படம் | nation

தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களும், ஜெனீவா மனித உரிமைச் சபை மாநாடும் இலங்கை அரசின் வெளியுறவுக் கொள்கையில் தற்போது மாற்றங்களை எற்படுத்தி வருகின்றன. கனடா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைப் போன்று இலங்கை அரசிற்கு நிரந்தரமான வெளிநாட்டுக் கொள்கை என ஒன்று இல்லை. இலங்கை அரசியலமைப்பில் வெளிநாட்டுக் கொள்கை என கூறப்பட்டிருந்தாலும் அரசு மாறுகின்றபோது அந்தக் கொள்கையும் மாற்றமடையாத முறையில் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை. அதாவது, எழுதப்பட்ட ஒரு நெகிழாத் தன்மையை வெளியுறவுக் கொள்கை கொண்டிருக்கவில்லை. ஆனாலும், ஜே.ஆர் ஜயவர்த்தனா காலத்தில் இருந்து சந்திரிகா பண்டாரநாயக்கா காலம் வரை இனப்பிரச்சினை விடயத்தில் வெளியுறவு கொள்கை என்பது ஓர் நேர் கோட்டில்தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

கட்சி அரசியல்

இலங்கையில் தேசிய கட்சிகள் என்று கூறப்படுகின்ற இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் உள்ளன. ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாவது ஐக்கிய தேசிய கட்சி. இந்த இரு கட்சிகளும்தான் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இன்று வரை மாறி மாறி ஆட்சி புரிந்துவருகின்றன. வெளிநாட்டுக் கொள்கை என்ற விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் சீனச்சார்பு அதிகமாக இருக்கும். ஐக்கிய தேசிய கட்சியிடம் அமெரிக்காவை முதன்மைப்படுத்திய மேற்குலக நாடுகளுக்கு வளைந்து கொடுக்கும் கொள்கை அதிகமாகக் காணப்படும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிடம் சீனச்சார்பு இருந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கும் ஏற்ப செயற்படும் பண்பும் காணப்பட்டது.

இனப்பிரச்சினை ஆயுதப்போராட்டமாக மாறிய 1983ஆம் ஆண்டில் இருந்து இந்தியா உட்பட அனைத்து நாடுகளையும் அரவணைத்துச் செல்லவேண்டிய ஒரு நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டது. வடக்கு-கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை பங்கரவாத பிரச்சினையாக முதலில் காண்பித்தவர் ஜே.ஆர். ஜயவர்த்தனா. அதன் நீட்சிதான் இன்றுவரையுள்ள அரசில் காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை என்பது இரண்டு பிரதான விடயங்களை கொண்டிருந்தது. ஒன்று பொருளாதார ரீதியிலான தேடல், இரண்டாவது வடக்கு-கிழக்கு ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஒற்றை ஆட்சி தன்மைக்குள் ஒரு தீர்வை உருவாக்குதல்.

சர்வதேசம் ஆதரவு இல்லை

சர்வதேச ரீதியாக ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் நடைபெற்று ஓய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு அன்று கூறியிருந்தார். அதனடிப்படையில்தான் இலங்கையின் எதிர்கால வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படும் எனவும்  கூறினார். 18 திருத்தங்களுடன் 1978ஆம் ஆண்டு அவரால் உருவாக்கப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு தற்போதும் நடைமுறையில் இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசு அந்த யாப்பின் கீழான ஒற்றை ஆட்சியை மேலும் பலப்படுத்த முற்படுகின்றது. ஜே.ஆரை தொடர்ந்து பதவிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதிகளும் அதைத்தான் விரும்பினார்கள்.

ஆனாலும் முன்னாள் ஜனாதிபதிகள் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட தன்மை ஒன்றை கொண்டிருந்தன. ஜே.ஆர் ஜயவர்த்தனாவும் சந்திரிகாவும் வெவ்வேறுபட்ட கட்சிக் கொள்கைகளை கொண்டிருந்தாலும் அரசு என்ற தளத்தில் இருந்துகொண்டு இனப்பிரச்சினை தொடர்பாக ஒரே பார்வையில் சிந்தித்தனர். ஆனால், அந்த சிந்தனை இனப்பிரச்சினைக்கு நேர்த்தியான தீர்வை கொண்டுவர வேண்டும் என்று இருந்ததாக கூறமுடியாது. ஆனாலும், இலங்கையின் சர்வதேச நாடுகளை ஆத்திரமடையச் செய்யும் அளவிற்கு அல்லது இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களை தீவிரப்படுத்தும் முறையில் அந்த சிந்தனைகள் இருக்கவில்லை. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசு பதவிக்கு வந்த பின்னர்தான் இலங்கை வெளியுறவுக் கொள்கையின் நிலை தலைகீழாகியது.

ஜெனீவா தீர்மானத்தின் பின்னர்

2012ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர்தான் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் தளர்வு ஏற்பட்டு அது அமெரிக்க எதிர்ப்புவாத நாடுகளுடன் கூட்டுச் சேர்கின்ற நிலைக்கு மேலும் தள்ளியது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் அமெரிக்க எதிர்ப்புக் கொள்ளை ஆரம்பித்தது என கூறினாலும் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்க உதவி தேவைப்பட்ட காரணத்தினால் எதிர்ப்பை கொஞ்சம் அமர்த்தி வாசிக்க வேண்டிய நிலை உருவானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அமெரிக்க ஆதரவு கொள்கையை கடைப்பிடிக்கிறார் என்பதற்காக அமெரிக்காவும் போருக்கு உதவவில்லை. மாறாக விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் என அமெரிக்கா வெளியுறவுக் கொள்கையில் 1997ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவுதான் அது.

அமெரிக்க இராஜதந்திரி ரிச்சாட் ஆமிரேஜ் பயங்கரவாத பட்டியலில் விடுதலைப் புலிகளை சேர்த்தமைக்கு காரணம் சொன்னபோது அந்த தகவல் தெளிவாக புரிந்தது. 2004ஆம் ஆண்டு ரிச்சாட் ஆமிரேஜ் கொழும்புக்கு வந்தபோது சர்வதேச ரீதியாக அச்சறுத்தல் விடுக்கக்கூடிய பயங்கரவாதிகளை அழிப்போம் என கூறியிருந்தார். இதுதான் இலங்கை அரசுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அதனால் இலங்கை அமெரிக்காவுக்கு எதிரான கொள்கையை பின்பற்றினாலும் அமெரிக்கா விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு உதவியது. ஆனால், போர் முடிந்ததும் தாங்கள் சொல்வதை மஹிந்த ராஜபக்ஷ அரசு கேட்கும் என அமெரிக்கா நம்பியது. ஆனால் அது நடக்கவில்லை.

பொறுமைக்கான காரணம்

2012ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை முற்றுமுழுதாக அமெரிக்க எதிர்ப்புவாத சக்திகளுடன் கூட்டுச் சேரும் நிலைக்கு கொண்டு வந்த பின்னரும் அமெரிக்கா, உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இன்னமும் பொறுமை காப்பதற்கு இரு காணரங்கள் உண்டு. ஒன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இலங்கையின் வெளியுறவு கொள்கை மாறும். இரண்டாவது பொருளாதார ரீதியான உதவிகளுக்கு இலங்கை கை நீட்டும் என்ற எதிர்ப்பார்ப்பு. இந்த இரு காணரங்களும் பொறுமை காக்க வைத்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளது. அதாவது, இலங்கை மீது மேலும் மேலும் அழுத்தங்களை கொடுத்தால் அமெரிக்க எதிர்ப்புவாத நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து பொருளாதார நலன்களை பெறுவோம் என்று மறைமுகமாக கூறப்பட்டிருக்கின்றது.

ஆட்சி மாற்றம், பொருளாதார நலன் என்ற இரண்டு காரணிகளையும் வைத்தும் இலங்கை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை எடைபோடுவதை நிறுத்துங்கள் என்ற செய்தியும் அங்கே சொல்லப்பட்டிருக்கின்றது. ஆக இலங்கையின் வெளியுறவு கொள்கை என்பது தற்போது மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது ஆட்சியையும் தக்க வைக்கின்ற ஒரு நீண்ட நிகழ்ச்சி நிரலும் அதற்கு ஏற்ப சர்வதேச நாடுகளை தங்கள் பக்கம் வரவைக்கின்ற ஏற்பாடுகளுடன் மாத்திரமே நகர்ந்து செல்கின்றது. இலங்கையின் இந்த அணுகுமுறை சர்வதேச நியமங்களுக்கு நேர் எதிர்மாறானதாக இருந்தாலும் ஒரு வகையில் சர்வதேச கொள்கைகளை வகுக்கும் நாடுகளுக்கு இலங்கையை எதிர்காலத்தில் கையாளவேண்டிய முறைகள் தொடர்பில் புதிய சிந்தனையை கொடுக்கலாம்.

ஐக்கிய தேசிய கட்சியும் தொடரலாம்

ஏனெனில் தற்போது எதிர்கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி மஹிந்த ராஜபக்ஷ அரசை விமர்சித்தாலும் இனப்பிரச்சினை தொடர்பாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்கின்றது. ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றபோது ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர் ஜோன் அமரதுங்கவும் சென்றிருந்தார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு சொல்லிவிட்டுத்தான் சென்றேன் என அவர் கூறியும் உள்ளார். ஆகவே, இலங்கையின் வெளிறவுக் கொள்கையை ஐக்கிய தேசிய கட்சியும் ஏற்றுள்ளது என்ற முடிவுக்கு வரலாம். இனப்பிரச்சினை தொடர்பாக (தமிழர் எதிர்ப்புக் கொள்கை) 1983ஆம் ஆண்டில் இருந்து இந்த இரு கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான் பின்பற்றுகின்றன என்ற முடிவுக்கும் வரலாம்.
இந்த இடத்தில் ஆட்சிமாறினால் இலங்கையில் அமைதி ஏற்பட்டுவிடும் இனப்பிரச்சினை தீர்ந்து விடும் என கருதுகின்ற அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பான தங்கள் நிலைப்பாட்டில் எவ்வாறான மாற்றங்களை செய்யப்போகின்றன? இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இதுவரை ஒழுங்குபடுத்தப்படாத ஒரு வெளியுறவு கொள்கைதான் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அதுவும் 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் வெளியுறவு கொள்கை என்பது அமெரிக்க-இந்திய எதிர்ப்புவாத தன்மையுடன் நிரந்தரமாக அமைந்துவிட்ட ஒரு நிலை தோன்றியுள்ளது. (அது இலங்கையின் இறைமைக்கு ஆரோக்கியம் என்று கூறிவிட முடியாது)

இலங்கை தொடர்பாக பொருளாதார நலன்களுடன் மாத்திரம் சிந்தித்து செயற்பட்டதன் காரணத்தினால் இன்று அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு இலங்கையிடம் இருந்து நல்லபாடம் கிடைத்திருக்கின்றது. இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் தமிழ் முஸ்லிம் சமூகம் தங்கள் அரசியல் அபிலாஷகளை பெற்று வாழ்வதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்து கொடுக்கவேண்டும் என வியூகம் வகுத்திருந்தால் இன்று இந்தநிலை வந்திருக்காது. விடுதலைப் புலிகளை அழித்து விட்டால் எல்லாம் சாதகமாகும் என்ற அந்த கற்பனை இன்று பொய்த்துவிட்டது. இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையும் இந்த நிலைக்கு ஒரு காரணம்.

ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.