“எங்கள் எல்லோருக்கும் ஒரே இரத்தம்”, “வித்தியாசங்கள் இருப்பினும் நாம் எல்லோரும் சமம்” என்ற தொனிப்பொருளில் நேற்று முன்தினம் (15) நடத்தப்பட்ட அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புகுந்த ‘சிங்க லே’ என்று கூறிக்கொண்ட பிக்குமார் தலைமையிலான குண்டர் குழு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாதைகளை கிழித்து வீசியதுடன், அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டது. ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் அங்கு வந்த அந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு உத்தரவு பிறப்பித்தாரே அன்றி, ராஜபக்‌ஷ ஆட்சிக்காலப் பாணியில் குழப்பத்தில் ஈடுபட்டிருந்த ‘சிங்க லே’ குண்டர் குழுவை கலைந்து செல்லுமாறு கூறவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைப் பார்த்து, “பொலிஸாருக்கு அறிவிக்காமல் நீங்கள் கூடியிருக்கிறீர்கள்…..” என்றவாறு அச்சுறுத்தும் வகையில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று நடத்துவதாக இருந்தால்கூட அனுமதி கேட்கவேண்டும் என்பதுதான் அவரது கருத்தாக இருந்தது. இந்தப் பழக்கம் ராஜபக்‌ஷ ஆட்சியின்போது வந்திருக்க வேண்டும். எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது என்பதை கூட அறியாத ஒரு அதிகாரியாக இருக்கிறார். அறிந்திருந்தாலும், ‘சிங்க லே’ என்பதால் இயல்பாகவே இவ்வாறு செயற்பட்டிருக்கக் கூடும். எவ்வாறிருப்பினும், இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டும் உள்ளது.

அப்படியிருந்தும், அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ‘சிங்க லே’ குழு புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தி நீண்ட நேரமாகியும் பொலிஸார் அங்கு வருகை தராமல் இருந்தமை, இன்னும் ராஜபக்‌ஷக்களின் கட்டுப்பாட்டில்தான் பொலிஸ் உள்ளதா என்ற சந்தேகம் எம்முள் எழுந்தது. அப்படியும் இல்லையென்றால், நல்லாட்சியில் பொறுப்பேற்றுக் கொண்ட பொலிஸ் மா அதிபர் பூஜித சொல்லிக் கொடுக்கவில்லையா என்றும் எமக்குத் தோன்றியது.

நல்லிணக்கதின் பலனை இலங்கையின் அனைத்து மக்களுக்கும் உரித்தாக்குவதாக இருந்தால் இரத்தப் பசியெடுத்து அழையும் அடிப்படைவாத குண்டர்களின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தியாக வேண்டும். அதேவேளை, ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் போன்று மக்களின் உரிமைகளை அடக்குமுறைக்கு உள்ளாக்க பொலிஸ் முயற்சிக்குமாக இருந்தால், ஜனநாயகத்துக்கு ஏற்ற வகையிலான பொலிஸை உருவாக்கவும் பின்னிற்க தயங்கக்கூடாது.

சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தாத கொடியை ஏந்தி நிற்கும் குண்டர்களைப் பாதுகாக்கும் பொலிஸார்.

IMAG0049 IMG-20160815-WA0019

நன்றி: விகல்ப