பட மூலம், Ranga Srilal

கடந்த செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ‘ஜன பலய’ (மக்கள் சக்தி) போராட்ட ஊர்வலம் ஒன்றை கொழும்பில் ஒழுங்கு செய்து நடத்தி இருந்தார்கள்.

இந்த ஊர்வலம் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இப்பேரணி தொடர்பான பதிவுகள்  #ජනබලයකොළඹට  #janabalaya மற்றும் #september5th ஆகிய ஹேஷ் டெக்குகளுடன் ருவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட வண்ணம் இருந்தன.

கடந்த மே தினப் பேரணியைப் போலவே, இந்த ஊர்வலத்தில் பங்குபற்றியவர்கள் தொடர்பாகவும் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அன்றைய தினம் பங்குபற்றியவர்கள் தொடர்பாக இருவர் வெவ்வேறான தரவுகளை வெளியிட்டிருந்தார்கள். ஒன்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோட்டாபய ராஜபக்‌ஷவின் பிரத்தியேக பேச்சாளரான மிலிந்த ராஜபக்‌ஷவினால் (உறவினர் இல்லை) வெளியிடப்பட்டது. இலங்கை நேரப்படி மாலை 3.45 இற்கு அவர் வெளியிட்ட ருவிட்டர் பதிவில் “ஆயிரக்கணக்கான பஸ்கள்” கொழும்பு நோக்கி வந்துகொண்டிருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, ilankanews.com இணையத்தில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்று, 700 பஸ்கள் குருணாகலையில் இருந்து கொழும்பு நோக்கி வருவதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயரத்ன ஹேரத் அவர்களை மேற்கோள் காட்டித் தெரிவித்திருந்தது. குருணாகலையில் இருந்து வரும் 700 பஸ்களைத் தவிர்த்து (ஒன்றிணைந்த எதிர்கட்சியினருக்கு சாதகமாக எண்ணிக்கையை கூட்டும் வகையில்) , மிலிந்த குறிப்பிட்ட எண்ணிக்கையைக் 2,000 எனக் கொள்வோமேயானால், மொத்தமாக 2700 பஸ்கள் கொழும்பு நோக்கி புறப்பட்டிருக்கின்றன. நம் வீதிகளில் செல்லும் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வைகிங் ரக பஸ்கள் 58 பேர் அமரக்கூடியவாறு தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு பஸ்ஸில் 80 பேரை ஏற்றி இருப்பார்கள் என நாம் யூகிப்போம்.

அவ்வாறு யூகித்தால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூறிய எண்ணிக்கைகளின்படி அண்ணளவாக 216,000 பேர் பேரணியில் கலந்து கொண்டிருப்பார்கள். இதேவேளை கடந்த வருட மே தின கூட்டத்தின்போது 118,000 பேர் காலி முகத்திடலில் ஒன்று கூடியிருந்தமை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆகையால் ஜன பலய போராட்டத்தின் உச்சக்கட்டத்தின் போது கிட்டத்தட்ட அதன் இருமடங்கு மக்கள் கூட்டம் எதிர்பார்க்கப்பட்டது.

எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போது ருவிட்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய தளங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற புகைப்படங்களிலிருந்து போராட்டத்தில் பங்குபற்றிய மக்கள் தொகையின் சரியான மதிப்பீட்டைப் பெற முடியவில்லை. ஆனால், இவற்றுள் நான்கு ருவிட்கள் தனித்து நிற்கின்றன. அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் கணக்குகளினால் பகிரப்படும் புகைப்படங்களை இக்கட்டுரையில் நான் உபயோகிப்பதைத் தவிர்த்துள்ளேன். இரண்டு புகைப்படங்கள் பேரணியை ஒழுங்குபடுத்தியவர்களாலும், மேலும் இரண்டு புகைப்படங்கள் முறையே ராய்ட்டர்ஸ் மற்றும் பிபிசி செய்தி சேவைகளின் ஊடகவியலாளர்களாலும் பகிரப்பட்டுள்ளன.

அன்றைய தினம் மாலை நேரத்தின்போது நாமல் ராஜபக்‌ஷ பதிவிட்ட ருவிட்டர் படத்தில் கூட்டத்தின் அடர்த்தி குறைந்துள்ளதைக் காட்டுகின்றது. அசாம் மற்றும் மிலிந்த ஆகிய இருவரும் கீழே உள்ளவாறு ஒரே புகைப்படத்தைத் தமது பிரத்தியேக ருவிட்டர் கணக்குகளில் பகிர்ந்துள்ளனர்.

ரங்கவின் புகைப்படம் கீழே, வேறொரு நிலையில், வேறொரு இடத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகையை கணக்கிடும் நோக்குடனும், ஒன்றிணைந்த எதிர்கட்சியினருக்கு சாதகமாகவும், இவ்விரு புகைப்படங்களில் உள்ள மக்கள் கூட்டம் வெவ்வேறானவைகள் எனவும் இரு புகைப்படங்களில் ஒரே மக்கள் கூட்டம் இல்லை எனவும் கருதுவோம். 2017ஆம் ஆண்டு மே தின கூட்டத்தின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து செய்தவாறே இம்முறையும் MapChecking செயலி மூலம் கூட்டத்தின் எண்ணிக்கை தொடர்பான ஒரு மதிப்பீடு கணக்கிடப்பட்டது.

மேலே காட்டப்பட்டுள்ள புகைப்படம் (ட்ரோன் கருவி மூலம்?) ஓல்கொட் மாவத்தையில் அமைந்துள்ள கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. 2015இல் கூகிள் மேப் செயலியில் எடுக்கப்பட்ட வீதி நிலை புகைப்படங்களில் அதே கட்டடங்களும் சுற்றுச்சூழலும் இருக்கின்றன. 2017 மே தின ஊர்வலத்தைப் போன்று, ஒரு சதுர மீற்றரில் 3.5 நபர் என்ற கணிப்பில் பார்க்கும்பொழுது இந்தப் புகைப்படம் 13.541 நபர்கள் என்ற கணிப்பைக் காட்டுகின்றது. இந்தக் கணிப்பீடு சற்று அதிகமாக உள்ளதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த வரைபடத்தைப்  பயன்படுத்தி மக்களின் எண்ணிக்கையை நீங்களும் பரீட்சித்துப் பார்க்கலாம்.

லோட்டஸ் வீதியைக் காட்டும் இரண்டாவது புகைப்படம், ஹில்டன் ஹோட்டலில் இருந்து எடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. அதன் வீதி-நிலைக் காட்சியை இங்கே காணலாம். எம் செயலியில் சிக்கலான கணிப்பீடுகள் செய்வது கடினமாகையால், இரண்டு வரைபடங்களின் உதவியுடன் மக்கள் தொகையை நான் கணிப்பிட முயற்சித்தேன்.

லோட்டஸ் வீதி மக்கள் தொகை 1

லோட்டஸ் வீதி மக்கள் தொகை 2

புகைப்படத்தில் காணப்படுகின்றவாறு, கூட்டத்தின் நடுப்பகுதியில் அடர்த்தி குறைவாகவும், வெளிப்புற பகுதிகளில் மேலும் அரிதாக இருந்தபோதிலும், எனது கணிப்பீட்டுக்கு ஒரு சதுர மீட்டருக்கு 3.5 என்ற கணிப்பீட்டையே பயன்படுத்தினேன்.

எனினும், இந்தப் புகைப்படங்கள் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தியவர்களினாலேயே பகிரப்பட்டு, பேரணியின் உச்சக்கட்டத்தின்போது வந்த சனத்தொகையை அவர்கள் காட்டுவதற்கு உள்நோக்கங்கள் இருந்தன. இங்கேயும் இங்கேயும் நீங்கள் மக்கள் தொகையை பரீட்சித்துப் பார்க்க முடியும்.

இந்தப் புகைப்படத்தில் உள்ளவாறு லோட்டஸ் வீதி சந்தையில் காணப்படும் சனத்தொகையின் எண்ணிக்கை 36,508 ஆகும் (இது உயர்ந்த அளவிலான எண்ணிக்கை ஆகும்).

நாமலினால் மாலை வேளையில் பகிரப்பட்ட புகைப்படத்தில் மக்கள் தொகை குறைவாகவே காணப்படுகின்றது (புகைப்படத்தின் கீழ்ப்பகுதி மர நிழலினால் மறைக்கப்பட்டுள்ளது. இது கூகிள் மேப்பிலும் காணக்கூடியதாக இருக்கிறது). நாமலின் கருத்துப்படி, மக்கள் கூட்டம் தொடர்ந்தும் வந்த வண்ணமே இருந்திருக்கின்றது. எனினும், அவரது கருத்துக்கு முரணான நிலையையே அவரது புகைப்படம் காட்டுகின்றது. எனினும், நாமலின் புகைப்படம் மிலிந்தவின் புகைப்படத்தில் இல்லாத வேறு ஒரு மக்கள் தொகையை காண்பிக்கின்றது என்று கருதுவோம். அதாவது, நாமலின் புகைப்படத்தில் காணப்படும் மக்கள் தொகைக்கு, மேலும் 36, 508 பேரைக் கூட்டுவோம்.

இந்தக் கணக்கீட்டின்படி மேலே காட்டப்பட்ட புகைப்படங்களில் காணப்படும் மக்கள் தொகையின் மொத்தம் 86,557 ஆகும். இந்தத் தொகை, 2017 மே தினத்துக்கு வருகை தந்த கூட்டத்தைப் பார்க்கிலும் 31,000 ஆல் குறைவானது. நாமல் மற்றும் மிலிந்த ஆகியோரது புகைப்படங்கள் இரண்டும் ஒரே கூட்டத்தையே காண்பிக்குமானால் (கூட்டத்தின் நடுப்பகுதியில் செறிவு கூடுதலாக இருப்பது தெளிவாகத் தென்படுகின்றது) மொத்த மக்கள் தொகை அண்ணளவாக 50,000 ஆகவே இருக்கும்.

மிலிந்தவின் கூற்றுப்படி ஆயிரக்கணக்கான ஊர்திகள் வந்திருந்தால், அல்லது நாமல் கூறியவாறு மக்கள் இன்னும் கூட்டம் கூட்டமாக வந்திருந்தால், அல்லது செய்திகள் கூறியவாறு  குருணாகலையிலிருந்து மட்டும் 700 ஊர்திகள் வருகை தந்திருந்தால், மொத்த மக்கள் கூட்டம் 200,000 ஐயும் தாண்டியிருக்கும். எனினும் வருகை தந்த மக்கள் தொகை அதன் 1/4 மாத்திரமே ஆகும்.

2017 ஜனவரி மாதத்தில் மஹிந்த ராஜபக்‌ஷவினால் நுகேகொடையில் நடாத்தப்பட்ட பேரணியில், பின்னர் அதே ஆண்டில் மே தினக்கோட்டத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் தெருக்களை நிறைத்திருந்தனர். ஏனெனில், ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் வாதங்களான மோசமான ஆட்சி, மக்களுக்கு அரசின் மேல் ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வு போன்ற உண்மையான காரணங்களை கருத்திற்கொண்டோமேயானால், பெருமளவிலான மக்கள் கூட்டத்தை நாம் எதிர்பார்த்திருக்கலாம். எனினும், நகரத்தை முற்றுகையிட முடியாமல்போன, பெருவீதிகளின் சந்திகளை நிரப்பக்கூட முடியாமல் பல்வேறு இணையத்தளங்களில் பகிரப்பட்டவாறு சடுதியாக ஒழுங்குசெய்யப்பட்ட வீதியோர கேளிக்கையாக மாறிய ஒரு பேரணியையே நாம் கண்டோம்.

இந்த ஆய்வு கட்டுரையானது, கடந்த வருடம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட மக்கள் தொகையை விட சமூக வலைத்தளங்களில் மிகவும் அதிகமான மக்கள் ஆதரவைக் கொண்ட நாமல் ராஜபக்‌ஷவினாலும் ஏன் கொண்டுவரமுடியவில்லை என்பதை ஆராயும் ஏனைய கட்டுரைகளுக்கு முன்னோடியாக இருக்கும் என நம்புகிறேன். இந்த கேள்வியானது, கடந்த பெப்ரவரி மாதம் SLPP கட்சி பெட்ரா பாரிய வெற்றியின் பின்னணியிலும், தனது மைத்துனரின் தோல்வியுற்ற முயற்சியை மூடிமறைக்க கூறிய பொய்களின் பின்னணியிலும் முக்கியமானதாகும்.

கடந்த பெப்ரவரி மாதம் SLPP கட்சி பெற்ற வெற்றியின் பின்னணியிலும், தனது சகோதரனுடைய மகனின் தோல்வியடைந்த முயற்சியை ஈடுசெய்யும் நோக்கில் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறிய அப்பட்டமான பொய்களின் பின்னணியிலும் இந்த ஆராய்ச்சியானது மிகவும் சுவாரசியமான ஒன்றாக அமைகின்றது.

பொறுமையுடன் பார்த்திருப்போம்.

2018 செப்டெம்பர் 6ஆம் திகதி “Doing the math: The Jana Balaya rally” என்ற தலைப்பில் Groundviews பேஸ்புக் பக்கத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கமே இங்கு தரப்பட்டுள்ளது. ‘கிரவுண்விவ்ஸ்’ தளத்தின் நிறுவுனரும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளருமான சஞ்சன ஹத்தொட்டுவ இந்தக் கட்டுரையின் ஆசிரியராவார்.