பட மூலம், Selvaraja Rajasegar

2015ஆம் ஆண்டு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளுக்கமைய இழப்பீடு வழங்கும் அலுவலகம் தொடர்பான பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது. இன்று வரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பல வகையான இழப்பீடுகளை வழங்கியிருக்கின்றன. இருந்த போதிலும் இழப்பீடு என்றால் என்ன என்பது தொடர்பான அறிவை மக்கள் கொண்டிருக்காதமை கவலைக்குரிய விடயமாகும். இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலும் அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்ட இழப்பீடு வழங்கும் அலுவலகம் தொடர்பாக குறைந்தளவு தகவல்களே பொதுவெளியில் காணப்படுகின்றன. தங்களுடைய யோசனையை தெளிவுபடுத்துவது தொடர்பாக – இலங்கையில் உள்ள பெரும்பாலான மக்கள் நன்மையடையக் கூடிய வியடமொன்று  தொடர்பாக மக்களை தொடர்புபடுத்திக் கொள்ளும் அரசாங்கத்தின் மந்தகதியான நடவடிக்கை ஏமாற்றத்தைத் தருகிறது.

தகவல் குறைப்பாடு என்ற விடயம் ஒருபக்கம் இருக்க, முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான யோசனைக்கு அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் விடயம் ஆழ்ந்த கவலையைத் தருகிறது. அனைத்து பிரஜைகளும் ஒருங்கிணைந்து நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித்தருவதாக அரசாங்கம் உறுதிமொழி தந்தது. பல தசாப்தங்களாக அனைத்து இன மத குழுக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய, வன்முறைக்கு முகம்கொடுத்த நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் யாரென்பதைத் தீர்மானிக்கும் விடயத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எல்லைகள் வரைவது வருந்தத்தக்க விடயமாகும்.

சிலர் இனத்துவ – தேசியவாத போக்குகள் குறித்து விசேட விளக்கங்களை முன்வைப்பதற்கு முயற்சிசெய்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றமை கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் பன்மைத்துவம் கொண்டவர்கள் என்பதோடு அவர்கள் அனைவரும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை உண்மையான நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் சீர்த்திருத்தம் ஏற்றுக்கொள்ளவேண்டும். நபர்கள் மற்றும் குழுக்கள் முன்வைக்கும் அனுபவங்களை புரிந்துகொள்வதற்கு முயற்சி எடுக்காதமையினால் எதிர்காலத்தில் இழப்பீடு வழங்கும்போது சில குழுக்கள் உள்ளடங்காமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.

இழப்பீடு என்றால் என்ன?

இழப்பீடு வழங்கும் அலுவலகம் தொடர்பாக பொதுவெளியில் தகவல்கள் இல்லாதமையினால் இழப்பீடு என்றால் என்ன என்பது தொடர்பாக பலர் மத்தியில் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் எழுந்துள்ளன. இழப்பீடு நிலைமாறுகால நீதியின் அத்தியாவசியமான அங்கம் என்பதுடன் துஷ்பிரயோகங்கள் மற்றும் இயற்கை அழிவுகளினால் ஏற்பட்ட இழப்புகளை அங்கீகரித்து அதற்கு தீர்வு வழங்கும் நடவடிக்கையைச் செய்கிறது.

போருக்கு மற்றும் மோதலுக்குப் பின்னரான கொலம்பியா, குவாதமாலா மற்றும் சியேரா லியோன் நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்பவதற்காக வழங்கப்பட்ட பொருள் மற்றும் ஆதரவின் ஊடாக இழப்பீடு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த காலங்களில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் அதற்குத் தீர்வு வழங்குவதை ஏற்றுக்கொள்வதால் இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தொடர்பாக மக்களை வலுவூட்டலாம். அதேபோல அவர்களை உரிமைகள் பெற்ற, சமமான பிரஜைகளாகவும் அங்கீகரிக்க முடியும். மோதலினால் இழப்புக்களைச் சந்தித்த மக்கள் மட்டுமன்றி, இயற்கையால் அல்லது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட அழிவு மற்றும் அதனோடு தொடர்புடைய அரசாங்கத்தின் அலட்சியம் அல்லது தவறான நடவடிக்கை காரணமாக பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் இழப்பீடு வழங்க முடியும் என்பதுடன், கட்டாயம் வழங்கவேண்டும் என்ற விடயத்தையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

பரந்த மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுமானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகவும், பரந்தளவிலும் நன்மையளிக்க இழப்பீட்டால் முடியும். நிதி கிடைப்பது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இழப்பீடு வழங்கும் திட்டத்தின் நோக்கத்தை வரையறுக்கலாம். இந்த விடயம் மற்றும் காணப்படும் எல்லைகள் குறித்து தெளிபடுத்துவதற்காக தகவல்களை பொதுமக்களுக்கு கிடைக்கக் கூடிய விதத்தில் வெளியிட்டு வடிவமைப்பு கட்டத்தின்போது அவர்களுடைய கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு மட்டும் அல்லது பிரதிபலனை எதிர்பார்த்து இழப்பீடு வழங்குவதாக இருந்தால் – பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்துவிட்டு மற்றவர்களுக்கு வழங்குவதாக இருந்தால் – பாதிக்கப்பட்டவர்கள் தனிமைபடுத்தப்படுவதுடன் சமூகங்களுக்குள் மற்றும் சமூகங்கள் இடையே தேவையற்ற பிரிவினைகள் உருவாகும் ஆபத்துள்ளது.

முடிவுகள் அரசியல் அல்லது தேசியவாத நிகழ்ச்சி நிரலில் அல்லது கருத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்தினால்,சூழ்நிலைகள் மேலும் சிக்கலானதாக இருக்கும். இழப்பீடு வழங்குவது பற்றி பொதுவாக பெரும்பாலானோர் அறிந்திருக்கின்ற போதிலும் இழப்பீடு வழங்குவதென்பது மூல ஆரம்பமாகவும் கருதப்படுகிறது. புனர்வாழ்வு, மீள்திருத்தம், திருப்தி மற்றும் மீள்நிகழாமை போன்றன உள்ளடங்கும் வகையில் இழப்பீட்டு வழங்கும் நடவடிக்கை செயற்படுத்தப்படுமானால் கட்டமைப்பு ரீதியான சமத்துவமின்மை குறித்து கவனம் செலுத்த முடிவதுடன் பொருள் ரீதியான மற்றும் அடையாள ரீதியான ஆதரவையும் வழங்க முடியும்.

உண்மை மற்றும் நீதி உட்பட ஏனைய சீர்த்திருத்தங்களுக்கு மாற்றாக இழப்பீடு வழங்காமல் இருப்பது குறித்து கவனமாக இருக்கவேண்டும். பொறுப்புக் கூறலை நிறுத்துவதற்கு இழப்பீடு வழங்கப்படுவதாக இலங்கையில் அநேகமானவர்கள் கருகிறார்கள் என்று அரசாங்கத்தால் 2016ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி (CTF) அறிந்துகொண்டது. அரசாங்கம் இந்த விடயம் தொடர்பாக தெளிபடுத்தல்களை மேற்கொண்டு பொய் வதந்திகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அத்தோடு, வழங்கிய உறுதிமொழிகளின் படி உண்மையாக நடந்துகொள்வதோடு, ஏனைய சீர்த்திருத்தங்களுக்கு மாற்றாக இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்ற விடயத்தை மக்களுக்கு தெளிவாகக் கூறவும் வேண்டும்.

இழப்பீடு இலங்கைக்கு புதிய விடயமல்ல

இலங்கையில் ஆட்சிக்கு வந்த பல அரசாங்கங்கள் பல்வேறு வகையான இழப்பீடுகளை வழங்கி வந்திருக்கின்றன. நாடு பூராகவும் இன மத அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அழிவான மீதொடுமுல்ல குப்பை மலை சரிவால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு மற்றும் 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி, மீரியாபெத்தை மண்சரிவு போன்ற இயற்கை அழிவுகளின் போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்களின் மீள்குடியேற்றம் போன்ற மீள்கட்டுமானங்கள் இதனுள் அடங்கும்.

இருந்தபோதிலும் இந்த நடவடிக்கைகளின்போது அவற்றுக்கே உண்டான வரையறைகளும் காணப்பட்டன. புனர்வாழ்வளிக்கும் நிறுவனம், சொத்துக்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகாரசபை (REPPIA) உட்பட வேறு நிறுவனங்களுக்கு பல்வேறு வகையான இழப்பீடு வழங்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டும் இழப்பீடு அல்லது மீள்கட்டுமானங்களை நடவடிக்கைகளை இந்த நிறுவனங்கள் மேற்கொண்டபோதும் நிறுவனங்களுக்கிடையே மட்டுப்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பே காணப்பட்டுள்ளது.

பல்வேறு அனர்த்தங்களின் போது இழப்பீடு வழங்குவதற்கான அதிகாரம் பெரும்பாலும் அமைச்சரவை தீர்மானத்தின் படியே மேற்கொள்ளப்படுகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகையிலும் வித்தியாசங்கள் காணப்படுகின்றன.  பல தசாப்தங்களாக வன்முறைகள் மற்றும் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்த அரசாங்கங்கள் அனைத்து சந்தர்ப்பத்திலும் இழப்பீடு வழங்குவதற்கோ அல்லது இழப்பீடு தொடர்பாக கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கோ முயற்சி எடுக்கவில்லை.

உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த மோதல்களில் சிக்குண்டு இழப்புக்களைச் சந்தித்தவர்கள் மற்றும் அவர்களது ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். தென்னிலங்கையில் இடம்பெற்ற இளைஞர்களின் இரு கிளர்ச்சிகள் மற்றும் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்றுவந்த போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மன உளர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். வன்முறையினால் இந்தத் தீவின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் சமூக பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் முகம்கொடுத்த இழப்புகளை நிறுத்துவதற்கோ அல்லது இடம்பெற்ற இழப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் பல தசாப்தங்கள் கடந்துவிட்டன. அவர்களுடைய வலியை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஏற்பது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நல்லிணக்க செயற்பாட்டின் மற்றும் சரிசெய்யும் நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த பணியாகும். மோதலுக்குப் பின்னரான சமூகத்தில் இழப்பீடு வழங்குவதன் மூலம் இதனையே நாங்கள் அடைய எதிர்பார்க்கிறோம்.

தீர்மானமிக்க பணி

எனவே, சம உரிமை, ஆண் பெண் சமத்துவம் குறித்த கூருணர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கல் மற்றும் பிற முக்கிய விடயங்கள் மீது கவனம் செலுத்துவதுடன் அனைவரும் உள்ளடங்கும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுமாயின் எதிர்காலத்தில் இழப்பீடு வழங்கும் பொறிமுறை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். இந்தப் பொறிமுறை ஊடாக இலங்கையின் வரலாறை புரட்டிப்பார்த்து மோதல், அனர்த்தம் மற்றும் தொடர்ந்து இடம்பெற்றுவந்த வன்முறையை ஏற்றுக்கொள்ளும் சட்டகமொன்றை அறிமுகம் செய்துவைப்பது சிக்கலான காரியமாக இருந்தாலும் அது முக்கியமான பணியாகும்.

இழப்பீடு வழங்கும் அலுவலகத்திடம் தூரநோக்கு கொண்ட தலைமைத்துவமும் நிபுணத்துவமும் இருக்கும் பட்சத்தில் இப்போது சில சந்தர்ப்பங்களில் மட்டும் இழப்பீடு வழங்கப்படுவது குறித்து கவனம் செலுத்தவும், கெளவத்துடன் துரதிஷ்டமான சம்பவங்களுக்கு முகம்கொடுக்கும் இலங்கையின் அனைத்து பிரஜைகளையும் உள்ளடக்கும் வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தவும் முடியும். இழப்பீடு வழங்கும் நடவடிக்கை வெளிப்படைத் தன்மையுடன் தகவல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதன் ஊடாக அரசாங்கம் தன்னை இந்த விடயத்தில் ஊக்குவிக்க வேண்டும். இலங்கையின் எதிர்கால பயணம் என்னவாக இருக்கவேண்டும் என்பதை அரசியல் இலாபம், செயலற்ற தன்மை, இனத்துவ – தேசியத்துவம் தீர்மானிப்பதற்கு இடமளிக்கக்கூடாது.

பவானி பொன்சேகா எழுதி, “The Importance of Reparations in Post-War Sri Lanka” என்ற தலைப்பில் சண்டே ஒப்சர்வர் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.