பட மூலம், Selvaraja Rajasegar

(சட்டத்தரணி ஏர்மிஸா டெகால் வழங்கிய தகவல்கள் மற்றும் உள்ளீடுகளுக்காக  கட்டுரை ஆசிரியர் நன்றியுடன் நினைவுகூருகின்றார்.)

1980ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க வலிந்துதவு சமூக சேவைகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தைத் (LDO 32/2011) திருத்தும் வகையிலான அடக்குமுறைச் சட்டவரைபை  வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அங்கீகாரத்துக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் 2018 பெப்ரவரி 20ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது.  வழமைபோன்று, இது எவரையும்  கலந்தாலோசிக்காது, இரகசியமாக  வரையப்பட்டுள்ளது.  நான் அறிந்தவரையில், சட்டவரைவு அரசாங்கத்தினால்  பொதுமக்களுக்குப்  பகிரங்கமாக வழங்கப்படவில்லை.[i]

அதிகரிக்கும் அழுத்தங்கள் மற்றும் கேள்விகள் காரணமாக, இந்தச் சட்ட வரைபை  அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து  ஒரு மாதம் கழிந்த நிலையில், இன்று, மிகவும்  காலம் கடந்தநிலையில், அமைச்சர் மனோ கணேசன் 2018 ஏப்பிரல் 10 அன்று சிவில் சமூகத்துடன்  கலந்தாலோசனை செய்யப்போவதாகக் கூறுகின்றார். இக்கலந்தாலோசனையின் போதான அவதானிப்புரைகள்  கிட்டும் வரையில் இதை வர்த்தமானியில் வெளியிடுவதில்லையென்றும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.[ii] இதே  அமைச்சர்தான் கடந்த வருடம் “இந்த நாட்டிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு எவ்வித பாரதூரமான  காரணமும் இல்லை” என்று தெரிவித்தவர் ஆவார். ‘ஒழுங்குபடுத்துதல்’ என்னும் வார்த்தைகளைப் பயன்படுத்தவும் தான் விரும்பவில்லையென்று அப்போது தெரிவித்திருந்தார்.[iii]

வரைபு சம்பந்தமாக  எடுத்துரைக்கப்பட்ட முக்கியமான நோக்கம் (பின்னர் செயலகம் என அழைக்கப்படும்)  சட்டபூர்வமான, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசியச் செயலகம்  ஒன்றினூடாக  குறித்துரைக்கப்படாத அமைச்சு ஒன்றின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்களை “ஒழுங்குபடுத்தி, மேற்பார்வை செய்து, சோதனையிடுவதாகும்.” ‘செயலகத்துக்கு விசாரணை செய்வதற்கான அதிகாரங்கள்’  இருப்பதோடு, அது பொலிஸாரின்  கருமங்களையும் பொறுப்பெடுத்துக்கொள்ளும். இச்செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகூடிய அதிகாரங்கள், கூட்டம் கூடும் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்,  சிந்தனை, மனச்சாட்சி மற்றும்  நம்பிக்கை குறித்த சுதந்திரம் மற்றும் தனிநபரின் அந்தரங்கத்துக்கான உரிமை என்பவற்றை நேரடியாகவே குறுக்கீடு செய்ய  பணிப்பாளர் நாயகத்துக்கு, பொறுப்பான  அமைச்சருக்கு மற்றும் அமைச்சின் செயலாளருக்கு, அரச சார்பற்ற நிறுவனங்கள் என வரைவிலக்கணப்படுத்தப்படக்கூடிய எந்தக் குழு மீதும்  முன்னெப்பொழுதும் இராத கட்டுப்பாட்டு அதிகாரத்தை  வழங்குகின்றன. இது மாவட்டங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளூர் அரச அதிகாரிகளுக்குக்  கீழ்ப்படிந்தவையாக இருக்கவேண்டுமென்னும் ஒரு கலாசாரத்தையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கி, அரச சார்பற்ற நிறுவனங்களுக்குத்  தற்போது நடைமுறையிலிருக்கும்  அறிக்கையிடல் மற்றும் அங்கீகார நிபந்தனைத்தேவை சூழமைவில் வருகின்றது.

கூட்டுச் செயற்பாடுகளைச் சட்டவிரோதமாக்குதலும், சுயாதீனக் குடியியல் (சிவில்)  ஒழுங்கமைத்தலையும், அணிதிரட்டலையும் முடமாக்குதல்

வரைபு அரச சார்பற்ற நிறுவன வரைவிலக்கணத்தில் பரந்த வீச்சிலான கூட்டுச்செயற்பாடுகளையும், குழுக்களையும் உள்ளடக்க முயலுவதோடு[iv] அதன் இருப்புக்காகச்  செயலகத்திடம் பதிவு அல்லது அங்கீகாரம் பெறவேண்டுமென்று வலுக்கட்டாயப்படுத்துகின்றது. பதிவு இல்லையேல், அரச சார்பற்ற நிறுவனங்கள் சட்ட விரோதமானதாகும். இதற்கான விலக்களிப்புகள் மிகவும் குறைவானவையே ஆகும்.[v] இந்த வரைவிலக்கணப்படுத்தலும், கட்டாயப்பதிவும், அங்கீகாரமும் அங்கத்தவர்களின் உரிமைகள் நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் குழுக்கள், தனிநபர்களின் விதிமுறையான மற்றும் விதிமுறையற்ற குழுக்கள்,  நிதியுதவிகள் பெற்றுக்கொள்ளும் குழுக்கள் அல்லது தன்னார்வ மற்றும் சுயவிருப்பு அடிப்படையில் பணியாற்றும் குழுக்கள், தற்காலிக மற்றும்  நிரந்தர இயக்கங்கள், சமூகத் தொழில்முயற்சி முன்னெடுப்புகளில் ஈடுபடும் குழுக்கள, மற்றும் பகிரங்க-தனியார் பங்குடைமைகள் போன்றவற்றைச் செயலகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரக்கூடும் அல்லது அவற்றைக் சட்டவிரோதமாக்கக்கூடும். அது சயாதீனமான சமூக ஒழுங்கேற்பாடுகள் மற்றும் அணிதிரட்டல் முன்னெடுப்புகள் மீது தாக்குதல் தொடுத்து பால்நிலை, பாலியல் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற அநீதியான சட்டங்களை நீக்கக்கோரி அல்லது மாற்றக்கோரி இயக்கம் நடத்துவோரை இலகுவில் பலியாக்கக்கூடியதாகும்.

குறிப்பாக, இந்த வரைபு  சட்டமாக்கப்பட்டால், தற்போதுள்ள ‘பிரஜைகள் சக்தி’ ( புரவஸி பலய), ‘நீதியான  சமூகத்துக்கான தேசிய இயக்கம்’ (National Movement for Just Society),  ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் (Lawyers for Democracy), தமிழ் சிவில் சமூக அமையம் (Tamil Civil Society Forum) மாணவர் சங்கங்கள், காணிக்கான உரிமை குறித்த மக்கள் கூட்டணி (People’s Alliance for Right to Land), துறைமுக நகருக்கெதிரான  மக்கள் இயக்கம், பெண்கள் நடவடிக்கை வலையமைப்பு (WAN) மற்றும் ‘காணாமலாக்கப்பட்ட உறவுகளின் இயக்கங்கள்’ போன்றவற்றை  அதன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரக்கூடும் அல்லது அவற்றைச் சட்டவிரோதமாக்கக்கூடும். ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் அமைச்சர் மனோ கணேசன் ஆரம்பித்து தலைமை வகித்த, ‘சிவில் கண்காணிப்புக் குழு’ (Civil Monitoring Commission), பிரேமதாச ஆட்சிக்காலத்தில் அமைச்சர் மங்கள சமரவீர  மற்றும் ஏனையோர் தலைமை தாங்கிய ‘அன்னையர் முன்னணி’,  ‘எப்பாவல பொஸ்பேட் படிமங்களைப் பாதுகாப்பதற்கான இயக்கம்’, ‘இனங்களுக்கிடையிலான நீதிக்கும் சமத்துவத்துக்கான இயக்கம்’ (Movement for Inter-Racial Justice and Equality) மற்றும் ‘மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்’ University Teachers for Human Rights – Jaffna) போன்ற  கடந்தகால இயக்கங்கள் தம்மை இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்படுத்திக்கொள்ள விரும்புமா? என்பது பெரிய வினாவாகும்.

தன்னிச்சையான பதிவு, இடைநிறுத்தல்கள், இரத்துக்கள் மற்றும் மேன்முறையீடுகளுக்கான மட்டுப்பாடான சாத்தியங்கள்

இந்தச் சட்டவரைபின் கீழ் பதிவு (மற்றும் அதன் மூலம் கிட்டும் சட்டபூர்வத்தன்மை) அமைப்பு மேற்கொள்ளுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள செயற்பாடுகளுக்குப் பொறுப்பான செயலகத்தின் பணிப்பாளர் நாயகம், மற்றும் அமைச்சுக்கள் அல்லது  அதிகாரிகளின் சபலங்கள், விருப்பார்வங்களின் பிரகாரமே இடம்பெறும். பதிவு நிராகரிக்கப்பட்டால், செயலகம் கருமப்படும் அமைச்சின் செயலாளருக்கு மிகவும் குறுகிய காலப்பகுதியான 30 நாட்களுள் மேன்முறையீடு செய்யப்படுதல் வேண்டும்.

பல காரணங்களுக்காக பதிவு, பதிவு இடைநிறுத்தம் அல்லது இரத்து இடம்பெறலாம். குறித்த ஒரு அமைப்பு தேசியப் பாதுகாப்பு அல்லது பொது நலன்களுக்கு அச்சுறுத்தலானது அல்லது பாதிப்பு எற்படுத்துவது என்று பணிப்பாளர் நாயகம் எண்ணுவதையும் உள்ளடக்குகின்றன. அமைச்சின் செயலாளர், குறிப்பிட்ட அமைப்பு தேசிய நலன்களுக்கு விரோதமாகச் செயலாற்றுகின்றதென்று எண்ணினால் அந்த அமைப்பின் பதிவை இரத்துச்செய்யலாம். இந்தச் சொற்பதங்கள் எவையுமே தெளிவாக வரைவிலக்கணப்படுத்தப்படவில்லை என்பதோடு, மேன்முறையீடுகள் மாகாண மேல் நீதிமன்றுக்கு மிகக் குறுகிய காலமான 30 தினங்களுள் இடம்பெறுதல் வேண்டும்.

குடியியல் அமைப்புகளின் தத்துவார்த்த, மற்றும் பௌதீக சுயாதீனத்தின் மீதான தாக்குதல்

உத்தேசச் சட்டம் சிவில் குழுக்கள் அரசாங்கத்துக்கு ஏற்புடைய அல்லது அதனால் வரைவிலக்கணம் செய்யப்படும் “பொது அபிவிருத்தித் தேவைகளுக்கு” இணங்கவேண்டுமென்றும் உட்கிடையாகக் கருதுகின்றது. இவை அநேகமான சந்தர்ப்பங்களில் செல்வந்தர்களுக்கும், சந்தைக்கு சாதகமானதும், மக்கள் பங்கேற்பில்லாததுமான, அரசாங்கத்தின் அபிவிருத்தி மாதிரிகளுக்கு சவால் விடுக்கும் குழுக்களை ஓரங்கட்டுவதாக அமையக்கூடும். இதுகுடியியல் குழுக்களின் சுயாதீனம் மற்றும் உள்நிலைக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மீறுவதாகவும் அமைகின்றது. இது குறிக்கோள்களில் மாற்றம், செயற்படும் புவியியல் பிரதேசத்தில் மாற்றம், கிளைகளைத் தாபித்தல், குழுவின் அமைப்பியலில் மாற்றம், ஏனைய குழுக்களுடனும், அரசாங்கத்துடனும் ஒத்துழைப்பு, வலையமைப்புகளையும், சம்மேளனங்களையும் உருவாக்குதல், சேவைத்தர நியமங்கள், நிதியியல் மற்றும் கொள்கை முகாமைத்துவம், ஏனைய குழுக்களுக்கு நன்கொடையளித்தல், பொதுமக்களிடமிருந்து நிதிசேகரிப்பு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் கொடி, சின்னம், இலச்சினை போன்ற விடயங்களில் தலையீடு செய்வதும், அவை சம்பந்தமான இறுதி முடிவை மேற்கொள்ளும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளுதல் என்பவை மூலம்  மீறல்களில் ஈடுபடலாம். உறுப்பினர்கள் மற்றும் சுய-விருப்புத் தொண்டர்கள் அமைப்பைவிட்டு நீங்கி 06 வருடங்களுக்குப் பின்னரும் செயலகத்துக்கு அவர்கள் குறித்த தகவல்கள் வழங்கப்படுதல் வேண்டும்.

வழமையான பொலிஸ் அதிகாரங்களுக்கும்  அப்பாற்பட்ட பொலிஸ்  கருமப்பாட்டு அதிகாரங்கள்

சாதாரண சட்டத்தில் பொலிஸார் ஒரு வளாகத்தினுள் பிரவேசித்துத் தேடுதல் செய்வதற்கும், ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் குறிப்புகளைப்  பரிசீலனைசெய்வதற்கும், பிரதிகளையும், மேற்கோள்களைக் காட்டுவதற்கும் நீதிமன்ற எழுத்தாணையொன்றைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். ஆயினும், இச்சட்ட வரைபு ஏதாவது சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்த, நியாயமான சந்தேகம் சம்பந்தமான தெளிவாக வரையறுக்கப்பட்ட அளவுகோல்கள் எதுவுமேயின்றி, செயலகம் இவற்றில்  தடையின்றி ஈடுபடுவதற்கு வழிசமைக்கின்றது. “தகவலைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும்” அதிகாரம் என்பதன் உட்கிடையான கருத்து “செயலகம் கேட்பது மாத்திரமன்றி  தகவலைப் பெற்றுக்கொள்ளும்” அதிகாரம் கொண்டதென்பதால் தகவலைக் கேட்கும்போது ஒரு குழு அதற்கு மறுப்புத்தெரிவிக்க முடியாது என்பதாகும். வழமையாகப் பொலிஸாரின்  கருமமாகிய கறுப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக்கல் (money laundering) மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு என்பவற்றையும்  விசாரணை செய்வதற்கான அதிகாரங்களை செயலகம் கொண்டுள்ளது.

வங்கித்தொழில் அந்தரங்கத்தன்மையை மீறுதல்

சாதாரண சட்டங்களின் கீழ், குறித்தவொரு குற்றங்கள் சம்பந்தமான விசாரணைகள் விடயத்தில்  பொலிஸார் தகவல்களைக் கோரும்போது அவர்கள் வெளிப்படையான நியாயப்படுத்தல்களை  வழங்கவேண்டுமென்பதோடு, வங்கிகள் தகவல்கள் வெளியிடுதல் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மாத்திரமே இடம்பெறுதல் சாத்தியமாகும். ஏதாவது குற்றவியல் நடத்தை குறித்து எதுவுமே குறிப்பிடப்படாது வங்கித்தகவல் அந்தரங்கத்தன்மையைச் செயலகம் மீறும் வகையிலான அதிகாரத்தை இது வழங்குகின்றது. இதனால் அரசசார்பற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் தனிநபர்களும், அமைப்புகளும் இரண்டாந்தரப் பிரஜைகள் நிலைமைக்குத்  தள்ளப்படுகின்றனர். வரைபுச்சட்டம் வங்கிகள் 10 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வைப்புகள் சம்பந்தமான தகவல்களையும், இலத்திரனியல் நிதி இடமாற்றங்களையும் அமைச்சரினால் குறித்துரைக்கப்படும் ஒரு தொகைக்கு மேற்பட்ட சகல கொடுக்கல் வாங்கல்களையும் வெளிப்படுத்துமாறு வற்புறுத்துகின்றது. அரசசார்பற்ற நிறுவனங்கள்  என வரைவிலக்கணப்படுத்தப்பட்ட குழுக்கள் மீதான இத்தகைய  கட்டுப்பாடு மூலதனப் பிரவாகத்தைத் தாராளமயப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமானது என்பதோடு, இதன்கீழ் புதிய அந்நியச்செலாவணிச் சட்டம்[vi] 1 இலட்சம் டொலர் மதிப்பு வரையில் வெளிநாட்டில் வைத்திருக்கப்படும் பிரகடனப்படுத்தப்படாத பணத்தைத் தண்டனை எதுவுமின்றி  நாட்டுக்குள் எடுத்துவரலாம் என்பதோடு, அதற்கு மேற்பட்ட தொகைகள் 1 வீதக் கட்டணத்தோடு  எடுத்துவரப்படலாம் என்னும் அனுமதியையும் மீறுவதாக அமைந்துள்ளது. இது, அரச சார்பற்ற  நிறுவனங்கள் என வரைவிலக்கணப்படுத்தப்பட்ட குழுக்களுக்கு எதிரான வகையில், மத்திய வங்கி  நாட்டினுள் நிதிப்பிரவாகம் சம்பந்தமாக மேற்கொள்ளும் நுண்கணிப்புகளுக்கும் மேலதிகமான ஓர் அடுக்கை ஏற்படுத்துவதாகும்.

பரந்தவையும், தெளிவற்ற வகையில்  வரைவிலக்கணப்படுத்தப்பட்டவையுமான “அரச சார்பற்ற நிறுவனங்களின் குற்றச்செயல்கள்” (NGO Crimes)

சட்டவரைபு பரந்த, தெளிவற்ற வகையில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டவையும், துஷ்பிரயோகங்களுக்கு இடமளிப்பவையுமான “ஒரு வீச்சான, சட்டத்தின் கீழான தவறுகளை”  உருவாக்குகின்றது. இவை கூட்டம் கூடும் சுதந்திரத்தை மீறும் வகையிலான பதிவு செய்யப்படாமை மற்றும் “சுயவிருப்பிலான அறிவித்தல்” கோட்பாடு என்பவற்றை உள்ளடக்குகின்றன. எளிமையான  ஒரு தகவலுக்கான வேண்டுகோள்கூட, போதிய அளவில்  கவனிக்கப்படவில்லையென்று தோன்றும் பட்சத்தில், 250,000 ரூபா அபராதம் அல்லது ஒரு வருடகாலச் சிறைத்தண்டனை  விதிக்கப்படலாம் என்பது ஓர் உளப் பீதிநிலையை உருவாக்கக்கூடியதாகும். நிச்சயமின்மை என்பது சட்டத்தின் ஆட்சி என்னும் அடிப்படைத் தத்துவக்கூற்று நியதிக்கு முரணானதாகும். ஆயினும், நிர்வாக ரீதியாகத் திருத்தப்படக்கூடிய செயல்களைக் குற்றவியல்தன்மை கொண்டதாக்கும் ஏமாற்றுவித்தை, செலாவணிக் கட்டுப்பாட்டுச்சட்டத்தின் இடத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அந்நியச் செலவாவணிச் சட்டத்துடன் ஒப்பிடுகையில் (கட்டுப்பாடு என்பதிலிருந்து விலகிச்செல்லும் பெயரீட்டு மாற்றத்தைக் கவனிக்கவும்) வேறுபாடு வெளிப்படையாகவே தோன்றும் ஒரு விடயமாகும். “அந்நியச் செலாவணிச் சட்டம்”  பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு மீறல்களை குற்றவியலற்றதாக்கி, அதன் கொடுமையான சட்டக்கோட்பாட்டு ஏற்பாடுகளிலிருந்து குடிமக்களை விடுவித்த புதிய சட்டமென்று விபரிக்கப்பட்டது. புதிய முகாமைத்துவ முறையை  நடைமுறைக்கிடும் பொறுப்பு அதிகாரம்பெற்ற வியாபாரிகளுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது என்பதோடு, இவர்களுக்கெதிராக அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் குற்றவியல் அல்லது சிவில் வழக்குத் தொடரல்களையும் மேற்கொள்ள முடியாது. அதற்குப்பதிலாக, ஒரு நிர்வாகச் செயல்முறையூடாக இவர்களுக்கெதிரான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.[vii]

அரசாங்கத்துக்கும், அரச சார்பின்மைக்கும் இடையிலான வேறுபடுத்தும் கோடுகளைத் தெளிவற்றதாக்குதல்

எழுத்திலும், உணர்விலும் இந்த வரைபு அரச சார்பற்ற நிறுவனங்களை, அரச கட்டுப்பாடுகொண்ட அரச சார்பற்ற நிறுவனங்களாக மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாகவே தோன்றுகின்றது. இது அரச சார்பற்ற குழுக்களை முதனிலையாக அவற்றின் அங்கத்தவர்களுக்கும், அவை பின்பற்றும் விழுமியங்கள், பயனாளிகள், கொடையாளர்களுக்குமான வகைப்பொறுப்புக்குப் பதிலாக, அரசாங்கத்துக்கு வகைப்பொறுப்புள்ளவை ஆக்கும் ஒரு பிரயத்தனமாகவே உள்ளது. இது இத்தகைய குழுக்கள் அனேகமான சந்தர்ப்பங்களில் வேறுபட்டு நிற்பதற்கும், கண்காணிப்பதற்கும், விமர்சிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் நாடுவது அரசாங்கத்தையே என்னும் நிகழ்வுண்மையை உதாசீனம் செய்வதாகவுள்ளது.

இத்தகைய குழுக்களின் பணிகளில் ஈடுபட்டுள்ள கூட்டுச் செயற்பாடுகளும், தனிநபர்களும், யதார்த்த அமைப்புகளிலும் மோசமான நிதி முகாமைத்துவம், பாலியல் தொல்லைகள், பால்நிலை அடிப்படையிலான பாரபட்சங்கள், ஊழியர்களின் உரிமைகள் துஷ்பிரயோகம் என்பவை இடம்பெறுவதை வைத்து நோக்குகையில் இவர்கள் யாரும் சட்டத்துக்கு மேற்பட்டவர்கள் அல்லர். இவை அரசாங்க முகவர் நிலையங்களிலும், தனியார்துறையிலும் இடம்பெறும் விடயங்களாகும். ஆயினும், இது அனைவருக்கும் பிரயோகிக்கக்கூடிய சாதாரண  சட்டங்களின் கீழ் இடம்பெறுதல் வேண்டும். பாரதூரமாகத் தலையீடுசெய்யும் சட்டங்கள், பாரபட்ச சட்டங்கள், குறிப்பிட்ட நபர்களைத் தேடித்தண்டிக்கும் சட்டங்கள், அரசாங்கங்கள் மற்றும் பிரஜைகள்/ அரச சார்பற்ற குழுக்களிடையே வேறுபாடுகளைத் தெளிவற்றதாக்கும் சட்டங்கள், அரசாங்கத்துக்குப் பீதி ஏற்படுத்தும் வகையிலான சமூக ஒழுங்கமைப்பு மற்றும் அணிதிரட்டல்களுக்கெதிரான சட்டங்கள் போன்றவற்றினூடாக இவை செய்யப்படுதலாகாது. கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக்கல், மற்றும் ஏனைய குற்றவியல் நடவடிக்கைகளுக்குத் தீர்வுகாணும் சட்டச் சட்டகங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களை விகிதாசாரமற்ற, அநீதியான முறையில்  இலக்குவைப்பதற்குப் பதிலாக, ஒரே சீரான முறையில் அனைவருக்கும் பிரயோகிக்கப்படுதல் வேண்டும்.

இந்தச் சட்டவரைபை மறுசீரமைப்பதில் அல்லது அத்தோடு ஈடுபாடு வைத்துக்கொள்வதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. அதற்கு முற்றுமுழுதான எதிர்ப்பைத் தெரிவித்தல் வேண்டும். மேலதிக சட்டமொன்று அவசியப்படுமாயின், கூட்டம் கூடும் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் வகையிலமைந்த, “சுயவிருப்பு – அறிவிப்பு” கோட்பாட்டின்  அடிப்படையிலான  பதிவை வலியுறுத்தும் ஒரு “கூட்டம் கூடும் சுதந்திரம் சம்பந்தமான சட்டமாக” இருக்கவேண்டுமே தவிர, “அரச சார்பற்ற/ பிரஜைள்” குழுக்களை அரசாங்கத்துக்கு அடிபணியவைக்கும், மட்டுப்படுத்தும் சட்டமாக அமைதல் ஆகாது.

“Crippling civic organising, mobilising and resistance through Draft Amendment to the Act on NGOs” என்ற தலைப்பில் ருக்கி பெர்னாண்டோ எழுதி கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.

 


[i] மும்மொழிகளிலுமான வரைபுகள் செயற்பாட்டாளர்களால் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. https://drive.google.com/file/d/1HQJTYaXMBzrMFVkABruRnW53WdrwU8ES/view?usp=sharing(English), https://drive.google.com/file/d/1jlZw5mhi5hnHtDZfv-C6nGeeouU7834s/view (Sinhala) and https://drive.google.com/file/d/1ngRI7i-R-RlglZxsFlykZZRM09lGQp1r/view?usp=sharing (Tamil)

[ii] https://twitter.com/ManoGanesan/status/976728773386158080

[iii] 2017 ஜூலை முதலாம் திகதி அமைச்சர் மனோகணேசன் வெளியிட்ட அறிக்கை

[iv] ஏதாவது சங்கம், சபை, சமூகம், நிதியம், மன்றம், சம்மேளனம், இயக்கம், மையம், கூட்டமைப்புக் கம்பனி,  வரையறுக்கப்பட்ட உத்தரவாதக் கம்பனி, இலாப நோக்கற்ற செயற்பாடுகளுக்காக வெளிநாட்டு நிதியுதவி பெறும் தனியார் கம்பனிகள், ஏதாவது எழுத்துமூலச் சட்டத்தின் கீழ் அல்லது நாடாளுமன்ற  நிலையியற் கட்டளைகளின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட ஏதாவது அமைப்பு அல்லது வேறு எவராவது  நபர்களைக்கொண்ட அமைப்பு, அல்லது வெளிநாட்டில் பதிவுபெற்ற  அமைப்புகளின் கிளைகள் என்பவற்றை உள்ளடக்குவது.

[v] எடுத்துரைக்கப்பட்ட விதிவிலக்குகளின் உதாரணங்கள் மத வணக்கத்தலங்கள், வங்கிகள், பங்குச் சந்தையில் பங்கு விலைப்புள்ளி குறிக்கப்பட்ட கம்பனிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள், தொழிற் சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அத்தகைய ஏதாவது அமைப்புகள்

[vi] 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம்.

[vii] ‘சண்டே ஒப்ஸர்வர்’ இல் வெளியாகிய ‘Exchange control will become obsolete – Economist’ எனும் தலைப்பிலான  கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுநர் டப்.ஏ.விஜேவர்த்தனவின் கூற்று http://www.sundayobserver.lk/2017/12/03/exchange-control-will-become-obsolete-economist