பட மூலம், Exaniner

யாழ். மண்ணில் பெண்ணாக பிறந்ததால் ஆண் இன்றி பெண் இல்லை என்ற மூடநம்பிக்கையில் வாழ்ந்தேன். ஆணின் துனையின்றி என்னால் வாழ முடியாது என்பது எனது ஆழ் மனப் பயமாக இருந்தது. என் அப்பா, என் கணவன், என் மகன் என்னை பார்ப்பார்கள் என்பது எனது கற்பனையாக இருந்ததால் நான் யார் என்று தெரியாது வாழ்ந்தேன். தெரிந்துகொள்ளவும் முற்படவில்லை. ஏனெனில், அவர்களைப் பின் தொடர்வதை எனது கடமையாக உணர்ந்தேன். பெண் என்பவள் ஒரு ஆணை திருப்திபடுத்த பிறந்தவள் என்று நம்பியதால் ஆணின் அடிமையாக நான் என்னைப் பார்த்தேன்.

மருத்துவ பட்டம் பெற ரஷ்யா சென்று பெண்களின் சுதந்திரதத்தைப் பார்த்த போதும் நான் என்னை இயலாதவள் என்ற சிறைக்குள் அடைத்து வைத்தேன். டாக்டர் பட்டம் பெற்றாலும் கணவனுக்கு தொண்டு செய்தல் எனது ஆயுள் கடமை என்பது எனது  புராணமாக இருந்தது. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் திருமண பந்தத்தில் இணைந்தேன்.

திருமணம் என்ற கனவு சிதைந்தாலும் கணவன் கண் கண்ட தெய்வம் என்பது என் நம்பிக்கை. திருமணம் என்ற ஆயிரம் காலத்து பயிரை பராமரிப்பதற்காக அவரது துன்புறுத்தல்களை ஏற்றுக்கொண்டேன். ஒரு டாக்டராக இருந்தபோதும் என் கணவர் சொல்லை மந்திரமாக மதித்து அவர் சொற்படி வாழ்ந்தேன். நான் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழந்து ஒரு ஜடப் பொருளாக மாறினேன். அவர் சொல்வதற்கெல்லாம் ஆமா போட்டு பேச்சற்றவளாக மாறினேன்.

கனடா நாட்டிலே குடும்ப வன்முறை ஒரு குற்ற செயல். எனது கணவன் தண்டனைக்குரிய குற்றம் செய்கிறார் என்பதை நான் ஏற்க மறுத்தேன். கணவனுக்கு மனைவியை தண்டிக்க உரிமை உண்டு என்பது எனது கருத்து. ஒவ்வொரு தடவையும் என் கணவர் வன்முறை செய்யும்போதும் நான்தான் பிழை என குற்ற உணர்வுடன் இருந்தேன். ஆண் பிழை விடமாட்டான், ஏனென்றால் ஆவதும் பெண்ணால் மனிதன் அழிவதும் பெண்ணால் என்பது என் வைராக்கியம். ஆகவே, எனது கணவன் மீது பிழை இல்லை என்றே நான் வாதாடினேன்.

திடீரென்று ஒரு நாள் வயிற்றில் உதை, மூன்று நாட்கள்  வயிற்று நோ. அன்று கூட நான் என்னை மறந்து என் கருவில் உருவாகாத என் குழந்தை கஷ்டப்படக்கூடாது என்று நான் என் கணவர் பிழை என்பதை ஒத்துக்கொண்டேன். கணவரைப் பிரிவது பிழை என்ற என் கலாச்சார சமய நம்பிக்கையை நானும் பின்பற்றினேன். கனடா நாட்டு சட்டம் என் கணவரை தண்டித்தது. ஆனால், குற்றவாளியாக என்னைக் கருதினேன். கணவன் மனைவி இடையான பிரச்சினை இரசியமாக பேணப்பட்டு அவர் கையால் மரணத்தை தழுவுவது ஒரு சிறப்பான காரியம் என நான் கருதினேன். ஆனால் அவரை பிரிய பெண்கள் பாதுகாப்புக்கான அந்நாட்டு சட்டம் காரணமாக இருந்தது.

விவாகரத்து என்பது மிகவும் வேதனை தரும் விடயம். கனவுகள் அழிந்துவிட்டன என்று கூறும் பத்திரம். திருமணத்தன்று யாவரும் கூடி எதிர்பார்ப்போடும் நம்பிக்கையுடனும் புதுவாழ்வு ஆரம்பமாகும். ஆனால், விவாகரத்து அன்று வாழாவெட்டி என்ற பட்டத்துடன் புறக்கணிக்கபட்ட தனி வாழ்வு ஆரம்பமாகும். சமுதாயம் குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பித்தது. நீ ஒழுங்காக சமைக்கவில்லை, நீ அனுசரித்து போயிருந்தால் அவன் ஒழுங்காக இருந்திருப்பான் என்ற ஆயிரம் விமர்சனங்கள். விசேட நாட்களுக்குரிய வரவேற்பு மறுக்கப்பட்டன. உறவுகள் உறவு கொள்ள மறுத்தனர். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவளாக விவாகரத்து பெற்ற நான் இருந்தேன்.

திருமணம் முடித்த காரணத்தால் கற்பை இழந்த எனது தாம்பத்திய வாழ்வை பற்றி அறிய முற்பட்டோர் பலர். திருமண பந்தத்தில் இருந்தவள் ஆணுறவு இன்றி வாழமுடியாது என சவால் விட்டோர் சிலர். எதிர்காலம் உனக்கு இல்லை என சபதம் இட்டோர் சிலர். பாவப்பட்ட ஜென்மமாக சித்தரித்தோர் பலர். என் தந்தை தனக்கு மகள் இல்லை என்று உறவை அறுத்தார். எப்போ உறவுகள் என்னை மறுத்தார்களோ அன்று நான் வாழவேண்டும் என்ற ஆசையுடன் புதுப் பிறவி எடுத்தேன்.

விவாகரத்து பெற்றவள் என்ற தாழ்வு மனப்பான்மை என்னைக் கொலை செய்தது. தனிமை என்னை வதைத்தது. மறு திருமணம் முடிப்பதற்காக இன்ரனெட் ஊடாக டேடிங் பண்ணினேன். ஆண்கள் கண்களில் பல தடவை பாலியல் இயந்திரமாக பார்க்கப்பட்டேன். ஆண்களை தோல்வியுடன் சந்தித்தேன். கடந்த காலத்தை மறக்க பார் சென்றேன். ஆனால், பாரில் என் வேதனையை விட்டு வர முடியவில்லை.

ஒரு புறம் ஏமாற்றமடைந்த திருமண வாழ்க்கை குறித்த விரக்தி, மறுபுறம் தனிமையின் வேதனை, இன்னொரு புறம் எதிர்காலத்தை குறித்த பயம், மறுபுறம் சமுதாய குற்றச்சாட்டுகள், எனது குற்ற உணர்வு, சமுதாயத்தை சந்திக்க தயக்கம், கேலிப் பேச்சுக்களால் அவமானம். இவை யாவற்றையும் எதிர்கொள்வது குடும்ப வன்முறையிலும் கொடுமையாக இருந்தது.

சமுதாயம் விவாகரத்து பெற்ற பெண்ணை ஒரு ஆணுடன் பார்க்கும்போது நடத்தை கெட்டவளாகப் பார்த்தது. தனியாக வாழ முயற்சித்தவுடன் பலர் அடக்கி ஆள முற்பட்டனர். பெண் என்பவள் ஒரு உடமை. ஆகவே, அதைப் பேணி பாதுகாக்கணும் என்ற நோக்கத்துடன் உரிமை கொண்டாட முற்பட்டனர். பெண்ணாக சுதந்திர வாழ்வை வாழ்வது சவாலாக இருந்தது.

தாயாகி சமுதாயத்தை எதிர்கொள்ள முடிவு செய்தேன். ஒரு குழந்தைக்குத் தாயாவதன் மூலம் சமுதாய அங்கீகாரம் பெற முற்பட்டேன். குழந்தைக்குத் தாயாகும் போராட்டத்தில் வெற்றி பெற்ற செய்தி காதில் கேட்க முதல் நான் மீண்டும் தோல்வியடைந்துவிட்டேன். மீண்டும் வெட்கம். பயம், அவமானம், என்னைக் கொலை செய்தன. சமுதாய ஒதுக்கு முறைக்கு பயந்து ஓடினேன்.

விவாகரத்து பெற்ற பெண்கள் குழுவில் இணைந்தேன். தேடிக் கண்டுபிடித்தனர் புது நண்பர்கள். ஏற்றுகொண்டனர். என் குறைகளுக்குப் பதிலாக நிறைகளை கண்டு மகிழ்ந்தனர். குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டிய என்னை இராணி போல் பராமரித்தனர். ஆலோசனை மூலமும் தியானம் மூலமும் கடந்த காலத்துடன் சமாதானம் பண்ணினேன். என்னை நான் காதலிக்க ஆரம்பித்தேன். எனது உயிர் நண்பியாக நான் மாறினேன். இன்று நான் மீண்டும் சொந்தக் காலில்.

நான் எனது சொந்த அனுபவங்களை பகிருவதால் எனக்குள் மாற்றத்தையும் மற்றவர்களுக்கு நம்பிக்கையும் அளிக்கிறேன். எனது எழுத்து வடிவிலான உருவாக்கங்கள் புதுமையை உருவாக்குகிறது. தினமும் என் வாழ்க்கைப் பயணத்தை உருவாக்குதிலும் அதனைத் திட்டமிடுவதிலும் கவனம் செலுத்துகிறேன். இன்று என் சிந்னைகளிலும் நம்பிக்கைகளிலும் மாற்றம் ஏற்பட்ட காரணத்தால் விவாகரத்து சாதாரண விடயமாகிவிட்டது. அது குறித்த வெட்கமோ கவலையோ இல்லை. இன்று என் விவாகரத்து ஒரு வரலாறு. அந்த வரலாற்றை பெருமையுடன் சொந்தம் கொண்டாடடுகிறேன்.

எமது சமுதாயத்தில் குடும்பம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. பெண்ணுக்கு அவளது மரியாதை மனைவியாகும் போதும், தாய் ஆகும் போதும் கிடைக்கிறது. தனி பெண்ணாக அந்த மரியாதையை சம்பாதித்தது எனக்கு பெரும் பாக்கியம். நான் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது நான் முக்கியமாவேன், நான் என்னை ஒதுக்கினால் நான் ஒதுக்கப்பட்டு விடுவேன், எனது வாழ்வை நிர்ணயிப்பவள் நான் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஒரு பெண் முழுமையாக தன்னை ஏற்றுகொண்டு சுயமாக வாழும்போது அவள் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வாள் என்பதற்கு நான் ஒரு முன் உதாரணம்.

சிறகுகள் ஒடிக்கப்பட்டு வாழ்ந்த நான் இன்று ஒரு சுதந்திர பறவை. நாம் யாவரும் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் வாழ முடியும் என்பது எனது நம்பிக்கை. சரித்திரம் படைப்போம். பெண்ணாக துணிந்து நிற்போம். சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஊட்டுவோம்.

டாக்டர் மௌரீன் எர்னஸ்ட்

நன்றி: @Bakamoonolk