பட மூலம், UNAIDS

பிரதம நீதியரசர் பிரியந்த டெப் தலைமையிலான உயர் நீதிமன்றத்தில் அமைதியான புரட்சியொன்று இடம்பெறுவதை அதனை உன்னிப்பாக அவதானித்த சிலர் மாத்திரம் அவதானித்திருக்கக்கூடும். இலங்கையின் பழைய நீதித்துறை பாரம்பரியத்தில் காணப்பட்ட அச்சமனோபாவம் மற்றும் கடந்த இரு தசாப்த காலத்தில் நீதித்துறை செயற்பட்ட விதம் ஆகிய சூழமைவுகளில் வைத்து நோக்கும்போது 2017ஆம் ஆண்டு பல தீர்ப்புகள் அற்புதமானவையாக உள்ளன.

ஒரு வழக்கில், சமஸ்டிக்கு ஆதரவளிப்பது பிரிவினைக்கு ஆதரவளிப்பதாக கருதமுடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயாட்சிக்கான உரிமையுள்ளது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் இலங்கையின் மிகவும் ஆபத்தான ஆறாவது திருத்தச்சட்டத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்களை உயர் நீதிமன்றம் குறைத்துள்ளது. 1983 இனக்கலவரத்தின் போது நடைமுறைக்கு வந்த ஆறாவது திருத்தச்சட்டம் பிரிவினைக்காக அமைதியான வழியில் ஆதரவு தெரிவிப்பதை கூட குற்றச்செயலாக்கியுள்ளது. அரசமைப்பின் ஆறாவது திருத்தம் கருத்துச் சுதந்திரத்தின் மீது கடும் தாக்கத்தைச் செலுத்தியதுடன் இந்த நாட்டின் பிரஜைகளான தமிழர்களை நேர்மையற்ற விதத்தில் தனிமைப்படுத்தியது.

இன்னொரு தீர்ப்பில், உயர் நீதிமன்றம் ஒருபால் தண்டனையை தற்போதைய சட்டத்தின் கீழ் மாற்று வழிகள் இல்லாததால் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதன் சுயவிருப்பத்துடனான மற்றும் தனிப்பட்ட தன்மையை கருத்தில் கொண்டு சிறைத்தண்டனையை அது வழங்கவில்லை.

இன்னொரு வழக்கில், மிகமோசமான கொள்கைப்பிடிப்பற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டதை செல்லுபடியற்றதாக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருந்தது. குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தனது இரட்டை பிரஜாவுரிமை காரணமாக தான் நாடாளுமன்றத்தின் உறுப்புரிமையை பெறுவதற்கு தகுதியற்றவர் என்பது குறித்து தொடர்ச்சியாக பொய்யான தகவல்களை வழங்கியிருந்தார். பொதுவாழ்க்கையில் நேர்மை என்ற விடயத்தில் ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவு இதுவாகும்.

மிகச்சமீபத்தைய வழக்கொன்றில், தனது கையில் புத்தரின் சின்னத்தை பச்சை குத்தியிருந்தமைக்காக தனது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட வெளிநாட்டு பெண்மணிக்கு நஷ்ட ஈட்டினை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இலங்கையின் அரசமைப்பின் கீழ் வெளிநாட்டவருக்கு உள்ள உரிமையை அங்கீகரிக்கும் விடயத்திற்காகவும், ஆசியாவில் தீவிரவாததன்மை கொண்ட பௌத்த அரசியலின் யுகம் காணப்படும் நிலையில் தேசியவாத அரசியலிற்கு எதிராக சட்டத்தின் ஆட்சியை உயர்த்திப் பிடித்ததனாலும் இந்தத் தீர்ப்பு முக்கியமானதாக விளங்குகின்றது.

இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளும்போது மேற்குறிப்பிட்ட மூன்று தீர்ப்புகள் நீதிமன்றத்தின் துணிச்சல் மிக்க நடவடிக்கைகளாக தோன்றப்போவதில்லை. சிலர் இதனை ஆழமான கருத்தியலின் வெளிப்படையான காட்சி என ஏற்றுக்கொள்ள மறுக்கலாம், நீதித்துறையின் ஆழ்ந்த அறிவை இது வெளிப்படுத்துகின்றது – வெளிப்பாட்டின் நேர்த்தி தன்மை காணப்படுகின்றது போன்றவற்றையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். அவர்களின் கருத்தும் சரியானதே. ஆனால், இலங்கையின் உயர் நீதிமன்றத்திடமிருந்து கடந்த காலங்களில் இவ்வாறான தீர்ப்புகளை எதிர்பார்த்திருக்க முடியாது  என்பதே அப்பட்டமான உண்மையாகும்.

பொதுநலவாயத்தின் தலைசிறந்த நீதிமன்றங்களில் ஒன்றாக விளங்கிய, ஆனால், கடந்த இரு தசாப்தகாலத்தில் சகித்துக்கொள்ள முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ள நீதிமன்றின் நியாயபூர்வதன்மை, கௌரவம், பெருமை என்பவற்றை மீள ஏற்படுத்துவதற்காக அமைதியான, ஆனால் உறுதியான, ஆழமான ஆனால் தீவிரதன்மை கொண்ட நடவடிக்கைகளில் பிரதம நீதியரசர் டெப்பும் ஏனைய நீதிபதிகளும் ஈடுபட்டுள்ளனர்.

முதலில் வந்தவர் ஆதிக்க மனோபாவமும் யதார்த்தபூர்வமற்றவருமான சரத் என் சில்வா, அவர் பெரிய அரசியல்வாதிகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கையாண்ட விதத்திலேயே நீதிமன்றத்தைக் கையாண்டிருந்தார்.அதன் பின்னர் ராஜபக்‌ஷாக்களால் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக  கொண்டுவரப்பட்ட எதிர்பாராத பயங்கரமான குற்றவியல் பிரேரணை இடம்பெற்றது. மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் – தராதரங்களை அடிப்படையாக வைத்து நோக்கினால் கூட இது அருவருப்புமிக்க நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறையாகும். இந்த நடவடிக்கைக்கு ஒத்ததாக மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக நியமிக்கும் அரசமைப்பிற்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கை இடம்பெற்றது. அவர் பின்னர் அதேமாதிரியான சர்ச்சைக்குரிய நடைமுறை மூலம் பதவியிலிருந்து பதவியிலிருந்து விலக்கப்பட்டார். நல்லாட்சி என்பது வாக்குறுதியளிக்கப்பட்ட விதத்தில் அமைந்திருக்கப்போவதில்லை என்பதற்கான ஆரம்ப அறிகுறியாக இது காணப்பட்டது.

நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்புகளின் முக்கியத்துவம் என்பது நீதிமன்றத்தின் கடந்த காலங்கள், அதன் முடிவுகள் ,சில தார்மீக துணிச்சல், உறுதிப்பாடு, அரசமைப்பு ஜனநாயகத்தில் நீதித்துறையின் பங்கு குறித்த தெளிவான புரிந்துணர்வு மற்றும் நீதித்துறையின் அலுவலகம் குறித்த பெருமிதம் ஆகிய சூழமைவுகளின் அடிப்படையில் பார்ப்பதிலேயே அடங்கியுள்ளது. இக்காலப்பகுதியில் இவை அனைத்தும் அற்ற நிலையே காணப்பட்டது.

மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்படுவதை தடுக்கும் இறுதி பாதுகாவலர்கள் நீதித்துறையினர் என்பதை நான் தீவிரமாக ஆதரிப்பவன் இல்லை. நல்லாட்சியின் பலர் தீவிர விருப்பம் கொண்டுள்ள தென்னாசிய வகையை தீவிரமாக ஆதரிப்பவனும் இல்லை. ஆனால், எங்களின் மிகப்பழமையான ஸ்தாபனங்களில் ஒன்று மிகவும் புத்திசாலித்தனமாகவும் அமைதியாகவும் தன்னை கடந்த காலங்களில் இருந்து மீட்டெடுக்கும் விதம் என்னை கவர்ந்துள்ளது. இதனை செய்வதன் மூலம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதில் உயர் நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை அது மீட்கத் தொடங்கியுள்ளது. உண்மையான தேசப்பற்று இதனை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றது.

‘கிரவுண்விவ்ஸ்’ தளத்தில் கலாநிதி அசங்க வெலிகல எழுதி வெளியான கட்டுரையின் தமிழாக்கம்