படம் | Ishara S Kodikara: AFP, abc.net.a

இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் இரண்டு தளங்களில் தீவிரமடைந்து காணப்படுகின்றன. ஒன்று உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரும் தேசிய இனப்பிச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கின்ற செயன்முறைகள் பற்றி கிஞ்சித்தேனும் அக்கறையின்றி போக்குக் காட்டுகின்ற அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகளின் விளைவாக மூண்டிருக்கின்ற பிரச்சினைகள். மற்றையது நாட்டு மக்களை இன, மத பேதமின்றி படுமோசமாகத் திணறடித்துக்கொண்டிருக்கின்ற முன்னென்றுமில்லாத வகையிலான பாரதூரமான பொருளாரதாப் பிரச்சினைகள்.

இந்தப் பொருளாதார நெருக்கடியின் விளைவான இடர்பாடுகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கு இனநெருக்கடியுடன் தொடர்புடைய சர்ச்சைகள் அரசிற்கு தாராளமாக உதவிக் கொண்டிருக்கின்றன. இதுவிடயத்தில் அரசினால் அதன் நோக்கங்களில் வெற்றி காணக்கூடியதாக இருக்கின்ற சூழ்நிலைகளில் மாற்றமேற்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத துரதிர்ஷ்டவசமான நிலை.

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், இன நெருக்கடி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அரசுக்கு வரக்கூடிய சர்வதேச நெருக்குதல்களே தங்களது மீட்சிக்கான ஒரு பாதையைத் திறந்துவிடுமென்று தொடர்ந்து நம்பிக்கொண்டிருக்கவேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை. அரசைப் பொறுத்தவரையிலும் கூட, அத்தகையதொரு நம்பிக்கையிலிருந்து தமிழ் மக்கள் விடுபடக்கூடியதான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு அக்கறைகாட்டத் தயாரில்லை. சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்களின் காரணமாகவே அரசு கடந்த வருடம் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தியது. அந்த மாகாண சபை அமைக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியில் உள்ள அந்த மாகாண சபையை உருப்படியாகச் செயற்படுவதற்கு அனுமதிக்க அரசு தயாரில்லை. முதலமைச்சர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியசர் சி.வி. விக்னேஸ்வன் தனது நிருவாகத்தினால் செய்யப்படக்கூடியதாக இருக்கின்ற காரியங்களை விடவும், செய்ய முடியாமல் இருக்கின்ற காரியங்களையும் தன்முன்னாலுள்ள முட்டுக்கட்டைகளையும் பட்டியலிட்டுக் கொண்டிருப்பதிலேயே காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கிறது.

புதிய எதிரி

தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய பயனுறுதியுடைய எந்தவொரு சமிக்ஞையையும் தமிழ் மக்களுக்குக் காட்டாமல் இருந்துவரும் அரசுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இடத்துக்கு புதிய எதிர்நிலைச் சக்தியொன்று தேவைப்படுகிறது. போரின் முடிவுக்குப் பிறகு அரசுக்கு அதன் பேரினவாத நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு வசதியாக ஒரு எதிரியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அந்த எதிரியை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருக்கக்கூடிய விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகளின் வடிவில் கண்டுபிடிக்கக் கூடியதாக இருந்தது. அந்தச் சக்திகளின் ஆதவுடனும் ஒத்துழைப்புடனும் இலங்கைக்குள் விடுதலைப் புலிகள் தங்களை மீள அணி திட்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக அரசு கூறி, அது தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பெரும் பரப்புரைகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது.

இனநெருக்கடி தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியல் சக்திகளினால் முன்னெடுக்கப்படுகின்ற செயன்முறைகள் நீண்டகால நோக்கில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எத்தகைய பயன்களைக் கொண்டுவரக்கூடியதாக இருக்குமென்பது விவாதத்திற்குரியதாக இருக்கின்றபோதிலும், அரசைப் பொறுத்தவரை அவை ஒரு வசதியான எதிரியாக அமைந்துவிட்டன என்பதிற் சந்தேகமில்லை.

தமிழ் அரசியல் சமுதாயம்

இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களைப் பொறுத்தவரை முக்கியமான பிரச்சினை அவர்கள் மத்தியில் கட்டுறுதியான ஒரு அரசியல் சமுதாயம் ஆரோக்கியமான சிந்தனைகளின் அடிப்படையில் செயற்பட முடியாமல் இருந்து வரும் நிலைவரமாகும். 6 தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் வழிநடத்தப்பட்ட முறைகளில் இருக்கக்கூடிய மிகவும் நடைமுறைச் சாத்தியமற்ற – தவறான கொள்கைகளும் அணுகுமுறைகளுமே தமிழ் மக்களை இத்துணை தியாகங்களுக்கும் இழப்புகளுக்கும் பின்னரும் கூட, அரசியல் அனாதைகளாக்கி, நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலிருந்து ஏதாவது அசரீரி வருகின்றதா என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு நாளையும் கழிக்கவேண்டிய அவல நிலையைத் தோற்றுவித்தது. மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் சகல அம்சங்களிலுமே ஆயுதமேந்திய இயக்கங்களின் வன்முறைக் கலாசாரம் ஆதிக்கம் செலுத்துவதற்கு இடமளிக்கப்பட்டதன் விளைவாகவே ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு அந்தப் போராட்டம் ஆரோக்கியமான தடத்தில் செல்ல முடியாமற்போனது. போராட்டத்தின் சகல அம்சங்களிலும் ஆயுதமேந்திய இயக்கத்தின் செல்வாக்கு மேலாதிக்கம் செலுத்தாமல் இருப்பதை உறுதிசெய்யக்கூடிய அரசியல் துணிச்சலும் விவேகமும் கொண்ட மிதவாதத்தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவுக்கு இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருக்கக்கூடிய சில தலைவர்களும் இல்லாதொழிக்கப்பட்டார்கள்.

எமது கடந்த காலத்தை அகவுணர்வுகளுக்கு அப்பாற்பட்டு திரும்பிப்பார்ப்போமேயானால், இதுவிடயத்தில் இருக்கக்கூடிய மறுதலிக்க முடியாத உண்மையைப் புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது. இனிமேலும் கூட கண்ணாடியில் நிலவைக் காட்டும் அரசியலைத் தமிழ் அரசியல் சக்திகள் முன்னெடுக்கக் கூடாது. இன்றைய தமிழ்த் தலைவர்கள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கடந்த ஆறு தசாப்தகாலப் போராட்டங்களில் இருந்து பெறக்கூடியதாக இருக்கும் கசப்பானதும், அதேவேளை கனதியானதுமான அனுபவங்களில் இருந்து முறையான படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு தற்போதைய நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு இசைவாக கொள்கைகளையும் தந்திரோபாயங்களையும் வகுக்கவேண்டும் என்றே தமிழ் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றமுறையில் தலைவர்கள் செயற்படுவதாக இல்லை. இவர்களில் சிலர் வெறுமனே உணர்ச்சிச் சுலோக அரசியலில் இன்னமும் நாட்டம் காட்டுகிறார்கள்.

தென்னிலங்கை உணர்வுகள்

வன்னியில் முல்லைத்தீவின் கரையோத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த அரசபடைகள் தேசிய இனப்பிச்சினையையும் சேர்த்தே அங்கு கடற்கரை மணலில் புதைத்துவிட்டதாக அரசில் அங்கம் வகிக்கும் கடும்போக்குச் சிங்கள பௌத்தவாத அரசியல் சக்திகள் பிரகடனம் செய்ததை சகலரும் அறிவர். கடந்த ஐந்து வருட காலத்தில் இலங்கையின் அரசியல் நிகழ்வுப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அந்தக் கடும்போக்குச் சக்திகள் மாத்திரமல்ல, தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் பெரும் பகுதியும் தேசிய இனப்பிரச்சினை முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டுவிட்டது என்ற மனோபாவத்திலேயே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்கள்

நான்காவது ஈழப்போர் என்று வர்ணிக்கப்படுகின்ற எமது உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசின் பொறுப்புடைமை குறித்த விவகாங்களில் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் காட்டுகின்ற அக்கறை அரசத் தலைவர்களைப் பொறுத்தவரை பெரிய தலையிடியாக மாறியிருக்கிறது. ஆனால், அதேவேளை அதே தலையிடியையே தலையணையாகவும் மாற்றக்கூடிய பிரசாரத் தந்திரோபாயங்களை முன்னெடுத்து நாடு எதிர்நோக்குகின்ற பாதூமான பொருளாதா நெருக்கடி, சட்டத்தின் ஆட்சிச் சீர்குலைவு மற்றும் குடியியல், ஜனநாயக உரிமைகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற ஆபத்து, ஆட்சி நிர்வாகத்தில் சகல துறைகளிலும் இராணுவ மயமாக்கல் போன்ற பிச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அரசினால் இயலுமாக இருக்கிறது.

கடந்த ஐந்து வருட காலத்திலும் சர்வதேச சமூகத்திடமிருந்து வந்திருக்கக்கூடிய நெருக்குதல்களைப் பயன்படுத்தி அரசினால் சிங்கள மக்கள் மத்தியில் அதன் ஆதரவை மேலும் விரிவுபடுத்தி பலப்படுத்தக்கூடியதாக இருந்திருக்கிறது. உள்நாட்டுப் போரில் அரசின் நடத்தைகள் குறித்து கிளப்பப்பட்ட ஒவ்வொரு பிரச்சினையையும் இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் வருகின்ற அச்சுறுத்தலாக சிங்கள மக்களுக்குக் காண்பித்து அவர்கள் மத்தியில் ஏனைய சமூகங்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை முற்றாக மறுதலிக்கின்ற குணாம்சத்துடனான – வக்கிரத்தனமான, ‘தேசபக்தியை’ வளர்ப்பதற்கு அரசினால் முடிந்தது. நான்காவது ஈழப்போரின் ஒவ்வொரு கட்டத்திலும் அரச படைகளினால் அடையக்கூடியதாக இருந்த வெற்றிகளை ஒவ்வொரு தேர்தல்களிலும் சிங்கள மக்கள் மத்தியில் வாக்குகளை வாரி அள்ளும் மந்திரக் கருவிகளாக மாற்றுவதில் ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் அரசு பெருவெற்றி கண்டது. அதன் உச்சங்களாக அமைந்தவை 2010 ஜனாதிபதித் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலுமாகும். அதற்குப் பிறகு நடைபெற்றிருக்கக்கூடிய உள்ளூராட்சித் தேர்தல்களிலும் மாகாணசபைத் தேர்தல்களிலும் கூட, இலங்கைக்கு எதிரான சர்வதேச சதிமுயற்சிகளை முறியடிக்க அரசுக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் என்றுதான் அதன் தலைவர்கள் மக்களிடம் வாக்குக் கேட்டார்கள்.

மேலோங்கி நிற்கும் பேரினவாதம்

போர் வெற்றிக்களிப்பில் சிங்கள மக்களை மிதக்க விடுகின்ற அரசியல் தந்திரோபாயங்களை அரசு இடையறாது முன்னெடுத்துவருகின்றது. இலங்கையின் இறைமை என்பதையோ சுயாதிபத்தியம் என்பதையோ நாட்டின் ஆட்சியதிகாரக் கட்டமைப்பின் மீதான சிங்கள – பௌத்த மேலாதிக்கம் என்பதைத் தவிர வேறு எதுவுமாக அதிகப் பெரும்பான்மையான சாதாரண தென்னிலங்கை மக்கள் விளங்கிக் கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தில் முன்னெப்போதையும் விட சிங்கள – பௌத்த பேரினவாத உணர்வலைகள் கூடுதலான அளவுக்கு ஆக்கிமித்து நிற்கும் துரதிர்ஷ்டவசமான நிலைவரம் இலங்கையில் வாழும் ஏனைய சமூகங்களின் எந்தவொரு நியாயபூர்வமான பிரச்சினை தொடர்பிலும் முன்னென்றுமில்லாத அலட்சியப்போக்கை சிங்கள மக்கள் வளர்த்துக்கொள்வதற்கு வகை செய்திருக்கிறது. பொதுபலசேனா மற்றும் இராவணபலய போன்ற அமைப்புகளின் அண்மைக்கால அடாவடித்தனமான செயற்பாடுகள் பொறுத்துக்கொள்ளப்படுவதை அல்லது ஊக்கப்படுத்தப்படுவதை இந்தப் பின்புலத்திலேயே நோக்க வேண்டும்.

ஜெனீவாத் தீர்மானங்கள்

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேவையில் அமெரிக்காவினால் கடந்த மூன்று வருடங்களாக தொடர்ச்சியாகக் கொண்டுவப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரித்த அரசு, இந்த விவகாரத்தை சர்வதேச சமூகத்துடனான இராஜதந்திச் சர்ச்சையாகக் காட்டிக்கொள்கிறதே தவிர, இவையெல்லாம் இனநெருக்கடிக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காணாமல் இருக்கின்றமையினால் ஏற்படுகின்றவை என்பதைப் புரிந்து கொள்ளத்தயாரியில்லை. இதன் விளைவாக அரசு ஒத்துழைக்காவிட்டாலும் சர்வதேச விசாணையொன்று இடம்பெறக்கூடிய சூழ்நிலை தோன்றியிருக்கிறது.

உள்நாட்டுப் போர் தவிர்க்க முடியாதவகையில் இலங்கையின் தேசிய இனப்பிச்சினைக்கு சர்வதேசப் பரிமாணமொன்றைக் கொடுத்துவிட்டது. இந்த உண்மைக்கு முகங்கொடுக்கத் தயாரில்லாமல் தீக்கோழி மனோபாவத்தை வளர்த்துக்கொண்டதன் விளைவாகவே இன்று அரசு சர்வதேச சமூகத்திடமிருந்து நெருக்குதல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. போர் மூண்டதற்கான அடிப்படைக் காரணிகள் போரின் முடிவுடன் இல்லாமற் போய்விடவில்லை. போர் முடிவுக்குப் பின்னான காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோமே தவிர, முண்பாடுகள் தீர்க்கப்பட்டுவிட்ட காலகட்டத்தில் அல்ல. அரசு கடைப்பிடித்துவந்திருக்கும் அணுகுமுறைகள் காரணமாக இலங்கையில் சமூகங்களுக்கிடையிலான இனப்பிளவு முன்னரைக் காட்டிலும் ஆழமாகிப் போயிருக்கிறது.
தமிழ்பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசியல் துணிச்சலை வெளிக்காட்டக்கூடிய விவேகமும் முதிர்ச்சியும் அரசத் தலைவர்களுக்கு இருந்திருந்தால், உள்நாட்டில் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசியல் பிரதிநிதிகளுடன் ஊடாட்டங்களை முன்னெடுப்பதில் அக்கறை காட்டியிருந்தால், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இலங்கை நெருக்கடியை மையமாகக் கொண்ட செயற்பாடுகளுக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

எமது இனநெருக்கடியில் இருக்கக்கூடிய சர்வதேசப் பரிமாணத்தை அரசு முற்றுமுழுதாக அலட்சியம் செய்வதும், அரசின் மீதான சர்வதேச சமுதாயத்தின் நெருக்குதல்களை முழுவதும் அடிப்படையாகக் கொண்டு தமிழ் அரசியல் சக்திகள் அவற்றின் தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்வதில் அக்கறைகாட்டுவதும் சமமான அளவுக்கு அவரவருக்குக் கெடுதியானது.

வீ. தனபாலசிங்கம்

###

IMG_1852

‘மாற்றம்’ தளத்தின் விசேட வௌியீட்டுக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.