படம் | Vikalpa Flickr

ஆசிரியர் குறிப்பு

‘மாற்றம்’ தளத்தின் கட்டுரையாளர் ஜெரா, கணேஸன் நிமலரூபன் பாசிச அரச இயந்திரத்தால் கொல்லப்பட்டமை தொடர்பாக கட்டுரை ஒன்றை வரைந்திருந்தார். தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் உடலத்தை வைத்து தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் நடத்தினார்களே தவிர, அதைக் கொண்டு போராட்டத்தை தொடரவில்லை என்ற குற்றச்சாட்டை கட்டுரையாளர் ஜெரா முன்வைக்கிறார். சாலப் பொருத்தமான இந்தக் கட்டுரையை மீண்டும் எமது வாசகர்களுக்குத் தருகிறோம்.

###

முகம்மது புவசீசி என்பவன் மிகச்சிறந்த மரக்கறி வியாபாரி. அந்தத் தெருவில் அவனைத் தெரியாதவர்கள் யாருமில்லை. அவனுக்கு ஏதும் நடந்தால் அந்தத் தெருவே தாங்காது. கொந்தளிக்கும் மக்கள் செல்வாக்கோடு அந்தத் தெருவில் வலம் வந்தான் புவசீசி எனும் ஏழை மரக்கறி வியாபாரி. ஒரு நாள் வழமைபோல இவனின் வியாபாரத்தில் குறுக்கிட்ட பொலிஸ்காரன் புவசீசியினது மரக்கயும், மரக்கறி வண்டியும், விற்பனையும் சட்டத்துக்குப் புறம்பானது எனக் கூறி அபகரித்துக் கொண்டான். இதற்கு முதலும் இப்படி அவனது தொழில் பொலிஸ்காரனால் பறிக்கப்பட்டது. அந்த முறை தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்து தொழிலை மீட்டுக் கொண்டான் புவசீசி. இந்த முறை அது பலிக்கவில்லை. காசு கொடுக்க பொலிஸ்காரன் புவசீசியின் முகத்தில் காறித்துப்பினான். கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி விழுத்தினான். இவனது தந்தையைக் கேவலமாகப் பேசினான். இதைப்பற்றி முறையீடு செய்ய மாநில பொலிஸ் அலுவலகத்துக்கு புவசீசி சென்றான். அங்கு இவனை யாரும் கணக்கிலெடுக்கவில்லை. இதனால் மனமுடைந்தவன் 17.12.2010 அன்று தன் உடலுக்கு தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டான். டுனீசியாவின் ஒரு சிறு நகரத்தில் அவன் உடலத்தில் பற்றிய தீ வட ஆபிரிக்க தேசங்கள் முழுதும் பற்றியெரிய வைத்தது. பல தசாப்தகால சர்வாதிகார அரசுகளைச் சரித்தது புவசீசியின் பிணம். அவனது பிணம் மல்லிகைப் புரட்சியின் அடையாளமாகியது.

அவன் தமிழ் அரசியல் கைதி. காலவரையறையற்ற தண்டனைக்குள்ளானான். போராட்ட குணம் விட்டுப் போகாத அவனிடம் புரட்சியை அடக்க முடியவில்லை. அடைப்புக்குள் இருந்து போராடினான். காட்டில் வாழும் கொடிய மிருகங்கள் அவனின் போராட்டத்தையடக்க வரவழைக்கப்பட்டன. அவனது உடலில் அவை பாய்ந்தன. மோசமாகத் தாக்கின. உடல் முழுதும் தம் நகக்கீறல்களைப் பதித்தன. கசிந்த குருதியில் குதூகலித்தன. அவனின் உடல் முழுதும் தழும்புகள். அவனின் தலையைப் பிளந்து பார்த்தன அந்த நரமாமிசிகள். இரண்டு கால்களையும் கிழித்துப் புரட்சியின் வித்தைத் தேடின. எலும்புகளை நொருக்கின. கொழும்பை அண்மித்த ராகம வைத்தியசாலையில் கொல்லப்பட்டான். அவன் தனக்கு மரணம் நிச்சயமாகிவிட்டதை உணர்ந்திருந்தான். அதனைச் சொல்லி அழுத இரவுகளில் பல கைதிகள் ஒப்பாரி வைத்திருக்கின்றனர். கடைசி நேரத்தில் அவனின் கண்ணீர் வற்றியதாக பக்கத்துச் சிறையாளிகள் சொல்லுகின்றனர். அவன் கொல்லப்பட்ட அதிகாலைக்கு முந்தய இரவு அவனது உடலில் நீர் வடிந்திருக்கிறது. காயங்களினால் உடல் துடித்திருக்கிறது. அவனது அலறலையும் வேதனையையும் அங்கிருந்த கொடுங்கோலரின் படைகளிடம் சக கைதிகள் கூறினர். ஆனால், அந்த மிருகங்கள் தமக்கு பொறுப்பான தலைமை மிருகம் நித்திரைக்குப் போய்விட்டார், காலையில்தான் வருவார், அதனால் காலையே வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியும் என சொல்லியிருக்கிறார்கள். இரவு முழுவதும் உடல் வேதனையால் துவண்ட அவனின் உயிர் பிரிவதற்கு சற்று முன்னதாகவே ராகம வைத்தியசாலைக்கு கொண்டு சென்றன மிருகங்கள். ஆனால், காலை 5.30 மணியளவில் அவனது உயிர் காயங்களால் வதைக்கப்பட்ட உடலைவிட்டு பிரிந்துவிட்டது. அவன் பெயர் கணேஸன் நிமலரூபன். பெரும் புரட்சியொன்றின் முதல் குரலாகிய அவனது பிணம், எந்த அடையாளங்களையும் பெறவில்லை. கால அடுக்குகளில் ஆழப்புதைந்து கொண்டிருக்கின்றது. புரட்சியொன்று உற்பத்தியாகும் தருணம் திட்டமிட்டுத் தவறவிடப்பட்டது.

இலங்கையில் கடந்த மே மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை வேண்டிய உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தனர். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் சிறையில் வாடும் பிள்ளைகளின் பெற்றோரும் பரவலான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர். மே மாதம் 21ஆம் திகதி அந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது. குறித்த தினத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொது மக்களும் இணைந்து வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை நடத்திக் கொண்டிருந்தனர்.

அதே நாளில், சம நேரத்தில், இந்த இறுதிக்கட்டப் போராட்டத்தை மலுங்கடிப்பதற்கான முயற்சிகளை அரசு தீவிரப்படுத்தியிருந்தது. அதற்குத் தமிழ் தேசியக் கூட்டடைப்பின் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருந்தனர். எந்தவித முன்னறிவிப்பும், திட்டமிடலும் இன்றி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்த சிறைகளுக்குச் சென்ற அவர்கள், இந்தப் பிரச்சினை தீர்வு விடயத்தில், அரசுக்கு ஓர் அவகாசத்தை வழங்கும் நோக்கோடு உண்ணாவிரதத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர். தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் சர்வதேச மயமாகிக்கொண்டிருக்கையில், அவர்கள் ஒரு கால அவகாசத்தை இலங்கை அரசுக்கு வழங்கித் தமது போராட்டங்களை இடைநிறுத்திக்கொண்டனர். கூட்டமைப்பின் மீது அந்தக் கைதிகள் வைத்திருந்த நம்பிக்கையும், விசுவாசமும் அப்படியொரு நிலையை எடுக்க வைத்தது. வவுனியாவில் சம நாளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கைதிகளுக்கு நடத்தப்பட்ட பேராட்டம் 12 மணியோடு மூச்சுப் பேச்சற்று முடிந்து போனது. பாவம் நம்பிக்கையோடு வந்த கைதிப் பிள்ளைகளின் பெற்றோர்கள். வெறுங்கையோடு வீடு திரும்பினர்.

அடுத்து வந்த சில நாள்களில், இலங்கை அரசு குறித்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விசாரிக்க நான்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால், அந்த அறிவிப்போடு மேற்கொண்டு எந்தவித நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை. வழமை போலவே பிரச்சினை சூடாக இருக்கும்போது அதனைச் சமாளிக்க அரசு விடும் அறிக்கைகள் போலவும், அமைக்கும் குழுக்கள் போலவும் இந்த விடயமும் காற்றில் கரையவிடப்பட்டது.

சரியாக ஒருமாதம் கடந்தது. தமிழ்க் கைதிகள் மீதான இலங்கை சிறைக்காவலர்களின் கவனிப்பு முகம் மாறத்தொடங்கியது. திட்டமிட்டபடி அவர்கள் குணத்தைக் காட்டத் தயாராகிக் கொண்டனர்.

கடந்த ஜூன் 29ஆம் திகதி அனுராதபுரம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் ஒரு தொகுதியினர், தம் உறவினரைப் பார்ப்பதற்காக வவுனியா சிறைக்கு கொண்டுவரப்பட்டனர். அப்போது இவர்களை சாதாரண சிங்கள கைதி ஒருவர் தாக்கினார். அதனைத் தொடர்ந்து சம்பவ தினத்தன்றும் அதற்குப் பின்னரும் தொடர்ச்சியாக வவுனியா சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதிகள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தனர். இதில் பாதிக்கப்பட்ட மூன்று தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரத்துக்கும், பூசாவுக்கும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கும் அனுப்பப்பட்டனர். அவர்களை மீள வவுனியா சிறைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வவுனியா சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை முறியடிக்க சிறைக்காவலர்கள் பல்வேறு துன்புறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நிலைமை பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்குக் கட்டுமீறியது. சிறைக்காவலர்கள் வெறித்தனமாகத் தமிழ் கைதிகளைத் துன்புறுத்தினர். இதற்கு எதிர்ப்புக் காட்டுமுகமாக தமிழ் அரசியல் கைதிகள் மூன்று சிறைக்காவலர்களைச் சிறைபிடித்து வைத்தனர். தமது கோரிக்கை நிறைவேறிய பின்னரே அவர்கள் விடுவிக்கப்படுவர் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியோடு களத்தில் குதித்த இலங்கை இராணுவத்தினர் கைதிகள் மீது தாக்குதலை நடத்தினர். அந்தத் தாக்குதலின் கொடூரம் வவுனியா சிறைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை வரை உணரப்பட்டது. சிறையில் பாவிக்கப்பட்ட கண்ணீர் புகைக்குண்டுகளினால் ஏற்பட்ட பாதிப்பால் மயக்கமடைந்த நிலையில் ஆறு மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கழுத்தில் பிடித்து இழுத்து வரப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், சிறைக்காவலர்களின் சப்பாத்துக்களில் ஒட்டியிருக்கும் அழுக்குப் போகும் வரை நாக்கினால் நக்க வைக்கப்பட்டனர். இவ்வளவு காட்டுமிராண்டித்தனங்களுக்குப் பின்னர் சம்பவத்தோடு தொடர்புபட்ட 32 தமிழ் அரசியல் கைதிகளையும் மஹர சிறைச்சாலைக்கும், கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கும் உடனடியாக மாற்றினர். அங்கும் சிறைக்காவலர்களாலும், அதிகாரிகளாலும் வழங்கப்பட்ட அடி உதை தண்டனைகளால் பல தமிழ் அரசியல் கைதிகள் மஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு எழும்ப முடியாத அளவுக்கு எலும்புகள் அடித்து முறிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளான கணேஸன் நிமலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதி சாகடிக்கப்பட்டார். அத்தோடு, அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் போராடுவதில் இருந்து பின்வாங்கிவிட்டனர். விடுதலை கேட்டுப் போராடியதற்காக நிமலரூபனுக்கு வழங்கிய தண்டனை, ஒவ்வொரு சிறையினதும் சுவர்களில் அனுபவப் பாடமாகத் தெரியும் படி செய்யப்பட்டது. கைதிகள் போராட்டத்தை மறந்தனர்.

அந்த சம்பவத்தோடு இலங்கையில் பிண அரசியல் கொஞ்சம் சூடுபிடித்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், வேறு சில அரசுக்கு எதிரான கட்சிகளும் கூச்சலிட்டன. தம்மில் பழி விழுந்து விடக்கூடாது என்பதில் கூட்டமைப்பு கவனம் எடுத்துக் கொண்டது. அவரின் சடலத்தை வழங்கவதில் அதிக கால நீடிப்பை இலங்கை அரசும், அதன் புலனாய்வுக் கூலிகளும் திட்டமிட்டு எடுத்துக் கொண்டன. நிமலரூபனின் வெற்றுச் சடலத்தைப் பெறுவதற்காக அவனை ஈன்ற தாய் ஒரு மாதம் போராடினாள். இலங்கைப் புலனாய்வாளர்கள் ‘கொல்லுவோம்’ என்று கூட அவைளை மிரட்டினர். எதற்கும் மசியவில்லை அந்த வீரத் தாய். ஒரு மாதத்தின் பின்னராவது அவனின் வெற்றுடலைப் பெற்றாள். அவள் தனியே போராடி பெற்ற அவனின் வித்துடலைக் கூட தமது அரசியல் செய்யும் களங்களாக தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். ஓட்டைக்குடிசையில் வைக்கப்பட்டிருந்த அவனின் உடலத்தோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தனர். ஒருவாறு நிமலரூபன் மண்ணுள் மறைந்தான். இலகுவாகவே மறக்கப்பட்டும் போனான். ஆனால், அவன் விட்டுப் போன அரசியல் இன்னமும் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கின்றது.

தவறவிடப்பட்ட புரட்சியின் உடலம்

தற்போதைய உலக அரசியல் சூழலில் இறக்கும் மனித உடலங்கள் முக்கியமான கருவியாகப் பாவிக்கப்படுகின்றன. லண்டனில் பொலிஸாரால் சுட்டுக்கொள்ளப்பட்ட மார்க் டொன்னின் உடலம் அந்த நகரை அசைத்துப்பார்த்தது. லண்டனிலும் வறுமைக் கலவரம் என்ற அதிசய விடயத்தை உலகத்தவர்க்கு அறிமுகப்படுத்தியது. அதுபோல் டுனீசியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட புவசீசியின் உடலம் வட ஆபிரிக்க நாடுகளின் மீள் விடுதலைக்கே அத்திவாரமானது. இன்றைக்கும் சிரிய மக்கள், அந்த நாட்டு இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படும் பொதுமக்களின் உடலங்களை சுமந்தபடி ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். அவர்கள் கேட்பது உண்மையான சுதந்திரம்தான் என்பதை இந்த உடலப் போராட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன.

குற்றம் புரிந்த நாடுகளை அடக்குவதற்கு அல்லது தம் வசப்படுத்துவதற்கு இன்று உலகம் எடுத்திருக்கும் ஆயுதம் மனித உடலங்கள்தான். மனித உரிமைகள் மீறல் என்றும் – போர்க்குற்றங்கள் என்றும் – வகைப்படுத்தப்படும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள், ஆயுதம் தரித்தோரால் அல்லது அதிகாரத் தரப்பினால் சுட்டுக் கொல்லப்படும் அப்பாவிகளின் சடலங்களின் மேல் நின்றே கட்டமைக்கப்படுகின்றன. தமிழர்களின் இனப்பிரச்சினை விடயம் கூட முள்ளிவாய்க்கால் உடலங்களின் வாயிலாகவே உலகத்தவர் பார்வையை அடைந்தது.

ஒரு வகையில் இப்போது உடலங்கள் முக்கிய அரசியல் பொருள்களாகியிருக்கின்றன. அவற்றைக் கொண்டு எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியும் என்பதை மேற்கூறிய இரண்டு உதாரணங்களும் விளக்குகின்றன.

இதற்கு ‘பழைய கிளிநொச்சி’யில் இருந்தும் ஒரு ஆதாரத்தை எடுக்க முடியும். 2007ஆம் ஆண்டு வன்னியில் விடுதலைப்புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு என்றுமில்லாத விரிசலைச் சந்தித்திருந்தது. விடுதலைப்புலிகளின் அரசியல் பலவீனத்தாலும், திட்டமிடப்படாத செயற்பாடுகளாலும் மக்கள் மத்தியில் இந்த நிலை உருவாகக் காரணமாகியது. ‘ஆள்பிடி’ எனும் அவசர ஆள்சேர்ப்பு விடயத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் பெரும்பாலான குடும்பங்கள் போராட்ட வெறுப்புக்கும், விடுதலை விரக்திக்கும் உள்ளாகியிருந்தனர். இந்த நிலையில், மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றத்தைக் வழிக்குக் கொண்டுவந்ததில் ஒரு உடலம் முக்கிய பங்காற்றியது.

விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் உடலத்துக்கு அந்த சக்தி இருந்தது. அவரை இலங்கை விமானப் படையினர் படுகொலை செய்ததன் பின்னர், அவரின் உடலம் மக்கள் மனதை மாற்றவல்ல கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. அந்த பெறுமதி மிக்க உடலம் வன்னியின் ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். போராட்டத்துக்கான ஆத்மீக ஆதரவை மீண்டும் தொட்டுணர்ந்து கொண்டார்கள். விடுதலையின் தேவைக்காக அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும் நிலைக்கு மீள வந்தார்கள். அந்த உடலம் இறுதியாக கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கூடவே இலங்கைப் படைகளின் கிபீர் விமானங்களும் நிகழ்வைக் குழப்ப தாழப்பறந்து கொண்டிருந்தன. ஆனால், அவ்வளவு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அந்த மக்கள் தமிழ்ச்செல்வனின் உடலத்தை விட்டு அசைந்து கொடுக்கவில்லை. “நீ என் தலையில் குண்டுபோடு” எனும் பிடிவாதத்தோடு நிகழ்வு முடியும் வரை லட்சக்கணக்கான மக்கள் அங்கேயே நின்றனர். புலிகள் நடத்தும் தெருவெளி நாடகங்களைப் பார்க்கக்கூட ஐந்து மக்கள் வராத காலகட்டத்தில் இவ்வளவு பெருந்திரளை எப்படி கூட்ட முடிந்தது? எப்படி விடுதலையின் நியாயத்தை மீளவும் அறைந்து சொல்ல முடிந்நது?

நிமலரூபனின் உடலமும் இப்படித்தான். இலங்கை அரசியலிலும், தமிழர் அரசியலிலும் பேரசைவையே நிகழ்த்தக் கூடிய ஒன்றாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அவனின் உடலத்தை மூடியிருந்த சூழ்ச்சி அரசியல் வலை, எந்தவித அர்த்தப் பெறுமானத்தையும் கிடைக்கப் பெறாமல் செய்துவிட்டது. அந்தப் புரட்சியின் உடலம் வடக்கு முழுவதும் மக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டிருப்பின் தமிழர் போராட்டத்திற்கு புதுவடிவம் ஒன்று கொடுத்திருக்கலாம். மறக்கப்படும், மறைக்கப்படும் விடுதலைக்கு புதிய அறிமுகத்தை வழங்கியிருக்க முடியும். தலைமை தாங்க வேண்டியவர்கள் எல்லோரும் அந்த உடலத்தோடு நின்று புகைப்படம் எடுத்து வாக்குகள் சம்பாதிக்க முண்டியடித்தனரே தவிர, அதனைப் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு கருவியாகப் பயன்படுத்த எவரும் முன்வரவில்லை என்பதுதான் கவலைக்குரியது. கூடவே புரட்சிக்கான தருணம் ஒன்றும் மண்ணுள் புதைக்கப்பட்டது. அல்லது திட்டமிட்டு கைகழுவப்பட்டது.

ஜெரா

Jera