படம் | STRATFOR

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு ஒரு தேவை உருவாகியிருந்தது. அதுதான் பிரபாரகரனுக்குப் பதிலாக எவரை இனி எதிரியாக முன்னிறுத்துவது. அந்த குறியீடு யார் என்பதே அவர்களுக்கு இருந்த தேவை. வரிசையாக ஒவ்வொருவரை நிறுத்திப் பார்த்தார்கள். ஆனால், தமிழ் தலைமைகள் எவரும் சிங்களத்துக்கான “தமிழ்த் தலைமையாக” நின்றுபிடிக்கவில்லை. அல்லது அப்படி கையில் கிடைக்கக்கூடியவர்களும் போதிய மக்கள் செல்வாக்குள்ளவர்களாக இருக்கவில்லை. அந்த இடத்தில் விக்னேஸ்வரனை முன்னிறுத்தும் பணி முழுமையாக சாத்தியப்படாமல் தொடர்ந்த நிலையில் இன்று “எழுக தமிழோடு” அவர்களுக்கு கை கூடியிருக்கிறது, முழுமை பெற்றிருக்கிறது.

எழுக தமிழின் சுலோகங்களிலிருந்தும், விக்னேஸ்வரனின் வெளிப்பாடுகளிலிருந்தும் சிலவற்றை கண்டுபிடித்து அவற்றைக் கொண்டு விக்னேஸ்வரனை “தமிழ் இனவாதத்தின் சமகால தலைவராக” சிங்களவர்கள் மத்தியில் முன்னிறுத்த எடுத்த முயற்சி பலித்திருக்கிறது என்றே காண முடிகிறது. பிரதானமாக அவர்கள் கண்டெடுத்த அந்த பிரதானமான குறிப்புகளை இப்படி குறிப்பிடலாம்.

  1. வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றல்
  2. இராணுவத்தை வெளியேற்றல்
  3. சிங்களவர்கள் “குடியேறுவதை” கண்டித்தல்
  4. புத்தர் சிலைகளையும், விகாரைகளையும் நிறுவுவதையும் எதிர்த்தல்.

விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களை இம்முறை கடுமையாக எதிர்த்து நிற்பது மஹிந்த கும்பலும், இனவாத தரப்பும் மட்டுமல்ல, அரசாங்கத்தின் பிரதான அமைச்சர்கள் அனைவருமதான். அவர்கள் வெளிப்படையாகவே விக்னேஸ்வரன் ஒரு தமிழ் இனவாதி, பிரிவினைவாதத்தை தூண்டுகிறார், நல்லிணக்கத்தையும், சகவாழ்வுக்கான அரசாங்கத்தின் முயற்சிகளையும் சீர் குலைக்கிறார் என்கின்றனர்.

இதில் தமிழர் தரப்பில் உள்ள ஒரு பிரதான குறைபாடு உள்ளது. விக்னேஸ்வரன் குறிப்பிட்டவற்றை சிங்களத் தரப்பு சாராம்சத்தில் தமிழ் இனவாதமாக சாடும் காரணிகள் குறித்து சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறாததே அந்த குறைபாடு. யுத்தத்துக்கு முன்னர் அதே தவறை செய்ததன் மூலம் யுத்தத்தில் தமிழர் தரப்பு தோல்வியைத் தழுவியதும், அந்த யுத்தத்தில் நியாயம் வென்றிருப்பதாக இன்றுவரை சிங்கள மக்கள் கருதுவதற்கும் இந்த குறைபாடே பிரதானமான காரணம் என்பேன்.

இன்றும் அதே தவறு. தமிழர் தரப்பு கோரிக்கைகளுக்கான நியாயங்கள் குறித்து தமிழர்களை விழிப்புணர்வூட்டி என்ன பயன். அந்த நியாயங்களை விளங்காத முட்டாள்களாகவா தமிழர்கள் இத்தனை தசாப்தங்களாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நியாயங்களை சிங்கள மக்களுக்குப் போய் தெளிவுறுத்துவதே பிரதான கடமை. அவர்களை தூர வைத்துவிட்டு கிஞ்சித்தும் நகர முடியாது என்பதை இத்தனை பாடங்களுக்குப் பின்னரும் உணராது இருந்தால் இப்படியே மக்களின் தேவைகளை அழிவுக்குக் கொண்டு செல்லுங்கள்.

இத்தனைக்கும் பிரதான இலக்குக்கு ஆளாகியிருக்கும் விக்னேஸ்வரன் சிங்கள மொழி ஆளுமை மிக்கவர். வடக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளிலேயே திறம்பட சிங்களம் பேசக்கூடியவர்.

சிங்கள ஊடகங்கள் கண்களில் வெண்ணெயை விட்டுக்கொண்டு தமிழர் தரப்பில் இருந்து எங்கடா இனவாதமாக சித்திரிக்கக் கூடியவை கிடைக்கும் என்று நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு காத்திருகின்றன. தமிழர் தரப்பும் அதற்கு இதோ உங்களுக்கு ருசியூட்டுகிறேன் என்று வாரி கொடுக்கின்றன. அதை சாணக்கியம் என்றும் நம்பிக்கொண்டிருக்கின்றன. சிங்கள ஊடகங்கள் இந்த நியாயங்களை அவர்களாக கொண்டு செல்வார்கள் என்று கிஞ்சித்தும் எதிர்பார்க்க முடியாது. தமிழர் தரப்பே அதனை பிரக்ஞையுடனும் அதனை ஒரு அரசியல் வேலையாக எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், அதனை செய்வதில்லை.

தமிழர் அரசியலை தமிழர்களிடம் அல்ல சிங்களவர்களிடமே மேற்கொள்ள வேண்டும் என்பதை புரியாதவரை தோல்வியை விலைகொடுத்துவாங்கும் பணியும், தமிழர்களை அடுத்தகட்ட அழிவுப்பாதையை நோக்கி வழிநடத்தும் பணியும் இனிதாக முன்னேறும்.

என். சரவணன்