பட மூலம், கட்டுரையாளர்

டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இன்று முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்களும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களுடைய உரிமையை வலியுறுத்தி போராடிவருகிறார்கள். பல வருடங்களாக இவர்கள் போராடிவருகின்ற போதிலும் அவர்களுக்குத் தீர்வு கிடைத்தபாடில்லை. பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இஸ்லாம் மதத்தில் ஆண்கள் தங்கள் மனைவியை விவாகரத்துச் செய்ய மூன்று முறை ‘தலாக்’ என்று கூறும் நடைமுறையை அரசியலமைப்பிற்கு விரோதமானது என கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பிபிசி செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆனால், இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதற்காக கடந்த அரசாங்கங்களினால் 1956, 1984, 1990 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை.

குறிப்பாக இந்தச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பெருமளவில் முன்வைக்கப்படுகிறது. இச்சட்டத்தில் காணப்படும் பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கான வயதெல்லை, பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படாமை, திருமணத்தின்போது பெண்களின் விருப்பம் கருத்திற் கொள்ளப்படாமை மற்றும் பலதார மணம் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போன்ற பால்நிலை சமத்துவமற்ற, குறைபாடுகளைக் கொண்ட சட்டம் திருத்தப்படவேண்டும் என்பதில் முஸ்லிம் பெண்களே முன்னின்று செயற்பட்டுவருகிறார்கள்.

இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்களும் சட்டத்திருத்த விடயத்தில் தீவிரமாக செயற்பட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில், அவர்களை இழிவுபடுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் சிலர் பொதுவெளியிலும், மறைமுகமாகவும் செயற்பட்டு வருகிறார்கள். இதனால், தாங்கள் உறவினர்களால் கூட ஓரங்கட்டப்படுவதாகவும் வழமைபோன்று தாங்கள் வாழும் பிரதேசங்களில் நடமாடக்கூட முடியாத நிலையை எதிர்கொள்வதாகவும் கூறுகிறார்கள்.

முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியிருக்கும் பெண்களை ஏற்கனவே ‘மாற்றம்’ நேர்க்காணல் கண்டிருந்தது. “நீதியைத் தேடும் பெண்கள்” என்ற தலைப்பில் வெளியான 7 நேர்க்காணல்களின் தொடர்ச்சியாக மீண்டும் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை ‘மாற்றம்’ பதிவுசெய்துள்ளது. அவர்களில் எவருமே பேசுவதற்குப் பின்நிற்கவில்லை. அனைவரும் சட்டம் திருத்தப்பட வேண்டும், எதிர்காலத்தில் தங்களைப் போன்று வேறு எந்தப் பெண்ணும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

தன்னுடைய விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துவைத்ததால் எதிர்நோக்கிய, எதிர்நோக்கிவரும் இன்னல்கள் குறித்து இந்தப் பெண் பேசுகிறார்.

ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரை, “நீதியைத் தேடும் பெண்கள்” நேர்க்காணல்கள் 1234567