ஒவ்வொரு ஊடகவியலாளர்களின் இழப்பும் தனி மனித இழப்பாக மட்டும் அமைவதில்லை. அது ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவும் அதேவேளை, அதனைக் காப்பதற்காகவும் இயங்கும் அர்ப்பணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவுமே அமைகின்றது. அந்த வகையில் கடந்த 2007ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி யாழ். நகரில் உள்ள ஸ்டான்லி வீதியின் அந்தத்தில் வைத்து துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட செல்வராஜா ரஜிவர்மன் உடன் பணியாற்றிய நினைவுக் குறிப்புகளையும், அவனது இழப்பு ஜனநாயகத்தின் மீது எவ்வாறானதோர் தாக்கத்தினை உண்டு பண்ணியது என்பது பற்றியும் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப் போக்குவரத்துக்கள் முழுமையாக அற்றுப்போய் இருந்த சூழ்நிலையில் குடாநாடு முழுமையாக அவல நகரமாக மாறியிருந்தது. இக்காலப்பகுதியில் பணியைத் தொடர்ந்த இளம் துணிச்சல் மிக்க ஊடகவியலாளர்களில் செல்வராஜா ரஜிவர்மன் முதன்மையானவனாகத் திகழ்ந்தான். அரசு – புலிகள் சமாதான உடன்பாடு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் உயர்தரத்தினை கற்றுவிட்டு தன்னை யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டத்திற்கான வெளிவாரி மாணவனாப் பதிவுசெய்து கொண்டு, சமகாலப்பகுதியில் புதிதாக யாழ். குடாநாட்டில் ஆரம்பிக்கப்பட்ட நமது ஈழநாடு பத்திரிகையில் தன்னை ஓர் அலுவலகச் செய்தியாளராக இணைத்து தனது ஊடகப் பணியை ரஜிவர்மன் ஆரம்பித்தான்.

இயல்பாகவே அடக்குமுறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக தளராது செயற்பட வேண்டும் என்று அவனுக்குள் இருந்த போராட்ட சிந்தனைக்கும் எண்ணத்திற்கும் தளமாகவே ஊடகத்துறை அமைந்தது. நமது ஈழநாடு பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளராக இணைந்து கொண்ட அவனுக்கு காத்திரமான ஊடகப் பணியை நமது ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியரான ராதேயன் மற்றும் செய்தி ஆசிரியர் கண்ணன் ஆகியோர் கற்றுக்கொடுத்தனர். அந்நிறுவனத்தின் சார்பாக அரசியல் மற்றும் பொது நிகழ்வுகள், மனித உரிமைமீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல்கள்சார்ந்த செய்தியைத் திரட்டும் பணியை முழுநேரமாக ரஜிவர்மன ஏற்றுக்கொண்டு திறன்பட மேற்கொண்டான். பின்னர் அப்பத்திரிகையின் ஆசிரியர் பீடம் அவனுக்கு உள்ளூர் செய்தி பக்கம் ஒன்றினை கவனிக்கும் பொறுப்பினைக் கையளித்திருந்தது.

அவ்வாறு கையளித்து பணியாற்றி வந்த காலப்பகுதியில் நமது ஈழநாடு பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் சிவமகாராஜா சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டமையினைத் தொடர்ந்து அப்பத்திரிகை பிரசுரங்கள் முடங்கிப்போக தொழிலை இழக்கும் நிலைக்குச் செல்லும் நிலைமையினை செல்வராஜா ரஜிவர்மன் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. யாழ். குடாநாட்டில் ஊடகப் பணி என்பது மிகுந்த அச்சுறுத்தலுக்கான ஒன்றாக அமைந்த நிலையில் பணியில் இருந்த ஊடகவியலாளர்கள் அனேகர் வீடுகளுக்குள் முடங்கிப்போகவும் பாதுகாப்புத் தேடி வெளிநாடுகளுக்கும் நாட்டின் தென்பகுதிக்கும் செல்லவும் வேண்டியதாக நிலைமைகள் மோசமடைந்திருந்தன.

குடாநாட்டில் பத்திரிகை நிறுவனங்களுக்கான அச்சுத்தாள் மற்றும் ஏனைய மூலப்பொருட்களை எடுத்து வருவதற்கு அனுமதிகள் மறுக்கப்பட்டிருந்தன. குடாநாட்டில் பத்திரிகைகள் இரண்டு பக்கங்களில் வெளிவரவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருந்தன. அப்பிரசுரங்களும் அச்சுத்தாள் கையிருப்பு உள்ளவரையே என்ற நிலைமை காணப்பட்டது. இவ்வாறானதோர் உத்தியோகபூர்வ ஊடக அடக்குமுறை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் துணிச்சலுடன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளன் செல்வராஜா ரஜிவர்மன் தனது தொழிலைக் கைவிட எண்ணாது இயங்கினான். பல தடவைகள் வெளிப்படையாகவே, “சட்டத்திற்குப் புறம்பாக ஆட்களை எப்படியெல்லாம் கடத்துகின்றார்கள்! மிரட்டுகின்றார்கள்! கொல்கிறார்கள்! இவற்றினை எல்லாம் வெளியுலகிற்குக் கொண்டு செல்ல வேண்டும். அதன் மூலம் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும். இருக்கின்ற எமது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என அவன் சம்பாசிக்க நண்பர்கள் கேட்டிருக்கின்றனர்;.

இவ்வாறாக ஓர் உணர்வுள்ள பத்திரிகையாளன், நமது ஈழநாடு பத்திரிகை செயலிழந்து போக சிறிது நாட்கள் யாழ். தினக்குரலிலும் பின்னர் தனது அடுத்தகட்ட ஊடகப் பயணத்திற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையினைத் தெரிவுசெய்து கொண்டான். அந்நிறுவனத்தின் வரையரைக்கு இணங்க சென்றவுடன் அலுவலகச் செய்தியாளன் ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தான். அங்கு அச்சமயத்தில் அலுவலகத்தினை விட்டு வெளியில் செல்ல முடியாத பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்த மூத்த பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியில் சென்று செய்தி சேகரித்து வரும் இளம் துடிப்புள்ள பத்திரிகையாளனாக ரஜிவர்மன் பணியாற்றினான். உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் காணமயில்நாதன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் தாக்குதல்களுக்கு உள்ளாகி நாட்டைவிட்டு வெளியேறியுள்ள பத்திரிகையாளர் குகநாதனின் வழிநடத்தலில் பணியாற்றும் இளம் பத்திரிகையாளனாக செல்வராஜா ரஜிவர்மன் பணியைத் தொடர்ந்தான்.

யாழ். குடாநாடு மயான தேசமாக, அவலங்களின் வலயமாக எங்கும் எப்போதும் எதுவும் மனிதர்களுக்கு நடக்கலாம் என அச்சுறுத்தலான காலப்பகுதியில் தனது இரவு நேர பத்திரிகை அலுவலக கடமையினை முடித்துக்கொண்டு தன்னிடம் சொந்த சொத்து என இருந்த துருப்பிடித்து பல இடங்களில் உக்கிப்போன துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த சமயத்திலேயே பத்திரிகையாளன் செல்வராஜா ரஜிவர்மன் படுகொலை செய்யப்பட்டான். யாழ்ப்பாணம் நகரில் அதியுயர் பாதுகாப்பு வலயமாக இருந்த ஸ்டான்லி வீதியின் முடிவில் அதாவது, இராசாவின் தோட்டத்திற்குத் திரும்பும் இடத்தில் வைத்து அவனை துவிச்சக்கர வண்டியில் பின்தொடர்ந்த ஆயுததாரிகள் சுட்டுப்படுகொலை செய்தனர். அவ்வாறு சுட்டுப் படுகொலை செய்த இடத்திற்கு மிகச் மிகச் சமீபமாக இராணுவ நிலையங்களும்,கடமையில் ஏராளமான இராணுவத்தினரும் இருந்திருந்தனர். நிலைமைகள் இவ்வாறிருக்க பத்திரிகையாளனை படுகொலை செய்தவர்கள் படுகொலையினை அடுத்து சகஜமாக செல்வதற்குச் சந்தர்ப்பம் இருந்துள்ளது.

இயல்பாகவே யுத்த அவலங்கள் காரணமாக குடும்ப வறுமையால் பத்திரிகையாளர் ரஜிவர்மன் பாதிக்கப்பட்டிருந்தான். எனினும், அவனது வீட்டுக் கஷ்டங்கள் ஒரு போதும் பகிரப்பட்டவையாக இருக்கவில்லை. மக்களின் அவலங்களை எழுதும் உச்சரிக்கும் ஒருவனாகவே அவன் இருந்தான். அவனது வருமானத்தில்தான் குடும்பம் இயங்கியது. வீட்டு வறுமையை கருத்தில்கொண்டு வேறு ஏதாவது மேலும் வருமானம் தரும் தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்ற சிந்தனைகூட அவனிடம் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஊடக நிறுவனங்களில் கிடைக்கும் குறைந்தளவு வருமானத்துடன் வாழ்வோம். கஷ்டங்களைப் பொருத்துக்கொள்வோம் என வாழ்ந்த ஒருவனாகவே அவன் இருந்தது அவனது மரணத்தில்தான் தெரிய வந்தது. இறுதிக் கிரியைகள் மற்றும் அவனது பூதவுடலை கொண்டு செல்வதற்கான பிரேதப் பெட்டியைக் கூட கொள்வனவு செய்ய ஏற்றவாறு அவனால் தன் ஊடகப் பணி மூலம் பொருளாதாரத்தினை ஈட்டியிருக்க முடியவில்லை. ஊடக சமூகமே இறுதிக் கிரியைக்கு பண உதவி நல்கின. ஆனால், தன்னுடன் தனது மக்களையும் சமூகத்தினையும் இணைத்த ஒரு பத்திரிகையாளனாக அர்ப்பணிப்புடன் பணியாற்றினான். இதனை நேரடியாகவே இறுதி அஞ்சலி நிகழ்வில் கண்டுகொள்ள முடிந்தது.

மிகவும் அச்சுறுத்தலான சூழ்நிலையில் மிகப் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக தமது அஞ்சலியைச் செலுத்தினர். இவ் அஞ்சலி நிகழ்வில் அன்றைய வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தின் பிரதிநிதியும் தற்போதைய யாழ். ஊடக அமையத்தின் ஆலோசகருமான பத்திரிகையாளர் இரட்ணம் தயாபரன், ரஜிவர்மன் விட்டுச் சென்ற பணியை எமது மக்கள் சந்ததி சந்ததியாக முன்னெடுப்பர் என உறுதியுரையாற்றினார். உண்மையிலேயே இலங்கையில் எங்கும் இல்லாத அளவில் குடாநாட்டில் ஓர் இளம் ஊடக அணியொன்று எப்போதும் இடையூறுகளை பொருட்படுத்தாது கடமையினை தொடர்கின்றது. அவ் அணி வருமானம், நேரம், காலம், பாதுகாப்பு என்ற விடயங்கள் பற்றி தமது பணியில் கருத்தில் கொள்ளாதே இயங்குகின்றது. இவைகள் அனைத்தும் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் விட்டுச் சென்ற தடங்களின் வழிநடத்தலா எனக் கூட என்னத் தோன்றுகின்றது.

பத்திரிகையாளர் ரஜிவர்மனின் படுகொலையைச் செய்தவர்களின் நோக்கம் தனியே ஓர் உயிரை மட்டும் பழி எடுப்பதல்ல. மாறாக தமிழ் மக்களின் அவலங்களைக் கூறும் ஊடகப் பணியை யார் தொடர்கின்றீரோ அவர்களுக்கு மரணம் பரிசு எனக் கூறும் மிலேச்சமாகும். படுகொலையாளர்கள் ரஜிவர்மன் என்ற பத்திரிகையாளனைக் கொன்றதன் மூலம் மனித உரிமை, மக்களின் உயிர்வாழும் உரிமை தொடர்பில் நடைபெற்ற கொடூரங்களை வெளியுலகிற்குச் சொல்வதில் இருந்து பலரை மிரட்டி உறங்கவைத்தனர். எனினும், ஏதோ ஒரு வகையில் பலரும் மக்களின் மீதான அடாவடித்தனங்கள் குறித்து வெளிக்கொண்டே வந்தனர். பத்திரிகையாளர் ரஜிவர்மனின் படுகொலை ஜனநாயகத்தின் மீதான படுகொலை. மக்களின் அவலங்களைச் சொன்னதனால் நிகழ்ந்த படுகொலை.

மூத்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலையம் அருகில் வைத்து கடத்தப்பட்டு மறுநாள் நாட்டின் அதியுயர் பாதுகாப்பு பகுதியான நாடாளுமன்றம் அருகில் சடலமாக மீட்கப்பட்டு நேற்றோடு ஒன்பது வருடங்கள் பூர்த்தியாகின. ஊடகவியலாளர் சிவராம் கொல்லப்பட்டு இரண்டு வருட நினைவு நாளை அனுஷ்டித்துக்கொண்டிருந்த ரஜீவர்மன் நாளை தானும் கொல்லப்படவிருப்பதை அறிந்திருக்கவில்லை. அடுத்த நாள் பேரினவாத அரக்கர்கள் ரஜிவனின் உயிரைப் பறிக்கிறார்கள்.

இவ்வாறு எத்தனையோ சிவராம்கள், ரஜிவர்மன்கள் அநியாயமாக கொல்லப்பட்டுவிட்டார்கள். அவர்களது நினைவு தினங்களும் மாறி மாறி வந்துகொண்டேயிருக்கின்றன. ஆனால், கொலையாளிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படாது மஹிந்த ஆட்சியில் சுதந்திரமாகத் திரிகின்றனர்.

தியாகராஜா நிரோஷ்

Niro