பட மூலம், @uthayashalin (22ஆவது வருட நிறைவையொட்டி கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து பாடசாலையில் நடத்தப்பட்ட நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படம்)

மதியம் 12.00 மணியிருக்கும். பாலர் வகுப்பு முடிந்து பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்கள். அவர்களை மேல் வகுப்பு மாணவர்கள் வரிசைப்படுத்தி வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு போக பெற்றோர்கள் சிலரும் வந்திருந்தார்கள். அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலுக்குச் சென்று வந்தவர்களும் வழமைக்கு மாறாக அந்தப் பகுதியில் திரண்டு கதைத்துக் கொண்டிருந்தார்கள். வார சந்தை வேறு.

உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த திலிபனை நினைவுகூர்ந்து பாடசாலைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பந்தலிலும் சனம் கூட்டம்​.

எங்கோ தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்த குண்டுவீச்சு விமானத்தின் சத்தம் இப்போது அருகில் கேட்பது போன்ற உணர்வு எல்லோருக்கும். பரபரப்பு, பதற்றம் தொற்றிக்கொண்டது. ஒவ்வொருவரும் ஒளிந்துகொள்ள இடம்தேடத் தொடங்கினர். பாடசாலை மாணவர்கள் அனைவரையும் மரத்தின் கீழ் கூடுமாறு எங்கிருந்தோ ஒரு குரல் ஒலித்தது. மாணவர்கள் அனைவரும் மரத்தடியில் அடைக்கலமானார்கள், விமானம் தங்களைக் கடந்துச் செல்லும்வரை. பழக்கப்பட்ட மெளனம். பல மெளனங்களை குண்டுகள் களைத்து சிதைத்துள்ள போதிலும் இம்முறை அது போன்று நடக்காது என்ற அசட்டு நம்பிக்கை அனைவர் மனதிலும். “ஸ்கூலுக்கு அடிப்பானா…?” என்ற வார்த்தையினூடாக பயத்தைப் போக்கிக் கொள்ள முயன்று கொண்டிருந்தார்கள்.

குண்டுவீச்சு விமானம் மிக அருகில் வந்துவிட்டது. பிற்பகல் 12.45 மணியிருக்கும். அடைக்கலம் அடைந்திருந்த மரத்தின் மீது குண்டை வீசிவிட்டு பறந்தது புக்காரா. அந்த இடத்திலேயே 24 மாணவர்களும் 15 பொதுமக்களும் உடல்சிதறிப் பலியானார்கள். பலியான மாணவர்களின் உடமைகளை வைத்தே அடையாளம் காணுமளவுக்கு அவர்களுடைய உடல்கள் சிதறிப்போயிருந்தன. பலத்த காயமடைந்தவர்கள் தொடர்ந்துவந்த தினங்களில் உயிரிழக்க மொத்தமாக 50இற்கு மேலானவர்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். 150இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். கொல்லப்பட்ட மாணவர்களுள் 6 அல்லது 7 வயதுக்கு உட்பட்ட 12 பேர் உள்ளடங்கியிருந்தார்கள்.

“புக்காரா வார சத்தம் கேட்டு நானும் பெரியப்பாட மகளும் ஒரு மரத்துக்குக் கீழ மறைஞ்சிருந்தம். குண்டு விழுந்த சத்தம் ஓஞ்ச பிறகு ஒன்டையுமே பார்க்க முடியல… ஒரே புகையா கிடந்தது. “விஜி எழும்பு ஓடுவோம்… விஜி எழும்பு…” என்டு எழும்பத்தான் எனக்கு கால் இல்லையென்டு தெரியும். என்னால நிற்க முடியல்ல… அப்படியே அவட மேல்ல விழுந்திட்டன். அவ எழும்பவே இல்ல… குப்புறக் கிடந்தாள். திருப்பிப் பார்த்தப்ப வயித்தில பீஸ் இறங்கிட்டு, பெரிய காயம். அந்த இடத்திலேயே அவா செத்திட்டா.”

22 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், நாகர்கோவில் பாடசாலையில் 8ஆவது தரத்தில் படித்துக்கொண்டிருந்த சரஸ்வதி தனது ஒரு காலை இழக்கக் காரணமாக இருந்த விமானக் குண்டுவீச்சுச் சம்பவத்தை இவ்வாறு நினைவுபடுத்துகிறார்.

“அந்த நேரம் நிறைய சனம் இடம்பெயர்ந்து இங்க குடியிருந்தவங்க. கிட்டத்தட்ட ஆயிரம் பிள்ளைகள் கிட்ட ஸ்கூல்ல படிச்சவங்க. வெளியாக்களும் நிறைய பேர் செத்தவ. புக்காரா அடிச்சன்று வெள்ளிக்கிழம. கோயிலுக்கு போனவ, சந்தைக்கு போனவ… அவங்களும் செத்தவங்க” என்கிறார் சரஸ்வதி.

யாழ்ப்பாணம், நாகர்கோவில் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி

ஒரு காலை இழந்து மகளுடன் வாழ்ந்துவரும் சரஸ்வதியின் வாழ்க்கை துயரம் மிகுந்தது.

மன்னாரில் இருந்தபோது 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி வேலைக்குச் சென்ற (30 வயது) கணவர் வீடு திரும்பவில்லை. அவர்களோடு சென்றவர்கள், இராணுவத்தினர்தான் கணவரைக் கைது செய்தனர் என்று சரஸ்வதியிடம் தெரிவித்திருக்கிறார்கள். அவரைத் தேடியழைந்த சரஸ்வதி போர் உக்கிரம் பெற இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து வட்டுவாகல் வழியாக முகாமுக்கு வந்தடைந்திருக்கிறார்.

கணவரை இழந்தவர் இடம்பெயரும் போது இடைவழியில் 6 வயதான மகனையும் இழந்திருக்கிருக்கிறார்.

“முள்ளிவாய்கால்ல ஷெல் அடிகளுக்குப் பயந்து பங்கருக்குள் இருந்தம். பங்கருக்குள்ளேயே ஷெல் வந்து விழுந்தது. என்ட கண் முன்தான் மகன்ட உயிர் பிரிந்தது. இப்போ மகளும் அம்மாவும் மட்டும்தான் இருக்கினம். அம்மாவின்ட உடம்பெல்லாம் பீஸ் இருக்கு. என்ட உடம்பிலயும் பீஸ்.” – கண்ணீரை வரவிடாமல் தன் உணர்வுகளை சரஸ்வதி கட்டுப்படுத்துகிறார். ஆனாலும் முடியவில்லை.”

வெளிநாட்டில் இருக்கும் அண்ணனே தனக்கு உதவிவருகிறார் என்றும், அந்த குண்டுவெடிப்பு நிகழாமல் இருந்திருந்தால் யாரிடமும் கையேந்தவேண்டிய நிலைமை தனக்கு ஏற்பட்டிருக்காது என்றும் சரஸ்வதி கூறுகிறார்.

“வெள்ள உடுப்போடு இருக்கிற எங்களுக்கு அடிப்பாங்கனு எதிர்பார்க்கவே இல்ல. அப்படி எதிர்பார்த்திருந்தா வேறு எங்கயாவது போய் ஒளிஞ்சிருந்திருப்பம். புக்காரா சத்தம் கேட்டு நாங்க ஓடி ஒளிஞ்ச போதும் வெள்ள உடுப்பு உடுத்தியிருந்த எங்களுக்கு, ஸ்கூலுக்கு அடிக்க மாட்டாங்க என்டு நினைச்சிருந்தனாங்கள். வெள்ள உடுப்போடு இவ்வளவு பிள்ளைகள் வெளியில திரியும் போது ஓரளவு அவங்களுக்குத் தெரியும்தானே. எதையுமே பார்க்காம அடிச்சவங்க.”

“அதிபர் ஆறு மாசமா மனநில பாதிக்கப்பட்டு இருந்தார். பிள்ளைகளுக்கு இப்படி நடந்திட்டென்று. என்ன ஹொஸ்பிட்டலுக்கு பார்க்க வந்த நேரமெல்லாம் சுயநினைவே இல்லாமதான் வந்தவர். ஏதோ ஏதோவெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். இப்பவும் இருக்கார். எங்கள கண்டவுடனே கண் கலங்கிடுவார்.”

காலை இழந்த சரஸ்வதிக்கு இதுவரை நஷ்டஈடு கூட வழங்கப்பட்டிருக்கவில்லை. கிட்டத்தட்ட 9 வருடங்களாக கணவனைத் தேடித்தருமாறு போராடிவருகிறார். நாகர்கோவில் பாடசாலை மீதான தாக்குதலில் தன்னைப் போன்று பலர் அங்கவீனமடைந்திருக்கிறார்கள் என சரஸ்வதி கூறுகிறார். கைகளை இழந்த ஒருவர் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கமுடியாமல் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார் என்றும் அவர் கூறுகிறார்.

நாகர்கோவில் பாடசாலை மீதான குண்டுவீச்சு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது இடம்பெற்ற சம்பவமாகும். இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, நவாலி தேவாலயத்தில் களைப்பாறிக்கொண்டிருந்த இடம்பெயர்ந்த மக்கள் மீது புக்காரா விமானம் குண்டு மழை பொழிந்திருந்தது. இதன்போது 65இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தார்கள். 150இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தார்கள்.

இதுபோன்ற படுகொலைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர் தற்போது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கதிற்குமான அலுவலகத்தின் தலைமைக் கதிரையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். மறப்பதே மனிதப் பண்பு என்றோ, மீண்டும் இதுபோன்று நிகழாது என்றோ அல்லது இழப்பீடு கொடுத்துவிட்டால் அதுக்கு இது சரி என்றோ பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டோம் என்றாகிவிடாது. இந்த வார்த்தைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களின் வாய்வழி வரவேண்டும். அவர்கள் ஒன்றை மட்டும்தான் கேட்கிறார்கள். அது எப்படியும் கிடைக்காது என்று சரஸ்வதிக்குத் தெரியும்.

“நான் சாகும் வரைக்கும் நீதி கிடைக்காது என்டு எனக்குத் தெரியும்.”

## பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

செல்வராஜா ராஜசேகர்