பட மூலம், The Sunday Leader

“எம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் வரை எமக்கு விடுதலை இல்லை” என்ற கோட்பாட்டு வாசகத்தினை உள்ளடக்கிய அறிக்கையுடன் இலங்கை முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும் நீதியையும் உத்தரவாதப்படுத்தி சீர்திருத்தப்படல் வேண்டும் என்ற முஸ்லிம் பெண்களின் பரிந்துரைகளின் படி அரசாங்கம் அதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு கண்டனப்போராட்டமொன்றினை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து இப்போராட்டத்திலில் பங்குபற்றிய பெண்களைக் கொச்சைப்படுத்தியும் வன்மமாக திட்டியும் பேஸ்புக், இணையதளங்களில் பல ஆண்கள் பதிவுசெய்து வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் இணைப்பாளராக ஒரு சில வருடங்கள் கடமையாற்றியிருப்பதாலும் இக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பிலான பரந்தளவிலான அனுபவத்தினை நான் பெற்றிருப்பதாலும் சில விடயங்களை தெளிவுபடுத்தலாம் என்று நினைக்கின்றேன். சுனாமிப்பேரலையின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இப்பெண்கள் கூட்டமைப்பில் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பல சிவில் சமூக நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. அதேநேரம் இக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் தனியே ஒரு மத அல்லது இனத்தினை அடிப்படையாகக்கொண்டதல்ல. இவ்வமைப்பினால் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்களிப்பு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தத்தினை ஆதரித்து ஒழுங்கு செய்யப்பட்ட இப்போராட்டம் இக்கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் முஸ்லிம் அமைப்புக்களின் ஆதரவுடனேயே ஏற்பாடு செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்தே தமிழ் பெண்கள் இப்போராட்டத்தில் பங்குபற்றினார்கள். பேரினவாத சக்திகளின் கருப்பொருளாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் அமையுமாயின் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்பது வெளிப்படையான உண்மை. அதேநேரம் குறித்த சட்டச் சீர்திருத்தம் தொடர்பிலான முன்னெடுப்புகள், கலந்துரையாடல்கள் முஸ்லிம் பெண்களின் தலைமையிலேயே நடைபெற்று வருகின்றன. இங்கே முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவு வழங்குவதை நோக்கமாகக் கொண்டே இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தினை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையை வாசிக்கும்பொழுது இதனைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த பெண்கள் தங்களுடன் இணைந்து வாழ்க்கை நடத்தும் முஸ்லிம் பெண்களின் நலன்களுக்காக ஆதரிப்பதை பேரினவாத சக்திகளாக அடையாளப்படுத்தி ஒரு விம்பத்தினை இங்கே உருவாக்குவது பெரும் கண்டனத்திற்குரியது. “எங்களது சட்டத்தினை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். அதனைப் பற்றி கதைப்பதற்கு நீங்கள் யார்” என்ற கேள்விகளை சில முஸ்லிம் ஆண்கள் முன் வைக்கின்றார்கள். அப்படியென்றால் பலதார திருமணம், பராமரிப்பு வழங்காமை, விவாகரத்து போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பல முஸ்லிம் பெண்கள் தங்களுக்கு நீதி கிடைக்க உதவி கோரி ஒவ்வொரு நாளும் இக்கூட்டமைப்பின் நிறுவனங்களினை நாடி வருகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கான முயற்சிகளில் இப்பெண்கள் கூட்டமைப்பு முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றது. ஆகவே, இத்தகைய சந்தர்ப்பங்களில் வாய்மூடி மெளனமாக இருக்கின்ற ஆண்கள் ஏன் எங்களது பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு உதவி செய்யவில்லை. அல்லது இச்சட்டத்தினை திருத்துவதற்காக முப்பது ஆண்டுகளாக போராடிவருகின்ற பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து எங்கேயாவது இந்த ஆண்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றீர்களா? குறைந்தது கண்டனைத்தையாவது கூறியிருக்கின்றீர்களா?

ஆனால், வேறு ஒரு சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் இச்சட்டத்தினை திருத்தம் செய்ய குரல்கொடுக்கும்பொழுது மட்டும் உங்களுடைய ஞானக்கண் திறக்கப்படுவது ஏன்? வன்முறையை ஏற்படுத்தும் பாரபட்சமான சட்டங்களைத் திருத்தம் செய்யுமாறு கோரிக்கை விடுப்பது அல்லது அவை தொடர்பில் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்துவதற்கான கருத்துச்சுதந்திரம் இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்குமான அடிப்படை சுதந்திரமாகும். இங்கே இன, மத அடிப்படையிலான பாரபட்சம் அவசியமில்லை. இதனை இலங்கை அரசியலமைப்பும் உறுதி செய்கின்றது. இவ்வரிமையை அடிப்படை இஸ்லாமிய விழுமியமும் ஆதரிக்கின்றது.

இன மத ரீதியான வன்முறைகளை இஸ்லாம் ஒரு பொழுதும் அனுமதிப்பதில்லை. தங்களுடன் சேர்ந்து நீதிக்காக பயணிக்கும் இப்பெண்களை காபிர் என்றோ அல்லது வேறு வசைச்சொற்களால் திட்டுவதையோ எந்தவொரு உண்மையான முஃமீனினதும் அடிப்படை செயலல்ல. தந்தை வழிச் சமூகத்தினை மீண்டும் மீண்டும் காப்பாற்ற பல கட்டுமானங்களை இன்றைய ஆணியச்சமூகம் தகவமைக்கின்றது. ஒன்று, ஆண் மூளையால் சிந்திக்கின்ற பெண்களினை தக்கவைப்பது. இரண்டாவது, அதற்கு எதிராக குரல்கொடுக்கும் பெண்களினை உடல் உள ரீதியாக தாக்குவது. இவற்றினை மேலும் மெருகூட்ட இன மதச் சாயங்கலையும் சிலர் பூசிக்கொள்கின்றார்கள். எனவே, அவ்வாறானவர்களுக்கு பின்வரும் ஹதீஸ் வசனத்தை கூறி இப்பதிவினை முடிக்கின்றேன். அல்லாவிற்கு அஞ்சுங்கள்! உங்களது சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அநீதியை ஏற்படுத்தாதீர்கள்.

பாத்திமா மாஜிதா

 


ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரைகள், “இலங்கையின் முஸ்லிம் பெண்களுக்கு அடுத்து நிகழப்போவது என்ன?”, “MMDA: நீதியை தேடும் பெண்கள் (நேர்க்காணல் 12)”