படம் | NAFSO

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு தனி அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை முதலாவதாக 1920களில் ஆரம்பித்தது. காலனித்துவ அரசாங்கத்திடம் இருந்து விடுதலை பெற்று இலங்கை மக்களுக்கு ஆட்சி உரிமை வழங்கவேண்டும் என்று, ஒரு குரலில் கோரிக்கைகளை முன்வைத்த படித்த-இலங்கையர்கள், ஆட்சி அதிகாரம் என்று வரும்போது தத்தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதில் முன்னுரிமை காட்டினர். தமிழ் பிரதிநிதிகள் பிரதேச அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என்று கோரியபோது அதை சிங்கள தலைவர்கள் செவிமடுக்காதமையால் பொன்னம்பலம் இராமநாதன் தலைமையில் தமிழ் மாகாஜன சபை என்ற முதலாவது தமிழ் அரசியல் குழுமம், இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற தேசிய அரசியல் கட்சியில் இருந்து பிளவு பட்டது. தமிழ் மகாஜன சபையானது பின்பு தமிழ் காங்கிரஸின் உருவாக்கத்துக்கும் அதன் பின் இலங்கை தமிழ் அரசுக்  கட்சியின் உருவாக்கத்துக்கும்  வழி ஏற்படுத்தி கொடுத்த  அமைப்பாகும்.

1930இல் இருந்து அடுத்தடுத்து வந்த தசாப்தங்களில் வந்த தமிழ் கட்சிகள் 50:50 வீத பிரதிநிதித்துவம், சமஷ்டி ஆட்சி என்றும், இறுதியில் தனி நாடு என்றும் கோரிக்கைகளை முன்வைத்து வந்தன. இவற்றின் அடிப்படையில் இக்கட்சிகள் அரசியல் தேர்தல்களில் வட கிழக்கு தமிழர்களின் அமோகமான வாக்குகளை பெற்று வெற்றிகண்டன. இருந்தபோதிலும் தமிழ் மக்களின் நிஜவாழ்க்கையைப் பார்க்கும் போது, அவர்கள் பொருளாதார சமூக வாழ்க்கைத்தரங்களிலோ அல்லது சிவில் உரிமைகளிலோ மேலும் மேலும் பின்னடைவுகளையே கண்டவண்ணம் இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் என்ன?

ஒரு நாட்டில் சிறுபான்மை இனமாக இருந்து கொண்டு ஆட்சி அதிகாரத்தையும் சுயநிர்ணய உரிமைகளையும் கேட்பதற்கு இதுவரை தமிழ் அரசியல் தலைவர்களும், ஆயுதப் போராட்ட குழுக்களும் எடுத்த யுக்தியானது தமிழர்களின் உரிமைகோரல்களை தமிழ் பிரதிநிதிகள் மாத்திரமே பேச முடியும், பிரதிநித்துவப்படுத்த முடியும் என்பதாகும். எனினும், கடந்த என்பது வருட வரலாறானது இத்தகைய யுக்தி ஒருபோதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கு வழிவகுக்காது என்பதை நினைவுறுத்தி நிற்கிறது. இவ்வாறு இருக்கையில், இவ்வருடம் புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகள் மூலம் அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு மீண்டும் கிடைக்கபெற்றுள்ளது. இதை தமிழ் அரசியல் தலைவர்களும் வட கிழக்கு தமிழ் மக்களும் எவ்வாறு பயன்படுத்தப்போகிறோம்?

அரசியல் யாப்பும்  போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு வாழ் மக்களின் உரிமை கோரல்களும்

வடக்கு – கிழக்கு வாழ் சமூகங்களுக்குப் போரினால் ஏற்பட்ட தாக்கங்கள், இச்சமூகம் மத்தியில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் உரிமைகள் போன்ற விடயங்களை எவ்வாறு தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் தமிழ் சமூகமும் அரசியல் தீர்வு என்ற கோரிக்கையினுள் உள்ளடக்கப்படப்போகின்றன என்பதையும் நோக்கவேண்டும்.

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுகேணி என்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று கிராமங்களில் 1984ஆம் ஆண்டு தமிழ் விவசாயிகள் அரச படைகளினால் பலவந்தமாக விரட்டி அடிக்கப்பட்டனர். அதன் பின் சிங்கள இனத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இக்காணிகள் வழங்கப்பட்டன. 2012ஆம் ஆண்டு மீள்குடியேறிய மக்களுக்கு இன்றுவரை அவர்களது காணிகளோ அல்லது மாற்றுக்காணிகளோ வழங்கப்படவில்லை. நிறைந்த அதிகாரங்களையும் மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்தையும் கொண்ட மகாவலி அதிகார சபையானது இவ்விவசாயிகளது நியாயமான கோரிக்கைகளைக் கருத்தில் கொள்ளாது மறுதலித்து வருகிறது.

இதேபோல் யாழ். மாவட்டத்தில் மருதங்கேணி எனப்படும் கடலையண்டிய கிராமத்தில் உப்புநீரை நன்னீராக்கும் அபிவிருத்தித் திட்டம் ஒன்று  கொண்டுவருவதற்கான ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இத்திட்டமானது அமுல்படுத்தப்பட்டால் கரையோரத்தை அண்டிய கடற்பகுதியில் உப்புத்தன்மை அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இதனால், இக்கடலை நம்பி வாழும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். இத்திட்டத்தை பற்றி கலந்துரையாடி முடிவுகள் சிலவற்றை எடுக்க மருதங்கேணி சமாசத் தலைவர் ஒரு கூட்டத்தை கூட்டியபோது, அவர் தனது பதவி அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டுச் செயற்படுகிறார் எனக் குற்றச்சாட்டப்பட்டு, வட மாகாண கூட்டுறவு அமைச்சினால் சட்டபூர்வமற்ற முறையில் பதவி விலக்கப்பட்டார். இதற்குக் காரணம் இந்த அபிவிருத்தித் திட்டத்தை வட மாகாண சபையும் அங்கீகரிக்கிறது என்பதேயாகும். மருதங்கேணி மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் இன்றுவரை எந்தவிதமான அபிவிருத்தித் திட்டங்களும் கொண்டுவரப்படாத நிலையில் அம்மக்களிடம் இருக்கும் ஒரே சொத்தாகிய கடல் வளத்தையும் நாசம் செய்யும் வகையில் வட மாகாண சபை அங்கீகாரத்துடன் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது. மருதங்கேணி பிரதேச மக்களின் வாக்குப்பலம் குறைந்த அளவிலே காணப்படுவதாலும் உயர் சாதியை பெரும்பான்மையாகக் கொண்ட, வட மாகாண சபை மீனவர்களின் பிரச்சினையை ஒரு பொருட்டாகவே கொள்ளாததும் இதற்குக்காரணம் என மக்கள் மத்தியில் பலமான அபிப்பிராயம் நிலவுகிறது.

யாழ். குடாநாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்துக்கும் இதே போன்ற ஒரு பிரச்சனை இருக்கிறது. 1990ஆம் ஆண்டு விடுதலை புலிகளினால் ஒட்டுமொத்தமாக விரட்டப்பட்டு பல இடங்களில் இடம்பெயர்ந்த நிலையில், 2009ஆம் ஆண்டு மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு வந்து குடியமர முனைந்தனர். கிட்டத்தட்ட 2,000 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு பதிவு செய்திருந்தாலும் இன்று 500 குடும்பங்களுக்கும் குறைவாகவே யாழ். நகரில் வாழ்கின்றனர். அரச அதிகாரிகள் மத்தியில் காணப்படும் இனத்துவேசப்போக்குகள் காரணமாகவும், அரசினால் வாழ்வாதார வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாததாலும் இச்சமூகம் அடிப்படை வாழ்க்கையை நடாத்தமுடியாத நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. யாழ். முஸ்லிம் சமூகம் சனத்தொகையில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் அரசியல் பலமற்ற ஒரு சமூகமாக தொடர்ந்தும் ஒதுக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

இம்மூன்று சமூகங்களும் வட மாகாணத்தில் வாழ்ந்து, போரினால் பாதிக்கப்பட்டு, மீள்குடியேறி அடிப்படை வாழ்க்கையைக் கொண்டுசெல்ல முடியாது தவித்துக்கொண்டு இருகின்றன. இம்மூன்று சமூகங்களும் அதிகாரத்தில் இருப்பவர்களினால் பாதிக்கப்பட்டு உள்ளன. மத்திய அரசு, மாகாண அரசு, அரச அதிகாரிகள் என்று அதிகாரத்தில் இருக்கும் வர்க்கத்தினர் மக்களின் நாளாந்த பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் கருத்தில் கொள்ளாது ஆட்சி செய்வது என்பது இம்மூன்று உதாரணகளிலும் பொதுவாக உள்ளது. இவை அனைத்தும் ஒரு நாட்டின் ஆட்சி முறைமையை ஒட்டியதும், அதிகாரத்தை ஒட்டியதுமான பிரச்சினைகள்.

இதைக்கடந்து தமிழ் சமூகமும், தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் இம்மூன்று பிரச்சினைகளையும் எவ்வாறு அணுகுகின்றனர் என்பதும் கருத்தில் கொள்ளப்படவேண்டியது. கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுகேணி விவசாயிகளின் பிரச்சினையானது 1940களில் இருந்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் வட கிழக்கு பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றுதல் என்ற விடயத்துடன் தொடர்புபட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் இலங்கை அரசாங்கமானது விவசாயத்துறையை முன்னேற்றுவதற்கு உலக வங்கியின் ஆலோசனையின் படி இக்குடியேற்றத் திட்டங்களை ஆரம்பித்த போதும் நாளடைவில் இது ஒரு இனத்தை ஒடுக்க எடுக்கும் நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் பிரதிநிதிகளின் ஆதங்கங்களை தொடர்ச்சியாகப் புறக்கணித்ததன் விளைவாக காணி அதிகாரப் பகிர்வு என்ற விடயம் தமிழ் தேசிய கோரிக்கைகளில் பிரதான இடத்தைப் பெற ஆரம்பித்தது. சிங்கள பேரினவாதம் சார்ந்த அரசியல் ஒருபுறம் இருக்க, தமிழ் அரசியல் பிரதிநிதிகளில் காணி அதிகாரப் பகிர்வை கேட்டவர்களும் தமது சமூகம் மத்தியில் காணப்படும் ஒதுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களின் காணியற்ற பிரச்சினைகளை பற்றி ஒருபொழுதும் பேசியதில்லை. இதன் அடிப்படையில் பார்க்கையில் காணி அதிகாரப் பகிர்வானது கிடைக்கப்பெற்றிருந்தால் ஒரு சிங்கள மேல் சாதி வர்க்கத்திடம் இருந்து தமிழ் மேல் சாதி வர்க்கத்தினரிடமே அதிகாரம் கைமாற்றப்பட்டிருக்கும். ஒதுக்கப்பட்ட தமிழ் சமூகங்களினது காணியில்லாமை பிரச்சினையானது தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டிருக்கும்.

இதைவிட மருதங்கேணி மீனவர்களின் பிரச்சினைகளையோ அல்லது யாழ். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளையோ தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பாரதூரமான விடயமாக எடுத்துப்பேசுவதில்லை. இதற்குக் காரணம் இம்மக்கள் வாக்குப்பலம் அற்றவர்கள். ஒரு சிலர் இச்சமூகங்களுக்காக பேச முன்வந்தாலும் ஏனைய அரசியல்வாதிகளும் அவர்களைச் சார்ந்த தமிழ் ஊடகங்களும் அவர்களை கடுமையாக விமர்சித்து வாயை மூடிவிடுவார்கள். இவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது இன்று காணப்படும் மாகாண சபை கட்டமைப்பின் கீழ் அரசியல் அதிகாரங்களைப் பகிர்வதினால் இவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுமா? எனவே, அதிகார மையப்படுத்தலை எதிர்ப்பது எந்தளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அதிகாரப்பகிர்வானது யாருடைய கைகளுக்கு வரப்போகிறது என்பதை கவனிப்பதும் முக்கியமாகும்.

மக்களின் சமர்ப்பணங்கள் PRCC குழுவின் பரிந்துரைகளும்

அரசு, ஆட்சி, அதிகாரம், இவற்றால் அன்றாட வாழ்க்கையில் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் என்பவற்றை ஒட்டி இவ்வருடம் தைமாதம் பிரதமரினால் நியமனம் செய்யப்பட்ட அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறி குழு (PRCC) முன்னிலையில் வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அரசியல் யாப்பு உருவாக்கத்தில் மக்களின் கருத்துக்களை கேட்டு அறிவதற்கு PRCC  இலங்கை பூராக அமர்வுகளை நடாத்தியது. இவ்வமர்வுகள் போர்க்காலத்திலும் போருக்குப் பிற்பட்ட காலத்திலும் அரசினாலும் விடுதலை புலிகளினாலும் கருத்து சுதந்திரம் அற்று, அமைதியாக்கப்பட்ட மக்களுக்கு பேசுவதற்கு ஒரு களமாக அமைந்தன.

இலங்கை பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு வட கிழக்கு ஒரு பிராந்தியமாக கருதப்பட வேண்டும் என்ற கருத்துக்களும், பொலிஸ் அதிகாரங்களும் காணி அதிகாரங்களும், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட வட கிழக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றுக்கு மாறாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வட மாகாண சபை போன்ற ஒரு அரச உறுப்பிற்கு கொடுப்பதில் ஆட்சேபணை தெரிவித்தும் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன. இதை விட ஜனாதிபதி அதிகாரங்களைக் குறைத்தல், பாரம்பரிய தனியார் சட்டங்களில் காணப்படும் பிற்போக்கான தன்மைகளை மாற்றி அமைத்தல், தேர்தல்களில் சாதி, பால் சார்ந்த பாகுபாடுகளையும் அடக்குமுறைகளையும் ஒழித்தல், சமூக பொருளாதார உரிமைகளை பாதுகாத்தல் போன்ற பலதரப்பட்ட சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறி குழுவின் அறிக்கையானது அரசின் தன்மை, வட கிழக்கு மாகாணங்களின் ஒன்றிணைப்பு, அதிகாரப்பகிர்வு, தேசிய மதம் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களை கையாண்டுள்ளது. இதைவிட மக்களை நேரடியாகப் பாதிக்கும் சமூக பொருளாதார விடயங்களாகிய பால், ஊழியம், வாழ்வாதாரம் போன்றவற்றிற்கும் இவ்வறிக்கை பரிந்துரைகளை முன்வைக்கின்றது. இருப்பினும், அரசியல் அமைப்பு சார்ந்த கேள்விகளில் குழுவின் அங்கத்தவர்கள் மத்தியில் கருத்துடன்பாடு இல்லாத காரணத்தால் மாற்றுப்பரிந்துரைகள் முன்வைக்கபடுகின்றன.

உதாரணத்திற்கு, ‘அரசின் தன்மை’ என்ற அத்தியாயத்தின் கீழ், வட கிழக்கில் இருந்து பிரதான கருத்தாக சமஷ்டி ஆட்சி முறை முன்வைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் மக்களும் சிறுபான்மை இனங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சமஷ்டி ஆட்சி உகந்த வழிமுறை என பரிந்துரை வழங்கியதாகவும் அறிக்கை கூறுகிறது. ஒற்றை ஆட்சியை விரும்புவோர் சமஷ்டி என்பது நாட்டின் பிரிவினைக்கு இட்டுச்செல்லும் என்று நம்புபவர்களாகவும், ஒற்றை ஆட்சிக்கு எதிரானவர்கள் இவ்வாட்சி முறை பெரும்பான்மையினரின் ஆட்சிக்கும், அதிகார மையப்படுத்தலுக்கும் இட்டுச்செல்லும் என்று கருத்துக்களை தெரிவித்தார்கள் என்றும் PRCC அறிக்கை கூறுகிறது.

அறிக்கையின் படி வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்கள் வைத்த சமர்ப்பணங்களில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட மாகாணமாக அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்துள்ளது. எனினும், கிழக்கு முஸ்லிம் சமூகத்தில் இருந்த வந்த சமர்ப்பணங்களில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் ஒருமிக்கப்படக்கூடாது என்ற கருத்தும், அவ்வாறு ஒருமிக்கப்பட்டால், முஸ்லிம்கள் செறிந்து வாழும் இடங்கள் முஸ்லிம் பிரதேசங்களாக ஒதுக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், இனத்தை மையப்படுத்தி வந்த சமர்ப்பணங்களை தவிர்த்து சாதி, மொழி, மதம் மற்றும் இடம் போன்ற வேறு பாகுபடுத்தும் காரணிகளையும் பிரதானமாகக்கொண்டு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

PRCCக்கு முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களில் பொதுவாக, சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு, தமது இடங்களில் காணப்படும் பெரும்பான்மை சமூகத்தினால் அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் உட்படுத்தப்படுவோம் என்ற பொதுவான ஐயம் காணப்பட்டதாக அறிக்கை அவதானிக்கிறது.

இதன் அடிப்படையில் PRCC குழு பின்வருமாறு விதப்புரைகளை முன்வைக்கின்றது:

1) “இலங்கையானது அரசியல் அமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளவாறு அரசாங்கத்தின் கருவிகளைக் கொண்ட ஒரு சுதந்திரமான, சுயாதீனமான, இறைமையுள்ள குடியரசாக…

2) இலங்கை குடியரசானது அரசியல் அமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளவாறு அரசாங்கத்தின் கருவிகளைக் கொண்ட ஒரு சுதந்திரமான, சுயாதீனமான, இறைமையுள்ள ஒற்றையாட்சி நாடாகவிருப்பதோடு…

3) …தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பின் 2ஆம் உறுப்புரை மாற்றமின்றி தக்கவைத்தல் வேண்டும். அதாவது: “இலங்கை குடியரசு ஒரு ஒற்றையாட்சியாகும்.”

இந்த மூன்று பரிந்துரைகள் ஒன்றிலோ கூட ‘சமஷ்டி’ என்ற சொல் ஒரு பொழுதும் பாவிக்கப்படாததால் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பெரும்பான்மையினர் அரசின் தன்மையை பற்றி முன் மொழிந்த கருத்துக்களை இவ்வறிக்கை பிரதிபளித்துள்ளது என்று கூறமுடியாது. எனினும், முதலாவது பரிந்துரையில் ‘ஒற்றையாட்சி’ என்ற பதம் தவிர்க்கப்பட்டமைக்கு வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் சமர்ப்பணங்களும் செல்வாக்கு செலுத்தி இருக்கும் என்று நாம் கருதலாம்.

இந்தநிலையில் PRCC வெளியிட்டுள்ள அறிக்கை புதிய அரசியல் யாப்பிற்கான தெளிவான கொள்கைகளை வகுத்துள்ளது என்று  கூறமுடியாது.

மேலும், இவ்வறிக்கையை வாசிக்கையில், வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் அரசின் தன்மை பற்றியோ அல்லது அதிகாரப்பகிர்வு தொடர்பிலோ ஒருமித்த அபிப்பிராயம் இருப்பதாகத் தென்படவில்லை. இன்று வட மாகணத்தில் சாதி பாகுபாடுகள் காணி பங்கீடுகளிலும், பாடசாலைகளிலும், அரச உத்தியோக நியமனங்களிலும் வெளிப்பட்டு நிற்கின்றன. இந்நிலையில், ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சமூகங்களுக்கு உயர்சாதியின் பண்புகளை பிரதிபலித்து நிற்கும் வட மாகாண சபை போன்ற ஒரு அரச உறுப்பிற்கு காணி, பொலிஸ் போன்ற முக்கியமான அதிகாரங்களை வழங்குவதன் மூலம் தாங்கள் மேலும் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்ற ஐயம் அவர்களின் சமர்ப்பணங்களில் வெளிப்படுகிறது.

மேலும், வட கிழக்கு ஒருகிணைந்த மாகாணமாக கருதப்பட வேண்டும் என்ற கருத்தை எதிர்த்து முஸ்லிம் சமூகத்தினர் சமர்ப்பணங்களைக் கொடுத்தனர். இன்றைய கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் சனத்தொகை மொத்த சனத்தொகையின் மூன்றில் ஒரு பங்காகக் காணப்படுகிறது. இவ்வாறு பார்க்கையில் தமிழ் மக்களின் கோரிக்கையை மாத்திரம் முன்னுரிமைபடுத்த வேண்டும் என்று கேட்பதில் நியாயம் உள்ளதா? மேலும் ‘தமிழ் மக்களின் பிரதிநிதிகள்’ என்று தமிழ் தேசியவாதிகளால் இன்று வரை கூறப்படும் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் வடக்கு இருந்த காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் வடக்கு மாகாணத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள். பெரும்பான்மை ஆதிக்கத்திற்கெதிராக ஏற்பட்ட போராட்டத்தின் போது, தமிழ் மக்களிடையே வாழும் சிறுபான்மை சமூகத்தைப் பாதுகாக்க முடியாமல் போனது இன்று வரை எமது வரலாற்றில் கரும் புள்ளியாகவே இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் முஸ்லிம் சமூகம் வட கிழக்கு இணைந்த மாகாணத்தில் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படமாட்டர்கள் என்பதில் நிச்சயம் இல்லை.

தமிழ் தேசியம் என்ற கோரிக்கையில் சமூகங்களுக்கு உள்ளே அமிழ்த்தப்பட்டு இருந்த அடக்குமுறைகள் மூடிமறைக்கப்பட்டதால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இன ரீதியிலான அதிகாரங்கள் சார்ந்த கோரிக்கைகளை மாத்திரமே இன்று வரை வட கிழக்கு வாழ் தமிழ் மக்களின் கோரிக்கைகளாக முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் வட கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு ஓரிரு பிரதானமான அரசியல் அதிகாரம் சார்ந்த கருத்துக்கள் மாத்திரமே அரசியல் யாப்பை ஒட்டி உள்ளன என்ற ஒரு பரவலான அபிப்பிராயத்தை இந்த அறிக்கை ஓரளவு உடைக்கின்றது என்றும் கூறலாம்

புதிய அரசியல் யாப்பும் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளும்

இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகளில் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிய முனையும் முதலாவது அரசியல் யாப்பு இதுவாகும்.

2000ஆம் ஆண்டின் புதிய அரசியல் யாப்பு பிரேரணை நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு கொண்டுவருவதற்கு முன்னர் அரசியல் யாப்பு உருவாக்கத்தை பற்றியும், இதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய முக்கியத்துவம் பற்றியும் அன்றைய அரசாங்கம் பொது மேடைகளிலும் அரசியல் கூட்டங்களிலும் பகிரங்கமாக பேசியது. அவ்வரசாங்கம் எடுத்த முயற்சிகளால் அதிகார பகிர்வாக்களுக்கு ஆதரவாக  பெரும்பான்மை மக்களின் அபிப்பிராயமும் காணப்பட்டது. இருந்தபோதிலும் அந்த யாப்பு நாடாளுமன்றத்தில் முறியடிக்கப்பட்டது. அதன் பின்னர், புதிய அரசியல் யாப்பு உருவாக்குவற்கு எடுக்கப்படும் முதலாவது முயற்சி இதுவாகும்.

2000ஆம் ஆண்டின் அரசியல் போக்கிற்கும் இன்றைய அரசியல் யதார்த்தத்திற்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. தனித் தமிழ் அரசினை நிறுவதற்கான விடுதலைப் புலிகளின் போராட்டத்தை இலங்கை அரசு, இராணுவத்தின் உதவியுடன் முறியடித்த பின்னரான காலம் இது. போர் வெற்றியைப் பயன்படுத்தி சிங்கள பேரினவாதத்தைத் தூண்டிவிட்ட ராஜபக்‌ஷ ஆட்சியின் பின் வந்த காலம் இது. பெரும்பான்மை மக்களின் சிந்தனையில் தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இன்றைய காலத்தில் இருக்கப்போவது இல்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இன்றைய அரசாங்கம் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு உண்மையான அரசியல் தீர்வை வழங்க முனைந்தாலும் பெரும்பான்மை மக்களின் ஆதரவின்றி இதை செய்துவிட முடியாது. எனினும், அரசியல் யாப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை பரவலாகக் கேட்டறிய பொது அமர்வுகளை நடாத்தியதற்கு அப்பால் இவ்வரசாங்கம் அரசியல் யாப்பை பற்றியோ, சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றியோ பொதுப் பிரச்சாரங்கள் வைப்பதாக தெரியவில்லை. மேலும், பொதுமக்களின் ஆலோசனையைக் கேட்டறியும் குழுவின் அறிக்கை வருவதற்கு முன்னரே நாடாளுமன்றம் அரசியல் யாப்புப் பேரவையாக அமர்ந்து புதிய அரசியல் யாப்பைப் பற்றி கலந்துரையாட ஆரம்பித்தது. இதைப்போன்ற நிகழ்வுகளை அவதானிக்கும் போது அரசாங்கம் உண்மையிலேயே மக்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறதா அல்லது, தென்னாபிரிக்க நாட்டின் அரசியல் முறைமையை அச்சடித்தபடி பின்பற்றும் இன்றைய இலங்கை அரசியல் போக்கின் பண்புகளில் இதுவும் ஒன்றாக அமைகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. எது எவ்வாறாயினும் மக்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி PRCC முன்னிலையில் வலுவான கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என்று இக்குழுவின் அறிக்கையை வாசிக்கும் பொழுது அவதானிக்க முடிகிறது.

இதனோடு தொடர்புபட்டு, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களின் அரசியல் யாப்பு செயன்முறை பற்றிய போக்கையும் சற்று நோக்கவேண்டும். அரசாங்கத்துடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடாத்தி தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கலாம் என்ற பாணியில் இவர்களது இன்றைய நடவடிக்கைகள் உள்ளன. தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மக்களிடையே புதிய அரசியல் யாப்பில் தாம் கேட்கும் கோரிக்கைகள் பற்றியோ, இப்போது வெளிவந்த PRCC அறிக்கை பற்றியோ பகிரங்க கூட்டங்களோ கலந்துரையாடல்களோ நடாத்துவதாகத் தென்படவில்லை. மக்களின் ஆதரவு இல்லாமல் அரசியல் யாப்பில் வட கிழக்கு தமிழ் மக்களுக்கென அதிகாரங்களை பெற முனைவதில் பயனேதும் உள்ளதா?

மேலும், சந்திரிக்கா அம்மையாரின் காலப்பகுதியில் முற்போக்கான அரசியல் யாப்பு சீர்திருத்தங்களை அரசு முன்வைத்த பொழுதும், தனது சொந்த பிடிவாதத்திற்காகவும் தமது இயக்கத்தைப் பாதுகாப்பதற்காகவும் விடுதலை புலிகள் இதனை உதறித்தள்ளினர். இவ்வாறான தீவிரமான அரசியல் போக்கு 2009ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் பலி கொடுக்க வழிகோரியது. இன்றைய அரசியல் கால கட்டத்தில் தமிழ் சமூகம், என்றும் இல்லாத அளவிற்கு நலிவடைந்து காணப்படுகின்றது. இந்த நிஜத்தில் தமிழ் மக்களின் பலத்தை திரட்டுவதால் மாத்திரம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை அரசு கேட்கப்போகின்றது என்றும் கூறமுடியாது. எனவே, இதுவரை காலமும் தமிழ் சமூகத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதில் தோல்வி கண்ட தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் வருங்காலத்தில் கடைபிடிக்கவேண்டிய யுக்தி என்ன?

இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் 1963இல் வெளிவந்த வி. காராளசிங்கம் அவர்களின் ‘தமிழ் பேசும் மக்களின் விமோசனப்பாதை’ என்ற ஆங்கில கட்டுரையில் கூறிய சில கருத்துக்களை நாம் மீண்டும் புரட்டிப்பார்ப்போம். அதில் அவர்,

“தமிழ் பேசும் மக்களின் அடிப்படை பலவீனமானது, நாம் சிறுபான்மை இனத்தவர்கள் என்பதாகும் என்று கூறுகிறார். எனவே, எமக்கு எதிராக இருக்கும் சக்திகள் எப்போதுமே பெரும்பான்மை சமூகத்தில் இருந்து எழுவதால் அச்சமூகத்தின் ஆதரவையும் கொண்டுள்ளன என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். மேலும், ஆரம்பகாலங்களில் இந்தியாவை பின்பற்றி சத்தியாகிரக வழிமுறையானது அரசியல் போராட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டாலும் அவை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஈட்டிய வெற்றியைத் தரவில்லை. இதற்குக் காரணம் இரண்டு போராட்டங்களிலும் காணப்படும் அடிப்படை வித்தியாசங்கள். இந்தியப் போராட்டமானது மேலிருந்து திணிக்கப்பட்ட ஒரு அந்நிய ஆட்சிக்கு எதிராக நடாத்தப்பட்ட ஒன்றாகும். எனவே, அந்நாட்டின் அனைத்து மக்களும் போராட்டத்திற்கு அணிதிரண்டனர். பெரும்பான்மை மக்கள் பலம் இந்திய சுதந்திர அமைப்பிடம் காணப்பட்டது. ஆனால், தமிழ் மக்கள் போராடுவது பெரும்பான்மை மக்களின் வாக்கெடுப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு எதிராக. எனவே, சரி பிழை என்ற வாதத்திற்கு அப்பால் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கத்துடமே தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைகின்றனர். எனவே, தமிழ் பேசும் மக்களின் போராட்டமானது தென் இலங்கையில் வாழும் சமூகங்களின் புரிந்துணர்வையும் ஆதரவையும் பெற்றால் அன்றி வெற்றியளிக்காது”

– என்று எழுதியுள்ளார்.

வரலாறு நமக்கு கற்பித்த பாடங்களை நாம் புரட்டிப்பார்த்தால் காராளசிங்கதின் வார்த்தைகளில் வெளிப்படும் உண்மைகள் நமக்குத் தெளிவாகிறது. தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதாயின் மற்றைய சிறுபான்மை இனங்களுடனும் முற்போக்கான சிங்கள சமூகங்களுடனும் இணைந்து செயற்பட முயற்சிக்க வேண்டும். எனவே, முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகளையும், மலையக தமிழ் மக்களின் உரிமைகோரல்களையும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் உள்வாங்கி பேச்சுவார்த்தை நடாத்துவதன் மூலம் மாத்திரமே தமிழ் மக்களின் உள்ளார்ந்த கோரிக்கைகளை அரசியல் ரீதியாக நிலைநிறுத்த முடியும்.

மேலும், அரசியல் யாப்பானது வெறுமனே சட்ட வல்லுனர்களினாலும் சட்டத்தரணிகளினாலும் வரையப்படும் ஒரு ஆவணமன்று. இது மக்கள் தாம் எவ்வாறு ஆட்சி செய்யப்படவேண்டும் என்று தீர்மானிக்கும் ஒரு உடன்படிக்கை. மக்கள் தமது கருத்துக்களை ஆணித்தரமாக இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படுத்திவிட்டார்கள். இவற்றை அரசாங்கமும் அரசியல் பிரதிநிதிகளும் எவ்வளவுக்கு உள்வாங்கி அரசியல் யாப்பை உருவாக்கப்போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அது வரையும் வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தொடர்ந்தும் யாப்பு பற்றிய தமது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் பத்திரிகைகள் மூலமும், பொதுக்கூட்டங்கள் மூலம் பகிரங்கப்படுத்திக்கொண்டு இருக்கவேண்டியது அவசியமாகும்.

சுவஸ்திகா அருளிங்கம்