படம் | Saman Wagaarachchi official Facebook

தினசரி ‘லக்பிம’ பத்திரிகையில் வெளிவந்த புகைப்படமொன்றின் விளக்கக்குறிப்பு குறித்து மனவேதனைக்குள்ளான தரப்பிடம் இரண்டு தடவைகள் மன்னிப்பு கேட்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியது. ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்காக தான் நான் போராடிவருகிறேன். இதனால்தான் இந்த விசாரணை இடம்பெறுகிறது என நான் நம்புகிறேன் என ‘லக்பிம’ பத்திரிகையின் ஆசிரியரான சமன் வக ஆராச்சி தெரிவிக்கிறார்.

புதுவருட சந்தையொன்றில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவின் மனைவி அயோமா ராஜபக்‌ஷ பொருளொன்றை வாங்கும் படத்திற்கு “கள்ளநோட்டு இல்லையே” என்ற விளக்கக் குறிப்பை இட்டதற்கான காரணம், தற்போது நாட்டில் போலி நாணயத்தாள்கள் புழக்கம் அதிகரித்திருப்பதால் அதுதொடர்பாக மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தவேயாகும் என ‘லக்பிம’ ஆசிரியர் தெரிவிக்கிறார்.

Saman Waga
சர்ச்சைகுள்ளாகியிருக்கும் படம் மற்றும் அதன் விளக்கம்

 

“பத்திரிகைகளில் சம்பிரதாயம் ஒன்று உள்ளது. அது, மனதை கவரும் வகையில், அவதானத்தை பெறும் வகையில் தலைப்பொன்றை இடுவதாகும். தற்போது நாட்டில் பெருமளவு போலி நாணயத்தாள்கள் பாவனை அதிகரித்திருப்பதனால் இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களின்போது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு செய்தியொன்றை வழங்குவோம் என உப ஆசிரியர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்” என சமன் வக ஆராச்சி தெரிவிக்கிறார்.

ரகசியமாக பாதுகாக்கப்படும் முறைப்பாட்டாளர்

அந்தத் தலைப்பினால் பிழையான செய்தியொன்று உருவாகி அதனால் அயோமா ராஜபக்‌ஷவுக்கு மனவேதனை ஏற்பட்டிருக்குமானால், தன்னுடைய பத்திரிகை அதுதொடர்பில் இரண்டு முறை அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது எனத் தெரிவிக்கும் ‘லக்பிம’ ஆசிரியர், சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணையின்போது முறைப்பாடு தெரிவித்தவர் குறித்து தன்னிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என மேலும் அவர் தெரிவிக்கிறார்.

10149834_400869846722794_1024461679215816221_n
மன்னிப்புக்கோரி வௌியிடப்பட்ட செய்தி

“இவை போலி நாணயத்தாள்களா? இவை எங்கிருந்து வந்தவை? யார் இந்த தலைப்பை இட்டது என என்னிடம் கேள்வி கேட்டனர். அதன்போது நான் கேட்டேன் – எந்த சட்டத்தின் கீழ் என்னிடம் விசாரணை செய்கிறீர்கள்? இந்த முறைப்பாட்டைச் செய்தவர் யார்? அப்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் எனத் தெரிவித்தனர். காரணம், போலி பணம் குறித்த சம்பவம் என்பதால் என அவர்கள் கூறினர்” என சமன் வக ஆராச்சி தெரிவிக்கிறார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்பாக ‘லக்பிம’ பத்திரிகையின் முன்னாள் செய்தியாளர் ஒருவர் எழுதிய ‘குரஹன் சாடகய’ என்ற புத்தகத்திலும் பிழையான அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய தலைப்பொன்று இருந்தபோது அதனை சிரித்தமுகத்துடன் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் எனத் தெரிவிக்கும் சமன் வக ஆராச்சி, ஊடக அமைப்புக்களுடன் இணைந்து தகவல் அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பாக தான் போராட்டமொன்றை கொண்டு செல்வதினாலேயே அயோமா ராஜபக்‌ஷ சம்பவத்துடன் தொடர்புபடுத்தி என்னை விசாரணைக்கு உட்படுத்துகின்றனர் என நம்புவதாக அவர் கூறுகிறார்.

ஜனாதிபதியின் நடைமுறை

பத்திரிகை ஆசிரியர்களிடன் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றால் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவர்களது அலுவலகத்துக்குச் சென்றே விசாரணை நடத்தவேண்டும் என ஜனாதிபதி முன்னர் தெரிவித்திருந்தும், ‘லக்பிம’ ஆசிரியரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருமாறு அழைத்தமை மற்றும் முறைப்பாடு தெரிவித்த நபர் குறித்து தெரிவிக்காதமை தொடர்பாக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் பேச்சாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த சம்பவம் தொடர்பாக எழுத்துமூல முறைப்பாடு கிடைக்கப்பெற்றதற்கிணங்க பொலிஸார் செயற்பட்டனர் என அவர் தெரிவித்தார். முறைப்பாட்டை வழங்கியவர் யார் என்பது குறித்து தெரிவிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

பிபிசி சிங்கள சேவை