“டேய் என்னடா, இப்பிடி எழுதி இருக்கிறாய்?”

“ஏன் மிஸ், பிழையோ?”

“நான் என்ன எழுதச்சொன்னன், நீ என்ன எழுதி வச்சிருக்கிறாய்?”

“எது மிஸ்?”

நாலாவது கேள்வி என்ன எண்டு எழுதச்சொன்னன்?

“சீசர் கிளியோபட்ராவை மணந்து கொண்டார். இதை Past tense ல எழுதசொன்னீங்கள்?

“ம்ம்… நீ என்ன எழுதி வச்சிருக்கிறாய் எண்டு சத்தமா எல்லாருக்கும் கேக்கிற மாதிரி வாசி?

“Cesar married THARSHINY miss!!!”

மேற்படி சம்பவம் ஐந்தாம் வகுப்பு படிக்கேக்க நடந்தது. அண்டைக்கு வகுப்பே சிரித்தது. சீசர் கிளியோபட்ராவை மணந்து கொண்டார் என்பதில், சீசரின் ஆருயிர் காதலி பேரழகி கிளியோபட்ராவை தூக்கி விட்டு என்ர இங்கிலிஸ் மிஸ் தர்ஷினியின் பெயரை போடுவதற்கு எனக்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

1. எனக்கு கிளியோபட்ராவிற்கு spelling தெரியாது.

2. எனக்கு தர்ஷினி மிஸ்சை அவ்வளவு பிடிக்கும்.

இதில் 2ஆவது காரணம், தர்ஷினி மிஸ் இன் கற்பித்தல் அழகு அல்லது கலை. பொதுவாகவே என் போன்ற குழப்படிகார பையன்கள் ஆங்கில பாடம் எண்டா மிரளுவம். ஆனால், தர்ஷினி மிஸ் எண்டா அப்படி இல்லை. எல்லா டீச்சரும் syllabus மனப்பாடமாக ஒப்பித்து விட்டு போக அவ மட்டும் எங்களை வகுப்பை தாண்டி – பாடத்தை தாண்டி – எங்கள் கிராமத்தை தாண்டி – வெளியே அழைத்து செல்லுவா.

ஐந்தாம் வகுப்பிலையே எங்களுக்கு சீசர் பற்றியும், கிளியோபட்ரா பற்றியும் சொல்லி தரும் தர்ஷினி மிஸ்சை என்னால இண்டு வரைக்கும் மறக்க ஏலாது. இதனை சொல்லும்போது எனக்கு சமீபத்தில் பார்த்த குறும்படம் ஒன்று நினைவிற்கு வருகின்றது.

படத்தின் பெயர் The Crush. இயக்குனர் Michael Creagh இயக்கிய இக் குறும்படம் 2010 வருடம் ஒஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது.

படத்தில் ஒரு 8 வயது சிறுவன் தன் ஆசிரியை ஒருவர் மீது பிரியம் கொள்கிறான். (இந்த பிரியம் என்ற சொல்லை நேரடியாக ஆங்கிலபடுத்தினால் love என்று தான் பொருள் வரும். ஆனால், 8 வயது சிறுவனின் அன்பினை அந்த சொல்லினுள் அடக்க எனக்கு மனதில்லை எனலாம்.)

இடையில் மிஸ்சை அவளுடைய Boyfriend சகிதம் சந்திக்கிறான். அவன் மனம் கோபம் கொள்கிறது. தந்தையின் துப்பாக்கியை எடுக்கிறான். பின்னர் நடப்பவை மூலம் ஒரு ஆசிரிய மாணவ உறவு நன்றாக சொல்லபட்டு இருக்கும்.

(ஆவல் மேலிட படத்தை பார்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கீழ்வரும் லிங்கை கிளிக்கி பார்க்கலாம். பொறுமை சாலிகள் இப்பத்தியை படித்து முடித்து விட்டு பின்னர் அதனைப் பார்க்கலாம்)

இண்டைக்கு பிள்ளையள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகுப்பறை வாசலிலும் தர்ஷினி மிஸ் போன்ற டீச்சருக்காகத்தான் காத்திருக்கின்றனர்.

மொழி மற்றும் அறிவின் சேமிப்பு மற்றும் பரிமாற்ற பழக்கத்தை அடைந்த காலத்தில் இருந்து ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஆசிரியத்துவம் தேவைப்பட்டது. அதுவே பின்னாளில் ஒழுங்கமைந்த குரு – சீட பாரம்பரியத்தை தோற்றுவித்தது. குருகுலம் தொடங்கி திண்ணைக்கல்வி முறை ஈறாக இன்று பாடசாலைகளிலும், பல்கலைகழகங்கள் வரை ஆசிரிய மாணவ உறவு நிலை கூர்ப்படைந்து நிற்கின்றது. அவற்றோடு சேர்ந்து இன்று ஆசிரியர் பணி தொடர்பிலான பல பிரச்சினைகளும் விதந்து கூறப்படுகின்றன. அவற்றுள் இன்று மாணவ சமுதாயத்துடன் ஆசிரியர்கள் விலகி நிற்க பின்வரும் இரண்டு காரணங்கள் உள்ளன.

1. கற்பித்தல் கலை (Art of teaching)

2. ஆசிரிய சுயதேடலும் மெருகேறலும் (Teachers Self Learning and Updating)

3. கற்பித்தல் கலை (Art of Teaching)

இன்றைய நிலைமையில் மாணவன் ஒருவன் ஒரு பாடத்தை கற்கவோ அல்லது கற்க முயற்சிக்கவோ முனைவதில் பெரும் பங்கு ஆசிரியரை சாரும். இது சாத்தியமாவதற்கு முதலில் மாணவனுக்கு ஆசிரியர் பிடிக்கவேண்டும். ஆசிரியர் வெறும் பாடப் புத்தகத்தை வீட்டிலே உண்டு விட்டு, மாணவர்களின் மேல் உமிழும் ஒரு ஜந்துவாக இன்று மாணவர்களுக்குப் படுகின்றார், வாங்கும் சம்பளத்திற்கு ஒப்பிக்கின்றார் என்றே மாணவன் நினைத்துக் கொள்கிறான். இவ்வாறான ஆசிரியருக்காக மாணவன் செய்யும் ஒரே ஒரு வேலை அவருக்கு ஒரு பட்ட பெயர்வைப்பதுடன் நின்று போகின்றது.

எனினும், எங்கோ சிலர் தர்ஷினி மிஸ்கள் போல் இருக்கின்றனர். கடைசி வரிசை மாணவன் கூட விரும்பும் படியும், படிக்கும் படியும் செய்யும் அற்புதம் மிக்க கற்பித்தலை அவர்களினால் மேற்கொள்ள முடிகிறது.

இன்றைய ஆசிரியர்களை விட மாணவர்கள் அறிவுசார் எல்லையும் சமயோசிதமும் கொண்டவர்கள். மாணவர்கள் நூலகம், இணையம் என்று தேடுகின்றார்கள் கற்கின்றார்கள். எல்லாவற்றிக்கும் மேலாக கேள்வி கேட்கின்றார்கள். ஆசிரியர்கள் திரு… திரு… என முழிக்கிறார்கள், அறியாமையை மறைக்கிறார்கள்.

இதற்குக் காரணம் ஆசிரியர்கள் தங்கள் பட்டப்படிப்பு முடிந்ததும் தம் கல்வி முடிந்தது, இனி கற்கவும், கற்பிக்கவும் மேலதிகமாய் ஒன்றும் இல்லை என்று நினைகின்றனர் போலும். பாடப்புத்தகத்தைத் தாண்டி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. இன்று எல்லா பாடசாலைகளிலும் இத்தகைய கிணற்று தவளைகள் வகுப்பறைக்குள் நுழைந்த படிதான் இருக்கின்றன.

எங்காவது ஒருவர்தான் தேடுகின்றார். தன்னை ஆசிரியராக மட்டுமல்ல எப்பொழுதும் மாணவனாக பாவித்து, தனக்காகவும் தன் மாணவர்களுக்காகவும் தேடுகின்றார். தன்னை மெருகேற்றுகின்றார். ஒரு ஆசிரியராக வெற்றியும் அடைகின்றார்.

ஆனால், ஒரு பிரம்பையும், பத்து வருடத்தின் முன் அரசு அச்சடித்துக் கொடுத்த பாடப் புத்தகத்தையும் நம்பி, வகுப்பறைக்குள் நுழையும் ஜீவன்களுக்கும் மாணவர்களுக்கும் என் அனுதாபங்கள் எப்போதும் உண்டு. நானும் இன்று வரை ஒரு சில தர்ஷினி மிஸ்களை மட்டும்தான் சந்தித்து இருக்கிறேன். தேவதைகள் எல்லா வகுப்பினுள்ளும் நுழைவதில்லை போலும்.

ப்ரதீப் குணரட்ணம்