பட மூலம், Sampath Samarakoon

“யார் சொன்னது நாங்கள் இங்கு இருக்கவில்லை என்று. வீடுகள் கட்டி, விவசாயம் செய்துவந்த இடத்தில் இப்போது நிலம் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது.”

“இதோ இந்த இடத்தில்தான் என்னுடை வீடு இருந்தது. அப்படியிருக்கும்போது எங்களுடைய நிலம் இதுவல்லவென்று எவ்வாறு கூற முடியும். வீட்டின் தரைப்பகுதியில் போடப்பட்டிருந்த சீமேந்து இன்னும் இருக்கிறது” – பாணம, சாஸ்த்ரவல பகுதியில் விமானப் படையினரால் அபகரிக்கப்பட்டிருக்கும் தனது நிலத்துக்குச் சென்று பார்த்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“எங்களுடைய காணி, வீடு அதோ அந்த இடத்தில்தான் இருந்தது. அந்த நாட்களில் நாங்கள் விவசாயம் செய்த இடம்… இப்போது வீடு, விவசாயக் காணிகள் இருந்த இடத்தையெல்லாம் முள்ளுக்கம்பி வேலிகள் பொருத்தி இராணுவ முகாம்களாக அமைத்திருக்கிறார்கள். இன்று நாங்கள் இங்கு வந்தது மீண்டும் திரும்பிப் போவதற்காக அல்ல. எங்களுடைய காணி எமக்கு வேண்டும்.”

கண்ணீர் நிரம்பிய கண்களுடன் பாணம, சாஸ்த்ரவல விமானப்படை முகாமை பெண்கள் கூட்டமொன்று பார்த்துக் கொண்டிருக்கிறது.

மக்களுடைய காணிகளில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரை வெளியேற்றிவிட்டு அந்த இடங்களில் மீண்டும் மக்களைக் குடியேற்றுவதாக வாக்குறுதி அளித்தே நல்லாட்சி ஆட்சிக்கு வந்தது. அதன்படி நல்லாட்சியின் அமைச்சரவையும் அதற்கு அனுமதி அளித்தது. நல்லாட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்து மூன்று வருடங்களை அணிமிக்கின்ற போதிலும் இன்னும் சாஸ்த்ரவல மக்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை. பொய் வாக்குறுதிகள், ஏமாற்றம், தொடரும் போராட்டங்கள் என பாணம மக்கள் வாழ்ந்து வருகின்றபோதிலும் நிலமீட்புக்கான அவர்களது போராட்ட குணத்தில் ஒருபோதும் தொய்வு நிலை ஏற்படவில்லை.

கடந்த 6ஆம் திகதி (2017 செப்டெம்பர்) சாஸ்த்ரவல விமானப்படை முகாமுக்கு அருகில் ஒன்றுகூடிய மக்கள் தங்களுடைய காணிகளை ஒப்படைக்கும் வரை திரும்பப் போவதில்லை எனக் கூறி சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

தீர்வு தருவதாக நல்லாட்சி உறுதிவழங்கி இன்னும் நிறைவேற்றாத கண்ணீர் கதைகளுள் பாணம மக்களுடைய போராட்டம் ஒரு கதை மட்டுமே.


தொடர்புபட்ட கட்டுரைகள்:

நல்லாட்சியின் பிடியில் ஒரு சிங்கள கிராமம்

“எமது வீட்டில், கிராமத்தில் நல்லாட்சி ஹோட்டல் நிர்மாணிக்கட்டும்”

அமைச்சரவை தீர்மானத்துக்கு 853 நாட்கள்…