலாக்கப்பட்டார் என்பதை அரசு நிரூபித்துக்கொண்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்‌ஷ பல்வேறு தரப்பினரைக் கொண்டு பல கருத்துக்களை வௌியிடுகிறார். ஆனால், சட்டத்தை கையாளும் அதிகாரம், நீதிமன்றத்தை கையாளும் அதிகாரம் தன்னிடம் இருப்பதென்பதை மஹிந்த ராஜபக்‌ஷ மறந்துவிட்டார் போலும். மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட நாடாளுமன்றில் உள்ளவர்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். உங்களிடம் அதிகாரம் உள்ளது. எனது கணவர் எங்காவது இருக்கிறார் என்றால் அவரை இலங்கையில் நீதிமன்றம் முன் கொண்டுவந்து நிறுத்துங்கள். அது உங்களது கடமை. அது மஹிந்த ராஜபக்‌ஷவின் கடமை.

“பொதுநலவாய மாநாட்டின் தலைவர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கடமையுள்ளது. பொறுப்புள்ளது. அந்த கடமையை சரிவர நிறைவேற்றவேண்டும். அதை விடுத்து பல்வேறு தரப்பினர் ஊடாக எனது பிள்ளைகளை, என்னை விமர்சிப்பதை தவிருங்கள். நான் கேட்பது நீதியை.

சத்தியாக்கிர வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.