பட மூலம், Reuters/Kacper Pempel, QUARTZ

2017 பிற்பகுதி முதல் @Groundviews இன் டுவிட்டர் கணக்கு ட்ரோல் செய்யப்படுகின்றது. வேறுவிதத்தில் சொல்வதானால் தொடர்ச்சியான முறையில் அதற்கு எதிராக கடுமையான நிந்தனை இடம்பெறுகின்றது. முற்றிலும் புதிய விதத்தில் இது இடம்பெறுகின்றது. இருந்தபோதிலும், இது எங்கள் ஆர்வத்தைத் தூண்டியது. 2006இல் ஆரம்பிக்கப்பட்ட தருணத்திலிருந்து கிரவுண்ட்விவ்ஸ் அதன் உள்ளடக்கங்களுக்காக அனைத்து விதமான வன்முறைகள் நிறைந்த, எதிர்மறையான பதில்களையும் சந்தித்துள்ளது. கடந்த பல வருடங்களாக இந்த பின்னூட்டங்கள் பல வகைப்பட்டனவாகக் காணப்பட்டுள்ளன. உடல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் வரை அனேகமான தருணங்களில் அதனை விட மோசமான எச்சரிக்கைகளாகவும் அவை காணப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் இடம்பெற்ற அதேவேளை, கொள்கை ரீதியிலான கருத்து வேறுபாடு மற்றும் சித்தாந்த ரீதியிலான மாற்றுக்கருத்துக்கள் போன்ற சிவில் ஈடுபாட்டைகொண்ட கருத்துக்களை வெளிப்படுத்த கிரவுண்விவ்ஸ் மேடையமைத்துக் கொடுக்கவும் தவறவில்லை.

கருத்துக்கள் மற்றும் உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்தி ஒரு வரையறையை பேணும் கொள்கையை இலங்கையில் முதன் முதலில் பின்பற்றுபவர்கள் என்ற அடிப்படையில் இணையத்தில் வரும் மிகமோசமான கருத்துக்களை நாங்கள் ஒருபோதும் வெளியிடுவதில்லை. ராஜபக்‌ஷாக்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் மோசமான நிந்தனைகளையும் நாங்கள் வெளியிடுவதில்லை. முன்னாள் ஜனாதிபதியும் அவரது சகோதரருமான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவும் பதவியில் இருந்தவேளையும் அதன் பின்னரும் அவர்களுக்கு எதிராக அவதூறுகளை நாங்கள் வெளியிட்டதில்லை. நாங்கள் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றோம். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தனி நபர்கள் மற்றும் அமைப்புகளின் சமூக ஊடக கணக்குகள் மூலம் கிரவுண்ட்விவ்ஸில் வெளியாகும் விடயங்கள் குறித்து குற்றம்சாட்டுதலும் பதிலளித்தலும் இடம்பெறுகின்றது. இவ்வாறான எதிர்மறையான எதிர்வினை தற்போது எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயமே. மேலும், நாங்கள் வெளியிடுகின்ற கருத்துக்களைப் பொறுத்து தெரிந்த நபர்களிடமிருந்தே அவை வெளியாகின்றன. தெரிந்தநபர்கள் என நாங்கள் தெரிவிப்பது நபர் ஒருவரின் உடல் அடையாளம் அல்லது கருத்து தெரிவிப்பவரின் புவியியல் இடம் என்பவற்றை  அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆனால், அவர்களின் டிஜிட்டல் அவதாரம் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் குறிப்பிட்ட கொள்கை, உலகப்பார்வை மற்றும் பக்கச்சார்பின்மைகளை பிரதிநிதித்துவம் செய்து நிற்கின்றது.

கிரவுண்ட்விவ்ஸின் ஆசிரியர்கள் இவ்வாறான எதிர்மறையான எதிர்வினையினை அவதானித்தவண்ணமிருப்பார்கள். ட்ரோல்கள் ஏன் இடம்பெறுகின்றன, அவர்களின் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்வதற்கு இது அவசியமாகும். முற்போக்கான உள்ளடக்க நிகழ்ச்சிநிரலை முன்வைக்க முயலும்போதும் ஜனநாயக மாற்றம் விமர்சனம் மற்றும் வாக்குவாதம் ஆகிய நோக்கங்களை தூண்டும் உள்ளடக்கங்களை உருவாக்கும்போதும் கடுமையான எதிர்வினைகள் எங்கிருந்து வரும், என்ன விவகாரம் தொடர்பில் அவை உருவாகும், என்ன தருணத்தில் அவை  வெளியாகும் என்பதை அறிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.

ட்ரோல் அரசியல்வாதியை உருவாக்குகின்றதா?

2017இன் இறுதிகாலாண்டு பகுதியில் கிரவுணட்விவ்ஸில் வெளியாகும் விடயங்கள் தொடர்பாக டுவிட்டரில் வெளியான எதிர்வினைகளில் பெரும்பாலானவை முன்னர் அறியாத அல்லது தொடர்புகொண்டிராத நபர்களிடமிருந்தே பதிவாகியிருந்தன. இது கிரவுண்ட்விவ்ஸின் ஸ்தாபக ஆசிரியர் சஞ்சன ஹத்தொட்டுவவின் ஆர்வத்தைத் தூண்டியது. நாடாளுமன்ற உறுப்பினரும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம் உள்ளவருமான முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்‌ஷவிற்கு சார்பாகவும் அவரை ஊக்குவிக்கும் வகையிலும் இவை அனைத்தும் காணப்பட்டவையே சஞ்சன ஹத்தொட்டுவ இது குறித்து ஆர்வத்தை வெளிப்படுத்தியதற்கான முக்கிய காரணமாகும்.

ஜனநாயகத் தேர்தல் நடைமுறைகளை பலவீனப்படுத்துவதற்கான ஆயுதமாக சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து கிரவுண்ட்விவ்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு தருணத்திலேயே இது தெரியவந்தது. சமீபத்தில் ‘தி எகனமிஸ்ட்’ தனது கட்டுரையொன்றில் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அமைப்புகள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து இவ்வாறு குறிப்பிட்டிருந்தது

2010 இல் எகிப்தின் தாஹிர் சதுக்கத்தில் எகிப்தின் எழுச்சிக்குக் காரணமாகயிருந்த “நாங்கள் அனைவரும் காலிட்சாயீட்” (“We are all Khaled Saeed”) என்ற முகப்புத்தகத்தின் நிர்வாகிகளில் ஒருவராகயிருந்தவர் தொழில்அதிபரும் ஹவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்விமானுமான வயில் கொனிம். அவர், “நாங்கள் ஜனநாயகத்தை கோரினோம். ஆனால், இன்று காடையர்களின் ஆட்சியை பெற்றுள்ளோம்” என குறிப்பிடுகின்றார். உலக தலைவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக ஊடகங்களில் போலி செய்தி பரவுவது மாறிவிட்டது என்கின்றார் பல ஜனாதிபதிகளுக்கும் பிரதமர்களுக்கும் ஆலோசகராக உள்ள ஜிம்மெசினா. அரசாங்கங்களுக்கு இதனை எவ்வாறு கையாள்வது எனத் தெரியவில்லை. அதனை கையாள்பவர்களுக்கு மாத்திரம் அது தெரிந்துள்ளது.

இது தற்போது உலகம் முழுவதும் நன்கு ஆராயப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது. ஆனால், இதனை எவ்வாறு கையாளலாம் என்பது குறித்து இன்னமும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இந்த விவகாரம் குழப்பமானது, அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள், ஏனைய சர்வதேச முகவர் அமைப்புகள் சிவில் சமூகம், சிலிக்கோன்வாலி நிறுவனங்கள் (Silicon Valley companies) மற்றும் தனிநபர்களை உள்ளடக்கிய கறுப்பு பொருளாதாரம் ஆகிய தரப்புகளுடன் தொடர்புபட்ட விடயமாக இது காணப்படுகின்றது. இவர்கள் தாங்கள் மாத்திரம் இணையத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பும் விடயத்தை, எதிர்க்கும் கருத்தை அல்லது நபரை, இழிவுபடுத்துவதற்கும் மறுப்பதற்கும் எவ்வளவு செலவு செய்வதற்கும் தயாராக உள்ளனர். கூகுளில் தேடினால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் வாக்காளர்களை இலக்குவைத்தும் அவர்களை கவர்வதற்கும் சமூக ஊடகங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. சமூக ஊடகங்கள் எவ்வாறு ஆயுதமாக்கப்படுகின்றன என்பது குறித்த தொழில்நுட்ப விபரங்கள் அவசியமில்லை. ஆனால், இலங்கை போன்ற உயர்கல்வியறிவு மட்டத்தை கொண்ட, ஆனால் மிகக்குறைந்தளவு ஊடக மற்றும் தகவல் அறிவை கொண்டுள்ள நாட்டில் ஊடகத்தில் ஊக்குவிக்கப்படும், பிரச்சாரம் செய்யப்படும், எதுவும் பரந்துபட்ட அளவில் நம்பப்படும், பகிரப்படும் நடைமுறைப்படுத்தப்படும் போக்கு காணப்படுகின்றது. நபர் ஒருவர் வாக்கை  செலுத்துவதை அடிப்படையாக வைத்து தேர்தல் மோசடிகளை அவதானிப்பது, தேர்தலின் போது வாக்களிப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது அதனை தடுக்கும் செயற்பாடுகள் மற்றும் முறையற்ற நடவடிக்கைகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து மாத்திரம் தேர்தல் முறைகேடுகளை பார்க்கப் பழக்கப்பட்டுள்ள பாரம்பரிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இது தனித்துவமான சவாலை அளித்துள்ளது. குறிப்பிட்ட கொள்கை, எண்ணம், நபர், கட்சி அல்லது செயற்பாட்டை ஊக்குவிக்கும் விதத்தில் சமூக ஊடகம் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ள ஆபத்து என்பது இலங்கை அரசாங்கம்  எதிர்பார்த்த ஒன்றல்ல. குறிப்பாக இது தேர்தல் ஆணையகம் அல்லது தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இதுநாள் வரையில் கற்பனை செய்த விடயமும் இல்லை. இதனை கண்காணிப்பதற்கும் இவற்றிற்குத் தீர்வை காண்பதற்கான அவற்றின் தொழில்நுட்ப திறன் குறித்து பேசவேவேண்டியதில்லை.

ஆனால், இவை அனைத்துடனும் கிரவுண்ட்விவ்ஸை இலக்குவைத்து தாக்கிவரும் டிவிட்டர் கணக்குகளை தொடர்புபடுத்துவது எப்படி? ஒன்லைனில் வெளிப்படையாகக் கிடைக்கின்ற சாதனங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட டுவிட்டர் கணக்குகள் குறித்து எவற்றை கண்டுபிடிக்கலாம் என்ற அடிப்படை ஆய்வினை மேற்கொண்டோம். ஹக்கிங் அல்லது டொக்சிங் முறைகளைப் பயன்படுத்தவில்லை. குறித்த ஒரு டுவிட்டர் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை பல வலைத்தளங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். நாங்கள் http://www.mytwitterbirthday.com என்ற தளத்தைப் பயன்படுத்தி பின்வரும் டுவிட்டர் கணக்குகள் குறித்து கவனத்தைச் செலுத்தினோம்.

அக்காலப்பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த ஏனைய டுவிட்டர் கணக்குகள் இப்போது செயற்பாட்டில் இல்லை அல்லது அழிக்கப்பட்டுள்ளன. http://www.tweetstats.com பயன்படுத்தி ஆரம்பத்திலிருந்து அவர்களின் செயற்பாடுகளை ஆராய்ந்தவேளை சில சுவாரஸ்யமான விடயங்கள் தெரியவந்தன.

அனைத்து டுவிட்டர் கணக்குகளும் 2015இன் இரண்டாவது காலாண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவை அந்த வருடத்தில் இயங்கிக்கொண்டிருந்தன. பின்னர் அவை 2016 முழுவதும் செயல் இழந்துள்ளன. 2017 நடுப்பகுதியில் மீண்டும் அவை செயற்படத்தொடங்கியுள்ளன. அதன் பின்னர் அவற்றை 2017ஆம் ஆண்டின் இறுதிவரை அவதானித்தோம், அவை அனைத்தும் பின்வரும் உள்ளடக்கங்களை வெளியிட்டுவருகின்றன.

  • பொதுவாக ராஜபக்‌ஷ குடும்பத்தின் மீதும் குறிப்பாக நாமல் ராஜபக்‌ஷ மீதும் ஊழல் வன்முறை மற்றும் மனித உரிமை குற்றச்சாட்டுகளை சுமத்தும் டுவிட்டர் கணக்குகளுக்கு எதிராக இவை கருத்துக்களைப் பதிவுசெய்கின்றன.
  • நாமல் ராஜபக்‌ஷ பதிவுசெய்த அல்லது பகிர்ந்துகொண்ட டுவிட்டர் செய்தி பலரை சென்றடைவதை உறுதிசெய்யும் விதத்தில் அவை செயற்படுகின்றன.

இது தற்செயலானது இல்லை. இதில் தந்திரோபாயமும் நோக்கமும் வெளிப்படுகின்றது. இது டிரோல் இராணுவம் (Troll Army) – குறிப்பிட்ட ஒரு குழுவினர் தனிநபர் ஒருவரை பிரபலப்படுத்துவதற்காக செயற்படுகின்றனர். நிகழ்வுகளின் கருத்துப்பாங்கு மற்றும்  விடயங்களை வடிவமைப்பதன் மூலம் இதனை செய்கின்றனர். ட்ரோல் படையினர் இரண்டு வழிகளில் பணியாற்றுகின்றனர். இரண்டு வழிகளும் இங்கு வெளிப்படையாகத் தெரிந்தன. முதலாவது, அது ஒடுக்கும் விதத்தில் பணியாற்றுகின்றது. மையவிவரணங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு மாறான விளக்கங்கள், ஆதாரங்கள் மற்றும் தகவல்களை பொதுவெளியில் முன்வைக்கும் உள்ளடக்கங்களுக்குப் பதில்களை தொடர்ச்சியாக அனுப்புவதன் மூலம் இதனை செய்கின்றனர்.

இரண்டாவது, ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வெளியிடுவதன் மூலம், மேற்கோள் காட்டுவதன் மூலம் அல்லது அதனை தெரிவிப்பதன் மூலம் அல்லது அதனை முக்கியப்படுத்தி காண்பிப்பதன் மூலம் அந்த உள்ளடக்கத்திற்கு பரந்துபட்டஅங்கீகாரம் உள்ளது என காண்பிப்பதன் மூலம் குறிப்பிட்ட கருத்தை, எண்ணத்தை அல்லது விவரணத்தை  ஊக்குவிக்க முயல்கின்றனர்.

குறிப்பிட்ட டுவிட்டர் கணக்குகள் தங்கள் சுயவிபர புகைப்படமாக (Profile Photo) பதிவுசெய்திருந்த புகைப்படங்களை அடிப்படையாக வைத்து மேற்கொண்ட சாதாரண விசாரணையின் மூலம் அவை போலியானவை என்பது தெரியவந்தது. தனிநபர் ஒருவர் தனது புகைப்படம் என பதிவு செய்திருப்பது உண்மையில் அவரது புகைப்படம்தான் எனப் பலர் கருதுகின்றனர். ஆனால், இது எப்போதும் உண்மையில்லை. டமஸ்கஸைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர் என தன்னை பற்றி தெரிவித்து புளொக்கில் தகவல்களை பதிவு செய்த சிரிய அமெரிக்க பெண் ஓரினச்சேர்க்கையாளரான அமினா அராவ் விவகாரம் இதற்கு சிறந்த உதாரணம்.

@dhinukas என்ற டுவிட்டர் முகவரியை எடுத்துக்கொள்ளுங்கள், டினுக் சில்வா பயன்படுத்தியுள்ள படம் http://www.chicfactorgazette.com என்ற 2013 இன் சந்தேகத்திற்கு இடமான இணையத்தளத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இணையத்தில் உள்ள உண்மையான மற்றும் போலியான படங்களைக் கண்டுபிடிக்கும் TinEye என்ற தேடுதல் பொறி கண்டுபிடித்தது. @NinaNajumudeen என்ற டுவிட்டர் முகவரி வஹாப் நஜ்முடீன் என்ற பெயரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதில் பதிவு செய்யப்பட்ட படம் 2008இல் எடுக்கப்பட்டு Flickr இல் பதிவான பாகிஸ்தானிய மொடல் ஒருவரின் படமாகும். @RamananKpradeep என்ற முகவரி மேம்போக்காக ராம் கே. பிரதீப் என்பவரின் பெயரில் பதிவாகியுள்ளது. அந்த டுவிட்டரிற்கு தமிழ் நடிகர் கமலஹாசனின் புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இறுதியாக எங்கள் கவனத்திற்கு வந்த டுவிட்டர் முகவரி @KandasamyMyu என்பதாகும். மயு கந்தசாமி என்ற பெயரில் அது பதிவாகியுள்ளது. ஆனால், அதில் பயன்படுத்தியுள்ள படம் பேஸ்புக்கில் இருந்து எடுக்கப்பட்டது. ஜெயக்குமாரன் மயுரேசன் என்பவர்  2010 இல் எடுத்த புகைப்படத்தை இலங்கையைச் சேர்ந்த அகில விஜயரட்ன Flickr இல் இருந்து எடுத்துள்ளார்.

சிரோன் பாஸ்கர் என்பவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ள @BaskarShiron என்பவரின் டுவிட்டர் படத்திற்கு Linkedin இல் உள்ள பாஸ்கரன் செல்வராஜா என்ற இந்தியரின் புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், அந்தப் புகைப்படம் இந்து செய்தித்தாளில் வெளியான கட்டுரையிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்திற்கும் இலங்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

போலியான பெயர்கள், போலியான புகைப்படங்கள், போலியான முகவரிகள்

இது தெளிவான ஒரு செயல்முறையை கொண்டிருந்தது. நாமல் ராஜபக்‌ஷவின் டுவிட்டரைப் பிரபலப்படுத்துவதில், மீள டுவிட் செய்வதில் ஈடுபட்டுள்ள டிரோல் படையணி போலியான புகைப்படங்களையே பயன்படுத்துகின்றது. மேலும், தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகத்தைச் சேர்ந்த பெயர்களில் தங்களைப் பதிவு செய்துகொள்கின்றது. ஆனால், அந்த பெயர்களும் போலியானவை.

அவர்கள் பின்தொடர்ந்த டுவிட்டர்கள், அவர்கள் அதனை வெளியிட்ட விதம், அவர்கள் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை மீண்டும் பதவுசெய்த விதம், டுவிட்டர்களைப் பதிவு செய்வதற்கு அவர்கள் பயன்படுத்திய சாதனங்கள் உட்பட அனைத்தும் இந்த நடவடிக்கைகளின் பின்னால் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளன.

நாமல் ராஜபக்‌ஷவின் 2015 முதல் 2017 வரையிலான தொடர்பாடல்களை முழுமையாக அணுகமுடியாமல் அவருக்கும் மேலே குறிப்பிடப்பட்ட டிரோல்களுக்கும் இடையிலான தொடர்புகளை முழுமையாக உறுதிசெய்ய முடியாது. தரவுகளை அடிப்படையாக கொண்ட ஆதாரங்களோ அல்லது தொழில்நுட்ப ஆதாரங்களோ இல்லாத பட்சத்தில் நாமல் ராஜபக்‌ஷ தனக்கும் இந்த டிரோல்களுக்கும் இடையில் தொடர்பில்லை எனத் தெரிவிக்க முனையலாம்.

நாமல் ராஜபக்‌ஷவின் பதில் கிடைத்தால் மாத்திரமே இந்தக் கட்டுரையை வெளியிடுவது பயனுள்ளதாக காணப்படும். எனினும், சமூக ஊடகங்களிலும் சமூக ஊடகங்கள் மீதும் இவ்வாறான தந்திரோபாய கருத்துருவாக்கங்களை மேற்கொள்வதில் காணப்பட்ட நுட்பங்கள் புதியவை, நாம் எதிர்பாராதவை என்பதால் நாம் இன்னமும் ஆழமாக ஆராய தீர்மானித்தோம். அவ்வேளையே விடயங்கள் இன்னமும் சுவாரஸ்யமானவையாக மாறத்தொடங்கின.

பொட்சை நம்பி பந்தயத்தில் இறங்குதல்: ஜனநாயகம் மற்றும் பொதுக்கருத்தாடலின் குரலிற்கான அச்சுறுத்தல்

பிலிப்பைன்ஸ் முதல் இந்தியா வரை அமெரிக்கா முதல் ரஷ்யா வரை ட்ரோல் படையணி ஸ்தாபிக்கப்பட்ட தணிக்கையின் ஒரு அம்சமாக மாறிவருகின்றது. சர்வாதிகார அரசியல் கலாச்சாரமாக மாறிவருகின்றது. ட்ரோல் படையணி என்பது அரசாங்கத்துடன் செயற்படும் தனிநபர்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. அவர்கள் நூற்றுக்கணக்கிலோ ஆயிரக்கணக்கிலோ காணப்படுகின்றனர். கற்பனையான பெயர் ஒன்றை பயன்படுத்தியோ அல்லது பெயரில்லாமலோ அவர்கள் தாக்குதலை மேற்கொள்கின்றனர். எதிரிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் விமர்சகர்களின் கருத்துக்களை சீர்குலைப்பதற்கு, குறைத்து சித்தரிப்பதற்கு முயல்கின்றனர். இதனுடன் தற்போது டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இயங்கும் தானியங்கி முகவர்களான ‘பொட்ஸ்’ (Bots) என அழைக்கப்படும் இணைந்துகொண்டுள்ளன. பொட்ஸ் என்பது ஆபத்தான அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பமில்லை[i]. ஆனால், உலகின் எந்த தொழில்நுட்பத்தையும் போல குறிப்பிட்ட ஒரு நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு அல்லது விசேடமாக வடிவமைக்கப்பட்ட பொட்ஸ்களினாலேயே ஆபத்து உருவாகுகின்றது. உதாரணம், தேர்தல்கள். மேற்குலகில் தேர்தல்கள் மீது பொட்கள் எப்படி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன​ என்பது குறித்த பல தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் காணப்படுகின்றன. செல்வாக்கின் அளவு குறித்தே விவாதங்கள் காணப்படுகின்றன, வாக்காளர்கள் மீது அவை ஏற்படுத்தும் நம்பமுடியாத தாக்கம் குறித்து விவாதங்கள் காணப்படவில்லை. உதாரணத்திற்கு,

செப்டம்பர் மூன்றாம் திகதி ஜேர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மேர்கலும் அவரது அரசியல் எதிராளியான மார்டின் சுல்ஸிம் தேர்தல் விவாதமொன்றில் ஈடுபட்டனர். அந்த விவாதம் மோதலை விட காதல் என வர்ணிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் மிகவும் சுவாரஸ்யமான முயற்சி இடம்பெற்றுக்கொண்டிருந்தது. #verräterduell என்ற ஹாஸ்டாக்கை பொதுமக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் அர்த்தம் “துரோகிகளின் பேராட்டம்” என்பதாகும். இது மேர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியும் சுல்ஸின் சமூக ஜனநாயக கட்சியும் நாட்டை ‘காட்டிக்கொடுத்துவிட்டன’ என தீவிர வலதுசாரி கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.

ஆனால், இந்தக் கடுமையான விமர்சனம் சீற்றமடைந்துள்ள வாக்காளர்களிடமிருந்து வெளியாகவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மாறாக இவை பொட்சின் செயற்பாடுகள் போல தென்படுகின்றன அல்லது போலி சமூக ஊடக முகவரிகளின் செயற்பாடாகயிருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இவர்கள் உண்மையில் வழிமுறையால் உந்தப்படுகின்றனர்.[ii]

இதனை மனதில் வைத்தும் https://www.exporttweet.com என்ற தளத்தைப் பயன்படுத்தியும் இதற்கான 69.99 டொலர்களை கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தியும் இந்தக் கட்டுரையை எழுதுபவர்கள் நாமல் ராஜபக்‌ஷவின் அனைத்து டுவிட்களையும் சென்றடைந்தார்கள், தரவிறக்கம் செய்தார்கள். 2013 ஏப்ரல் 16ஆம் திகதி நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் கணக்கை ஆரம்பித்த நாளிலிருந்து அவர் அனைத்து டுவிட்டர் செய்திகளும் பெறப்பட்டன. (அவற்றைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்). நாமல் ராஜபக்‌ஷவின் டுவிட்டர் செய்திகளை ஆய்வு செய்தவேளை அவரது டுவிட்டர் கணக்கு எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்ற சுவாரஸ்யமான தகவல்களும் கிடைத்தன.

இந்தக் கட்டுரையை வெளியிடும் தருணத்தில் நாமல்ராஜபக்‌ஷவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 224,000. இந்த ஆய்வு நடத்தப்பட்ட 2017 ஒக்டோபரின் பிற்பகுதியில் 199,600 பேர் அவரை பின் தொடர்ந்திருந்தனர்.

நாமல் ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட, டுவிட்டர் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட, உண்மையான டுவிட்டர் கணக்கிற்கும் (@RajapaksaNamal) போலியான கணக்குகள், டிரோல்களிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை கருத்தில் கொள்வது அவசியம். தனது டுவிட்டர் கணக்கு இல்லாத வேறு கணக்குகளில் காணப்படும் உள்ளடக்கம் மற்றும் அவற்றின் செயற்பாடு குறித்து நாமல் ராஜபக்‌ஷ தான் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவிக்கலாம். ஆனால், தனது சொந்த டுவிட்டர் கணக்கினை அடிப்படையாக வைத்து நடைபெறும் விடயங்கள் குறித்து தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என அவரால் நிராகரிக்க முடியாது. தனது கணக்கை அடிப்படையாகக் கொண்டு பின்தொடர்பவர்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறமுடியாது. டுவிட்டரைப் பயன்படுத்தும் எவராகயிருந்தாலும் சரி சமூக ஊடகங்கள் குறித்த அவரது திறமை எப்படியிருந்தாலும், அவர் புதியவர் பழையவராகயிருந்தாலும் நிச்சயமாக தன்னை தொடர்பவர்கள் குறித்து அறிந்துவைத்திருப்பார். மேலும், குறிப்பிட்ட தளமே அது  குறித்து அவருக்குத் தெரியப்படுத்தும். இதனை அறியாமல் டுவிட்டர் கணக்கொன்றை கையாள முடியாது. மேலும், பொதுவாழ்க்கையில் உள்ளவருக்கும், ஸ்தாபனத்திற்கும், குறிப்பாக அரசியல்கட்சிக்கும் தன்னைத் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே டுவிட்டரில் முக்கிய நடவடிக்கையாகக் காணப்படும்.

பல ஆய்வுகளின்போது இரண்டு வரைபடங்கள்  முக்கியமானவையாக காணப்பட்டன. ஒன்று நாமல் ராஜபக்‌ஷவைத் பின்தொடர்பவர்கள் டுவிட்டரில் இணைந்துகொண்ட வருடம் தொடர்பானது, இரண்டாவது அவரை பின்தொடர்பவர்களின் செயற்பாடுகள் தொடர்பானது.

2016 முதல் 2017 வரையான காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள ஆச்சரியப்படவைக்கும் பாரிய அதிகரிப்பினை கருத்தில்கொள்க. நாமல் ராஜபக்‌ஷ போன்ற பிரபலமான அரசியல்வாதியால் கூட இவ்வாறான அதிகரிப்பு சாத்தியமில்லை. மேலும் நாமல் ராஜபக்‌ஷவைப் பின்தொடர்பவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஒரு வருடகாலமாக தங்கள் டுவிட்டர் கணக்குகளை தீவிரமாகப் பயன்படுத்தவில்லை. இது இந்த டுவிட்டர் கணக்குகள் தேவையை அடிப்படையாக வைத்து இயக்கப்படுகின்றன என்பதை உணர்த்துகின்றது. நாமல் ராஜபக்‌ஷவைப் பின்தொடர்பவர்களை எத்தனை பேர் பின்தொடர்கின்றனர் என்பது கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விடயம். இந்த ஆய்வை மேற்கொண்டவேளை நாமல் ராஜபக்‌ஷவை 199,660 பேர் பின்தொடர்ந்தனர். ஆனால், இவர்களை சுமார் 500 பேர் மாத்திரமே பின்தொடர்கின்றனர். இதன் மூலம் அவர்களின் செயற்பாடு மந்தகதியில் உள்ளது தெளிவாகியுள்ளது. ஈர்ப்போ கவர்ச்சியோ அல்லது உண்மைதன்மையோ இல்லாமல் சமீபத்தில் உருவாக்கப்பட்டவைகளாக அல்லது இவை அனைத்தினதும் கலவையாகக் காணப்படுகின்றன.

டுவிட்டர் தளம் வெளியிடும் டொப்லைன் அறிக்கையை நம்புவதற்கு கிரவுண்ட்விவ்ஸ் விரும்பாததாலும் முரண்பாடுகள் மற்றும் முறைகளை ஆராய்வதற்கு நாமல் ராஜபக்‌ஷவின் ஆயிரக்கணக்கான டுவிட்டர் செய்திகள் கிடைத்துள்ளதாலும் நாங்கள் யுதன்ஜய விஜயரத்னவின் உதவியை நாட தீர்மானித்தோம். புள்ளிவிபரங்களை ஆய்வுசெய்வதில் அவரின் திறமை நன்கு அறியப்பட்ட விடயம், குறிப்பாக தேர்தல்களின்போது. தரவுகளை முழுமையாக ஆய்வு செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சஞ்சன முன்னர் பயன்படுத்தப்பட்ட அந்த இணையத்தளத்தைப் பயன்படுத்தி நவம்பர் 22, 2017 அன்று நாமல் ராஜபக்‌ஷவின் முழுமையான டுவிட்களை தரவிறக்கம் செய்தார். செலவு கடந்தமுறை போன்றே காணப்பட்டது. தனிப்பட்ட கிரெடிட் கார்ட்டிலிருந்து அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டது.

ஆய்விற்காக நாங்கள் 199.555 பயனாளர்களின் தரவுகளைப் பயன்படுத்தினோம், செப்டெம்பர் 2017 வரை நாமல் ராஜபக்‌ஷவைப் பின்தொடர்ந்த அனைவரையும் பயன்படுத்தினோம். குறிப்பிட்ட தரவுதொகுப்பின் ஊடாக நாமல் ராஜபக்‌ஷவை பின்தொடர்பவர்கள் ஒவ்வொருவரினதும் ID, URL, புரொபைல் படத்தின் URL, சுயவிபரம், இடங்கள் (Location), நேரம் (TimeZone), கணக்கு உருவாக்கப்பட்ட திகதி, கடைசி டுவீட் திகதி,கடைசி டுவீட்டின் உள்ளடக்கம் போன்றனவும் கிடைத்தன.

தரவின் எந்தப் பகுதி பயனுள்ளதாகக் காணப்படும் என்பதை இனம்காண்பதே முதல் நடவடிக்கையாக விளங்கியது. பயன்படுத்துபவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்துகொள்வதற்கான முயற்சி பலனளிக்கவில்லை. பயனாளர்களில் கால்வாசிக்கும் குறைவானவர்களே தங்கள் இடத்தை குறிப்பிட்டிருந்தனர். இடங்களைக் கண்டுபிடிப்பதற்காக நேரத்தைப் பயன்படுத்திய போதிலும் 56,327 பயனாளர்களின் இடங்களை மாத்திரமே அறிய முடிந்தது. தரவிரக்கம் செய்யப்பட்ட எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.

மேலும் குறிப்பிட்ட இடங்கள் நாடுகள் முதல் கிராமங்கள் வரையிலானவையாக காணப்பட்டன. இலங்கை பயனாளர்கள் ‘இலங்கை’ எனவும் குறிப்பிட்டுள்ளார்கள், ‘கொழும்பு’ எனவும் தெரிவித்துள்ளார்கள். உதாரணத்திற்கு, ‘தம்புத்தேகம ஸ்ரீலங்கா’, ‘கொழும்பு 2’, ‘எஸ்வத்த’ போன்ற பல வகைகளைப் பயன்படுத்தியிருந்தார்கள். இதன் காரணமாக எங்கள் கால எல்லைக்குள் துல்லியமாக ஒரு ஒருங்கிணைந்த இடத்தை அடையாளப்படுத்துவது கடினமானதாகக் காணப்பட்டது.

உதாரணத்திற்கு, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆகக்கூடிய அளவிற்குப் பயன்படுத்திய பயனாளர்கள் விபரம்

Sri Lanka 22415
Colombo 1993
(US / Canada) 1784
Sri Jayawardenepura 1336
Colombo 1090
Chennai 964
sri lanka 857
Colombo, Sri Lanka 762
New Delhi 689
srilanka 674
Srilanka 609
Maldives 441
Sri lanka 426
Kandy 422
Kandy 347
Doha, Qatar 230
India 222
Galle 203
London 197
Kurunegala 189

இது எதிர்பார்க்கப்பட்ட விடயம், இடங்களை எழுதுவதற்குப் பயன்படுத்தபட்ட மாற்றுவிதங்களும் எங்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தின. தங்கள் இடங்களை குறிப்பிட்டிருந்த பயனாளர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையின் ஏதோ ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை எங்களால் தெரிவிக்க முடியும். ஆனாலும் இது பலனளிக்கவில்லை. நான் ஒரு வரைபடத்தை உருவாக்கலாம், அது 11,000 பயனாளர்களை மாத்திரம் பிரதிநிதித்துவம் செய்யும். அவர்களை பிரதிநிதிகள் எனக் கருதமுடியாது. நாமல் ராஜபக்‌ஷவிற்கு ஆதரவு கிடைத்த நாடுகளின் பட்டியலை பார்ப்பது பயனுள்ளதாக காணப்படும். தெளிவாகப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ஆகவே, நாங்கள் மீண்டும் ஆரம்பத்திற்கே சென்று தரவுத்தொகுப்பில் உள்ள ஏனைய வகைகளை ஆராய்ந்தோம். இதன் போது சுவாராஸ்யமான வகைகள் கிடைத்தன.

Sports 370
Music 339
Hi 138
Entertainment 134
male 134
News 132
Male 110
Student 107
student 105
hi 104

இந்த ஒரு வார்த்தை பட்டியலே டுவிட்டர் கணக்கை வைத்திருப்பவரின் சுயவிபரங்களை முற்றிலுமாக உள்ளடக்கியுள்ளது. இது ஒரு பயனற்ற தேடுதல் நடவடிக்கையாகும். (மாணவர்கள் குறித்த இரு வகைகள் காணப்படுவதை கருத்தில் கொள்க) 370 வெவ்வேறான நபர்கள் ஒரே மாதிரியான சுயவிபரங்களை  கொண்டிருப்பது வழமைக்கு மாறான விடயமாகக் காணப்படுகின்றது .இது ஒரு சொல் விபரத்துடன் மாத்திரம் நின்றுவிடவில்லை. விளையாட்டு, இசை, செய்தி, பொழுதுபோக்கு, வாழ்க்கை முறை, தொழில்நுட்பம் போன்றவற்றுடன் ஆரம்பிக்கும் 10 சொல் சுயவிபரங்களும் உள்ளன.

ஒட்டுமொத்தமாக  1269 சுயவிபரங்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றை 6920 பேர் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டுள்ளனர். சில சுயவிபரக் குறிப்புகள்  இயல்பானவையாகக் காணப்பட்டாலும், சில சேர்க்கைகள் சாத்தியமற்றவையாகக் காணப்படுகின்றன. முற்றுப்புள்ளிகள் மற்றும் காற்புள்ளிகளின் சேர்க்கையே இதற்கான காரணமாக உள்ளது.

இது நாமல் ராஜபக்‌ஷவின் டுவிட்டரைப் பின்தொடர்பவர்களில் 3.5 வீதமானவர்கள் பொட்ஸ்களாகயிருக்கலாம் என்பதை புலப்படுத்தியுள்ளது. இது பின்தொடர்பவர்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டார்கள் என்பதற்கான கடினமான சான்று இல்லை. குறிப்பிட்ட அளவிலான எந்த டுவிட்டர் கணக்கும் போலியான முகவரிகளை கவர்வது வழமை. நாமல் ராஜபக்‌ஷ விவகாரத்தை பொறுத்தவரை அவரை பின்தொடரும் 200,000 பேரில் இது மிகவும் சிறிய எண்ணிக்கையாகும். மிகப்பெருமளவு பொட்ஸ்கள் இங்கு செயற்பட்டாலும் அவை கல்வியறிவற்ற பொட்ஸ்களாக உள்ளனர். அவர்களால் சீரான பொட்ஸ்களை உருவாக்க முடியவில்லை.

இதனை விட சுவாரஸ்யமானதாக காணப்பட்டது அவை உருவாக்கப்பட்ட திகதிகள்தான்.

அவரை பின்தொடரும் 199,555 பேரின் தரவுகளின் காட்சிப்படுத்தல் இதுவாகும். இதனை அவதானித்தால் 2017 இல் பெருமளவு டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை புலப்படும். மேலும், 2014 முதல் 2016 வரை பெருமளவு கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டதும் புலனாகும். இந்த வருடங்களில் தொடர்ச்சியான அளவில் டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டதை இது புலப்படுத்தும்.

படத்தைத் தெளிவாகப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

2009இல் 1,859 டுவிட்டர் கணக்குகள் பதிவாகின. 2010 இல்3434, 2011இல் 4862, 2012இல் 5913, 2013இல் 8532.

நாமல் ராஜபக்‌ஷ 2010இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார். ஆகவே, இந்தப் போக்கு அவர் பதவியில் தொடர்வதற்கும் தொடந்து வளர்ச்சி காண்பதற்கும் நன்கு உதவுகின்றது.

எனினும், 2014 இல் 38.857 கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன, 2015இல் இது 45,5214 ஆகக் காணப்பட்டது, 2016 இல் இதில் வீழ்ச்சி காணப்பட்டது 25,354, பின்னர் தீடீரென பாரிய வளர்ச்சி காணப்படுகின்றது. 2017இல் இந்த எண்ணிக்கை 65,042 ஆகக் காணப்பட்டது. இது நாமல் ராஜபக்‌ஷவின் நாடாளுமன்ற அதிகாரத்துடன் பொருந்தாத விடயம் என்பதால் வழமைக்கு மாறானதாகக் காணப்படுகின்றது. ஒன்று நாமல் ராஜபக்‌ஷ ஆயிரக்கணக்காணவர்களை டுவிட்டரை நோக்கி ஈர்க்கவேண்டும். இதற்காக டுவிட்டர் அவருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். அல்லது போலி டுவிட்டர் கணக்குகளை ஆரம்பிக்கும் ஒரு நடவடிக்கையால் அவர் ஏமாற்றப்பட்டிருக்கவேண்டும்.

ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக 2017இல் நாமல் ராஜபக்‌ஷ குறித்த செய்திகள் எப்போதெல்லாம் வெளியாகின என்ற பட்டியலை நாங்கள் தயாரித்தோம் (கூகிள் நியுஸ்) அந்த ஆவணத்தை இங்கே பார்க்கலாம். நாமல் ராஜபக்‌ஷவின் செய்தி தலைப்புச் செய்தியாக வெளியானதற்கும் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கும் இடையில் நிச்சயமாக தொடர்பிருக்கவில்லை. இதனை நாங்கள் மாதங்கள் அடிப்படையில் பிரித்தோம்.

2017/09 9881
2017/08 11427
2017/07 10273
2017/06 4947
2017/05 3228
2017/04 2071
2017/03 4610
2017/02 3379
2017/01 3703
2016/12 2477
2016/11 2683
2016/10 1246
2016/09 1043
2016/08 1367
2016/07 1236
2016/06 1317
2016/05 1753
2016/04 2030
2016/03 2586
2016/02 3619
2016/01 3997
2015/12 4165
2015/11 3673
2015/10 3597
2015/09 3591
2015/08 3921
2015/07 3737
2015/06 3315
2015/05 3153
2015/04 2918
2015/03 3624
2015/02 3742
2015/01 6088
2014/12 4525
2014/11 4741
2014/10 4947
2014/09 4162
2014/08 3292
2014/07 3138
2014/06 3309
2014/05 2871
2014/04 2703
2014/03 2083
2014/02 2010
2014/01 1076

2015 இரண்டாம் மாதத்திற்கு பின்னர் ஆதரவாளர்களை உருவாக்கும் விதம் நாங்கள் ஊகிக்கக் கூடிய விதத்தில் காணப்பட்டது. அவர்கள் அனைவரும் 3,500இற்குள் காணப்பட்டனர். மாதமொன்றிற்கு  3,619 பின்தொடர்பவர்கள் உருவாக்கப்பட்டனர். இது 2016 இரண்டாம் மாதம் வரை தொடர்ந்தது. பின்னர் வீழ்ச்சி காணப்பட்டது. ஏழு மாதங்கள் வரை 2000இற்குள்ளேயே காணப்பட்டன. ஆனால், அதன் பின்னர் அதிகரிக்கத் தொடங்கியது. 2017 ஏழாம் மாதம் முதல் பாரிய அதிகரிப்பு காணப்பட்டது. எண்ணிக்கைகள் மூன்று மடங்கால் அதிகரித்தன.

நாட்களை அடிப்படையாக வைத்து நாங்கள் ஆராய்ந்தால் அந்தச் செயன்முறை மேலும் இலகுவில் விளங்கிக்கொள்ள கூடியதாகக் காணப்படுகின்றது. 2017 ஒன்பதாம் மாதத்திலிருந்து பெறப்பட்ட புள்ளிவிபரங்கள் இவை

09/01/2017 274
09/02/2017 192
09/03/2017 256
09/04/2017 264
09/05/2017 240
09/06/2017 251
09/07/2017 257
09/08/2017 220
09/09/2017 298
09/10/2017 273
09/11/2017 376
09/12/2017 338
09/13/2017 293
09/14/2017 386
09/15/2017 395
09/16/2017 424
09/17/2017 395
09/18/2017 353
09/19/2017 287
09/20/2017 311
09/21/2017 404
09/22/2017 380
09/23/2017 242
09/24/2017 295
09/25/2017 282
09/26/2017 456
09/27/2017 436
09/28/2017 408
09/29/2017 447
09/30/2017 448

ஜனவரி 2016

01/01/2016 149
01/02/2016 175
01/03/2016 150
01/04/2016 150
01/05/2016 122
01/06/2016 143
01/07/2016 133
01/08/2016 134
01/09/2016 123
01/10/2016 126
01/11/2016 144
01/12/2016 133
01/13/2016 113
01/14/2016 142
01/15/2016 111
01/16/2016 125
01/17/2016 119
01/18/2016 91
01/19/2016 100
01/20/2016 119
01/21/2016 147
01/22/2016 118
01/23/2016 156
01/24/2016 122
01/25/2016 119
01/26/2016 143
01/27/2016 128
01/28/2016 134
01/29/2016 103
01/30/2016 114
01/31/2016 111

ஜனவரி 2015

07/01/2015 118
07/02/2015 142
07/03/2015 143
07/04/2015 169
07/05/2015 149
07/06/2015 128
07/07/2015 151
07/08/2015 116
07/09/2015 134
07/10/2015 138
07/11/2015 134
07/12/2015 115
07/13/2015 159
07/14/2015 114
07/15/2015 119
07/16/2015 144
07/17/2015 90
07/18/2015 120
07/19/2015 99
07/20/2015 108
07/21/2015 97
07/22/2015 121
07/23/2015 91
07/24/2015 117
07/25/2015 94
07/26/2015 113
07/27/2015 99
07/28/2015 110
07/29/2015 94
07/30/2015 110
07/31/2015 101

இங்கு காணப்படும் தொடர்ச்சி சிறப்பானது. இந்த மாதங்கள் தொடர்பின்றி மேலோட்டமாக எடுக்கப்பட்டவைகள். ஒவ்வொன்றும் நாளாந்தம் உருவாக்கப்பட்ட பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையைக் காண்பிக்கின்றன. இந்த எண்ணிக்கைகள் மாதாந்த சராசரியிலிருந்து விலகிச்செல்வதில்லை.மேலும், நாமல் ராஜபக்‌ஷவைச் சுற்றி நடைபெறும் செய்த, நிகழ்வுகளுடன் தொடர்புபட்டவையும் இல்லை (பொதுநிகழ்வுகளில் கலந்துகொள்ளுதல், சர்ச்சைகள்).

ஆகவே, இவர்கள் நாமல் ராஜபக்‌ஷவை பின்தொடர்பவர்கள் இல்லை என்றபோதிலும், உண்மையான கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் சில முடிவுகளுக்கு வரமுடியும்

  • நாமல் ராஜபக்‌ஷவின் டுவிட்டர் கணக்கை யாராவது சுட்டிக்காட்டி ஒவ்வொரு மாதமும் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இவ்வளவாக இருக்கவேண்டும் என உத்தரவிட்டிருக்கலாம். அந்த இலக்கை அடைவதற்காக மாதத்திற்கு ஒருமுறை அந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளதா என்பதை சோதனையிடலாம் .
  • அல்லது அவர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக அல்லது எதிராக பணியாற்றுகின்றார். போலியான பின்தொடர்பவர்களை அனுப்புகின்றனர். ஆனால், இதனைத் தொடர்வதும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பை காண்பிப்பதும் சாத்தியமற்றது. மேலும், ஒரு வருட காலத்திற்கு மேல் அவர்களது சந்தேகத்திற்கு இடமான செயற்பாடுகளை நாமல் ராஜபக்‌ஷ கணக்கிலெடுக்காமல் இருந்திருக்க மாட்டார் எனவும் கருதமுடியாது.
  • நாமல் ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் மிகவும் நெருங்கிய ஒருங்கிணைப்பைக் கொண்டவர்கள். ஒரு ஒதுக்கீடு முறையில் அவர்கள் டுவிட்டரில் பதிவு செய்கின்றனர். இது 1 வீத இணைய ஊடுருவலை கொண்ட நாட்டில் மாத்திரம் சாத்தியமாகும்.

எனினும் இந்தத் தரவுகள் நாமல் ராஜபக்‌ஷ நாளாந்தம் பெருமளவிற்கு எதிர்வுகூறக்கூடிய எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களை நாளாந்தம் டுவிட்டரை நோக்கி ஈர்க்கின்றார் என்பதை காண்பித்துள்ளன. இதனை ஒரு பொதுசேவை என கருதலாம்.

ஜனநாயகம்,தேர்தல் நடைமுறைகள். பொதுமக்களின் சொல்லாடல் ஆகியவற்றின் மீதான தாக்கங்கள்

நகைச்சுவைகள், வேடிக்கைகளை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு சிந்தித்தால், அரசியலைப் பொறுத்தவரை இது மிகவும் புதிய விடயமாக உள்ளது. ஆய்வாளர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானவையாகவும் தேர்தல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாகவும் இது காணப்படுகின்றது. இந்த ஒரு டுவிட்டர் கணக்கை அடிப்படையாக வைத்தே நாங்கள் இந்த முடிவிற்கு வரலாம். இன்னமும் பல காணப்படலாம்.

டுவிட்டரைப் பொறுத்தவரை பொட்ஸ்கள் பொதுவாக பிரச்சினையாகவுள்ளது. Mashable உள்ள கட்டுரை இவ்வாறு தெரிவிக்கின்றது.

டுவிட்டர் பொட்ஸ்கள் என்பது, சமூக உள்ளடக்கங்களை உருவாக்கும் தன்னாட்சி திட்டங்கள் அல்லது அமைப்புகள் எனக் கருதலாம். சில உள்ளடக்கங்கள், விளையாட்டுச் செய்திகள் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தாதவை. சில வேண்டுமென்றே தீங்கிழைப்பவையாகவும் மக்களை பிளவுபடுத்துபவையாகவும் காணப்படுகின்றன. 2016 தேர்தலில் அடிப்படைவாத வலதுசாரி கருத்துக்களைப் பரப்பிய 1,600 பொட்ஸ்கள் இனம்காணப்பட்டன என அண்மையில் Bloomberg இல் வெளியான செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொட்ஸ்களின் தாக்கம் வலுவானது, அதன் எண்ணிக்கையே அதன் வலுவான தன்மைக்குக் காரணமாக உள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் தென் கலிபோர்னியா இந்தியானா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், டுவிட்டரைப் பயன்படுத்துபவர்களில்   9 முதல் 15 வீதமானவர்கள்  பொட்ஸ்கள் என தெரிவித்துள்ளனர். உலக அளவில் 328 மில்லியன் பேர் டுவிட்டரை பயன்படுத்துகின்றனர். ஆகவே, மிகக் குறைந்த மதிப்பீடுகளை மேற்கொண்டாலும் 30 மில்லியன் பொட்ஸ்கள் உள்ளன.

ரஷ்யாவினால் பொட்ஸ்கள் உருவாக்குதல், பிழையான தகவல்களை பரப்புதல் மற்றும் அரச தலையீடுகள் அமெரிக்க தேர்தலில் எவ்வாறு மோசமான தாக்கத்தை செலுத்தின என்பதை 2017 செப்டம்பரில் டுவிட்டரே நிறுவனமே தெரிவித்திருந்தது. டுவிட்டர் நிறுவனம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.

உலக நாடுகளில் நடைபெறும் தேர்தல்களின் முக்கிய தருணங்களின்போது தேர்தல் ஆணையகங்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணுங்கள் ,மேலும் தொடர்ச்சியாக எங்கள் பாதுகாப்பை பலப்படுத்துங்கள். நாங்கள் இதனை தொடர்ந்து செய்வோம்.

இலங்கையின் டுவிட்டர் பொட்களை கவர்ந்திழுக்கும் முக்கிய காந்தமாக நாமல் ராஜபக்‌ஷ விளங்குவதற்கு இது காரணமாக இருக்கலாம். ஆனால், தரவுகளை -ஆய்வுகளை அடிப்படையாக வைத்து நோக்கும்போது இதற்கான சாத்தியம் இல்லை போல தோன்றுகின்றது. அது டுவிட்டர் கணக்கின் உரிமையாளர் நாமல் ராஜபக்‌ஷ தன்னைப் பின்தொடர்பவர்களை கவர்ந்திழுப்பதற்காக திட்டமிட்ட மூலோபாய ரீதியில் முயற்சிகளை மேற்கொள்வதை வெளிப்படுத்துகின்றது. இலங்கையின் வளமிக்க, மாறுபட்ட மற்றும் விரைவாக வளர்கின்ற, டுவிட்டரிற்கு அப்பால் பேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்றவற்றை மாத்திரமல்லாமல், வட்ஸ்அப், வைபர் போன்றவற்றையும் பயன்படுத்துகின்ற சமூக ஊடக சூழலில் இது மாத்திரமே ஒரு உதாரணமாகயிருக்காது. 2015 பொதுத்தேர்தலின் போது இரு எழுத்தாளர்களும் தனித்தனியாக #genelecsl என்ற ஹாஸ்டாக்கினை ஆராய்ந்ததுடன் பிழையான தகவல்கள், வதந்திகள், அரைகுறையான உண்மைகள், பிரிவினை பிரச்சாரங்கள் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கான ஆயுதமாக சமூக ஊடக கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றது என்ற முடிவிற்கு வந்தனர் (இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் 2015-சமூக ஊடகங்களால் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது – நாலக குணவர்த்தன​). அன்று ஆய்வாளர்கள் அவதானித்த வாக்காளர்களைப் பாதிக்கும் தேர்தல் முடிவுகளை உருவாக்கும் தந்திரோபாயங்கள் இன்று மூன்று வருடத்தின் பின்னர் பரந்துபட்டதாக இயல்பானதாக மாறியுள்ளது.

@RajapaksaNamal என்ற டுவிட்டர் முகவரி பயன்படுத்தப்பட்டுள்ள அல்லது துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள விதமே சமூக ஊடக ஆராய்ச்சியில் சுவாரஸ்யமான விடயமாகக் காணப்படுகின்றது. அனைத்து அரசியல்வாதிகளும் தேர்தல் வெற்றிக்காக புதிய சமூக ஊடக தந்திரோபாயங்களில் ஆர்வம் கொண்டுள்ளதை இது புலப்படுத்துகின்றது. மனித டிரோல்கள் மற்றும் தன்னியக்க பொட்ஸ்களைப் பயன்படுத்தி அவர்கள் இந்த முயற்சிகளை மேற்கொள்கின்றனர். வெறுமனே ராஜபக்‌ஷாக்கள் மாத்திரம் இந்த முயற்சியில் ஈடுபடவில்லை. அவர்களின் நோக்கம் தெளிவானது, வாக்காளர்களின் அபிப்பிராயங்கள் மற்றும் பொதுமக்களின் சொல்லாடல்களில் தாக்கம் செலுத்துவதே அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. இந்த டுவிட்டர் கணக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகின்றது என்பதை இதன் காரணமாகவே கட்டியம் கூறுவதாகக் காணப்படுகின்றது. எமது நாட்டின் தேர்தல் கட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் சொல்லாடல்களில் இதுவரை காணப்படாத விடயமாக இது காணப்படுகின்றது. ஈர்க்கக்கூடிய புதிய மற்றும் இளம் சமூக ஊடக ஆர்வலர்களான வாக்காளர்களை இலக்குவைத்தே இந்த ஊடக தந்திரோபாயம் முன்னெடுக்கப்படுகின்றது. பெப்ரவரி 2018 இல் முதற்தடவையாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 900,000 எனத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. 2010 ஜனாதிபதித் தேர்தல் முதல் இந்த வருட உள்ளூராட்சித் தேர்தல் வரை வாக்களித்த வாக்காளர்களில் 15 வீதமானவர்கள் 18 முதல் 34 வயதிற்கு உட்பட்டவர்கள். இந்த மக்கள் தொகை எப்படி அரசியல் கருத்தை உருவாக்குகின்றது, பகிர்ந்துகொள்கின்றது, எண்ணங்கள் மற்றும் ஆளுமைகளில் சகாக்கள் மற்றும் ஆய்வாளர்களின் நம்பிக்கையைப் பெறமுயல்கின்றது, அரசியல்வாதிகள் உட்பட என்பது சமூக ஊடக ஆர்வம் குறைந்த மக்கள் தொகையை விட அடிப்படையில் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. இதனை ஆயிரமாயிரம் வருட வீக்கம் என நீங்கள் குறிப்பிடலாம். இதன் காரணமாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவர்வதற்காக புதிய தந்திரோபாயத்தைப் பின்பற்றிவேண்டிய நிலை காணப்படுகின்றது. நாமல் ராஜபக்‌ஷவின் டுவிட்டர் கணக்கும் அவரது சமூக ஊடக தந்திரோபாயமும் இந்த விடயத்தில் அனைவரையும் விட முன்னணியில் உள்ளது.

இறுதியாக இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது போல தேர்தல் நடைமுறைகளை அடிப்படையாக வைத்து சமூக ஊடகங்களை ஆயுதமயப்படுத்தியுள்ளதால் உருவாகியுள்ள ஆபத்தினை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் அரசாங்கமோ அல்லது சிவில் சமூகமோ இல்லை. அவர்களிடம் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த ஆலோசனையில்லை. சிவில் சமூகத்தை பொறுத்தவரை புதிய, முடிவுகளை தீர்மானிக்கும் தொழில்நுட்பங்களையும் அவை தவறான வழியில் பயன்படுத்தப்படுவதையும் எதிர்கொள்வதற்கு அவசியமான நிதியில்லை.

உண்மைகள் குறித்தும் பிழையான அபிப்பிராயத்தை உருவாக்குவதே பொட்ஸ்கள் மூலம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். முக்கிய விடயங்களை பலவீனப்படுத்துவதற்கும் எதிராளிகளை பலவீனப்படுத்துவதற்கும், பிளவுபடுத்தும் உள்ளடக்க பிரச்சாரத்தை உருவாக்கவும் பொட்ஸ்கள் பயன்படுகின்றன. மேலும், பொட்ஸ்கள் மனிதர்களுடன் (Trolls) இணைந்து இணையத்தில், எதிர்க்கட்சியின் ஆயுதமற்ற ஆதரவாளர்கள் மீது காடையர் கும்பல் மேற்கொள்ளும் தாக்குதல் போன்ற தாக்குதலை மேற்கொள்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அரசியல் ரீதியில் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டோரை வன்முறையை பயன்படுத்தி ஒடுக்க முயல்வதாகும்.

பொட்ஸ்கள் காரணமாக அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்கொண்ட  பிரச்சினையை தற்போது டுவிட்டர் ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளது.

தேர்தலின் போது ரஷ்யாவுடன் தொடர்புடைய பொட்ஸ்கள் அதிகளவு செயற்பட்டன என நிறுவனம் தெரிவித்தது. தேர்தல் வேளையில் ஒரு குறிப்பிட்ட காலத்தை அடிப்படையாக வைத்து ஆய்வினை மேற்கொண்டவேளை 36,000 பொட்ஸ்கள் டுவீட்களை அனுப்புகின்றன என முன்னர் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை குறைவானது என அது தற்போது தெரிவிக்கின்றது. டுவிட்டர் மேலதிகமாக 15,000 பொட்ஸ்களைக் கண்டுபிடித்தது. இதன் காரணமாக பொட்ஸ்களின் எண்ணிக்கை 50,258 ஆக அதிகரித்துக் காணப்படுகின்றது. இது மிகவும் அதிகமான எண்ணிக்கை. இந்த டுவிட்டர் கணக்குகளை வைத்திருப்பவர்களுடன் தொடர்புகொண்டிருக்கக் கூடியவர்களை டுவிட்டர் தனது அறிவிப்பில் இணைக்கவில்லை. இந்த எண்ணிக்கை 677,775 விட அதிகமாகயிருக்கலாம்.

இது புரோகிராமர் கோடர் அல்லது கீக்குடன் தொடர்புபட்ட விடயமல்ல. சமூக ஊடகங்கள் தற்போது ஆயுதமயக்கப்பட்டுள்ள விதம் காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்படலாம். அனைத்து மக்களுடனும் தொடர்புபட்ட விடயம் இது. தொடர்புபட்டவர்கள, தொடர்புபடாதவர்கள், முதல்தரம் வாக்களிப்பவர்கள், பழைய வாக்காளர்கள் என அனைவருடனும் தொடர்பட்ட விடயம் இது. உலகின் எந்த நாட்டினதும் தேர்தல் முறையுடன் தொடர்புடைய விடயம் இது. 2017இல் வயர் சஞ்சிகை இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.

இந்த பொட் நடவடிக்கை தேர்தல் குறித்த உங்கள் அபிப்பிராயத்தை மாற்றலாம். இதுவே முக்கியமான விடயம். இது பிரச்சர யுத்தம்.

குறிப்பிட்ட கட்டுரை மேலும் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பொட்ஸ் ஆராய்ச்சியாளர் பிலிப் ஹவார்ட், பொட்ஸ்களை யார் உருவாக்குகின்றார்கள் என்பதைக் கண்டறிவதற்கு வழியில்லை எனத் தெரிவிக்கின்றார். பொட்ஸ்களின் முக்கியமான விடயமே அதுதான். நடவடிக்கைகக்குப் பொறுப்பாக உள்ளவர் செய்தியை பரந்துபட்ட அளவில் கொண்டுசெல்வதற்கு விரும்புகின்றார். ஆனால், அந்தச் செய்தி எங்கிருந்து வருகின்றது, யார் அதன் பின்னணியில் உள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. அரசியல் செயற்பாட்டுக்குழுக்களே சில பொட்ஸ்களின் பின்னணியில் உள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. அவர்கள் தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளரின் சார்பில் பணத்தை செலவிடுகின்றார் என ஹவார்ட் தெரிவிக்கின்றார். டுவிட்டரைப் பயன்படுத்தும் சாதாரண பயனாளரும் இந்த பொட்ஸ்களை உருவாக்கலாம். இதுவே விசேடமான தன்மை எனவும் அவர் குறிப்பிடுகின்றார். உள்ளடக்க மற்றும் விளம்பர கடைகள் நீண்டகாலமாக பொட்ஸ்களைப் பயன்படுத்தியுள்ளன. அவற்றை வாங்கிப் பயன்படுத்த விரும்புபவர்களிடம் பெரும் பணத்தை வாங்கிக்கொண்டு விற்பதற்குத் தயாரான பல வியாபாரிகள் உள்ளனர் எனவும் ஹவார்ட் குறிப்பிடுகின்றார். சமஸ்டி தேர்தல் ஆணையகமோ அல்லது வேறு எந்த முகவர் அமைப்போ பொட்ஸ்களிற்கான விதிமுறைகளை இதுவரையில் உருவாக்காததால் இது சட்டபூர்வமானதாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

அமெரிக்கத் தேர்தல் ஆணையம் டுவிட்டர் பொட்ஸ்களின் நவீனத்துவத்தையும், அவற்றால் உருவாக்கப்பட்ட மிகப்பெருமளவு உள்ளடக்கங்களையும், அவற்றினால் தேர்தலில் ஏற்பட்ட தாக்கத்தையும் எதிர்கொள்ள தயாராகயிருக்கவில்லை. பொட்ஸ்களின் துணையுடனான நாமல் ராஜபக்‌ஷவின் டுவிட்டர் கணக்கின் வளர்ச்சி 2017 – 2018 தேர்தலிலும் அதன் பின்னரும் தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதற்கு டுவிட்டர் கணக்கு எவ்வாறு பயன்படும் என்பதனை தெளிவுபடுத்தி நிற்கின்றது. 2014ஆம் ஆண்டளவில் விமல் வீரவன்ச போன்ற அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை சமூக ஊடகங்களில் செயற்கை முறையில் அதிகரித்ததையும் காண முடிந்தது.

அக்காலப்பகுதியில் அரசியல் எதிராளிகளின் சமூக ஊடகங்களை பின்தள்ளுவதற்காக இதனை செய்திருக்கலாம். ஆனால், தற்போது சமூக ஊடகங்களை பின்தொடர்பவர்களை (பொட்ஸ்- ட்ரோல்ஸ்) அதிருப்தியை முறியடிக்கவும், கருத்துருவாக்கங்களை மேற்கொள்வதற்கும், பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும், பிழையான தகவல்களை பரப்புவதற்கும், விமர்சிக்கும் குரல்களை பலவீனப்படுத்துவதற்கும், மோதுவதற்கும், எதிரொலியாக விளங்குவதற்கும், சமூக ஊடக கருத்தாடல்களில் தாக்கம் செலுத்துவதற்கும் மூலோபாய ரீதியில் பயன்படுத்தலாம்.

இவை அனைத்தும் எவ்வாறான விதத்தில் பரிணமிக்கும் என்பதற்கான அறிகுறிகளை நாங்கள் ஏற்கனவே பார்த்திருக்கின்றோம். பொதுவான சொல்லாடல் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த நாமல் ராஜபக்‌ஷவின் அணுகுமுறை கடந்த காலத்தில் ராஜபக்‌ஷ குடும்பத்தின் அணுகுமுறையை ஒத்ததாகக் காணப்படுகின்றது. சரிவராத போது அழித்துவிட்டு எதுவும் நடைபெறாதது போன்று செயற்பட்டுக் கொண்டிருப்பது அவர்களின் அணுகுமுறையாகும். பெண்ணொருவர் தொடர்பான டுவீட் ஒன்று குறித்து கிரவுண்ட்விவ்ஸ் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அந்த டுவீட்டை அழித்தது இந்த அணுகுமுறைக்கான சமீபத்தைய உதாரணமாகும்.

இந்த அணுகுமுறை மற்றும் நடத்தை நாமல் ராஜபக்‌ஷவின் மனோநிலையின் தெளிவான அறிகுறிகளாகும். நாமல் ராஜபக்‌ஷவைப் பின்தொடரும் 224,000 (கட்டுரையை எமுதும்போது) பேரையும் தேர்தல் காலத்தில் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் அறிய முடிகின்றது.

எச்சரிக்கை எதனையும் விடுக்காமல் இலங்கை புதிய இணைய அரசியல் மாற்றத்திற்குள் காலடி எடுத்துவைத்துள்ளது. இந்த புதிய மாற்றத்தைத் தணிக்கை, தங்களிற்குச் சாதகமாகப் பயன்படுத்துதல் மற்றும் வழமையான கண்காணிப்பு மற்றும் ஆய்வு எல்லைக்கு வெளியே கட்டுப்படுத்தும் சக்திகள் கட்டுப்படுத்தப்போகின்றன. தேர்தல் பிரச்சாரங்களிற்கு சமூக ஊடகங்களை வெளிப்படையாகவும் பொறுப்புக்கூறும் விதத்திலும் பயன்படுத்துவது குறித்த வலிமையான கலந்துரையாடல்கள் அவசியம் என 2017ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தேர்தல் ஆணையகம் அதன் உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இந்த விடயத்தை புரிந்துகொண்டுள்ளனரா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் இதனைப் புரிந்துகொள்ளாவிட்டால் நவீன இணைய பிரச்சாரத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வை, கல்வியறிவை (இளம்) வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்த முடியாமல் போய்விடும். மேலும், இது இலங்கையின் தேர்தல் முறையை ஒரு சிலர் தங்கள் குறுகிய, பாரபட்சமான  நலன்களிற்காகப் பயன்படுத்தும் ஆபத்தும் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் உருவாக்கலாம். இறுதியாக இது நாமல் ராஜபக்‌ஷவை பற்றியதோ அல்லது சமூக ஊடகங்கள் பற்றியதோ இல்லை. இது எங்கள் ஜனநாயகத்தின் ஆரோக்கியமான தன்மை மற்றும் எங்கள் தேர்தல் முறையின் நேர்மை தொடர்பானது. அவற்றைப் பாதுகாப்பதற்காகவும் பலப்படுத்துவதற்காகவும் கொள்கை வகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள், பிரஜைகளுடன் சேர்ந்து நாங்கள் பாடுபடவேண்டும். உள்ளடக்கம் ஆபத்தற்றதாகவும் நம்பகத்தன்மை மிக்கதாகவும் காணப்படுகின்ற இந்த வழிமுறைகள் எங்கள் ஜனநாயக ஆற்றலை பணயக்கைதியாக்கலாம். நாங்கள் உணராமலே இது இடம்பெறலாம்.

###

[i] Today’s bots can help us order food, shop for clothes, save money and find restaurants. For example, Digit helps you manage your money by showing your bank balance, upcoming bills and helping you save money through text messages. The Hi Poncho chatbot available in Facebook Messenger tells you the weather around you. Via What is a bot? Here’s everything you need to knowhttps://www.cnet.com/how-to/what-is-a-bot/, published on CNET.

[ii] Social media ‘bots’ tried to influence the U.S. election. Germany may be nexthttp://www.sciencemag.org/news/2017/09/social-media-bots-tried-influence-us-election-germany-may-be-next

###

போலி டுவிட்டர் கணக்குகளிடமிருந்து வெளியாகியுள்ள ஆரம்பகட்ட பதில்கள் நாங்கள் அவர்கள் குறித்து இந்த கட்டுரையில் சுட்டிக்காட்டிய விடயம் சரியானது என்பதை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. இங்கே கீழே குறிப்பிடப்பட்டுள்ள டுவிட்டில் பெரிதாக்கிப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.


சஞ்சன ஹத்தொட்டுவ, யுதன்ஜய விஜயரத்ன

Namal Rajapaksa, bots and trolls: New contours of digital propaganda and online discourse in Sri Lanka என்ற தலைப்பில் கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.