பட மூலம், Colombo Telegraph

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான சந்தர்ப்பம் அல்லது அதற்குத் தேவையான அரசியல் வெளி சிங்கள இனவாதத்தின் அச்சமூட்டும் கனவாக இருந்துவருகின்றது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வேண்டுமென்றே தவிர்ப்பதற்காக இனவாதிகள் அச்சத்துடன் காணப்படுவதாகத் தெரிகிறது.

விஜயகலாவின் அரசியல் பக்குவமற்ற பேச்சிற்கு எதிராக நாடாளுமன்றில் உறுப்பினர்கள் வெளிப்படுத்திய வெறுப்புணர்வுப் பேச்சுக்களிலும் இனவாதப் பேச்சுக்களிலும் இதையே காணக்கூடியதாக இருந்தது.

இவ்வாறான விடயங்கள் ஜனநாயகத்தின் கலாச்சாரமாக காணப்படுமாயின் எமது நாட்டின் இன ஒற்றுமைக்கு சவாலானவற்றை இன்னும் பல ஆண்டுகளுக்கு நீக்க முடியாமல் போகலாம்.

விடுதலைப் புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான கொலைகள் மற்றும் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை நான் எதிர்க்கிறேன். என்னுடைய மனைவி ராஜனியைக் கொன்றவர்களும் அவர்கள்தான். 2009 இல் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே ஒரே குறிக்கோள் என்று சிங்கள அரசியல் பிரிவினர் கூறினார்கள். ஜனநாயகம் மற்றும் சமத்துவத்துக்கான தமிழ் மக்களின் போராட்டத்தை அங்கீகரிக்கும், பலப்படுத்தும் அரசியல் வெளி உருவாகும். அது விஜயகலாவின் புரிந்துணர்வை விட பலம்வாய்ந்ததாகும்.

விடுதலைப் புலிகளின் அநீதியான செயற்பாடுகள் மற்றும் விஜயகலாவின் தரக்குறைவான பேச்சை முன்னிறுத்தி, போரின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் மிக முக்கியமான பிரச்சினையை மறக்கடிக்கச் செய்வதன் மூலம் தமிழ் அடிப்படைவாத பிரிவுகளின் அபிப்பிராயங்களுக்கு உயிரளிக்கும் நடவடிக்கையையே சிங்கள இனவாதிகள் செய்துவருகிறார்கள்.

சிங்கள இனவாதம் பல தசாப்தங்களுக்கு முன்னரும் – இன்று வரையும் புரிந்துகொள்ளாத பிரச்சினை இதுவாகும். மக்களுடைய வீடுகள் சொத்துக்களை மீள பெற்றுக்கொள்ளுதல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோருதல்,  காணாமலாக்கப்பட்ட  ஆயிரக்கணக்கானோரின் பிரச்சினைகள், கணவன் இல்லாத பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் கஷ்ட நிலைமை, ஏமாற்றமிக்க எதிர்காலம் போன்றன விஜயகலாவின் பேச்சை விட அரசியல் முக்கியத்துவம் பெறும் நாளில்  இறுதியாக சிங்கள இனவாதத்துக்கு வன்முறையே தீர்வாக இருக்கும்.

தயாபால திராணகம

 

 


ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரை, விஜயகலாவும் விடுதலைப் புலிகளும்