படம் | Sinhayanews

எழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் தோன்றிய எதிர்ப்பு எழுக தமிழின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது. “எழுக தமிழ்” தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திருக்கக் கூடிய விளைவுகளை விடவும் அதிகரித்த விளைவை அது தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். இத்தனைக்கும் “எழுக தமிழ்” ஒரு போர்ப்பிரகடனம் அல்ல. அது யாருக்கும் எதிரானது அல்லவென்று விக்னேஸ்வரன் தனது உரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தார். அவர் தனது உரையில் பாவித்த வார்த்தைகளிலும் சரி கருத்துக்களைத் தெரிவித்த விதத்திலும் சரி, ஆகக் கூடிய பட்சம் அந்த உரையை ஒரு நல்லெண்ணச் சமிக்ஞையாகக் காட்டவே முற்பட்டார்.

அது மட்டுமல்ல, “எழுக தமிழ்” பிரகடனமும் இச்சிறிய தீவைப் பிரிக்கச் சொல்லிக் கேட்கவில்லை. அது சமஷ்டியைத்தான் கேட்கிறது. அது கூட நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சமஷ்டிதான். அப்பிரகடனத்தை வாசித்தவர் ஒரு மருத்துவ நிபுணர். அவர் ஒரு முழுநேர அரசியல் செயற்பாட்டாளர் அல்ல. அவர் ஓர் அரச ஊழியர். ஒரு மருத்துவ நிபுணர் இவ்வாறாக ஒரு பிரகடனத்தை வாசிப்பது என்பது ஈழத்தமிழ் அரசியற் பரப்பில் மிக அரிதான ஒரு நிகழ்வுதான். மருத்துவர்கள் அரசியல்வாதிகளாக மாறியதுண்டு. ஆனால், மருத்துவர்கள் சமூக அரசியற் செயற்பாட்டாளர்களாக இவ்வாறு மேலெழுவது என்பது ஈழத்தமிழ் அரசியற் பரப்பில் மிகவும் அரிதானது. மருத்துவ நிபுணர்கள் தொடர்பில் சாதாரண ஈழத்தமிழ் மனம் உருவாக்கி வைத்திருக்கும் படிமங்களுக்கு அது முரணானது. 2009 மேற்குப் பின்னரான ஈழத்தமிழ் அரசியற் பரப்பில் உருவாகி வரும் புதிய தோற்றப்பாடுகளில் இதுவும் ஒன்று.

ஓர் இருதய மருத்துவ நிபுணரால் வாசிக்கப்பட்ட எழுக தமிழ்ப்  பிரகடனமானது சிங்களமயமாக்கலுக்கும், பௌத்த மயமாக்ககலுக்கும் எதிராகவே காணப்படுகிறது. இச்சிறிய தீவில் ஒரு இனமும் ஒரு மதமும் ஏனைய இனங்கள், மதங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு போக்கைத்தான் அது எதிர்த்தது. அப்போக்கானது பல்லினத் தன்மைக்கு எதிரானது. எனவே, “எழுக தமிழ்” பிரகடனத்தில் எதிர்க்கப்பட்டது ஒற்றைப் படையாக்கம் அல்லது ஓரினத் தன்மையாக்கம் போன்ற போக்குகள் தான். அப்பிரகடனம் முன்வைக்கும் தீர்வெனப்படுவது பல்லினச் சூழல் ஒன்றையே கேட்கின்றது. பல்லினச் சூழல், பல மதச் சூழல் எனப்படுவது அடிப்படையில் ஒரு ஜனநாயகச் சூழல் தான். உலகின் வளர்ச்சியடைந்த எல்லா ஜனநாயகங்களினதும் பொதுப் பண்பு அதுவே. எனவே, முடிவாகக் கூறின் “எழுக தமிழ்” பிரகடனம் எனப்படுவது உயர்ந்தபட்ச ஜனநாயகச் சூழல் ஒன்றையே கோரி நிற்கின்றது.

இப்படிப்பட்ட ஒரு பிரகடனத்தையும், பேரணியையும் தென்னிலங்கையில் இருக்கும் ஒரு பகுதியினர் ஏன் எதிர்க்கிறார்கள்? ஒன்றில் அவர்கள் அந்தப் பிரகடனத்தையும், முதலமைச்சரின் உரையையும் முழுமையாக வாசிக்கவில்லை. அல்லது இப்படியொரு எழுச்சியைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள் என்று பொருள். எழுக தமிழோ, பொங்கு தமிழோ எந்தத் தமிழாக இருந்தாலும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து ஒரு சிறு நிமிர்வு ஏற்பட்டாலும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தமிழ் மக்கள் தோல்வியுற்ற ஒரு தரப்பாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இதை ஒரு சில பிக்குகள் மட்டும்தான் செய்கிறார்கள் என்று கருதத் தேவையில்லை. தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பொதுபலசேனா மட்டும் தான் எழுக தமிழை எதிர்க்கிறது என்பதல்ல. அரசாங்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அதற்கு எதிர்ப்புகள் காணப்படுகின்றது. அது மட்டுமல்ல தாராண்மைவாத ஜனநாயகவாதிகளாகத் தோன்றும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலும் கூட அதற்கு எதிர்ப்பு தோன்றியுள்ளது. அதை வெறுமனே பொதுபலசேனா காட்டும் எதிர்ப்பாக சிறுப்பித்துக் காட்ட முடியாது. மாறாக சிங்கள பொது உளவியலின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதி அது.

கடந்த செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி கொழும்பில் நடந்த பாதுகாப்புத்துறை மாநாட்டில் உரையாற்றிய அரசத்தலைவர் சிறிசேன, இலங்கைத் தீவிற்கு இப்பொழுது எதிரிகள் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால், எழுக தமிழிற்கு எதிராக உருவாகி இப்பொழுது வரை நிலவி வரும் உணர்வலைகள் யாருக்கு எதிரானவை?

முன்னைய காலங்களில் கடும்போக்குடைய சிங்கள இயக்கங்களின் சின்னங்களையும், கொடிகளையும் முச்சக்கர வண்டிகளிலும், வறிய அடிமட்ட மக்கள் மத்தியிலும்தான் அதிகம் காண முடியும் என்றும், ஆனால் இப்பொழுது “சிங்க லே” தேசிய முன்னணியின் சின்னங்களை ஹைபிரிற் வாகனங்களின் பின்பக்கக் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருப்பதைக் காண முடியும் என்று ஒரு தொழிற்சங்கவாதி அண்மையில் சுட்டிக்காட்டினார். அதாவது, சிங்கள பௌத்த கடும்போக்குவாதம் எனப்படுவது படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் செல்வாக்கோடிருப்பதை இது காட்டுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகம் போவானேன். கடந்த மாதம் ஜெனீவாவில் ஐ.நா மன்றில் உரையாற்றிய பொழுது அரசுத் தலைவர் சிறிசேன என்ன சொன்னார்? ஸ்ரீலங்கா ஒரு சிங்கள, பௌத்த நாடு என்றுதானே சொன்னார்? அவர் பதவிக்கு வந்து 22 மாதங்கள் ஆகின்றன. இக்காலப் பகுதிக்குள் அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் முதன்மையை நீக்கப்போவதாக எங்கையாவது எப்பொழுதாவது அவர் கூறியிருக்கிறாரா?  அல்லது ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறாரா? இதுதான் மெய்நிலை. இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த மேலாண்மை வாதம் எனப்படுவது நன்கு நிறுவனமயப்பட்டுள்ளது. சிறிசேன அதன் ஒரு முனையில் காணப்படுகின்றார். பொதுபலசேனா அதன் இன்னுமொரு முனையில் காணப்படுகிறது. அது மிருக முகத்துடன் காணப்படுகின்றது. ஆனால், ரணில், மைத்திரி அரசாங்கமோ மனித முகமூடியுடன் காணப்படுகின்றது.

ஆனால் அவர்கள் கூறுகிறார்கள். விக்னேஸ்வரன் தமிழ் இனவாதத்திற்கு தலைமை தாங்குவதால் அது தென்னிலங்கையில் சிங்கள இனவாதத்தைத் தூண்டி வருகிறது என்று. விக்னேஸ்வரன் அவ்வாறு இனவாதத்தைத் தூண்டவில்லை என்று சம்பந்தர் நாடாளுமன்றத்தில் உறுதியாக கூறிய பின்னரும் அவர்கள் விக்னேஸ்வரனை தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். இக்கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்ட பாதுகாப்புத்துறைக் கருத்தரங்கில் உரை நிகழ்த்தும் பொழுது சிறிசேன மற்றொரு விடயத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார். “தமிழ் மக்கள் மத்தியிலிருந்த கடும் போக்காளர்களான புலிகள் இயக்கத்தையும் தோற்கடித்து விட்டோம். சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கடும் போக்குடைய ராஜபக்‌ஷவையும் தோற்கடித்து விட்டோம்” என்று தொனிப்பட. இதன் பொருள் என்ன?

அதாவது, இப்பொழுது கடும்போக்கு வாதிகள் இரு தரப்பிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். எனவே, மிதப் போக்குடையவர்கள் தங்களுக்கிடையில் ஏதோ ஒரு இணக்கத்திற்கு வந்து ஒரு தீர்வைக் கண்டு பிடிக்கலாம் என்று அவர்கள் வெளியுலுகத்திற்கு காட்ட முனைகிறார்கள்.; இவ்வாறு இரு தரப்பிலும் உள்ள மிதப்போக்குடைய சக்திகள் தங்களுக்கிடையே ஓர் இணக்கத்தைக் கட்டியெழுப்பி வரும் ஒரு பின்னணியில் விக்னேஸ்வரன் மறுபடியும் நிலைமைகளைக் குழப்புகிறார் என்ற ஒரு குற்றச்சாட்டை சிங்கள மக்கள் மத்தியிலும் காணமுடிகிறது. தமிழ் மக்கள் மத்தியிலும் காணமுடிகிறது.

ஆனால், விக்னேஸ்வரனோ அல்லது எழுக தமிழோ முன்வைக்கும் கோரிக்கைகள் இச்சிறிய தீவின் பல்லினச் சூழலையும், பல்மதச் சூழலையும் கட்டியெழுப்பும் நோக்கிலானவைதான். அவற்றைத் தீவிரவாதம் என்று சொன்னால் எது மிதவாதம்? இத்தனைக்கும் விக்னேஸ்வரன் தமிழ் அரசியலின் ஒரு புதிய அணிக்குத் தலைமை தாங்கப் போவதாக இன்று வரையிலும் வெளிக்காட்டவில்லை என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். தமிழரசுக் கட்சிக்கு எதிரான அழுத்தக் குழுவொன்றின் ஜனவசியமிக்க ஒரு குறியீடாகவே அவர் தோன்றுகிறார். அதற்குமப்பால் தமிழரசுக் கட்சி மீதும் அதன் செயற்பாடுகளின் மீதும் அதிருப்தி கொண்டவர்களை ஓர் அணியாகத் திரட்டி அதற்குத் தலைமை தாங்க அவர் இன்று வரையிலும் தயாரில்லை. தமிழ் மக்கள் பேரவையானது ஒரு கட்சியாக மாறப் போவதில்லை என்பதை அவர் கடந்த மாதம் மட்டக்களப்பில் வைத்துக் கூறியிருந்தார். அங்கு நடந்த முத்தமிழ் விழாவில் உரை நிகழ்த்தும் பொழுது அவர் அவ்வாறு கூறியிருந்தார்.

எனவே, விக்னேஸ்வரன் ஓர் எதிரணிக்கு தலைமை தாங்கத் தயாராகக் காணப்படாத வரை அவர் முன்வைக்கும் அரசியலும் செயற்திறன் மிக்க விதத்தில் நிறுவனமயப்படப் போவதில்லை. இவ்வாறு எதிர்த்தரப்புக்களை அச்சுறுத்தும் அளவிற்கு இன்னமும் முழு அளவு நிறுவனமயப்பட்டிராத அரசியற் செயற்பாடுகளைக் கண்டு தென்னிலங்கையில் இருப்பவர்கள் ஏன் அச்சமடைய வேண்டும்? ஒரு எழுக தமிழிற்கே இவ்வளவு ஆர்ப்பாட்டமாக எதிர்ப்பு காட்டப்படும் என்றால், அதுபோன்ற தொடர்ச்சியான மக்கள் மையச் செயற்பாடுகளுக்கு எதிர்வினை எப்படியிருக்கும்? எழுக தமிழிற்கு தென்னிலங்கையிலும், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பகுதியினரிடமிருந்தும் காட்டப்படும் எதிர்ப்புக்களிலிருந்து தமிழ் மக்கள் பேரவையும், அதன் ஆதரவாளர்களும் ஒரு புதிய உத்வேகத்தைப் பெறவேண்டியிருக்கிறது. எழுக தமிழிற்கு அடுத்தது என்ன? என்று அவர்கள் சிந்திக்கவும், திட்டமிடவும் வேண்டி இருக்கிறது.

இலங்கைத் தீவிற்கு இப்பொழுது எதிரிகளே இல்லையென்று கூறிக் கொண்டு இருதரப்பு மிதவாதிகளும் ஒரு இணக்கத்திற்கு வந்து ஒரு தீர்வை, அதாவது ஒரு புதிய யாப்பை தமிழ் மக்களின் முன் வைக்கவிருக்கும் ஒரு பின்னணியில் எழுக தமிழிற்குப் பின்னரான அரசியற் செயற்பாடுகளுக்கான தேவைகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக யாப்புருவாக்கச் சூழலில் யாப்பைக் குறித்து தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டிய ஒரு பொறுப்பு தமிழ் மக்கள் பேரவைக்கும், தமிழ் கட்சிகளுக்கும், புத்திஜீவிகளுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும். ஊடகவியலாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உண்டு. அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் பேரவையானது ஏற்கனவே ஒரு முன்மொழிவை வைத்திருக்கிறது. அம்முன்மொழிவை இலகு தமிழில் எழுதி மக்கள் மத்தியில் கொண்டு போக வேண்டும். லட்சக்கணக்கில் அதன் பிரதிகளை தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக்க வேண்டும். தான் முன்வைத்த ஒரு முன்யோசனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் பேரவைக்கு உண்டு என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

யாப்புருவாக்கத்தைக் குறித்தும் தமிழ் மக்களின் கோரிக்கைகளைக் குறித்தும் தமிழ் மக்கள் மத்தியில் தெளிவில்லாத ஒரு நிலையே காணப்படுகின்றது. எனவே, தமிழ் மக்கள் பேரவையும் தமிழ் கட்சிகளும் இது தொடர்பில் உடனடியாக அடுத்த கட்டத்தைக் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. எழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பானது தமிழ் மக்களை எந்தளவிற்கு ஐக்கியப்படுத்தியுள்ளது? விக்னேஸ்வரனை எதிர்ப்பதில் சிங்கள கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் எவ்வறானதோர் ஐக்கியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை தமிழ் மக்கள் உற்றுக் கவனிக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் முதலாவது பொங்கு தமிழ் ஒழுங்கு செய்யப்பட்ட பொழுது அதில் பங்கேற்ற யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு புத்திஜீவி என்னிடம் பின்வருமாறு சொன்னார், “முதலில் அதில் பங்கேற்பதில்லை என்றுதான் தீர்மானித்திருந்தேன். ஆனால், பொங்கு தமிழிற்கு முதல் நாள் பல்கலைக் கழகச் சூழலில் ராங்கிகளும், கவச வாகனங்களும் செறிவாக நடமாடத் தொடங்கின. பார்க்கும் இடங்களில் எல்லாம் படையினர் ஏதோ ஒன்றை தடுக்கப் போவது போல தயார் நிலையில் காணப்பட்டார்கள். இவற்றையெல்லாம் பார்த்ததும் நான் யோசித்தேன். இவர்கள் ஏன் பொங்கு தமிழை தடுக்க வேண்டும்? இவர்கள் யார் அதைத் தடுப்பதற்கு? எனவே, நான் எனது எதிர்ப்பை பதிவு செய்வது என்று தீர்மானித்தேன். அதனால், பொங்கு தமிழில் பங்கெடுத்தேன்” என்று. எழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் தோன்றியிருக்கும் உணர்வலைகளை தொகுத்துப் பார்க்கும் ஒரு சராசரித் தமிழ் மனம் எப்படிப்பட்ட முடிவை எடுக்கும்?

நிலாந்தன் எழுதிய இக்கட்டுரை ‘ஞாயிறு தினக்குரல்’ பத்திரிகையில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.