போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில்களை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பில் பெரிதும் வெற்றிடமே வடக்கில் உணரப்படுகின்றது. வடக்கின் இன்றைய நிலையினைப் பெருத்தளவில் ஒரு பகுதியினர் ஏலவே மேற்கொண்ட தொழில் முயற்சிகளை யுத்தத்தின் அழிவுகளால் இழந்துள்ளனர். மறு தரப்பினர் தொழில்களை நாடவேண்டிய தேவையிருந்தும் அதற்கான வழிவகைகள் இன்றி உள்ளனர்.

போரின் பின்பாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கான சந்தர்ப்பம் பற்றிப் பேசுகையில், அவர்களின் நாளாந்த வாழ்வாதாரத்தினை ஏற்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு ஆட்சியாளர்களிடம் இருக்கின்றது. எனினும், ஆட்சியாளர்கள் இதனை உரிய வகையில் புரிந்துகொண்டார்களா என்றால், இல்லை என்றே கூற முடிகின்றது.

வடக்கினைப் பொருத்தளவில் அநேகர் போரின் பின்பான சூழ்நிலையில் விவசாயத்தில் தங்கியிருந்தனர். இவ்வாறாக விவசாயத்தினில் தங்கியிருந்தவர்களில் அதிகமானோர் நெல்செய்கையில் ஈடுபடும் தரப்புகளாகவுள்ளனர். அவர்களது விவசாயம் இம்முறை பெருமளவில் அழிவினைச் சந்தித்துள்ளது. இந்த அழிவுக்குக் காலநிலை ஏதுவாக இருந்தது. காலநிலைப் பாதிப்பு இம்முறை மாத்திரம் மக்களைப் பாதித்ததாகக் கருதிவிட முடியாது. பிந்திய வருடங்களை அவதானித்தால் அப்பாதிப்புக்கள் தொடர்கதையாகவே உள்ளன. இவ்வாறாக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக்களுக்கு இது காலவரையில் உரிய இழப்பீடுகள் வந்தடையவில்லை என்பது விவசாயிகளின் கவலையாகவுள்ளது.

அதேயிடத்தில் போர் காரணமாக விவசாயிகள் பலர் தமது உடமைகள் எனப் பலதையும் இழந்துள்ளனர். இந்த வகையில் விவசாய நிலங்கள் பல இராணுவத்தின் கீழ் உள்ளன. வடக்கு மாகாண சபைக்குச் சொந்தமான ஆய்வு நிறுவனம், கமநலசேவை நிலையம், பயிற்சி நிலையம் எனப் பலவும் இன்றும் படைத்தரப்பின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. அதேவேளை, விவசாயிகள் போரின்போது இழந்துபோன நீரிறைக்கும் இயந்திரம் முதல் உழவு இயந்திரம், இதர விவசாய உபகரணங்களையும் கூட இழந்துள்ளனர். இவ்வாறாக விவசாயிகள் இழந்தவற்றினை ஈடுசெய்யும் முகமாக அவர்களை இழப்பீடுகள் வந்து  சேரவில்லை. இதனாலும் வடக்கில் உள்ள விவசாயிகள் தமது குறைந்தபட்ச உற்பத்தியை ஏனும் நிறைவேற்ற முடியாதவர்களாகவுள்ளனர்.

விவசாய முயற்சிகளில் ஈடுபடுவோர் அதிக கடன்களில் மூழ்கிய காலப்பகுதியாகவும் போருக்குப் பின்பான நிலைமைகள் உள்ளன. விவசாயத்திற்கு வேண்டிய காலகாலமாக விவசாய முயற்சிகளில் ஈடுபடுத்தப்பட்ட உபகரணங்கள் கருவிகள் சகலவற்றினையும் விவசாயிகள் இழந்த நிலையில் அவற்றை தற்போது தவணைக் கொடுப்பனவு முறையில் கொள்வனவு செய்துள்ளனர். இத்தவணைக் கொடுப்பனவுகளைச் செலுத்தப்படாமல் கொள்வனவு செய்த விவசாய உபகரணங்களையும் ஏற்கனவே தவணைக் கொடுப்பனவு அடிப்படையில் செலுத்திய பணத்தினையும் விவசாயிகள் இழக்கும் துர்ப்பாக்கியம் உள்ளது. அறுவடை செய்யப்படும் நெல்லை உலர்த்துவதற்குக் கூட நில விரிப்பான்கள் இன்றி அறுவடையில் பல விவசாயிகள் அல்லல்படுகின்றனர்.

இதேபோன்றுதான் கடல் தொழிலிலும் வடக்கு மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். வடக்கு மீனவர்களைப் பொருத்தளவில் போரின் பின்பான நிலையில் இந்திய இழுவைப் படகுகளின் ஊடுவல் காரணமாக வட மாகாணத்தின் கடல் தொழிலாளர்கள் கடல் தொழிலில் ஈடுபட முடியாதவர்களாகவுள்ளனர். இதனைத் தீர்ப்பதற்கு அரசுகள் உரிய அணுகுமுறையினைக் கையாளாமையினால் வடக்கில் கடல் தொழில் சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களால் வடக்கில் உள்ள கடல்தொழிலாளர்கள் கடல்தொழிலில் ஈடுபட முடியாதவர்களாகவுள்ளனர். வடக்கின் பல கடற்கரைகளில் படகுகள் தொழிலுக்குச் செல்லாமல் கரைகளில் தங்கியிருக்கின்றன. றோலர்கள் ஊடுருவும் தினங்களில் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டால் தமது தொழில் வலைகள் சேதமடைந்துவிடும் எனத் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.

கடந்த காலத்தில் இந்திய இழுவைப்படகுகளால் தொடர்ச்சியாக வடக்குக் கடல்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டே உள்ளனர். இதற்கு அப்பால் இராணுவ வலயங்கள் அதாவது, உயர்பாதுகாப்பு வலயங்கள் காரணமாகவும் வலிகாமம் வடக்கு உட்பட பல பிரதேசங்களில் கடல்தொழிலாளர்கள் கடல் தொழிலில் ஈடுபட இன்றும் அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய மீன்பிடித்துறைமுகமான மயிலிட்டிப் பிரதேசம் இன்றும் மீளக்குடியேற அனுமதிக்கப்படாமல் உள்ளது. இவ்வாறாக கடல்தொழிலுக்கு தடையாக உள்ள வலயங்களில் மீளக்குடியேறி கடல்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட கடல்தொழிலாளர்கள் ஆர்வம்காட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றபோதும் தீர்வுகள்தான் முன்வைக்கப்படவில்லை.

மேலும், வடக்கில் போரின் பின்பாக கைத்தொழில்கள் வளர்ச்சி பெறவில்லை. கைத்தொழில்களுக்கான உட்கட்டுமான வசதிகள், நிபுணத்துவ ஆலோசனைகள் இன்மையான சூழ்நிலையே காணப்படுகின்றது. வடக்கில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படக்கூடிய உற்பத்திகளைக் கூட தென்னிலங்கை உற்பத்திகள் விட்டுவைக்கவில்லை. வடக்கு இன்று தெற்கிற்கான ஒரு சந்தையாகவே காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் கைத்தொழில் பேட்டையினை இந்தியாவின் துணையுடன் மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இவ்வாறாக கட்டியெழுப்பப்படும் கைத்தொழில் பேட்டையில் பணியாற்றுவதற்கான பணியாளர்களை பயிற்றுவிப்பதற்கான நடவடிக்கைகள் ஏதுவும் இதுவரையில் நடைபெறவில்லை.

புதிய உற்பத்திகள் மேற்கொள்வதற்கான நிறுவனங்கள் வடக்கு நோக்கி வந்தாலும் அவற்றுக்கான ஊழியர்களாக இணைத்துக்கொள்ளப்படுவதற்கு பலரும் தொழில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் இல்லை. ஆனால், இத்தொழில் துறைகளை வேலையற்றவர்கள் மத்தியில் கற்பிப்பதற்குப் பெரிதும் வெற்றிடம் காணப்படும் நிலையே உள்ளது.

மீள்குடியேற்றத்துடன் அரசு ஏற்றுக்கொண்ட வங்கிகள் ஊடாக கைத்தொழில் கடன்களை வழங்கியது. எனினும், அக்கடன்கள் மக்களுக்கு போதிய பொறுப்புணர்வுடன் கூடிய வழிநடத்தல்கள் ஊடாக வழங்கப்படவில்லை. இதனால், மக்கள் கடனாளி ஆனார்களே தவிர தொழில் முயற்சியாளர்களாகவில்லை. அரசு மீள்குடியேற்றத்துடன் இலகு கடன் அறிவிப்பினை விடுத்தவுடன் மக்கள் அதனை ஓர் உதவித்தொகை போன்ற எண்ணத்திலேயே கடனாகப் பெற்றனர். ஆனால், தற்போது வழங்கப்பட்ட கடன்களை இன்று அறவிட முயற்சிக்கையில் பாரிய முரண்பாடுகள் கிராமங்கள் தோறும் தோன்றுகின்றது. இந்த மீள்குடியேற்றக் கடன்கள் காரணமாக மக்கள் கடன்சுமையினைத் தீர்க்க முடியாதவர்களாக வங்கிகளுடன் முரண்படுகின்றார்கள்.

இதுதான் வடக்கில் உள்ள தொழில் நிலைமைகளின் யதார்த்தம் எனில் மக்கள் சாதாரணமாக வாழ்வாதார ரீதியில் எப்போது இயல்பு நிலை அடைவது என்ற கேள்வி உள்ளது. வடக்கில் உள்ள மக்களுக்கு இன்று தொழில்கள் அவசியமாகவுள்ளன. ஆகவே, தொழில்களை மக்களிடத்தில் ஏற்படுத்துவது பற்றியும் தொழில்களுக்கு தடையாகவுள்ள விடயங்களின் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்பட வேண்டும். இந்த நிலை தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.

தியாகராஜா நிரோஷ்

Niro