படம் | Impawards

இனம். ஈழத்தமிழரைப் பற்றி தமிழில் வந்திருக்கும் திரைப்படம். சந்தோஸ்சிவன் என்கிற ஒளிப்பதிவாளர் இதனை இயக்கியிருக்கின்றார். இது மாதிரியான சிக்கலான கதைகளை திரைப்படமாக்கும் பாணியில் அவரது படங்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் சிக்கலுக்குரிய கதையுடன் வந்திருக்கும் இனம் தமிழக சினிமா சூழலிலும், உணர்வாளர்கள் மற்றும் சமூக வலைப்பதிவாளர்கள் மத்தியிலும் கொதி நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

அப்படி என்னதான் இருக்கிறது கதையில்? முதல் காட்சியுடன் படம் தடைசெய்யப்படக்கூடும் என்ற மனநிலையோடு தியேட்டருக்குள் நுழைந்தோம். சினிமாக்காரர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள். இவ்வளவும்பேரும் நிறைந்தகூட்டத்திற்கு திரையை திறந்தார்கள்.

கறுப்பு வெள்ளை, சாயம்போன வர்ணங்களில் குழந்தைகள் வரைந்த ஓவியங்களுக்கு இடையில் படத்தின் பெயர் உள்ளிட்ட முகவரி வந்துபோகிறது. இருதரப்பினர் ஆயுதங்களுடன் சண்டையிட்டுக் கொள்வது. இடையில் அகப்படும் குழந்தைகளும், பறவைகளும் சாவது என ஓவியங்கள் தீர்ந்ததும் படம் ஆரம்பிக்கிறது.

ஒரு ஈழப்பெண்ணை இந்திய உயரதிகாரி விசாரிக்கிறார். அவரின் குரல் மட்டும் கேள்வி கேட்கும். அந்தப் பெண் தன் நிலையை விபரிப்பார். படகேறும்போது 50 பேர் என்றும் – இறங்கும் போது 47 பேர் என்றும் – நாடு கடக்கும் கடற் பயணத்தின் துயரை ஒரு வரியில் சொல்லிவிடுவார். அதில் சுனாமி அக்கா என்பவரை அவர் நினைவுபடுத்ததிரையும், கதையும் பின்னோக்கி ஈழத்துக்கு நகரும்.

போர், பச்சைப் பசேல் என்றநீர் வளம் மிக்க இடங்களில் நடந்திருக்கிறது. மக்களைவிட கோழிக்குஞ்சுகள் போரில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு சுனாமி அக்கா எனப்படும் நடுத்தர வயதுடைய பெண் ஒரு இல்லம் நடத்துகிறார். அதாவது, சுனாமியில் குடும்பங்களை இழந்த சிறார்களையும், சிறுமியரையும் இணைத்து ஒரு இல்லம் நடத்துகிறார். அங்கு வளரும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க போர் வேளையிலும் கோர்ட் போட்டுக் கொள்ளும் வாத்தியாரும் இருக்கிறார். இதைவிட மிதிவெடி ஒன்றில் சிக்கி அதில் இருந்து எழுந்து வர முடியாமல் அங்கேயே வருடக்கணக்கில் இருந்து சாமியாராகிப்போன ஒருவரும் இடையிடையே வந்துபோகிறார். இவர்களுக்கு மத்தியில் போர் தொடங்குகிறது.

ஒரு நாளில் கடற்கரையில் ஒருவன் பெற்சீற்றால் மூடப்பட்டபடி கிடப்பதை சுனாமி அக்காவின் இல்ல பிள்ளைகள் கண்டுபிடிக்கிறார்கள். அவன் மூளை சுகமில்லாதவன். தெளிவாக கருத்தூண்றி கதைக்க முடியாதவன். அவனை தூக்கிவருகிறார்கள். கையில் சிறு கத்தி ஒரு கைத்தொலைப்பேசி உள்ளிட்ட பொருட்களை அவன் வைத்திருக்கின்றான்.. அது ஜீவாவின் கத்தியென சொல்கிறான். யார் ஜீவா? லீடர்… வீரன்… பெரியவன் என்கிறான் அவன்.

ஜீவாவைத் தேடி கதை நகரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. ஆனால், அது நடக்கவில்லை. சுனாமி அக்காவின் இல்லத்தில் அவனை பராமரிக்கின்றனர். அங்கு போர் இடையிடையே வந்துபோகிறது. ஷெல் வெடிக்கிறது. பள்ளிக்கூடங்களுக்குள் வகுப்பெடுக்க விடாமல் பெண் போராளிகள் வந்து மாணவர்களைப் பிடித்துப் போகிறார்கள். மீசை கூட அரும்பாத சிறுவர்கள் அமெரிக்க கொமாண்டோக்களின் துப்பாக்கிகளுடன் வந்துபோகிறார்கள். மோசமான எறிகணை வீச்சு நாளொன்றில் நந்தன் பகுங்குகுழி வெட்டுகிறான். அந்தக் குழியில் மண்டையோடு ஒன்று வருகிறது. அனைவரும் அதனை சாபம் என்று சொல்லி கடலில் வீசி விடுகின்றனர். ஆனால், நந்தன் அதை “மை டியர் பிரண்ட” என்று சொல்லி எப்போதும் கையிலே கொண்டு திரிகிகின்றான். இடையிடையே நந்தனை போட்டு அடிக்கிறார்கள். கட்டியும் வைக்கிறார்கள். அதற்குள் இருக்கும் இருவருக்கு காதல் வந்துவிடுறது. அந்தப் பெண் மீது நந்தனுக்கும் காதல் வருகிறது. முக்கோண காதல் கதை ஆரம்பம். அந்தப் பெண் எங்கேயோ அருவியில் குறுக்குக் கட்டோடு குளிக்கிறாள். நந்தன் மரத்துக்குக் கீழ் மறைந்திருந்து பார்க்கிறான். அவளை பின்தொடர்கிறான். இந்த நேரத்தில் மற்றைய காதலன் வந்து முத்தம் கொடுக்க, கிளாமர் சோங் ஆரம்பிக்கிறது. கிளிநொச்சியில் மக்களை அப்பாவிகளாக விட்டு வெளியேறும் ஐ.நா. நிறுவனங்கள் பற்றிய காட்சி வருகிறது. அவர்கள் மேலிடத்தில் ஆங்கிலத்தில் பேசுகின்றனர். இன அழிப்பு நடக்கிறது என்பதை ஆங்கிலத்தில் யாருக்கோ விளங்கவைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு எதுவும் செய்ய முடியாது வெளியேறுங்கள் என்ற பதில் தெளிவாக கேட்கிறது. அவர்கள் மீன் குஞ்சுகளைக் கூட கவனமாக எடுத்துக் கொண்டு வன்னியைவிட்டு வெளியேறுகின்றனர். இந்தப் பந்தியைப் போலவே குழப்பமாக படத்தின் இடைவேளை வரையிலான காட்சிகள் முடிகின்றன.

இரண்டாம் பாதியில் சிறுவர்கள் போராளிகளோடு சேர்ந்து கொள்கின்றனர். காதலர்களாக இருந்தவர்களும் பிரிகின்றனர். அவளுக்கு தெரியாமலேயே அவன் ஓடிவிடுகிறான். ஏற்கனவே, அந்த சிறுவர் இல்லத்திலிருந்து போராளியான ஒருவன் மறுபடியும் வருகிறான். சில சிறார்களை போராட்டத்துக்கு அழைத்துப் போகிறான். நந்தனும் அவர்களுடன் போய் வழி தெரியாமல் திரும்பி வந்துவிடுகின்றான். போர் அடிக்கடி கேட்கிறது. அவர்களுக்குள் குண்டுவிழுகிறது. சிறுவர்கள், வயதானவர்கள் செத்துக் கிடக்கின்றனர். போரிலிருந்து சிறுவர்களை காப்பாற்ற திருமணமே சிறந்த வழியென்கிறார் சுனாமி அக்கா. அவரின் கூற்றுப்படி அங்கிருக்கிற ஒவ்வொருவரும் தமக்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்து வாழைநாரில் தாலி கட்டிக் கொள்கின்றனர். தாலி கட்டிய பின் அந்த சோடிகளை இராணுவத்திடம் போகும்படி அனுப்புகிறார் சுனாமி அக்கா. அவர்களும் போகிற பச்சைப் பசேலென்ற வயல் வெளியில் மீன் குஞ்சுகளைப் பிடித்து அருவியில் விட்டுக் கொண்டிருக்கிறார் புத்த பிக்கு. இந்தச் சிறார்களைக் கண்டதும் சிரித்து, அன்போடு கையில் வைத்திருக்கும் மாதுளம் பழத்தை கொடுக்கிறார். அவர்கள் அதை வாங்கிக் கொண்டு ஒரு பாழடைந்த வீட்டுக்குள் ஒதுங்குகின்றனர். பாலும், புத்த பிக்கு கொடுத்த மாதுளம் பழத்தையும் சாப்பிட்டு முதல் இரவை கொண்டாடுகின்றனர். நந்தன் அவளிடம் முத்தம் கேட்கிறான். அவள் எதற்கும் இணங்கவில்லை. மறுத்துவிடுகிறாள். அவன் அந்தப் பாலையும், மாதுளம் பழத்தையும் எடுத்துச் சென்று மண்டையோட்டுக்கு படைக்கிறான். சாப்பிடச் சொல்லிவிட்டு அவ்விடத்திலேயே படுத்து உறங்கிவிடுகிறான். அந்த நேரத்தில் பாதுகாப்பு தேடி போராளி ஒருவன் அந்த வீட்டுக்குள் நுழைந்துவிடுகிறான். அவன் அந்த பழத்தையும், பாலையும் பருகி களைப்பாற இராணுவத்தினர் வீட்டை சுற்றி வளைத்துவிடுகின்றனர். அவன் அதற்குள்ளேயே பதுங்கிக் கொள்கிறான். வீட்டுக்குள் நுழைந்து இராணுவம் தேடுகிறது. இருப்பதெல்லாம் பொதுமக்கள் என அறிந்ததும் ராணுவம் விலகுகிறது. போன ஒரு சிப்பாய் திருப்பி வந்து சராமாரியாக சுட போராளியும் சுடுகிறான். இருவரும் செத்துப் போகின்றனர். நந்தன் உள்ளிட்டோர் தப்பி ஓடி சரணடைய வருகின்றனர். சுனாமி அக்காவும் வருகிறார். புலிகளும் – இராணுவமும் சண்டையிடும் நடுப்பகுதியில் அவர்கள் மாட்டிக் கொள்கின்றனர். சரமாரியான துப்பாக்கிச் சூடு. இராணுவத்தினர் இந்தப் பக்கம் வரும் வரைக்கும் சுடாமல் காத்திருக்கின்றனர். ஆனால், அவர் அந்த இடத்தில் அமர்ந்திருந்து “கல்தோன்றா மண்தோன்றா காலத்து மூத்த குடிகள்” என்று கவிதை பாடிக் கொண்டிருக்கிறார். சுனாமி அக்காவின் கீழ் வளர்ந்த ஒரு போராளி அவளை காப்பாற்றுவதற்காக எழுந்து ஓடுகிறான். நெருங்கி தூக்க முயற்சிக்க இராணுவம் சுடுகிறது. சுனாமி அக்காவும் போராளியும் செத்துப் போகின்றனர்.

அதில் சிலர் காயப்படுகின்றனர். ஒரு சிறுவனின் காலில் துளைத்தபடி நிற்கிறது ஆர்.பீ.ஜீ. அவனைத் தூக்கிக்கொண்டு ஒரு போராளி மருத்துவமனைக்கு ஓடுகிறான். அவனுக்கு பின்னால் நந்தன் ஓடுகிறான். மருத்துவமனை. காயப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது. அங்கு நந்தன் ஜீவாவை கண்டுபிடிக்கிறான். ஜீவா மோசமாக தலையில் காயப்பட்டு கட்டுப் போட்டு கிடத்தப்பட்டிருக்கிறான். அவனை எழுப்பி பேசுகிறான். 12 வயது நிரம்பிய மிகவும் சிறியவனாக ஜீவா இருக்கிறான். இவன் என் தம்பி என்று நந்தன் ஏனைய இல்ல சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறான். லீடர் என்றும், வீரன் என்றும் நந்தன் இவனையா சொன்னான் என்று அவர்கள் கேட்டு சிரிக்கின்றனர். “லீடர் சாகும்போது நான் பக்கத்தில தான் சுட்டுக் கொண்டிருந்தன். சாகும்போது அவரின் கண் திறந்திருந்தது. கண் திறந்திருந்தா திருப்பியும் வருவாங்களாம்” என்று ஜீவா சொல்கிறான். நந்தன் அந்தக் கத்தியை ஜீவாவிடம் கொடுக்க அதை நீயே வைத்துக்கொள் என்று நந்தனிடமே கொடுத்துவிடுகிறான்.

அடுத்து சரணடையும் காட்சி வருகிறது. கோர்ட் அணிந்த வாத்தியார் தன் மனைவியின் வயிற்றில் தலையணையை கட்டி கர்ப்பிணியாக கூட்டிவருகிறார். அந்த தலையணைக்குள் தங்க நகைகளை பதுக்கி எடுத்துவருகிறார் என்பதை இராணுவம் கண்டுபிடித்ததும், அப்பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயற்சிக்கின்றனர். சுற்றிவர நவீன ரக துப்பாக்கிகளுடன் நிற்கும் இராணுவத்தினர் மத்தியில் ஒரு கருங்காலி வேரைக் கொண்டு இராணுவத்தினரை அடிக்க முற்படுகிறார் வாத்தியார். அடுத்தக் காட்சியில் இந்திய அதிகாரி விசாரித்துக் கொண்டிருக்கும் பெண்ணும் நந்தனின் தற்காலிக மனைவியுமானவளும் அவளின் நண்பியும் சோதனை செய்யப்படுகின்றனர். நந்தன் கண்களை மூடிக் கொள்கின்றான். அங்கு மக்கள் போல வேடமிட்டு வந்திருக்கும் பெண் போராளிகள் பைகளுக்குள் இருந்து துப்பாக்கிகளை எடுத்து இராணுவத்தை சுடுகின்றனர். மக்கள் மத்தியில் சரமாரியான சண்டை. பலர் இறந்து திசை மாறிப் போய்விடுகின்றனர். நந்தனின் மனைவியும், அவளின் நண்பியும் ஒடிக்கொண்டிருக்க அவர்களைப் பிடிக்கிறது இராணுவம். தனித்தனியே வைத்து பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். அதை ஒரு சிப்பாய் வீடியோ படம் எடுக்கின்றான். அது தவறென வாதாடுகிறார் ஒரு கொமாண்டர். போரில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லி பாலியல் பலாத்கார காட்சி காட்டப்படுகிறது. எங்கிருந்தோ வரும் நந்தன் ஜீவா கொடுத்த கத்தியால் தன் மனைவியை பாலியல் வன்புணர்த்தும் இராணுவ சிப்பாயை குத்தி கொல்கிறான். இருவரும் பாலத்துக்கு மறுபக்கம் அதாவது, இராணுவத்தினர் பக்கம் வந்துவிடுகின்றனர். நந்தன் ஜீவாவை விட்டு வரமாட்டேன் என்று சொல்லி ஜீவாவிடம் ஓடுகிறான். அவனைக் கூப்பிட்டு முத்தமிட்டு அனுப்புகிறாள் அவள். நந்தன் ஓடிமறையும் பாதையில் குண்டுவெடிக்கிறது. அவன் மீள வரவில்லை. இவர்கள் படகேறி இந்தியா வருகின்றனர்.

விசாரணை அதிகாரி விசாரணையை முடித்து அவளை வெளியே அனுப்புகிறார். இதற்கு என்ன செய்வோம் என்ற வகையில் ஏக்க வசனம் பேசுகிறார்.

2009இல் நடந்த இலங்கை போரில் 40000 பொதுமக்கள் இறந்தார்கள். பலர் கொல்லப்பட்டும், காணாமலும் போனார்கள் என்ற திரை வசனத்துடன் படம் முடிகிறது.

 இதுவே இனம் படத்தின் முழுக்கதையும். ஆங்காங்கே தொடர்பின்றியும், குழப்பமாகவும் அமையும் காட்சிகள் ஏராளம். படத்தின் அரசியலை நாம் விமர்சிக்க முடியாது. ஆனால், இதுபோன்றதொரு கதையை திரைப்படமாக்கும்போது பின்பற்றவேண்டிய எந்த விடயமும் இதில் கடைபிடிக்கவில்லை. போர் பற்றிய கூகிள் படங்களை வைத்துக்கொண்டே காட்சிகளை அமைத்திருக்கிறார். அதிக காட்சிகள் இறுதிப் போரின்போது வந்த புகைப்படங்களை நினைவுபடுத்துகின்றன. அத்துடன், இந்த வகை படங்களுக்கு அவசியம் தேவைப்படும் புவியியல் சார்ந்த காட்சி அமைப்பிலும் தவறியிருக்கிறார். பச்சையாக கேரளாவைக் காட்டி, முள்ளிவாய்க்கால் அல்லது வன்னி என்கிறார். கதை என்ன என்பதை சினிமாக்காரர்களாலேயே கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒளிப்பதிவில் கூட எதுவுமில்லை. நினைவில் நிற்குமளவுக்கு எந்தக் காட்சியும் இல்லை. ஒரே டுமீல் டமீல் சத்தங்களால் நிறைந்திருக்கிறது இசை. இதுமாதிரியான சம்பவங்களை படமாக்க நினைப்பவர்களுக்கு இந்தப் படம் ஒருபோதும் முன்னோடியாக இருந்துவிடக்கூடாது. சினிமா தொழிலில் பெரும் வளர்ச்சி கண்டுவிட்ட இந்தியாவில் இந்தப் படம் தோல்விக்குரிய தயாரிப்பை பெற்றிருக்கிறது. காரணம் சரியான களஆய்வு இடம்பெறவேயில்லை. இப்படி ஆயிரம் குறைகளை மட்டுமே ‘இனம்’ மீது சொல்லமுடியும்.

2009க்குப் பின்னர் தமிழக ஊடகங்களில் மிக முக்கிய வியாபாரப் பொருளாக மாறியிருந்த ஈழப் பிரச்சினை, இப்போது சினிமாலும் விற்பனை பண்டமாகியிருக்கிறது. இந்தப் பண்டம் உள்நாட்டளவில், வியாபார ரீதியில் தோல்வியை சந்தித்தாலும், உலகளவில் – விருது பெறும் ‘நல்ல படங்கள்’ வரிசையில் முன்னிலை வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதைவிட புலிகளுக்கு எதிராக கருத்தியல் தளத்தில் உருவாகியிருக்கும் இதுபோன்ற சினிமாக்களின் வருகையுடன் இன்னும் வைரம் பெறும். ஏற்கனவே, படைப்பிலக்கியங்கள் அந்தப் பணியை தாராளமாகச் செய்திருக்கின்றன. காட்சி தளத்தில் சிங்கள படங்களுக்கு அடுத்த நிலையில் இந்திய சினிமா சூழலில் புலிகளுக்கு எதிராக உருவாகியிருக்கும் இதுமாதிரியான படங்கள் அந்தப் பணியை நேர்படச் செய்கின்றன. புலிகள் எழுதிய வரலாறு பொய் என்ற கருத்தியல் தோற்றத்தை விற்பனையில் சூடுபிடித்திருக்கும் புலி எதிர் எழுத்துக்களும், சினிமாவும் தீவிரமாக உருவாக்கி வருகின்றன.

​ஜெரா

Jera