படம் | PRweb

அண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்த கருத்துக்கள் மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதுடன், தமிழ்த் தேசியவாத தரப்பினர் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் அரசியல் பரப்பில் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய ஒருவராக இருந்துவரும் சுமந்திரன் வவுனியாவில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது தெரிவித்திருந்த கருத்துக்களே மீளவும் சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கிறது. சுமந்திரன் பேசிய விடயம் தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் கடுமையாக சாடப்பட்டுவருகிறது. 30 வருடம் போராடி என்னத்தை கண்டிங்க என்று சுமந்திரன் கேட்கிறார். அமிர்தலிங்கத்தைப் பற்றி நீலன் திருச்செல்வத்தை பற்றி கூறினீர்கள் – அவர்கள் இப்போது எங்கே? அவர்களைப் போன்று என்னையும் கொல்லவா போகின்றீர்கள்? இந்த விடயங்கள்தான் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ பதிவில் இடம்பெற்றிருக்கின்றன. சுமந்திரன் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் போராட்டத்தைத்தான் குறிப்பிடுகின்றார் என்பதை விளங்கிக் கொள்வதில் சிரமப்படவேண்டியதில்லை. சுமந்திரன் அவ்வாறு கூறும் போது தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அமைதியாக செவிமடுத்துக் கொண்டிருந்தார். உண்மையில் இதில் சுமந்திரனிடம் குற்றம்காண எதுவுமில்லை என்பதுதான் இப்பத்தியாளரின் கருத்து.

சுமந்திரன் 2009இற்கு பின்னர் அரசியலுக்கு வந்த ஒருவர். தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ்த் தேசியவாத அரசியல் தீர்மானிப்பட்ட காலத்தில் அவர் கொழும்பில் அமைதியாக தன்னுடைய தொழிலை செய்துவந்தவர். அவர் மிதவாதிகளோடும் சரி ஆயுதம் தாங்கிய போராட்ட இயக்கங்களோடும் சரி எந்தவொரு தொடர்பையும் பேணியவரல்ல. அப்படி அவர் ஒருபோதும் சொன்னதும் இல்லை. இந்தப் பின்னணியை கருத்தில் கொண்டு சிந்தித்தால் 2009இற்குப் பின்னரான அரசியல் நிலைமைகளை முன்வைத்தே அவரால் சிந்திக்க முடியும். அவ்வாறுதான் அவர் சிந்தித்தும், செயற்பட்டும் வருகிறார். சுமந்திரன் இவ்வாறு கூறும் போது அதனை இடைமறித்து நீர் முன்னர் தேர்தல் காலத்தில் அப்படிக் கூறினீரே – ஏன் அப்படிக் கூறினீர் என்று எவரும் கேட்க முடியாது. ஏனெனில், தேர்தல் காலத்திலும் சரி, அதற்கு பின்னரும் சரி சுமந்திரன் எங்கும் பிரபாகரனையோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையோ முதன்மைப்படுத்தி அல்லது சிலாகித்து பேசியதில்லை. இருப்பினும், சுமந்திரனை நோக்கியும் கூட ஒருவர், ஒரு கேள்வி கேட்க முடியும். அதாவது, முப்பது வருட கால ஆயுதப் போராட்டத்தின் விளைவாக உருவாகிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கமாக இருந்துகொண்டு சுமந்திரனால் எவ்வாறு இப்படி கேட்க முடியும்? முப்பது வருட போராட்டத்தினால் ஒன்றையும் காணாதபோது அந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய அமைப்பினால் உயிரளிக்கப்பட்ட கூட்டமைப்பில், ஏன் தொடர்ந்தும் தமிழரசு கட்சி ஒரு அங்கமாக இருந்து கொண்டிருக்கிறது? முன்னாள் ஆயுத அமைப்புக்களுடன் ஏன் தொடர்ந்தும் தமிழரசு கட்சி இணைந்திருக்கிறது?

இப்பத்தியாளரின் அவதானத்தில், சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்களில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லாவிட்டாலும் கூட, சுமந்திரன் அவ்வாறு கூறும்போது, மாவை அமைதியாக தலையாட்டிக் கொண்டிருந்தமையானது, ஆச்சரியம்மிக்க ஒன்றுதான். சில வாரங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியவர்களில் மாவை சோனாதிராஜாவும் ஒருவர். எதையும் காணாத முப்பது வருடகால போராட்டத்தை முன்னெடுத்த அமைப்பொன்றின் உறுப்பினருக்கு மாவை ஏன் அஞ்சலி செலுத்த வேண்டும்? இவையெல்லாம் அப்பாவி யாழ்ப்பாணத்து மக்களை ஏமாற்றுவதற்கான சிறந்த நாடகங்களா? அமிர்தலிங்கம் மற்றும் நீலன் திருச்செல்வம் போன்ற தமிழரசு கட்சியின் தலைவர்கள் விடுதலைப் புலிகளால் இல்லாமலாக்கப்பட்டனர் என்பது அரசியல் அரங்கிற்கு புதிய விடயமல்ல. அவ்வாறான கொலைகளை இப்பத்தி ஆதரிக்கவும் இல்லை. ஆனால், இவ்வாறான சம்பவங்களுக்குப் பின்னரும் கூட மாவை, சம்பந்தன் போன்ற தலைவர்கள் விடுதலைப் புலிகளுடன்தானே உறவு வைத்திருந்தனர். அவ்வாறாயின் ஒரு உருப்படாத போராட்டத்தை ஏன் இவர்கள் ஆதரித்து நிற்க வேண்டும்? சில மிதவாதத் தலைவர்களின் கொலைகள் மட்டுமல்ல சபாரத்தினம், பத்பநாபா போன்ற ஆயுத இயங்கங்களின் தலைவர்களது கொலைகளும் இடம்பெற்றிருக்கின்றன. இவ்வாறான கொலைகள் எவையும் தனிப்பட்ட பகைமையின் காரணமாகவோ அல்லது சொந்த நலன்களுக்காகவோ இடம்பெற்றவையல்ல. மாறாக அரசியல் காரணங்களுக்காகவே இடம்பெற்றவை. இதேபோன்று தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் போன்ற மூத்த தலைவர்களும் கூட கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், இவ்வாறான சம்பவங்களை மறப்பதும் மன்னிப்பதும் தமிழர் தேசத்திற்கு அவசியம் என்னும் அடிப்படையிலேயே அனைவரும் விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுக் கொண்டு அவர்களின் வழிகாட்டலில் கூட்டமைப்பாக ஒன்றுபட்டனர்.

ஆனால், அதன் பின்னரும் கூட டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகள் தங்களின் தலைவர்களை நினைவு கூரத் தயங்கவில்லை. விடுதலைப் புலிகள் காலத்திலேயே சபாரத்தினம் மற்றும் பத்மநாபா ஆகியோர் நினைவு கூரப்பட்டனர். அதற்கான ஆளுமையும் துனிவும் அந்தக் கட்சிகளின் தலைமைகளுக்கு இருந்தது. விடுதலைப் புலிகளும் அதனை தவறென்று கூறவில்லை. ஆனால், அப்போது கூட அமிர்தலிங்கத்திற்கு நினைவு கூர மாவை முயற்சிக்கவில்லை. நீலன் திருச்செல்வத்தை அவரது துனைவியான சித்தி திருச்செல்வம்தான் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்ந்தார். இது தொடர்பில் ஒருமுறை பி.பி.சி தமிழோசை சம்பந்தனிடம் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தது. நீங்கள் ஏன் அமிர்தலிங்கத்தின் கொலையை கண்டிக்கவில்லை. அதற்கு சம்பந்தன் அளித்த பதில்: அப்போது அதனை கண்டித்திருந்தால் பல விளைவுகளை நாங்கள் சந்திக்க நேர்ந்திருக்கும் என்கிறார். தனது கட்சியின் தலைவருக்கு நேர்ந்த ஒன்றை கண்டித்தால் தங்களுக்கு ஆபத்து வந்துவிடும் என்று யோசிப்பவர்களின் அரசியல் ஆளுமையை என்னவென்பது? தன்னுடைய தலைவரைக் கூட மறந்துவிட்டு விடுதலைப் புலிகளிடம் தஞ்சமடைந்திருந்தவர்கள் எவ்வாறு அப்போராட்டத்தின் பயன் தொடர்பில் கேள்வியெழுப்ப முடியும்? உண்மையில் இன்றிருக்கும் எந்தவொரு தமிழ் தலைவரும் போராட்டத்தின் பயன் தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்வியெழுப்ப முடியாது. ஏனெனில், அதற்குப் பதிலளிக்க வேண்டியது மக்களல்ல. மாறாக தலைவர்களாகிய அவர்கள்தான்.

ஆயுத விடுதலைப் போராட்டம் என்பது ஏதோ தற்செயலாக உருப்பெற்ற ஒன்றல்ல. சம்பந்தன் கூட தனது நாடாளுமன்ற உரையொன்றில், விடுதலைப் புலிகளின் எழுச்சிக்கு பின்னர் நியாயபூர்வமான காரணங்கள் இருந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். இலங்கையின் சிங்கள மேலாதிக்க அணுகுமுறைகளின் விளைவே தமிழர் விடுதலைப் போராட்டமாகும். அவ்வாறு தோற்றம் பெற்ற ஆயுதப் போராட்டத் தரப்புக்கள் தங்களுக்குள் ஒரு ஜக்கிய முன்னணியாக செயற்படுவதில் சில தவறுகளை இழைத்திருக்கலாம். ஆனால், போராட்டமும் அதன் இலக்கும் தவறல்ல. போராட்டங்கள் என்பவை ஒரு திட்டமிட்ட வடிவங்களில் மட்டுமே நிகழ்வதுமில்லை. ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் ஒரு தேசிய இனத்தை அல்லது மக்களை வழிநடத்தும் அரசியல் தலைமைகள் குறிப்பான சூழ்நிலைமைக்கு ஏற்றவாறே போராட்டங்களை முன்னெடுக்க முடியும். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவும் அவ்வாறுதான் அமைந்திருந்தது. மிதவாத தலைமைகளின் வழியாக நகர்த்தப்பட்ட போராட்டமே பின்னர் அயுத இயக்கங்களினால் முன்னெடுக்கப்பட்டது. பின்னர் அது முற்றிலுமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முழுமையான ஆளுகைக்குள் வந்தது. இதன்போது விடுதலைப் புலிகள் இராணுவ வெற்றிகளின் உச்சத்திற்கு சென்றனர். ஒரு நடைமுறை அரசையும் நிறுவினர். ஆனாலும், அதன் பின்னர் ஏற்பட பாதகமான சூழலால் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டது. அது ஒரு பெரும் வீழ்ச்சிதான். விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் போராட்டத்தை புதிய சூழலுக்கு ஏற்ப நகர்த்திச் செல்லும் பொறுப்பை கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே கூட்டமைப்புக்குள் நிலவிய உள்முரண்பாடுகள் அதன் போராட்ட முகத்தை சிதைத்ததுடன், கூட்டமைப்பை வெறுமனே ஒரு தேர்தல் கூட்டாகவும் சுருக்கியது. இவ்வாறானதொரு சூழலில்தான் ஆட்சிக்கு மாற்றத்திற்குப் பின்னரான குறிப்பான சூழலை கையாள்வது தொடர்பில் புதிய அணுகுமுறைகள் தொடர்பில் சிந்திக்கப்பட்டன. அதன் விளைவாக வந்ததுதான் ‘எழுக தமிழ்’ மக்களெழுச்சியாகும்.

இங்கு குறிப்பாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட சூழலில் போராட்டத்தை வழிநடத்தும் அரசியல் தலைமையானது எல்லாக் காலங்களுக்குமான தலைமையாக இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட சூழலை கையாண்ட தலைமை பிறிதொரு சூழலில் இல்லாமல் போகலாம். அதன் பின்னர் பிறிதொரு தலைமை அதன் தொடர்ச்சியை பொறுப்பேற்கும். இவ்வாறுதான் போராட்டங்கள் நகர்த்தப்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தும் தலைமையானது, ஜனநாயாக ரீதியான அரசியல் போராட்டங்களுக்கு தலைமையேற்பதில்லை. அது அரிதாகவே நிகழ்வதுண்டு. தென்னாபிரிக்காவில் அது நிகழ்ந்தது. அங்கு ஆயுதப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நெல்சன் மண்டேலாவே பின்னர் ஜனநாயக ரீதியான அரசியல் போராட்டத்திற்கும் தலைமை தாங்கினார். அவர் வெற்றியும் பெற்றார். தமிழர் தேசத்தை பொறுத்தவரையில் பிரபாகரனின் வீழச்சிக்குப் பின்னரான சூழலை கையாளும் ஒரு அமைப்பாகவே கூட்டமைப்பு வெளித்தெரிந்தது. கூட்டமைப்பு அதன் ஆற்றலை இழக்கும் போது பிறிதொன்று வெளிவரலாம். வரலாற்றின் விதிக்கு கட்டுப்படுவதாயின் அது நிகழவே செய்யும். எனவே, விடுதலைப் புலிகள் உருவாக்கிய மேடையில் இருந்து கொண்டு, முப்பது வருட போராட்டத்தால் கண்டதென்ன என்று கேட்பதானது, ஒருவர் நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டு, இதுவரை என்னால் ஆனது என்ன என்று தனக்குத் தானே கேட்டுக்கொள்வதற்கு ஒப்பானதாகும். ஏனெனில், இப்போது சுமந்திரன் காலூன்றி நிற்பது முப்பது வருட கால பேராட்டத்தின் விளைவாக உருவாகிய மேடையில்தான். ஒருவேளை அவருக்கு அந்த மேடையில் பிடிப்பில்லாவிட்டால் அந்த மேடையிலிருந்து நிரந்தரமாக விலகி, புதிய மேடை ஒன்றை உருவாக்கிக்கொள்ள முடியும். தமிழரசு கட்சியை ஒரு தனியான பாதையில் கொண்டு சொல்ல முடியும்.

யதீந்திரா