இன்னும் இரண்டு தினங்களில் வெளிநாடு செல்லும் கனவுடன் கொழும்பு வந்திருக்கிறார் ஜெகதீஸ்வர சர்மா. முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலில் தங்கியிருந்த அவர் கொழும்பைச் சுற்றிப் பார்ப்பதற்காக 1983 ஜூலை 23ஆம் திகதி மாலை வேளை ஹோட்டலில் இருந்து வெளியில் புறப்படுகிறார். மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பமுடியாத நிலை, புறக்கோட்டை எங்கும் கலவரம். “யாழ்ப்பாணத்தில் ஏதோ பிரச்சினையாம்” என்று யாரோ பேசுவது சர்மாவின் காதில் விழுகிறது. தட்டுத்தடுமாறி தங்கியிருந்த ஹோட்டலுக்குச் செல்கிறார். ஹோட்டலில் காடையர்கள் கூட்டம். கண்ணில் பட்டால் அவ்வளவுதான் என்று எண்ணிக்கொண்டு கொழும்பு, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்திருக்கும் சம்மாங்கோட்டு கோவிலினுள் நுழைகிறார். பெற்றோல் குண்டுவீச்சுகளுக்கு மத்தியில் தனியாளாக அங்கு மூன்று தினங்கள் தங்கியிருக்கிறார். பசி பொறுக்க முடியாமல் கோவிலில் இருந்து வெளியேறிய சர்மா வாய் பேச முடியாதவராக காடையர்களின் வாகனத்திலேயே ஏறி சிலாபம் உடப்புக்குச் சென்று உயிர் தப்புகிறார்.

அன்றைய தினம் தான் அனுபவித்த பயங்கரமான அனுபவத்தை எம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.