பட மூலம், FLASHBAI

அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் தொடர்பில் மும்முரமானதும் சர்ச்சைக்குரியதுமான விவாதங்கள் அரசியல் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் கடந்த வாரம் இரு சட்ட நிபுணர்களின் நேர்காணல்களை வாசிக்க நேர்ந்தது. ஒருவர் இலங்கை சட்டக் கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாநிதி ஜெயதிஸ்ஸ டி கொஸ்தா. மற்றவர் தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளில் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கும் அரசியலமைப்பு சட்ட நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜெயம்பதி விக்ரமரத்ன. இருவரையும் ஒரே செய்தியாளரே நேர்காணல் செய்திருந்தார். அவர்கள் அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளின் தற்போதைய நிலைவரம் குறித்து தங்களது கருத்துகளை விரிவாகப் பகிர்ந்து கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

இலங்கைக்கு சமஷ்டி அமைப்பு முறை பொருத்தமானதா இல்லையா என்பது குறித்து கலாநிதி கொஸ்தாவும் கலாநிதி விக்ரமரத்னவும் அந்த நேர்காணல்களில் வெளியிட்டிருந்த கருத்துக்களே இன்றைய தினம் இக்கட்டுரையாளர் தனது பிரதிபலிப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற உந்துதலைக் கொடுத்தது.

இலங்கைக்கு சமஷ்டி முறை ஆபத்தானது என்று ஏன் நீங்கள் கருதுகின்றீர்கள்? என்று கலாநிதி கொஸ்தாவிடம் கேட்கப்பட்டபோது, சமஷ்டி முறை வெற்றிகரமானதாக அமைந்த நாடுகள் எல்லாம் கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பெரிய நாடுகளே. மலேசியாவும் சமஷ்டி முறையைக் கொண்ட ஒரு நாடே என்று பதிலளித்திருந்தார். ஆனால், சுவிற்சர்லாந்து, பெல்ஜியம் போன்ற சிறிய நாடுகளும் சமஷ்டி முறையைக் கொண்டிருக்கின்றனவே. அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று அவரிடம் கேட்கப்பட்ட போது சமஷ்டி முறையைக் கொண்டிருக்கும் நாடுகளில் சிலவற்றைத் தவிர ஏனையவை சகலதும் பெரிய நாடுகளே என்றும் சுவிற்சர்லாந்து ஒரு விதிவிலக்கு என்றும் குறிப்பிட்டார்.

சுவிற்சர்லாந்து அதன் வரலாறு பூராகவும் நான்கு வெவ்வேறு இனக் குழுமங்களுக்குமான உரிமைப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கட்டியெழுப்பியிருக்கிறது. ஜேர்மன் மொழிபேசும் சுவிஸ் மக்களே பெரும்பான்மையினர். அடுத்து பிரெஞ்சு மொழிபேசுபவர்கள். அவர்களுக்கு அடுத்ததாக இத்தாலி மொழி பேசுபவர்கள். நான்காவதாக ரோமானியர்கள். பல கன்ரோன்கள் இருக்கின்றன. அவற்றுக்கென்று தனித்தனியான சொந்தச் சட்டங்களும் பாரம்பரியங்களும் இருக்கின்றன. ஒரு கன்ரோனின் பிரஜை இன்னொரு கன்ரோனுக்கு குடிபெயர விரும்பினால் சம்பந்தப்பட்ட அந்த கன்ரோனின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அத்தகையதொரு ஏற்பாட்டை இலங்கையில் யாழ்ப்பாணத்தமிழர்கள் பின்பற்றத் தயாராயிருக்கிறார்களா? முஸ்லிம்களுக்கும் இது பொருந்தும். கொழும்பில் நாம் ஏற்கனவே சிறுபான்மையினராகி விட்டோம். சுவிற்சர்லாந்தில் அவ்வாறு செய்ய முடியாது. எந்தவகையான பெயரின் கீழும் சமஷ்டி முறை இலங்கை போன்ற சிறியதொரு நாட்டுக்கு ஏற்புடையதல்ல. சமஷ்டி முறையைக் கொண்டிருக்க இயலாத அளவுக்கு இலங்கை சிறிய நாடேயாகும். சுவிற்சர்லாந்துடன் இலங்கை நிலைவரத்தை ஒப்பிட முடியாது. ஒப்பிடமுடியாதவற்றை நீங்கள் ஒப்பிடக்கூடாது என்று கலாநிதி கொஸ்தா விளக்கமளித்திருந்தார்.

சமஷ்டி முறையைக் கொண்டிருக்க இயலாத அளவுக்கு இலங்கை சிறிய நாடு என்ற வாதம் குறித்து கலாநிதி விக்ரமரத்னவிடம் கருத்துக் கேட்கப்பட்டபோது அவர், இது ஒரு பழமையான வாதமாகும். சிறியதொரு நாடான சுவிற்சர்லாந்து பலம் பொருந்திய சமஷ்டி கட்டமைப்புகளைக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டதுடன், சுவிஸ் கன்ரோன்களுக்கு இருப்பதைப் போன்ற அதிகாரங்களை இலங்கையில் எவரும் கேட்கவில்லை. இங்கு சமஷ்டி முறையல்ல, அதிகாரப் பரவலாக்கமே கோரப்படுகிறது. அது அரசின் பரப்பெல்லையின் அளவில் தங்கியிருக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இலங்கையில் இப்போது யாரும் சமஷ்டி முறையைக் கோரவில்லை என்று கூறியிருப்பது நீண்டகால இடதுசாரி அரசியல் அனுபவத்தைக் கொண்டவரும் அரசியலமைப்புச் சட்ட நிபுணருமான கலாநிதி விக்ரமரத்னவைப் பொறுத்தவரை பொருத்தமானதோ உகந்ததோ அல்ல. தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளில் தேசிய ஐக்கிய அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுகின்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் சமுதாயத்தின் முக்கியமான பிரிவுகள் சகலதுமே தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமுறையின் அடிப்படையிலான அரசியல் இணக்கத் தீர்வொன்று காணப்பட வேண்டுமென்ற கோரிக்கையை இடையறாது வலியுறுத்திய வண்ணமேயிருக்கின்றன. அரசாங்கமோ அல்லது சிங்கள அரசியல் சமுதாயத்தின் ஏனைய பிரிவுகளோ அந்தக் கோரிக்கையைப் பரிசீலனை செய்யத் தயாரில்லை என்பது வேறு விடயம்.

இலங்கையில் இன்று சிங்கள அரசியல் சமுதாயத்தையும் மக்களையும் பொறுத்தவரை சமஷ்டி என்பது தீண்டத்தகாத ஒன்றாகவே நோக்கப்படுகிறது என்கின்ற அதேவேளை, இலங்கையின் அரசியல் விவாதங்களில் சமஷ்டி சிந்தனை என்பது சுமார் 9 தசாப்தகாலமாக நீடித்து வருகிறது என்பதை பலரும் மறந்தே பேசுகிறார்கள்.

தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி கோரிக்கையை முன்வைப்பதற்கு முன்னதாகவே 1920 களின் நடுப்பகுதியில் இளம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும், 1920களின் பிற்பகுதியில் டொனமூர் ஆணைக்குழுவின் முன்பாக கண்டி சிங்களவர்களின் பிரதானிகளும் இலங்கைக்கு சமஷ்டி முறையே உகந்தது என்று நியாயப்படுத்தினார்கள் என்பது கவனிக்கத்தக்கது. வடக்கு -கிழக்கிற்கான ஒரு மாகாணம் உட்பட மூன்று மாகாணங்களுடனான சமஷ்டி இலங்கையொன்றுக்கான யோசனையை கண்டிச் சிங்களவர்கள் முன்வைத்தனர். இலங்கைத் தமிழர்கள் அல்ல, கண்டிச் சிங்களவர்களே சமஷ்டி இலங்கையொன்றை மாத்திரமல்ல, வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பையும் கூட நியாயப்படுத்தி நின்றனர் என்று (டொனமூர் ஆணைக்குழு முன்னிலையில் கண்டிச் சிங்களவர்களின் பிரதானிகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு) அரசியல் அறிவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டி வந்திருக்கிறார்கள். சமஷ்டி முறை பற்றிய சிந்தனை காலஞ்சென்ற எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசு கட்சியின் தோற்றத்துக்குப் பிறகே சர்ச்சைக்குரியதாகவும் உணர்ச்சி பூர்வமானதாகவும் மாறியது.

சமஷ்டி முறையைக் கொண்டிருக்க முடியாத அளவுக்கு இலங்கை சிறிய நாடு என்ற வாதம் மிகவும் பழமையானது என்று கலாநிதி விக்ரமரத்ன குறிப்பிட்டது சரியானதே. ஆனால், அந்த வாதத்துக்கு இனவாத அரசியலின் செல்வாக்கு காரணமாக தென்னிலங்கையில் பேராதரவு இருக்கிறது என்ற காரணத்தினால், சிறிய நாடுகளிலும் சமஷ்டி முறையைப் பயனுறுதியுடைய முறையில் நடைமுறைப்படுத்த முடியும் என்று நியாயப்படுத்தி வாதிடுவதற்கு சமஷ்டி முறைக்கு ஆதரவாக இருக்கக்கூடிய சிங்கள அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் அவதானிகளோ முன்வருவதில்லை.

சமஷ்டி முறை தொடர்பான அரசியல் விவாதங்களின் போது இளம் பண்டாரநாயக்கவும் கண்டிச் சிங்களவர்களின் பிரதானிகளும் நினைவுபடுத்தப்படுகின்ற அதேவேளை, கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இலங்கையின் ஒரு மாவட்டத்தில் உதவி அரசாங்க அதிபராக இருந்த ஒரு ஆங்கிலேய அதிகாரி பற்றி பெரிதாகப் பேசப்படுவதில்லை. அவர் இலங்கைக்கு சமஷ்டி முறையே உகந்தது என்ற யோசனையை முன்வைத்ததுடன் மாத்திரம் நின்று விடாமல் சுவிற்சர்லாந்தில் உள்ள சமஷ்டி முறையின் பிரகாரம் இலங்கையில் சகல இனத்தவர்களுக்கும் பயன்தரத்தக்க வகையில் எவ்வாறு கன்ரோன்களைப் பிரிக்க முடியுமென்றும் தெளிவான யோசனையை அந்தக் காலகட்டத்தில் முன்வைத்தார். இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு சமஷ்டி முறை பொருத்தமானதல்ல என்ற வாதத்தை உறுதியாக மறுதலிக்கக் கூடிய முறையில் தனது கருத்துக்களையும் அவர் வெளிப்படுத்தினார்.

தனது உத்தியோகத்தர்களுடன் அம்பாந்தோட்டையில் லெனார்ட் வூல்வே

அம்பாந்தோட்டையில் உதவி அரசாங்க அதிபராக பல வருடங்களாக பணியாற்றிய லெனார்ட் வூல்வே அவராவார். அப்பதவியில் இருந்த காரணத்தினால், தென்னிலங்கையின் சிங்களக் கிராமவாசிகளின் வாழ்க்கை முறையை நன்கு அவதானிக்க அவரால் இயலுமாக இருந்தது.

இங்கிலாந்துக்கு திரும்பிய பிறகு அவர் எழுதிய “காட்டுக்குள் ஒரு கிராமம்” (A Village In The Jungle) என்ற மிகவும் பிரபல்யமான நாவல் அந்த நீண்டகால அவதானிப்பின் ஒரு விளைவாகும். பத்தேகமவில் உள்ள ஒரு கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட கதை அது.

1911ஆம் ஆண்டில் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இங்கிலாந்து திரும்பிய லெனார்ட் வூல்வ் பிரிட்டிஷ் தொழிற்கட்சியில் இணைந்து தீவிர அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்றார். இறுதியில் அவர் தொழிற்கட்சியின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவராக (குறிப்பாக காலனித்துவ விவகாரங்களில்) விளங்கினார். முதலாவது உலகமகா யுத்தத்தின் முடிவுக்குப் பிறகு உடனடியாகவே இலங்கைக்கு சுதந்திரம் வழங்க வேண்டுமென்று அன்றைய இங்கிலாந்து அரசாங்கத்துக்கு சிபாரிசு செய்தவர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்படும் பட்சத்தில் சிறுபான்மையினத்தவர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்று இடையறாது வலியுறுத்திய லெனார்ட் வூல்வ் இலங்கைக்கு சுவிஸ் கன்ரோன் முறையே சிறந்தது என்று உறுதியாக நம்பினார்.  இலங்கை தொடர்பில் 1938 ஆம் ஆண்டில் லெனார்ட் வூல்வ் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பிய நீண்ட மகஜரில் பின்வரும் பந்திகள் மிகவும் முக்கியமானவை.

“சிறுபான்மையினத்தவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக, தமிழர்கள் அரசியலமைப்பு மறுசீரமைக்கப்படுவதை எதிர்க்கிறார்கள். இலங்கைக்கு மேலும் சுயாட்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் தமிழர்கள் ஆட்சேபிக்கிறார்கள். தமிழர்களின் நலன்களுக்கு எதிராக சிங்களவர்கள் தங்களின் பெரும்பான்மையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எதிர்காலத்திலும் பயன்படுத்துவார்கள் என்று அவர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணமாகும். தொகுதிகளின் எல்லைகளை மீள்வரைவு செய்து அவற்றைப் பங்கீடு செய்வதற்கான யோசனை மூலமாகவும் ஆளுநருக்கு இருக்கக்கூடிய அதிகார உரிமையின் வாயிலாகவும் சிறுபான்மையினத்தவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரவாதம் செய்ய முடியும்.

“ஆனால், இன்னொரு வழிமுறையையும் பரிசீலிக்கலாம். அதாவது, பரந்தளவு அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து சிந்திக்கலாம். சுவிற்சர்லாந்து பாணியிலான சமஷ்டி முறையொன்றை அறிமுகப்படுத்துவது குறித்தும் கூட சிந்திக்க முடியும். சுதேச தமிழர்கள் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கில் செறிந்து வாழ்கிறார்கள். தாழ் நிலப்பகுதிச் சிங்களவர்களை விடவும் (Low Country Sinhalese) பல வழிகளில் வேறுபட்டவர்களாக இருக்கும் கண்டிச் சிங்களவர்கள் நாட்டின் மத்திய பகுதியில் தனித்துவமான பெரிய பிரிவினராக வாழ்கிறார்கள்.

“சுவிஸ் பாணியில் இலங்கையில் குறைந்தபட்சம் நான்கு கன்ரோன்களை உருவாக்க முடியும். கண்டிச் சிங்களவர்களுக்கான மாகாணம், தாழ் நிலப்பகுதி சிங்களவர்களுக்கான  மாகாணம் தமிழ் வடக்கு மாகாணம், தமிழ் கிழக்கு மாகாணம் என்பவையே அவையாகும். இந்திய வம்சாவளி தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்ற தேயிலைத் தோட்டப் பகுதிகளை உள்ளடக்கி ஐந்தாவது மாகாணம் ஒன்றையும் கூட உருவாக்க முடியும்.

“சுவிஸில் உள்ளதைப்போன்ற கன்ரோன் முறையைக் கொண்டிருக்கக் கூடிய அளவுக்கு இலங்கையின் உப பிரிவுகள் பெரியவையல்ல என்ற ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இலங்கையின் பரப்பளவு சுவிற்சர்லாந்தின் பரப்பளவையும் விட 10 ஆயிரம் சதுர மைல்கள் அதிகமானதாகும். இலங்கையின் சனத்தொகை ஏறத்தாழ 53 இலட்சமாகும். சுவிற்சர்லாந்தின் சனத்தொகை சுமார் 40 இலட்சம். சுவிஸின் சமஷ்டி முறையை இலங்கைக்குப் பிரயோகிப்பதாக இருந்தால், மிகவும் சிறிய கன்ரோனாக கிழக்கு மாகாணமே (2 இலட்சத்துக்கும் சற்று அதிகமான சனத்தொகை) இருக்கும். சுவிற்சர்லாந்தில் மிகவும் சிறிய கன்ரோன் சுமார் 14 ஆயிரம் சனத்தொகையைக் கொண்டதாகவும் மிகப்பெரிய கன்ரோன் சுமார் 7 இலட்சம் சனத்தொகையைக் கொண்டதாகவும் இருக்கிறது.

“இலங்கையில் உள்ளதைப்போன்ற சூழ்நிலைகளின் கீழ் அதாவது இனத்தால், மொழியால், மதத்தால் வேறுபட்ட சமூகங்களைக் கொண்ட ஒற்றை ஜனநாயக அரசொன்றின் கீழ் சகவாழ்வை வாழக்கூடிய சூழ்நிலைகளின் கீழ் சுவிஸ் சமஷ்டி கன்ரோன் முறை அதிவிசேடமான முறையில் வெற்றிகரமானதாக செயற்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் சிங்களவர்களைப் போன்று சுவிஸில் 27 இலட்சத்து 50 ஆயிரம் சனத்தொகையுடன் ஜேர்மன் மொழி பேசும் சுவிஸ் பிரஜைகள்  பெரும்பான்மையினராக விளங்குகிறார்கள். இலங்கையில் தமிழர்களைப் போன்று, சுவிஸில் 8 இலட்சத்து 24 ஆயிரம் சனத்தொகையுடன் பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் பிரஜைகள் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். இலங்கையில் சோனர்களைப் போன்று சுவிஸில் 2 இலட்சத்து 84 ஆயிரம் சனத்தொகையுடன் இத்தாலி மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள். ஜனநாயக கன்ரோன்களும் சமஷ்டி முறையும் சிறுபான்மையினத்தவர்களின் நியாயபூர்வமான நலன்களைப் பேணிப் பாதுகாத்திருக்கின்றன.”

லெனார்ட் வூல்வினால் முன்வைக்கப்பட்டிருந்த இந்த யோசனைகளையும் அவற்றை நியாயப்படுத்துவதற்கு அவர் முன்வைத்த வாதங்களையும் நோக்கும் அறிவு நலமுடைய எவருமே அவர் சிங்களவர்கள் மீது அனுதாபம் இல்லாதவர் என்று குறைகூறமாட்டார்கள். அதனால், சிறுபான்மையினத்தவர்களின் நியாயபூர்வமான உரிமைகள் தொடர்பில் அவரால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தமிழர்களுக்கு சார்பான போக்கைக் கொண்டிருக்கின்றன என்று கூற முடியாது. பல வருடங்கள் இலங்கையில் ஒரு காலனித்துவ நிருவாகியாக பணிபுரிந்து அதன் மக்களை நெருக்கமாக புரிந்து கொண்ட முற்போக்குச் சிந்தனையுடைய ஒரு ஆங்கிலேயரின் கருத்துக்களே அவை.

நாம் அறிந்தவரையில், இதுவரையில் தேயிலைத் தோட்டப்பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக தனியான கன்ரோன் ஒன்றை லெனார்ட் வூல்வைத் தவிர வேறு எவரும் சிபாரிசு செய்ததில்லை. கண்டிச் சிங்களவர்களுக்கும் தாழ்நிலப் பகுதிச் சிங்களவர்களுக்கும் இரு தனியான கன்ரோன்களை அமைக்க வேண்டும் என்ற யோசனை இன்றைய சூழ்நிலைகளில் பொருத்தமற்றதாக இருக்கலாம். ஆனால், சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று வரும் போது லெனார்ட் வூல்வ் புதுமைப்பாங்குடன் தனது காலத்தை முந்தி நிற்கின்ற சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தார் என்பதில் சந்தேகமில்லை.

“காட்டுக்குள் ஒரு கிராமம்” என்ற நாவலை எழுதிய அந்த ஆங்கிலேயக் கனவான் இவ்வுலகை விட்டு நீங்கி பல தசாப்தங்கள் கடந்துவிட்டன.

ஆனால், இலங்கையர்களாகிய நாமோ எமது நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கு, அதைத் தடுப்பதற்கு அரசியல் இணக்கத் தீர்வொன்று கிடைக்கக்கூடிய எந்தவிதமான தெளிவான அண்மைய  அரசியல் அறிகுறியையும் காண முடியாமல் அரசியல் வனாந்தரத்தில் இன்னமும் தடுமாறிக் கொண்டு நிற்கிறோம்.

ஒரு காலனித்துவ ஆங்கிலேய அதிகாரி இலங்கையில் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீவிரமடையும் ஆபத்தை வெகு முன்கூட்டியே உணர்ந்து அதை தடுக்க வேண்டுமென்ற அக்கறையில் மிகவும் முற்போக்கான தீர்வு யோசனைகளை 80 வருடங்களுக்கு முன்னரே முன்வைத்தார் என்பதை இன்றைய இளஞ்சந்ததி அறிந்திருக்கமாட்டாது என்கிற அதேவேளை, முதிய சந்ததியினர் மறந்து போயிருப்பார்கள் அல்லது நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

வீ. தனபாலசிங்கம் எழுதி ‘டெய்லி எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் வௌியான கட்டுரையின் தமிழாக்கம்.