படம் | Akkininews

வரலாறுகள் படைத்த தலைவர்களும் இருக்கிறார்கள், வரலாற்றைக்கொண்ட தலைவர்களும் இருக்கின்றார்கள். எம் தாய்த்தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் பெருந்தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவின் ஈப்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். இன்று அவரது 116ஆவது பிறந்த நாள். அவரை தமிழ் மக்கள் அன்போடு ‘தந்தை செல்லவா’ என்று அழைத்தனர். தமிழர்களின் நல்லாயனாகவே அவதரித்தார்.

1948ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18ஆம் திகதி சமஷ்டி கட்சி தமிழில் தமிழரசுக்கட்சியாக மலர்ந்தது. எனினும், அப்போது தமிழ் மக்கள் சமஷ்டி அரசியலமைப்பை ஆதரிக்கவில்லை. 1952ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இரு தொகுதிகளிலேயே கட்சி வெற்றி பெற்றது. கோப்பாய் தொகுதியில் அமரர் கு.வன்னியசிங்கம் வெற்றி பெற்றார். அதுபோலவே திருகோணமலையில் அமரர் இராஜவரோதயம் வெற்றி பெற்றார். திருகோணமலை திருக்கோணேஸ்வரக் கோயிலின் தர்ம கர்த்தாவாக இருந்த அன்னவர்தான் தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்தை வடிவமைத்து கொடுத்தவர்.

அன்றைய நாடாளுமன்றம் காலி முகத்திடலுக்கு அருகில் இருந்தது. தமிழரசுக்கட்சியினரும் தமிழ் மொழி உரிமையில் கரிசனை கொண்டவர்களும் காலி முகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். சிங்கள இனவாதிகளும், அடாவடியில் ஈடுபடுபவர்களும், காடையர்களும் ஒன்று கூடினர். சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களை மிகக்கொடூரமாக தாக்கினர். அந்த நேரத்தில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சத்தியாகிரகிகளை காப்பாற்ற முனைந்தார். அவ்வேளை, மழை தூரிக்கொண்டிருந்தது. அருகில் நின்ற பிரதமர், “தூரலில் அவர்கள் நனையட்டும்” எனக்கூறி பொலிஸ் அதிகாரி செய்ய முனைந்த கடமையை தடுத்துவிட்டார். காலி முகத்திடலில் மட்டுமல்ல தமிழர்களின் இரத்தம் வழிந்தோடியது, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த மற்றைய மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்கள் பலர் தாக்கப்பட்டனர். குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பிலிருந்து வந்த புகையிரதங்களில் தமிழ்ப்பிரயாணிகள் தாக்கப்பட்டனர். அவர்கள் இரத்தத்தில் உறைந்தார்கள். அவர்கள் செய்த பாவம் தான் என்ன? அவர்கள் இலங்கையில் தமிழர்களாகப் பிறந்தது தானே. தமது தாய் மொழி தமிழ்மொழிக்கு உரிமை கேட்டது தான். தாக்கியவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பண்டா செல்வா உடன்படிக்கை

தனிச்சிங்களச் சட்டம் 1956ஆம் ஆண்டு ஐூலை மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தமிழரசுக்கட்சியானது பல்வேறு சத்தியாக்கிரகப்போராட்டம் உண்ணாவிரதப் போராட்டங்களையும் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தது. அதன் பிரகாரம் இந்தப்பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் வாருங்கள் என்றார் அன்றைய பிரதமரான பண்டாரநாயக்கா.

இன்றைய நிகழ்வை அன்று சொன்ன தந்தை செல்வா

இந்த இரு தலைவர்களின் சந்திப்பையும் அவர்களின் பேச்சையும் டெயிலி நியுஸ் பத்திரிகை பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. காரின் கதவடியில் வந்த பிரதமர் பண்டாரநாயக்கவின் கைகளைப்பிடித்து “பல முறை நிதானமாக சிந்தனை செய்து தான் உங்களை சந்திக்க நான் ஒத்துக்கொண்டேன். இந்த இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீங்கள் ஏதேனும் ஒன்றினை செய்தே ஆகவேண்டும். இன்றைய சூழலில் நாங்கள் ஒன்றித்து இப்பிரச்சினையை தீர்க்காவிட்டால் நாம் இறந்த பின்பு நாட்டிற்கு இப்பிரச்சினை பெரும் பேராபத்தை உண்டாக்கும்” என்று அன்றைய நாள் தந்தை செல்வநாயகம் அவர்கள் தெரிவித்திருந்தது இன்று நிஐத்தில் நடந்தேறிவிட்டது. தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனமும், பேராபத்தை நாடு சந்திக்கும் என்ற அவரின் பயமும் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் சாரம்

ஒப்பந்தம் என்பது பலரின் தலையெழுத்துக்களையும் நாட்டின் சூழலையும் மாற்றிவிடும்.

பண்டா – செல்வா ஒப்பந்தம் தமிழ்மக்களுக்கான சிறந்ததொரு தீர்வை முன்வைத்திருந்தது. இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களின் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட்டதுடன் வடக்கு மாகாணம் ஒரு பிராந்தியமாகவும், கிழக்கு மாகாணத்தில் நாட்டின் இன்னொரு சிறுபான்மை இனமாகிய முஸ்லிம் மக்களையும் அவர்களின் தனித்துவத்தையும் மதிக்கும் நோக்கிலும் கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது அதற்கு மேலான பிரதேசங்களாக வகுக்கப்பட்டது. இதன் பலனாக முஸ்லிம் மக்களும் தமிழர் தாயகத்தின் தனித்துவமான இனம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அவர்களும் பிராந்தியத்திற்குரியவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தியது அவ்வொப்பந்தம்.

ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய அம்சம்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களாக விவசாயம், கூட்டுறவு, காணி, காணி அபிவிருத்தி, குடியேற்றம், சுகாதாரம், கைத்தொழில், கல்வி, மீன்பிடி, வீடமைப்பு சமூக சேவைகளும் வீடமைப்பும் என்பனவற்றோடு தமிழ் ஒரு தேசிய சிறுபான்மை மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழி சிங்கள மொழிக்கு குந்தகம் இல்லாமல் தமிழிலும் நடைபெறும் என திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, குடியேற்றங்களும் கல்லோயா அபிவிருத்தித்திட்டமும் அதில் உள்ளடங்கியிருந்தது.

கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்

தந்தை செல்வாவின் இன்னொரு தீர்க்க தரிசனத்தையும்  எடுத்துக்காட்ட முடியும். “தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.” இன்றைய நிகழ்வுகளை உற்று நோக்கின் இந்த வார்த்தைக்குள் பொதிந்து கிடக்கின்ற உண்மைகளை உணர்ந்துகொள்ள முடியும்.

முள்ளிவாய்க்காலோடு தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி உடைக்கப்பட்டு ஆயினும், தமிழ் மக்கள் யாரும் அற்ற ஏதிலிகளாக இருந்தும் கூட இம்முறை நடைபெற்ற வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை வரலாறு காணாத வெற்றியினை அடையச்செய்தனர். ஆனால், கூட்டமைப்பின் பாதை எங்கு நோக்கி செல்கின்றது என்று தெரியாது மக்கள் திகைத்துப்போயுள்ளனர்.

தமிழரசுக்கட்சிக்கு இன்னொரு பெயரும் உண்டு. சமஷ்டிக் கட்சி என்பதாகும். ஆனால், இன்றைய அதன் தலைவர்கள் சமஷ்டியிலிருந்து விடுபட்டு தனி நாடும் வேண்டாம், எதுவும் வேண்டாம். 13ஆம் திருத்தத்தில் சொல்லப்பட்ட இணைந்த வடக்கு கிழக்கும் இன்று இல்லை. கடைசியாக வடக்கு மாகாணத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரம் கொடுத்தால்போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

ஆனால், அதுவும் கிடைப்பதாகத் தெரியவில்லை. சமஷ்டியிலிருந்து காணி பொலிஸ் அதிகாரங்களை கேட்டு கடைசியாக அதுவும் கிடைக்காமல், எதிர்த்து நின்று துணிவோடு கேட்க முடியாத நிலையில் இன்று தமிழர் தரப்பு தலை குணிந்து நிற்கின்றது.

ஆக, கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை போல தனிநாடு தேய்ந்து மாகாணசபை வரை வந்து அதுவும் முழுமையில்லை என்ற நிலையில் தமிழ்மக்களின் உரிமை விவகாரம் முச்சந்தியில் நிற்கிறது.

இனி கூட்டமைப்பின் அடுத்த நகர்வு என்ன என்பதை பார்ப்பதை விட தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனத்தை நினைத்து பெருமிதம் கொள்வோம். ஒருவேளை அந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாத நிலையில் தமிழ் மக்கள் நட்டாற்றம் கரையில் நிற்பார்களோ… யார் அறிவார். அதுவரைக்கும் எங்கள் புத்திஐீவிகள் உறங்கு நிலையிலிருக்கட்டும்.

புவி